முன் குடுமீஸ்வரர் - நங்கநல்லூர் J K SIVAN
இப்போதல்ல. சில வருஷங்களுக்கு முன்பு நண்பர்களோடு நிறைய கோவில்கள் அடிக்கடி சென்று பார் ப்போம். எனக்கென்று ஒரு குழு எப்போதும் சேர்ந்து விடும். எல்லோரும் முதியவர்கள். முக்கால்வாசி நங்கநல்லூர், அதை ஒட்டிய ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், உள்ளகரம் புழுதிவாக்கம் நண்பர்களை மட்டும் சேர்த்துக் கொள்வதில் ஒரு வசதி அவர்களை வண்டியில் ஏற்றுக்கொள்வது, வீட்டு வாசலில் இறக்கி விடுவதுதான்.
ஒரு தரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவில் களை சென்று பார்த்தபோது ஒரு சின்ன கிராம த்தில் ஒரு அற்புத கோவிலை தரிசித் தேன். அந்த ஊரின் பெயரே ஆச்சர் யமானது. பொன் விளைந்த களத்தூர். களத்து மேட்டில் அறுத்து போட்ட நெல் அத்தனையும் தங்கம். பொன் . பொன் விளைய விளைய களம் பொங்கி வழிகிற ஊர்.
சென்னையிலிருந்து 60 கி.மீ. செங்கல்பட்டி லிருந்து 8 கி.மீ. செங்கல்பட்டியிருந்து கொஞ்சம் இடது புறம் சென்று, ஒரு ரயில் கேட்டை கடந்து அடைய வேண்டிய ஊர். தியாகராயநகர் டீநகர் ஆனது போல் எல்லோரும் பொன் விளைந்த களத்தூரை - பிவி களத்தூர் என்கிறார்கள். அங்கே ஒரு பழைய சிவன் கோவில் . ராஜேந்திர சோழன் கட்டியது. ஆயிரம் வருஷங்கள் வயது கொண்ட ஆலயம். சிவனுக்கு அங்கே முன் குடுமீஸ்வரர் என்று பெயர். அம்பாள் மீனாட்சி அம்மன். நளவெண்பா எழுதிய புகழேந்தி புலவர் பிறந்த ஊர். அறுபத்து மூவரில் ஒருவர் கூற்றுவ நாயனார் வாழ்ந்த ஊர்..
இந்த ஊரை ஆண்ட ஒரு ராஜா தினமும் இந்த கோவில் பூஜை செய்து அர்ச்சகர் கொண்டு வந்து தரும் பிரசாதம் சாப்பிடாமல் எந்த ராஜாங்க வேலையும் தொட மாட்டான்.
ஒருநாள் அர்ச்சகர் ப்ரசாதத்தோடு வந்தபோது ராஜா ஸ்நானம் செய்து கொண்டிருந்ததால், ராணி பிரசாத தட்டை வாங்கிக்கொண்டு அதில் இருந்த பூவை தலையில் அணிந்து கொண்டாள்.
''அம்மா. அம்மா, இது ராஜா முதலில் தொட்டு வணங்கி எடுத்துக் கொள்ளவேண்டியது'' என்று பூவை அவள் தலையிலிருந்து எடுக்க சொல்லி தட்டில் வைத்தார் அர்ச்சகர்.
குளித்து விட்டு வந்த ராஜா அர்ச்சகர் நீட்டிய பிரசாத தட்டை பார்த்தவன் வழக்கம்போல் பூவை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள போனவன் ஆச்சர்ய பட்டான்.
''அர்ச்சகரே சிவனுக்கு சாற்றிய மலர் தானே வழக்கம்போல.
''ஆமாம் ராஜா''
''எப்படி இன்றைக்கு ஒரு நீண்ட முடி இதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது''
''............... '' அர்ச்சகர் பதில் இல்லாமல் அல்லது இருந்தும் சொல்லாமல் நடுங்கினார். ராஜா தொடர்ந்து கேட்கிறான்.
''சிவனுக்கு ஒருவேளை நீண்ட கேசமோ?''
அர்ச்சகருக்கு மூச்சு நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. ஆசை ராணியைப் பற்றி குறை கூறினால் ராஜா கழுத்தை சீவிடுவானே. தவிர, நீ எப்படி நான் தொடுவதற்கு முன் அவளைத் தொட விட்டாய் என்று பிடித்துக் கொண்டாலும் ஆபத்து தானே. அடிக்கு பயந்து உளறுவது போல் பயத்தில் பொய் ஒன்று உருவானது.
''ஆமாம் ராஜா, சிவனுக்கு நீண்ட முடி உண்டு. அதில் ஒரு கேசம் மாலையை லிங்கத்தி லிருந்து எடுத்து உங்களுக்கு பிரசாதமாக கொண்டு வரும்போது சேர்ந்திருக்க வேண்டும்.''
''அடடே, இதுவரை நீ சொல்ல வில்லையே , நானும் பார்க்கவில்லையே. சரி. நான் காலை ஸ்நானம் முடிந்து நேரே கோவிலுக்கு வருகிறேன். சிவனின் நீண்ட முடியைக் கட்டாயம் தரிசிக்க வேண்டும்''
அர்ச்சகர் வெளிறிப் போய் வாய் பிளந்தார். எதிரே எமன் உருவம் மெதுவாக எருமை மாட்டின் மேல் கயிறோடு வருவது தெரிந்தது.
''என்ன திகைக்கிறாய். ஒருவேளை நீ பொய் சொல்லியிருந்தால் உனக்கு நாளை தலை கிடையாது. போ''
அர்ச்சகர் கோவிலுக்கு ஓடினார். ''பரமேஸ்வரா, என் கதியைப் பார்த்தாயா? இன்று தான் என் மனைவி குழந்தைகளை கடைசியாக பார்க்கப்போகிறேன். நாளை முதல் இந்த ஏழைக்குடும்பத்திற்கு நீ தான் பொறுப்பேற்று அவர்களைக் கரை சேர்க்க வேண்டும். நாளை நான் உன்னிடம் வந்து விடுவேன். சிவனிடம் தனது நிலையை சொல்லி அழுதார். வீட்டில் எல்லோரிடமும் ''போகிறேன்'' என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்கு மறுநாள் புறப்பட்டார்''. ராஜா சொன்னபடி வந்துவிட்டான். சேனாபதி கையில் கூரான வாள்.
கற்பகிரஹம் சந்நிதி கதவு திறந்தது. ராஜா ஆவலோடு எட்டிப்பார்த்தான். முன் தலையி லிருந்து சிவனுக்கு நீண்ட குடுமி.
அர்ச்சகர் கண்களில் ஆனந்த கண்ணீர். தலைக்கு வந்தது தலை முடியால் காப்பாற் றப்பட்டதே . உயிர் காத்த குடுமி அல்லவா.
அருமையான பூஜை அர்ச்சனை முடிந்து ராஜா மகிழ்ந்து அர்ச்சகருக்கு பரிசுகள் வழங்கி அரண்மனை திரும்பினான். சிவனும் அன்று முதல் முன்குடுமீஸ்வரர் என்ற பேர் பெற்றார். இன்றும் குடுமி வைத்திருக்கிறது. அங்கே சென்று தரிசிக்கலாம். .
வயல்களுக்கு இடையே அமைதியான ஆலயம். எதிரே நந்தி. தெற்கு பார்த்த மீனாட்சி அம்மன் சந்நிதி.
கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, ப்ரம்மா, துர்கை. வடமேற்கு மூலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ர மணியர். சூரிய சந்திரர்கள் சுவாமி சந்நிதியை பார்த்தபடி. இருந்த கோவில் தூண்களில், சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் அபாரம். ஒரு தூணில் பஞ்சமுக லிங்கம். வாசலில் நான்கு தூண்கள் நடுவே நந்தி. ஒருகாலத்தில் தூண்கள் மேல் மண்டபம் இருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment