Friday, March 19, 2021

THIRUPERUNDHURAI




 


மணி வாசகர்   -- நங்கநல்லூர்   J K  SIVAN --

      ஆத்ம நாதர் ஆலயம்

துறை என்றால் ஒரு நீர் நிலையின் கரை. ஆற்றுத்துறை. படித்துறை,  வண்ணான் துறை என்ற வார்த்தைகள் தான் தெரியுமே. அந்த ஊருக்கும் அப்படி ஒரு பெயர். நமது பாபங்களிலிருந்து சம்சார சாகரத்திலிருந்து கரையேற அருளும் மாணிக்க வாசகரால கட்டப்பட்ட சிவன் கோயில் கொண்டுள்ள   மிகப்பெரிய துறை என்பதால் மரியாதையோடு 'திருப் பெரும் துறை''. அதற்கு எல்லோரும் அறிந்த இன்னொரு பெயர் தான் ஆவுடையார் கோவில். திருப்பெருந்துறை என்ற வார்த்தை இல்லாமல் திருவாசகம் படிக்க முடியாது. இங்கே சிவன் பெயர் ஆத்மநாதர், , அம்பாள்: யோகாம்பாள். விருக்ஷம் குருந்தமரம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

வாதவூரரை மணிவாசகராய் மாற்றிய அதிசய ஊர்  இந்த  திருப்பெருந்துறை . இதற்கு பதினெட்டு பெயர்கள் வேறு இருக்கிறது. 1. திருப்பெருந்துறை, 2. குருந்தவனம், 3. சதுர்வேதபுரம், 4. சிவபுரம், 5. ஞானபுரம், 6. திரிமூர்த்திபுரம், 7. தென்கயிலை, 8. தேசுவனம், 9. பராசத்திபுரம், 10. பவித்திரமாணிக்கம், 11. யோகபீடம், 12. ஆளுடையார் கோயில், 13. உபதேசத்தலம், 14. அனாதிமூர்த்தத்தலம், 15. ஆதிகயிலாயம், 16. சதுர்வேத மங்கலம், 17. தட்சிணகயிலாயம், 18. யோகவனம் என்பனவாம்.

ஊருக்கு மட்டும் அல்ல. சிவனுக்கும் இங்கே 18 பெயர். 1. ஆத்மநாதர், 2. பரமசுவாமி, 3. திருமூர்த்திதேசிகர், 4. சதுர்வேதபுரீசர், 5. சிவயோகவனத்தீசர், 6. குந்தகவனேசர், 7. சிவக்ஷேத்ரநாதர், 8. சன்னவனேசர், 9. சன்னவநாதர், 10. மாயபுரநாயகர், 11. விப்பிரதேசிகர், 12. சப்தநாதர், 13. பிரகத்தீசர், 14. திருதசதேசிகர், 15. அசுவநாதர், 16. சிவபுரநாயகர், 17. மகாதேவர், 18. திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.

தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம்.

ஆத்மநாதர் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதருக்கு ஒரு தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு  வாதவூரர்  என்ற பெயரோடு  பாண்டியனின் மந்திரியாக   குதிரை வாங்க வரும் வழியில்  தங்கிய போது   குரு உபதேசக் காட்சி அங்குதான் நேர்ந்தது. இக்கோயில் மாணிக்கவாசகர் காலத்துக்கு முன்பே உள்ளது. ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். இப்போது அந்த ஊர் வடக்கூர் (வடக்களூர் என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கிறார்கள். 

ஆதி கயிலாயநாதர் கோயில் கிழக்கு பார்த்தது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் தரிசித்த சிவன் ஆலயம். திருவாசகம் நமக்கு கிடைக்க மாணிக்க வாசகர் உருவாக்கிய ஸ்தலம். கி பி 10ம் நூற்றாண்டு பாண்டியநாட்டு ஆலயம்.

மாணிக்க வாசகர் முதலில் அரி மர்த்தன பாண்டியனின் முதலமைச்சர். கீழ் கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றவரை குருந்த மரத்தின் அடியில் குருவாக அமர்ந்து பரமேஸ்வரன் ஆட்கொண்டு, பிறகு குதிரை வாங்க கொண்டு சென்ற பணம் கோயிலாகி, அரசன் குதிரைகள் கொண்டுவா என்ற போது நரிகள் பரிகளான கதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

ஒரு முறை பரமேஸ்வரன் கிழ பிராமணனாக உருவெடுத்து 300 பிராமண வீட்டு குழந்தைகளுக்கு வேதம் சாஸ்திரம் எல்லாம் சொல்லி கொடுத்து பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து ஒரு பாடசாலை நிறுவி, பிராமணர்கள் வீட்டிலிருந்து தினமும் புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து கிழ பிராமணருக்கு உணவு தந்தனர்.

ஒருநாள் கிழ பிராமண வாத்தியாரை காணோம். சிஷ்ய பிள்ளைகள் தேடினர், வருந்தினார். குழந்தைகளோடு விளையாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அன்று ராத்திரி எல்லா சிஷ்ய பிள்ளைகள் கனவிலும் " திருப்பெருந்துறை ஈஸ்வரன் நான் தான் உங்கள் கிழ வாத்யாராக வந்து கற்பித்தேன்.நீங்கள் கொடுத்த உணவை விரும்பி உண்டேன் ' என்றதால் இன்றும் அங்கே புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் சமையல் அன்னம் தான் நைவேத்தியம்.

பிள்ளையார் பெயர் ஸ்ரீ வித்யாகணபதி.

பின்னால் துண்டகன் என்ற முரட்டு மந்திரி ஒருவனுக்கு இந்த கிராமத்தின் மேல் ஆசை உண்டாகி பிராமணர் களை விரட்டிவிட்டு சொந்தமாக்கி கொண்டான். ''ஆத்மநாதா, நீயே கதி என்று எல்லா பிராமணர் களும் வேண்ட ஒரு வயதான முதியவர் திருப்பெருந்துறைக்கு வருகிறார்.

இந்த ஊர் எனக்கல்லவோ சொந்தம். அதற்கு ஆதாரமான பட்டயம் என்னிடம் அல்லவோ இருக்கிறது என்று அந்த முதியவர் சொல்ல அவரை பாண்டிய மன்னனிடம் அழைத்து செல்கிறார்கள்.

''யார் நீர் ? உமக்கு இங்கே என்ன வேலை? என்கிறான் பாண்டியன்.
'நான் தில்லையை சேர்ந்தவன். என் பெயர் பரமசுவாமி,'
''உமக்கு இந்த சிவபுரம் ஊர் சொந்தமென்று ஏதோ ஆதாரம் இருக்கிறீரே அதைக்காட்டும்'' என்கிறான் பாண்டியன்.

ரெண்டு பட்டயங்களை காட்டுகிறார் முதியவர். நிலத்தின் அளவு எல்லைகளை காட்டுகிறார். இங்கே எவ்வளவு வெட்டினாலும் நீர் வராது என்று அரசன் சொன்ன இடத்தில், ஈஸான திசை மேட்டு நிலத்தில் சிவபுரத்தில் நீர் வரவழைக்கிறார். அனைத்துத் தீர்த்தங்களையும் அங்கே வரவழைக்கிறார், திருப்தி அடைந்த பாண்டியன் துண்டகனை தண்டிக்கிறான். அவனிடமிருந்து ஊர் மீட்கப்படுகிறது.

''இந்த நிலத்தை பிராமணர்கள் சமூகம் பாதுகாக்கட்டும். எனக்கு 300ல் ஒரு பங்கு வருமானம் கோவிலுக்கு இறையிலியாக சேரட்டும்'' என்ற கிழவர் காணாமல் போகிறார். அப்போது தான் கிழவராக வந்தது ஆத்மநாத சுவாமி என்று பாண்டியனும் மற்றவர்களும் அறிகிறார்கள்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...