கவனிக்க சில சின்ன விஷயங்கள். -- நங்கநல்லூர் J K SIVAN --
''ஏண்டா மூஞ்சியை தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கே?''
பாபு கண்டபடி பேசிட்டான்''
ஏதோ காரணமாக எவரோ எப்போதோ பேசிய, இழைத்த அவமானங்கள் மனதில் குத்திக்கொண்டே இருக்கிறது. அதை எங்காவது ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொள்வோம். எதற்கு? அதே வார்த்தையை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கவா? இல்லவே இல்லை. பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது என்பதற்காக. வருத்தம் நம்முடனேயே அழியட்டும்.
யாரும் ஒஸ்தியில்லை, தாழ்த்தியும் இல்லை. கெட்டவனும் இல்லை, நல்லவன் சர்டிபிகேட் நெற்றியில் ஒட்டிக்கொண்டிருப்பவனும் இல்லை.
யாரையாவது பிடிக்கா விட்டாலும் அவரின் முயற்சி, வெற்றிக்கு ஒரு சின்ன வாழ்த்தாவது சொல்லிப்பார். வாழ்க்கை திசை மாறும்.
சே சே இந்த வாழ்க்கை ஒரு நரகம். வேண்டவே வேண்டாமடா இது' என்று எண்ணம் தோன்றினால் உடனே ஒரு வினாடி இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எதிர் கேள்வி கேட்டுக்கொண்டால் நாம் அறியாத மேன்மை சட்டென்று புலப்படும். அருமையான பொருள் கையில் கொடுத்தாலும் அதை உபயோகிக்க தெரியவேண்டாமா?
எப்போதும் நம்மைப்பற்றி அடுத்தவன் என்ன நினைப்பான் என்று எதற்கு எண்ணவேண்டும். அந்த எண்ணத்தை முதலில் கழித்துக் கட்டவேண்டும். அனுமதித்தால் நமக்குள் மெதுவாக ஒரு தாழ்வு மனப்பான்மையை அது தான் முதலில் உருவாக்கும்.
ராஜூவை நேசித்தேன். திடீரென்று பிரிந்து விட்டான். அவன் மேல் கோபம் ஏன்? இவ்வளவு செய்தேனே, எவ்வளவு உழைத்தேன். துரோகி, நன்றி கெட்டவன்...நாசமாகபோகட்டும்... இதெல்லாம் தேவையில்லை. விஸ்வாமித்ரனாக வேண்டாம். எங்கிருந்தாலும் வாழ்க அருமையான பாட்டு. அடிக்கடி கேட்போம் . மனதில் நிற்கட்டும் நன்றாக நல்லபடியாக எங்கோ வாழ பிரார்த்திப்பது நல்லது. உண்மையான அன்பு என்பது அதுதான்.. மனதின் இயற்கை குணம். அதை வைத்து தான் கிருஷ்ணன் நம்மை பூலோகத்தில் பிறக்க வைத்தான். நாம் மாறி விட்டோம். மாற்றி விட்டோம்.
சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நேராது. கிடைத்தது ஏதோ ஒரு சிறிய வாய்ப்பு என்றாலும் அதை விடாமல் பிடித்துக்கொண்டு அதைச் சிறப்பாகச் செய்வோம். அப்புறம் பெரிய பெரிய வாய்ப்புகள் தானே நம்மை தேடி வரும். ஓடிவரும்..
ஹரனைக் கண்டாலே பிடிக்கவில்லை பார்க்கவே பேசவே கூடாது என்று எவரையாவது தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்திப்போம். நம்மை எவராவது இப்படி ஒதுக்கினால் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா?
ஹரனைக் கண்டாலே பிடிக்கவில்லை பார்க்கவே பேசவே கூடாது என்று எவரையாவது தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்திப்போம். நம்மை எவராவது இப்படி ஒதுக்கினால் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா?
எதிரே வருபவரின் தகுதியைப்பார்க்காமல் ஒரு சின்ன சிரிப்பு, தலை ஆட்டல் கை ஆட்டல் போதும். மந்திர சக்தி உண்டு அதற்கு.
No comments:
Post a Comment