Friday, March 12, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்: --  நங்கநல்லூர்  J K  SIVAN

                  
 பெரியவா சொன்ன விஷயங்கள்  2

''மஹா பெரியவா...நீங்க சொல்றதை கேட்கும்போது தேவாம்ருதமா இருக்கு.  சொல்லிண்டே  இருங்கோ.  
'என்ன சொல்லணும்ங்கிறே''
'பாப,  புண்ய கர்மா என்றால் என்ன?''
''அவரவருக்கு   வேதம்  என்ன விதித்திருக்கிறதோ அது தான் கர்மம். லோக  வாழ்க்கை  சீராக  நடக்கணும் .. அறிவினால் நடக்கிற  காரியம்,  ராஜாங்க ரீதியில் நடக்கிற காரியம்,   சரீர  உழைப்பால், நடக்கிற   காரியம்  எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் அனுசரைணயாக நடந்தால்தான் சமூக வாழ்க்கை சீராக இருக்கும்.    பாப சிந்தனைகளைப்  போக்குகின்ற  புண்ணிய சிந்தனை  தான்  பரோபகாரம்.  சேவை மனப் பான்மை  இருக்கணும். தியாகம் இதுலே சேர்ந்தது தான்.  பொதுவா  ''அன்பு''  என்று   சொல்லலாம்.  தனக்குள்ளே  என்கிற  அகம்பாவம், கர்வம், சுயநலம்,  பொய்  ஈர்ப்பு இல்லாமல்  அசூயை, வஞ்சனை எதுவுமே இல்லாமல்  ஒரு காரியம் பண்ணும்போது தான் அதில் மனது சந்தோஷமாக  முழுசாக  ஈடுபடும்.  நாம்  செய்கிற  கர்மம், அதாவது  காரியம் எப்படி பாபமாகிறது என்றால்,  " நமக்காக" என்று  ஆசைப்பட்டு   ஏதோ ஒரு   லட்சியத்தை ப் பிடிக்கிறபோது  தான்.  அந்த மாதிரி ஒரு லக்ஷியம் பூர்த்தியாக நாம்   எந்த தவறையும்,  ஏன்,  எல்லா தவறையும் செய்ய தயங்கறதில்லை.   அது நல்ல தூய்மையாகக்  கொடுக்கப்பட்ட  சித்தத்தில் வெறுப்பு, கோபம், தன்னல மனப்பான்மை, துக்கம், பயம்  என்கிற  அழுக்கு எல்லாத்தையும்  உள்ளே  திணிக்கிறது.''

  ''ஞானம் '' பத்தி சொல்லுங்கோ?

''நாம் கண்ணால்  மட்டுமே  எதையும்  பார்க்கிறோம்.    ஒரு பூவைப் பார்த்து    ரோஜா என்கிறோம்.  இன்னொன்றை  ஊமத்தை என்கிறோம்.   ஞானம் என்ற அறிவால் பார்த்தால் ரோஜா, ஊமத்தை ரெண்டுமே  ஏதோ ஒரு ஆனந்த  வஸ்துவாக  வித்யாசம் இல்லாததாகத்  தான் தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால், எதுவுமே  வேறு வேறாக கண்ணுக்கு தெரியறது.    உண்மை ஏன் புலப்படவில்லை என்றால்,  அதற்குக்   காரணம் நமக்கு சித்தத்தில் அழுக்கு  இருப்பதால் தான்.  அகண்டமாக  இருப்பவன் ஒருவன்  தான் உண்மை.   கண்டமாக, துண்டாக இருப்பது  வெறும் நினைவு  தான்.   இந்த  நினைவு  கனவு  எதுவுமே  ஸாஸ்வத  உண்மை கிடையாது.   ஒரு  உதாரணம்  சொல்லட்டுமா?

ஒருத்தனுக்கு   சொந்தமா  கொஞ்சம்  நிலம் இருக்கு.  வருஷாவருஷம்  விளைச்சல் அதிகமாகிறது.   அதிகமாகிறது.   விளைச்சல்  அதிகமாகும் போது  "இந்த வயல் என்னுைடயது" என்று   மனம் குளிர்கிறது. ஆனந்தம்.   கொஞ்சம் காலத்துக்கு அப்புறம்  விளைச்சல் குறைஞ்சுண்டே வருது.  வயலை இன்னொருத் தனுக்கு  விக்கிறான்.   அதே நிலத்தில் இப்போ  அமோக விளைச்சல்.   அப்போ  அதை பார்க்கும்போது  வித்தவனுக்கு  மனம் குளிரவா  செய்யும்/  "அடடா, ேபான வருஷம் நம்மிடம் இருக்கும்போது  தரிசாக, பொட்டலா  இருந்தது.  இப்போ  எவனோ ஒருத்தனுக்கு  அதிர்ஷ்டம் அடிக்கிறதே''  என்ற   வயிற்றெரிச்சல் தான் உண்டாகிறது.  

''அற்புதம் பெரியவா. புரியறது, மேலே  சொல்லுங்கோ''

"நான்,  எனது" என்ற சம்பந்தம்  இருந்ததால் மட்டும் தான்  இந்த அமோக விளைச்சலால்  அவனுக்கு சந்தோஷம்  உண்டானது.   நிலம்  கைமாறியதும்  அதே நிலத்தின் விளைச்சல்  எரிச்சலைத்  தந்தது.  
''ஆஹா..''
''இன்னொன்றும்  சொல்றேன் கேள்''.
''பைத்தியம் பிடிச்ச ஒருவன் கிட்டே  ''இந்தா  இந்த  கொம்பை  கால்மணி  நேரம்   பிடிச்சிண்டு நில்லு'' என்றால் அவனால் முடியாது. நம்மால் அவ்வாறு செய்ய முடியும்.   அதே சமயம்    ஏதோ  ஒரு  வஸ்துவைப்  பத்தி  கால்  மணி நேரம்  நினைச்சுண்டே இரு'' ன்னு  சொன்னா நம்மால்  அதைப்  பண்ண முடியலை.  அடுத்த கணமே   ஆயிரக்கணக்கான எண்ணங்கள் சினிமா படம்  ஓடற மாதிரி பறக்கிறது.   இதிலிருந்து என்ன தெரியறது.?
நாம்  எப்படி  பைத்தியத்தைப்  பத்தி நினைக்கிறோமோ,   அது போல தான் மகான்களுக்கு  நாம்  பைத்தி யங்களாக  தென்படுகிறோம்.    சித்தம்  கண்ட்ரோல்லே  இல்லாததால்   தான்  சித்த ஸ்வாதீனம் இல்லை என்கிறோம்.

''பெரியவா,  சங்கீதம் மோக்ஷ மார்க்கமா?  விளக்குங்கோ?''
'வேத   அத்யயனம்,  மோகம்,  தியானம், பூஜை புனஸ்காரம்  இதெல்லாம்  கஷ்டப்பட்டு அப்பியாசம் பண்ணினால்  கிடைக்கிற  ஈசுவராநுபவத்தை   தெய்வீகமான  சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப் பெறமுடியும்.   இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியை  நமக்கு அளித்த  யாக்ஞவல்க்ய மகரிஷி சொல்லியிருக்கிறார்.  வீணா கானத்தை பத்தி சொல்லும்போது இதை சொல்றார்.  விடா முயற்சி,  கடுமையான  பிரயாசை,  இல்லாமலேயே  சங்கீதத்தால் மோக்ஷ மார்க்கம்  போகலாம் என்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...