Sunday, December 1, 2019

BAGEERATHAN




                    ஞானி  அரசனானால்....!  J.K. SIVAN 

இக்ஷ்வாகு வம்ச ராஜா பகீரதன் நல்லவன் . அவன் தான் ஆகாசத்திலிருந்து கங்கையை கங்கையை  பூமிக்கு கொண்டு  வந்தவன். கங்கைக்கு  அதனால் அவன் பெயரில் பாகீரதி என்றும் ஒரு பெயர்.

பகீரதன்  சகரர்கள்  குல இளவரசன்.  கபிலர் சாபத்தால்  அவன் முன்னோர்கள் பலர் சாம்பலாகி   தேவலோகம், பித்ருலோகம் செல்லமுடியாத  பாபிகளாகி விட்டனர்.   சாபமிட்ட  கபிலர்  ஆஸ்ரமம்  அருகே  அவர்கள் சாம்பல் மலையாக கிடந்தனர்.  

அவர்களை பித்ருலோகம் சேர்க்க அவன் கங்கை நீரைக் கொண்டு வந்து  அந்த  பல்லாயிரக்கணக்கான  முன்னோர்களின்  அறுபதினாயிரம் பேர்)  சாம்பலில் கரைத்தால் தான் சாபவிமோசனம் கிடைத்து அவர்கள்  தேவலோகம் போகமுடியும் என்றறிந்து கங்கையை பூமிக்கு வரவழைக்க தவம் இருக்கிறான்.  நமக்கும்   இறந்தவுடன்  ஒருவன் சாம்பலை கடலில் கரைப்பது கூட  இந்த   வழக்கத்தால் தான். 

பகீரதன் ராஜ்யபாரத்தை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு  தவம் செய்ய இமயமலை காட்டுக்கு சென்று ஆயிரம் வருஷங்கள்   கடும் தவம் இருந்தான். 

ஒருநாள்  கங்கை அவன் முன் தோன்றுகிறாள்.  

''பகீரதா,  என்னை எதற்காக பூமிக்கு அழைக்கிறாய்?

''என் முன்னோர்  அறுபதினாயிரம் பேர் கபில முனிவர் சாபத்தால் சாம்பலாகி ஒரு மலைபோல் சாம்பல் நிற்கிறது.  கங்கை நீர் அவற்றின் மேல் பட்டால் அவர்கள்  உயிர்பிக்கப்பட்டு, தேவலோகம் செல்லமுடியும் என்று  சாபவிமோசனம் . ஆகவே  தாயே உன்னை நோக்கி தவமிருந்தேன். ''

''பகீரதா, நீ என்னை வரவழைப்பது சரி. நான் கீழே இறங்கி வந்தால் என் வேகத்தை சக்தியை தாங்கமுடியாதே''

''கங்காமாதா,  நீ தானம்மா அருள் புரியவேண்டும். எனக்கு என்னசெய்வது என்று தெரியவில்லையே''

''பகீரதா நீலகண்டன் பரமேஸ்வரன் ஒருவர் தான் என் சக்தியை  தாங்கட் கூடியவர். அவரை வேண்டிக்கொள். அவர் உனக்கு வரமளித்தால் நான்  ஆகாசத்திலிருந்து இறங்குகிறேன்.

பகீரதன் மீண்டும்  பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்து அவர் அருள் பெற்று கங்கை பூமியில் இறங்குகிறாள் . அவள்  ஆகாசத்திலிருந்து பூமியில் இறங்கும்போது  அந்த வேகத்தை நீங்கள் ஒருவர் தான்  தாங்கி மெதுவாக அவளை இறங்கச் செய்யவேண்டும்.'' என்கிறான் பகீரதன்.

கங்கை பாகீரதியாக  பூமிக்கு இறங்கி  பரமேஸ்வரனின்  விரிந்த கூந்தலில் இறங்குகிறான்.  ஹரனின்  கேசத்தை  தான் பூமியில் இறங்கும் இடமாக கொண்டதால் அவள் இறங்கிய இடம்  ஹர் த்வார், ஹ்ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.  கங்கை பாகிரதியாக ஓடி  அலக்நந்தா  நதியோடு  தேவப்ரயாகையில்  சேர்கிறாள்.
கங்கை நதி சகரர்களின் சாம்பலை கரைத்து அறுபதினாயிரம் முன்னோர்களும்  பகீரதனை  வாழ்த்தி ஆசிர்வதித்து  மேலுலகம் செல்கிறார்கள்.

வாசிஷ்டத்தில் இன்னொரு  விஷயம்  பகீரதனை பற்றி வருகிறது.

ராஜ்ய பாரம் வேண்டாம் என்று துறந்து பகீரதன்  ஆத்ம விசாரம் செய்ய விழைகிறான்.  தன்னுடைய  சொத்து நகை, உடைமைகள் அனைத்தையும்  தானமாக தந்துவிடுகிறான்.   அவன் ராஜ்யத்தை எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அவனை மாதிரி நேர்மையாக  ஆள முடியாதே.    பகீரதன் என்ன செய்வது என்று யோசித்தது தனது எதிரி நாட்டரசனை  அழைக்கிறான்.  நீ  பல முறை விரும்பிய எனது ராஜ்யத்தை எடுத்துக் கொள்  மனமுவந்து தருகிறேன்'' என்கிறபோது  தானாக வரும் ராஜ்யலக்ஷ்மியை அவன் வேண்டாம் என்று சொல்வானா?  அவன் ராஜாவாகி விடுகிறான்.  அந்த ராஜாவிடம்  பகீரதன்  பிக்ஷை வாங்கிக்கொண்டு காட்டுக்கு செல்கிறான்.

இனி பகீரதன்  அன்றாடம் உஞ்சவிருத்தி எடுத்து அதில் கிடைப்பதை உண்டு காட்டில் ஆத்ம விசாரத்தில்  (ஆத்ம  ஜிஞ்ஞாஸம் )  முழுகினான்.  ஊர் ஊராக  சென்று பிக்ஷையில் வாழ்ந்தான். ஒருநாள் ஒரு தேசத்தில் அவனையே  ராஜாவாக்குகிறார்கள்.  வேறுவழியின்றி அந்த நாட்டுக்கு ராஜாவாகிறான்.  நாடு நாடாக  சென்றான். ஒரு நாள்  தனது நாட்டுக்கு வருகிறான். அவனது அரண்மனை பழைய விசுவாசமான  சேவகன் பகீரத்தை அடையாளம் கண்டுகொண்டு ஓடிப்போய் மந்திரிகளிடம் சொல்கிறான்.   அப்போது பகீரதன் நாட்டு அரசன் இறந்து போய் வேறு ராஜாவை  நியமிக்க  யோசித்துக்கொண்டிருந்த மந்திரிகளுக்கு சேவகன் சொன்ன சேதி தேனாக  காதில் இனிக்க அவர்கள் ஓடிவந்து பகீரதனையே  திரும்ப அரசனாக்கி விடுகிறார்கள். நாட்டு மக்களும் பகீரதன் ஒருவனே  தங்களுக்கு நல்ல ராஜா என்று  வரவேற்கிறார்கள்.   வேறுவழியின்றி பகீரதன் ராஜ்யபாரம் திரும்ப ஏற்றுக்கொள்கிறான்.தாமரை இல்லை தண்ணீராக  சுயநலம் இன்றி பொதுநலம் கருதிய ராஜாவாக  ஞானி பகீரதன் ஆட்சியில் எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கிறார்கள்.

இந்த கதையை  பகவான்  ரமண ரிஷி சொல்லுவார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...