Saturday, March 6, 2021

 


மஹா கவி பாரதி    ---    நங்கநல்லூர்   J K  SIVAN 

'                       

'என் ஆசை இது தான்..நிறைவேற்று '...

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை  இந்த மூன்றும் எவனையும்  விடுவதில்லை. இதில்  மண்ணாசை  சென்னை  மாதிரி  பெரிய பட்டணங்களில்  இருக்கவே கூடாது.  ஆசை  நிறைவேறாது.  மண்ணே  இல்லையே. எல்லாம் கான்க்ரீட் கட்டிடங்கள் தானே.  புறாக்  கூண்டுகள் எத்தனை சதுர அடிகளில், சதுர மீட்டர்களில்  கைக்கு எட்டாத உயரத்தில்  விலையோடு   இருக்கிறது  என்று  கேட்டறிந்த பிறகு எங்கிருந்து  மண்ணாசை வரும்?  

பொன்னாசையும் அப்படித்தான் சாமி,  என் கல்யாணத்தின் போது   என் கையில் ஒரு  சவரன் மோதிரம் போட்டபோது சவரன் விலை 60 ரூபாய். எங்கம்மா கல்யாணத்தின் போது  சவரன் 13 ரூபா. அதுக்கும்  முந்தி தாத்தா கொள்ளுத்தாத்தா காலத்தில்  சவரன் விலை  ஒரு வெள்ளி ரூபா. பவுன் னு  சொல்வாங்க. மொட்டைத்தலை ராஜா பொம்மை போட்டு வெள்ளி ரூபா கிண்ணுனு இருக்கும்.  ரொம்ப நாள் எங்கிட்ட ஒரு காசு இருந்தது எங்கே போச்சோ? பொன்னாசையும் அடங்கிடும் இதாலே. 

 அப்புறம் இருக்கிறது பொண்ணாசை .... எந்த பொண்ணாயிருந்தாலும் பரவாயில்லை னு  புள்ளையப் பெத்தவன் லாம்  லோலோ  ன்னு ராவும் பகலும் அலையறான் . கிடைக்கலே. கிடைச்சாலும் கண்டிஷன் போடறது  பொண்ணுக்கு அம்மா சித்தி, அத்தைன்னு மற்ற பழைய பொண்ணுங்க தான்.  பொண்ணுங்க   கல்யாணமே வேணாம்ங்கிற  டைப். 

''கும்பகோணத்துப்  பக்க  பொண்ணுங்க  முகம்  லக்ஷணமா லக்ஷ்மிகரமா  இருக்கும்.   அழகா இருப்பாங்க , தஞ்சாவூர் பக்கம்  பொண்ணுங்க  டான்ஸ் ஆடும்,  பாடும்  சமையல் நல்லா செய்யும்.  பட்டணம் பொண்ணுங்க சம்பாதிக்கும், மதத்ததெல்லாம்  தெரியாது''  என்பாள்   மரகதம் மாமி.

'' என்ன இது  ஏதோ  பாய், கார், வீட்டுக்கு சாமான்  வாங்கற மாதிரி எங்கே எது சீப்புன்னு.. .?? சே..சே.. அந்த கதையெல்லாம் பழசு மரகதம் ...அப்படிஎல்லாம் கூறு கட்டாதே ''  என்று சொன்னாள்  இன்னொரு மாமி சுந்தரி.

''எங்கேயும் எல்லா  பொண்ணுங்களும் நல்லதுங்க தான், ஆம்பளைங்க அப்படி ஒரு கண்டிஷன் போடறாமாதிரி அவங்களை வாட்டி எடுத்திருக்காங்க  பழைய காலத்திலே.    இப்போ அதுங்க  பதிலுக்கு பதில்  ட்ரில் வாங்குது.   டிட்  பார் டாட் . TIT  FOR  TAT . ஆனைக்கு  ஒரு காலம்னா  பூனைக்கும்  ஒரு காலம் அதை யானையா  மாத்தாதா ?  பொண்ணுங்க இப்போ குண்டு குண்டா தான் இருக்கு  என்கிறாள்  மரகதம் மாமி.  

மூணு ஆசை பத்தியும் கொஞ்சம் சொல்லியாச்சு. நிறைய விஷயம்  சர்ச்சையில் கொண்டு முட்டும். உள்ளே போகமுடியாது. விவரம்  விவகாரமா போயிடும். வேறே எண்ணம் தோணுது அதை சொல்றேன்.

''எனக்கு பாவம்  பாரதியாரை நினைச்சா கண்லே  தண்ணி வருதுப்பா.  ஏழை கவிஞன். சரியான சோறே இல்லை. இருந்தாலும்  எல்லோருக்கும் குடுத்துட்டு மீதி இருந்தா சாப்பிடறவன்.  பசியா எவனாவது இருந்தா  இந்த  உலகத்தையே கொளுத்தறேன்னு கிளம்புறவன். அவனுக்கு அக்கடான்னு  நிம்மதியா ஒரு சொந்த வீட்டிலே இருக்க ஆசை.  பர்ஸை எடுத்து பணம்  அள்ளி  வீசவா முடியும். ஒரு துண்டு பேப்பரை எடுத்தான் . அலமாரியில் ஒரு புழுக்கை பென்சில் வச்சிருப்பான்  அதை எடுத்து  தொடையில்  துண்டு பேப்பரை  வச்சு  எழுதறான்.  அவனுக்கு  யாரை எது கேக்கணும்னு நல்லாவே  தெரியும்.  
''அம்மா, என் அம்மா,  சக்தி தேவி, நீ தாண்டீ  எனக்கு எல்லாம். அதனால் தானே உனக்கு  ''பரா'' சக்தின்னு பேரு . கண் ''பாரா '' சக்தியா மாறிடாதே! ''  இந்தா என் லிஸ்ட்.  இதைக் கொடு.''

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

நான்  வாங்கற காலத்திலேயே  1967லேயே   கிரவுண்ட்  நங்கநல்லூரில்  1500 லிருந்து  2000 வரை  பேரம் பேசி வாங்குவோம்.நான் வழக்கம்போல முட்டாள். ஊருக்கு கடைசியிலே அவ்வளவு கொடுத்து எதுக்குடா வாங்குறே. பணத்தின் மதிப்பு தெரியாதவனே '' என்று எனக்கு வசவு நிறைய.   எனக்கு அப்படிதான்  ஒண்ணேகால்  கிரவுண்ட் கிடைச்சு  கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைச்சேன். ராமநாதய்யர் வீடு கட்டிக்கொடுத்தபோது  ஆகாயத்தில் பறந்தேன்.  சின்னதா ஒரு ஹால், ஒரு பெட் ரூம், ஒரு கிச்சன்.  வீட்டுக்கு பின்னால்  ஓட்டினமாதிரி ஒரு குளியல் அரை, டாய்லெட்.   கிணறு, தோய்க்கற கல்லு,   மாடிப்படி கட்டலே . எல்லாமே  சேர்த்து  என்னைப்பிடி  உன்னைப்பிடின்னு  மொத்தம்  700 சதுர அடி  தாண்டலே.  ரூபாய்  21000.  எல்லாம் சேர்த்து.  கரண்ட் கனெக்ஷன்  வாங்க  ரெண்டாயிரம் ரூபா  வயரிங்கோடு  சேர்த்து தனி செலவு. 


பாரதியார்  ''சின்னவீடு''  கட்டவில்லை.  பெரிதாக கட்ட ஆசைப்பட்டார்.   ஒரு காணி 1.32 ஏக்கர் அளவு  நிலம்  ஊருக்கு வெளியிலே  வேண்டும்.   சுத்தி வேலி . எல்லா பக்கமும்  வேலி ஓரமா தென்னங்கன்னு  நடணும் . சிலோன் தென்னைனு கேட்டு வாங்கி நடுவோம்.  நிலத்துக்கு நடுவிலே ஒரு  தாராளமான வீடு, சிமெண்ட் காங்கிரீட் எல்லாம் இல்லை.  தென்னை ஓலை வீடு.குளுகுளுன்னு  இருக்கணும். காத்து  வந்து போக   தாராளமா  அங்கங்கே தடை இல்லாம  நேர்  எதிரிலே கதவு   ஜன்னல் வைக்கணும்.  மழமழன்னு  கருங்காலி தூண்கள்   நிறைய  கூரையே  தாங்கணும். வாசலிலே  பெரிய  திண்ணை ரெண்டு பக்கமும்  கால் நீட்டி படுக்கறமாதிரி சதுரமா இருக்கணும். 

பாரதிக்கு அவன்  செல்லம்மாவோடு  சேர்ந்து அந்த வீட்டிலே  இருக்க ஒரு ஆசை.   அந்த வீடு சுத்தமாக  சாணம் பூசி,   மெழுகிய  குளிர்ந்த  மண் தரை தான் என்றாலும் கம்மென்று மணமிக்க  வாசனை திரவியங்கள் நிறைந்தது.   புதுச்சேரியில்  எங்கே பார்த்தாலும் குளம் குட்டை  நீர் தேக்கம்.  மண்ணை தோண்டினாலே  ஆறு அடியிலே  கங்கை  குபு குபுன்னு
பொங்கி வருவா. ஒரு சுவையான  நீர் நிரம்பிய கிணறு வேண்டும்.   தென்னை மர  நிழலிலே  வீட்டு  தாழ்வாரத்தில்  ஒரு கயிற்று கட்டில். மூங்கில்  கால் கட்டைகளுக் கிடையே  இழுத்து விண்ணென்று நெருக்கமாக   பின்னப்பட்ட தொய்வில் லாத   சணல் கயிறு கட்டில். கயிற்று கட்டில் என்று தான் பெயர்.  

 காற்றுக்காக  தென்னை விசிறியே வேண்டாம்.  கிட்டத்தட்ட  ஒண்ணரை ஏக்கர் நிலத்திலே வீட்டை சுற்றி  இடைவெளி விட்டு பன்னிரண்டு தென்னை மரம் கேட்டான் பாரதி.  குளிர் காற்று மட்டுமல்ல. குயில்கள் கூடு கட்டி குஞ்சுடன் மகிழ்ந்து கூ கூ வென்று  கத்தும்போது அந்த குயில் கூவும்   கானத்தின் இனிமையை  அரைத் தூக்கத்தில் கேட்டு மகிழவேண்டும். 
தேய்பிறையோ, வளர்பிறையோ தினமும்  எதோ ஒரு உருவில்  நிலா வெள்ளித்துண்டாக, வெள்ளித்தட்டாக  ஒளிவீசி  இனிமையும் தண்மையும்  பால் போல் வெண்ணிற ஒளி தரவேண்டும்.  

குயில் குரல் மட்டும் போதாதே. செல்லம்மா பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்து அவன் முகத்தருகே  கவிழ்ந்து அவனைப் பார்க்கவேண்டும்.  பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
''என்ன  தூங்குறியா?''
''நீ  தூங்க விடுவியா?''
''அப்போ  பாடு?''
''நீ தான் பாட்டெழுதறவன், கதை எழுதறவன், சொல்லிக்கொடு பாடறேன்''
''அது சரி என்னை ஏன் பத்தினிப்பொண்ணு வேணும் னு சொல்லி எழுதினே?
''பத்தினிப்பொண்ணு ன்னா உனக்கு தெரியாதா? 
''தெரிஞ்சா கேப்பேனா?''
'' என் மேலே மட்டும்  ஆசை வைச்ச பொண்ணு நீ  செல்லம்மா? அதாலே தான்  அப்படி சொன்னேன்''
''அப்படின்னா? மீதிப்பேர்  அப்பை இல்லையா?''
''அதெல்லாம் எனக்கு தெரியாது.  நான்  என்ன நினைக்கிறேனோ அது தான் உன் நினைப்பும்.நான் என்ன  வேணும்னு ஆசைப்படறேனோ அது தான் உன் ஆசையும், எனக்கு பிடிக்காதது உனக்கும் பிடிக்காது...ஒரே தட்டிலே ரெண்டு பேர் சாப்பிடுவோம். நீ எனக்கு ஊட்டுவே, நான் உனக்கு ஊட்டுவேன். அது தான் எனக்கு தெரியும்.   இது தான் பத்தினின்னு நான் சொல்றது. புரியுதா? ஓருயிர் ஒரு சிந்தனை, இரு உருவம்  அவ்வளவு தான் எனக்கு சொல்ல முடிஞ்சுது..''  
இந்த உலகத்திலே  நாம் ரெண்டே பேரு தான்'' அப்படின்னு  இருக்கத் தான் ஊருக்கு வெளியிலே  தனியா காட்டு வெளியிலே  இந்த நிலம் கேட்டேன். 
இதோ பாரு  செல்லம்மா,  வேறே யாரும் வேணாம்  நமக்கு. நம்ம  ரெண்டு பேரு மட்டுமே போதும்''. 
''காற்று வெளியிடை  கண்ணம்மா'' என்று வேறு பாட ஆரம்பித்தான் கவிஞன்.
''அப்படிப்  பாடி என்னத்தை  சாதிக்கப்போறே  நீ ?''
''என் பாட்டு இந்த பூமியையே  சுகமான ஒரு  இடமாக எல்லோரும் மகிழும்   சர்வ சுபிக்ஷமான இடமாக   மாத்தணும் தாயே அது தான் என் ஆசை.''
 
பாரதி கேட்டதை  பராசக்தி கொடுத்தாள் . ஒரு காணி நிலம் இல்லை  எல்லா தமிழ் மக்களின் இதயத்தையும் அற்புதமான காணிக்கை  நிலமாக கொடுத்து  அவர்கள்  என்றும் பாரதியை அதில் சிங்காரமாக  அமரகவியாக  வாழ  அருளிவிட்டாள் .  attached is my sketch of Mahakavi Bharathiyar 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...