Monday, March 8, 2021

BADRAGIRIYAR

 


பத்திரகிரியார்  புலம்பல்   --   நங்கநல்லூர்  J K  SIVAN 


தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்?


எல்லோருக்கும் தோன்றும்  கொடிய  சக்திவாய்ந்த  மண், பெண்,  பொன் ஆசைகளில் இருந்து எப்போதப்பா விடுதலை. அதில் ஊன்றிப்போன என்னை வேருடன் கிள்ளி அந்த பந்தத்திலிருந்து   எப்போது விடுவிப்பாய்?

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்?

என் மனது   நீண்ட அகன்ற  எல்லையற்ற ஒரு  காடு, அதில் எண்ணற்ற உலக பந்த, பாச, சுயநல,  பேராசை எண்ணச்செடிகள், கொடிகள், வேர்கள், மரங்கள்  அடர்ந்து படர்ந்திருக்கிறதே.    அந்த காட்டை அழித்து சுட்டெரிக்க  என்  சிவனே உன் பஞ்சாக்ஷரம்,  எனும் ''ஓம் நமசிவாய'' ஐந்தெழுத்து வாளால்,  விடாமல் சொல்லிக்கொண்டே  அழிக்க வேண்டும்  .  எப்போது நான் பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்லி அவற்றை  அழிப்பேனோ?  வேரோடு வெட்டி சாய்த்து எரித்து,  என்னை  உள்ளும் புறமும்  நீ ஆட்கொள்ளுவது எப்போது?

ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்?

நான் எனக்கு இது வேண்டும்  என்று அடம்பிடித்து அழுது தொந்தரவு பண்ணி உன்னைக் கேட்டேனா?  பின் எதற்கு நீ இந்த ஐம்புலன்களை எனக்கு வைத்து   அதனால் நான் படாத பாடு  பட வைத்து விட்டாய். அதன்  எத்தனையோ  பாதைகளில்  ஒன்று இல்லை யென்றால் மற்றொன்றில் அலைந்து  களைத்துப்  போய்  விட்டேனே. என் மனதை சுட்டு எரித்து சுண்ணாம்பாய் பண்ணுகிறது இந்த புலன்கள். அதிலிருந்து நான் மீள்வது எப்போதோ?

அமையா மனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்?

அமைதியில்லா என் மனம் அமைதியை பெற்று ஆனந்தம் நிறைந்த மோக்ஷம் பெற்று அங்கு தேவர்களை போல்  கண் இமைக் காமல் உன்னையே நோக்கியவாறு இருப்பது எப்போது?

கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்?

இந்த உடல்  எனும்  கூண்டிலிருந்து என் ஜீவன் வாயிலிருந்து கொட்டாவி வெளிவருவது போல் விடுபட்டு பறந்து போகும் முன் '' ''நான்''  என்பது மறந்து, மறைந்து,  செத்து  இவன்  உன்னையே நினைத்து உன்னில் கரைந்து போவது எப்போது?

ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?

 இதோ நாளுக்கு நாள் என் எடை கூடிக்கொண்டே வருகிறதே, என் சதை, தசை எல்லாம் பருத்து பெருத்து போகிறதே . என் தொப்பை  வளர்ந்து  என்  வயிறு, கால்களை ப்பார்க்கவே முடியவில்லையே.  இந்த உடல் இப்படி வளர்ந்து ஒருநாள் டப் பென்று வெடித்து என் உயிர் போய்விடும். அதற்கு முன்  ''நான்'' ''எனது'' என்ற எண்ணங்கள் முதலில் இறந்து போகவேண்டும் அது எப்போது?

வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே
ஏகாந்த மாக விருப்பதினி யெக்காலம்.

வாயினால் வேத வேதாந்தங்களை யெல்லாம் பேசுதலை அறவே யொழித்து ஏகாந்தமாக நிஷ்டை கூடி யிருப்பது எப்போதப்பா? 

ஒன்றா இரண்டா, எவ்வளவோ இடங்கள் சுற்றி அலைந்து விட்டேன். வாழ்க்கை தான் வீணாகியது.  என்னுள்ளே ஒரு ஆத்மா என்ற ஒருவன் இருப்பதை உணரவே இவ்வளவு வயதாகி விட்டதே.   82க்கு மேல்  அதை உணர்ந்து மனதை , எண்ணத்தை அதில் நிறுத்தி அதிலேயே  விழித்து உறங்கி சுகம் பெறுவது எப்போது"?  நம்பிக்கை இல்லை எனக்கு.

''மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம்.''

போனவாரம் சுப்பிரமணியனைப்  பார்த்தேன். மார்க்கெட்டில்  மோடியை திட்டி கோபமாக பேசினான்.   GST யாலே வெண்டைக்காய் விலை ஏறியது தான் மிச்சம் என்று கையாட்டி  பேசினான்.  

ஐயோ அந்த  சுப்பிரமணியன் இப்போது இறந்தகாலமாகிவிட்டானே.  அவனை நாலு பேர் தூக்கிக்கொண்டு போய்  மூன்று நாளாகி விட்டதே.  என்ன வாழ்க்கை  இது?  நிரந்தரமற்றது.   இந்த நிழலை நிஜம் என்று  நம்பி, கோட்டை கட்ட முடியாவிட்டாலும் வீட்டை கட்ட முயற்சிக்கிறோம். 

பர்த்ருஹரி என்கிற ராஜா வடக்கே  உஜ்ஜயினியில் இருந்து  தெற்கே  வந்து  தமிழ் கற்று  பட்டினத்தாரை குருவாகக் கொண்டு  பத்திரகிரியாராக புலம்புவது தான்  இந்த ரெண்டடி  வேதாந்த, தத்துவ பாடல்கள்.  இன்னிக்கி இருப்பவன் நாளை இல்லை என்று அறிஞர் சொன்னபோது மண்டையில் ஏறவில்லையே என்று ஏங்குகிறார் இந்த துறவி.  "இன்றைக் கிருப்பாரை நாளைக் கிருப்ப ரென் றெண்ணவோ திடமில்லை"  என்பது தாயுமானார் வாக்கு.

''இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம்.''

இப்போது  கஞ்சா அபின் என்று வைத்துக்  கொண்டிருப்பவனை பிடித்து உள்ளே போடுகிறார்கள். அந்த காலத்தில் எவன் கையிலும் அது இருந்தது. விழுங்கி போதையில் மயங்கி தெருவில் கிடப்பது வழக்கமாக இருந்தது. அதைச் சொல்கிறார்  பத்திரகிரியார்.  வெளி உலக வாழ்க்கை இன்பங்கள் எல்லாம் அப்போதைக்கு மட்டும் போதை தரும் லாகிரி வஸ்துக்கள்.நிரந்தர  ஆனந்தத்தை தருவது  கஞ்சா அல்ல, பஞ்சாமிர்தம். அது என்ன தெரியுமா ஆத்ம விசார இன்பம் . இது தான் அந்த   ரெண்டு வரி அற்புதம்.

கஞ்சா வபினியுடன் கள்ளுண்டு வாடாமற்
பஞ்சா வமிர்தம் பருகுவது மெக்காலம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...