Sunday, March 28, 2021

MANICKA VACHAKAR


 மணிவாசகர்   -    நங்கநல்லூர்   J K  SIVAN  ---



     4.    அரிமர்த்தன  பாண்டியனின் அதிசய குதிரைகள்

 
நாம்  வாழ்க்கையில் நிறைய கஷ்டம் அனுபவிக் கிறோம் என்று அழுகிறோமே.. மகா பெரிய பக்தர்கள், கடவுளையே நேரில் காண்பவர்கள், கண்டவர்கள்,  பட்ட, அனுபவித்த துன்பங்களுக்கு   எண்ணற்ற சோதனைகளுக்கு முன்னால் நமது கஷ்டங்கள் தூசிக்கு சமானம்.

அரசன்  கட்டளைப்படி மணிவாசகரை சிறையில் அடைத்தார்கள்.   துன்புறுத்தினார்கள் . எங்கே  பணம்? என்னாயிற்று?   என்று துறுவினார்கள். தன்னலம் கருதாத ஞானிகளுக்கே அந்த  காலத்தில் இந்த கதி. இப்போதோ   சாதாரணர்கள் நமக்கே  பல்லாயிரம் கஷ்டங்கள்.  

கோடி கோடியாக ..மோசடி   பட்டப்பகலில் ..நடந்தாலும்  பலர்   ஈடுபட்டாலும், அவர்களுக்கு  எங்கோ சுகமாக ஆனந்த வாழ்க்கை. அதற்கு உறுதுணையாக சட்டம், உச்ச மேலிடத்து அதிகார உதவி,  பலமான அதிகார   பதவி களி லுள்ளோர் சலுகை,  ..கருப்பு கோட்டுகள் காசுக்கு  நீதி சட்டத்தை வளைக்க  என்னவேண்டுமா னாலும் செய்யும் நிலை.  இதெல்லாம்   அயோக்கியனை  ஹரிச் சந்திரனாக்கி விடுகிறது.தே! சே. உலகம் எப்படி மாறிவிட்டது!   சித்தத்தை சிவன் பால் வைத்து மணிவாசகர் அமைதியாக வாய் திறவாமல் துன்பங்களை  ஏற்றார். அவர் மேல் விழுந்த அடிகளை பெருந்துறை ஆத்மநாதன் வாங்கிக்  கொண்டதால் மணிவாசகருக்கு எந்த வலியும் தெரியவில்லை. ஆகவே ராஜாவின் ஆட்கள் சித்திரவதையை அதிகமாக்கினார்கள். பாவம் ஆத்மநாதன்தான் அவ்வளவையும்  வாங்கிக்கொண்டான்.  என்னே  பக்தன் மேல் பரமனுக்கு பாசம்.  

ஆவணி மூலம் வந்தது.  சூரியன் உச்சிக்கு வந்த  போதும் வாசலில் குதிரை சப்தம் எங்கும் கேட்கவில்லை. சுற்று வட்டாரத்தில் கூட 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தி  பாண்டியனை ருத்ரனாக்கியது.

''எங்கே  அந்த  வாதவூரன்  இழுத்து வாருங்கள் அவனை இங்கே என் முன்னே ''

 'வாதவூரரே ,  இன்றைக்கு சூரிய அஸ்தமன துக்கு முன்பு  குதிரைகள் வராவிட்டால்  உமக்கு முடிவு நேரிடும் '--- ராஜா ஆணையிட்டான்.  குதிரைகள் வரவில்லை.

ஆத்மநாதன் சும்மாவா இருப்பான்.

 ''சிவகணங்களா, நீங்கள் தான்  குதிரை வீரர்கள், இதோ இந்தப்பக்கத்தில் உள்ள  காடுகளிலுள்ள நரிகளை உயர்ந்த ரக குதிரைகளாக ஏற்கனவே மாற்றியாகி விட்டது. அவற்றை மதுரைக்கு  இழுத்துச் செல்லுங்கள். சற்று நேரம் கழித்து நானே குதிரைப் படையின் காவலனாக, தலைவனாக வந்து பாண்டியனை சந்திக்கிறேன்.'' 

 குதிரை மேல் வந்த சிவனுக்கு  '' பரி மேல் அழகர் ''என்று ஒரு பெயர் இந்த கதையைப் பின்னணி யாக கொண்டது.

சூரியன்  மெதுவாக மேலை வானத்திற்கு நகர்ந்த சமயம்  குதிரைகள் கனைக்கும் பெருத்த சப்தம், கண்ணுக்கெட்டிய  தூரம் வேகமாக குதிரைகள் புழுதியை வாரி வீசி ஓடிவந்தன. பாண்டியனுக்கு செய்தி போனது.  ஒரே ஆச்சர்யம்.

  ''அடாடா நிரபராதியான முதல்  அமைச்சரைத் தண்டித்தேனே'' என வருந்தினான்.
வாதவூராருக்கு நடந்தது எதுவும் தெரியாது.  விஷயம் அறிந்தபோது  ''எல்லாம் பெருந்துறை ஈசன் செயலே!. அவனன்றி ஓரணுவும் அசையாதே!'' என்றிருந்தார்.


குதிரைகள்  அணி திரண்டு மதுரை அரண்மனை யை நெருங்கியது. அணித் தலைவன்  ''பாண்டிய மன்னா, நீ விரும்பிய குதிரைகளை பார்வையிடு. குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உடல் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை. கொடுத்த பணத்திற்கு அதிகமாகவே!''  என்று கூறி ஒப்படைத்தான். 
விலை உயர்ந்த பீதாம்பரம் ஒன்றை பாண்டியன் குதிரை அணித்தலைவனுக்குப் பரிசாக அளித்தான்.    அந்த இளம் வீரனோ சிரித்துக் கொண்டே  பாண்டியன்  அளித்த விலையுயர்ந்த பீதாம்பரத்தை கையிலிருந்த குச்சியால்  தூக்கி  எடுத்து முதல் குதிரையின் மேல் போட்டு விட்டு விடைபெற்றான். ராஜா குதிரைகளை மற்ற குதிரைகளோடு சேர்த்து  கொட்டகையில்  அடைத்தான்.

 அன்று இரவு ராஜாவுக்கு பயங்கரமான ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.   புதிதாக வந்த அத்தனை குதிரைகளும்  

ஏன் எப்படி காட்டு நரிகளாக மாறியது? அந்தக் கொட்டடியில்  ஏற்கனவே   இருந்த மற்ற குதிரை களையும் கடித்து விட்டு காட்டை நோக்கி ஓடி விட்டனவே. இது என்ன மந்திர மாயம். எல்லாம் வாதவூரன் திட்டமிட்டு செய்தது.  அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் மிகவும் கோபம் கொள்ள மாட்டானா ? கொடுத்த பொற்காசு களை திரும்ப ராஜாங்கத்துக்கு கட்டும் வரையில் வாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிற்க வையுங்கள்.''
பாண்டியன் கட்டளைப்படி மணிவாசகரைக் கட்டி, வைகை சுடுமணலில் நிறுத்தினார்கள். 
 மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிடுக்கியால் (iron clamps) இறுக்கினர்.
மாணிக்கவாசகர் ''ஹர ஹர மகாதேவா! பெருந்துறை ஈஸா!''.   சிவனை மனதால் தஞ்சம் அடைந்தார். பெருந்துறை பெம்மானே! அருளாளா! என்று மனநிறைவோடு பாடினார். சுடுமணல் நிரம்பியிருந்த வைகையில் எங்கிருந்து காலம் தப்பி கடுங்கோடை யில் இவ்வளவு பெருவெள்ளம் திடீரென்று கடல் போல நிரம்பியது.. வெள்ளம்....  வெள்ளம்...கணத்திற்கு கணம் .வெள்ளம்  அதிகரிக்கிறதே ......
இதற்குப்பிறகு நடந்தது உலக மஹா அதிசயம் எனலாம்....  அது பரமனின் திருவிளையாடல் அல்லவா?

தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...