Saturday, March 6, 2021

THAYUMANAVAR

 


தாயுமானவர்.

ஆசையே  அலை போலே .... நங்கநல்லூர்   J K  SIVAN 

எதையோ கை  வாட்சப்பில் நோண்டிக்கொண்டே  எங்கோ சிந்தனை.  எங்கோ ஒரு யூட்யூப் பாட்டு எவரோ போட்டிருக்கிறார். என்னது இது  ஏதோ ஒரு படத்தில் பாட்டு கருப்பு வெளுப்பில் வருகிறதே. அப்படியானால் பழைய கால பாட்டாக இருக்கும் என்று கேட்கிறேன்.    திருச்சி லோகநாதனின் அற்புத  கணீர் குரல்...''ஆசையே அலைபோல்... நாமெல்லாம் அதன் மேலே.....''
அப்படியே  கண்மூடி  ஆசைபற்றி ஒரு சிந்தனை. நான் எதற்கெல்லாம் ஆசைப்பட்டேன், படுகிறேன்..படுவேன்...

ஆசை  என்பது தான் அதல பாதாளத்தில் நம்மை அழுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை  கூராகத் தீட்டுவது வேறு யாருமில்லை நாம்  தான். கூராகத்தீட்டி  வைத்துக் கொண்டு  ஆபத்து காலத்தில்  நம்மை  எதிர்ப்பவர்களை தாக்கினாலும் அர்த்தமுண்டு. நம்மையே  அழித்துக் கொள்ள உதவும்  தற்கொலைப் படை.  ஆசை வேண்டாமய்யா, விட்டுத் தொலை  என்று பலபேர்  வாய் ஓயாமல் ஆயிரம் ஆயிரம் வருஷங்களாக கத்தியும்  நாம் செவிடார்களாகவும், குருடர்களாகவும்,  அறிவற்ற  விடாக் கொண்டர் களாகவும்,  பிடிவாதமாக,  நெருப்பைப்  பழமாகக்  கருதி அதில் பாய்ந்து மாளும் விட்டில்களாகத் தான் இன்னும் வாழ்கி றோம் என்று புரிகிறது.    இன்று தாயுமானவரும் அதைச் சொன்னதை பார்ப்போம்.  ஒரு அருமையான  பாடல் இது. ரொம்ப பிடித்த ஒரு அற்புத  எளிய தமிழ்ப் பாடல். எளிதில் அர்த்தம் புரியும்.  

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
    ஆளினுங் கடல்மீதிலே
  ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
    அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
    நெடுநா ளிருந்தபேரும்
  நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
    நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
    உறங்குவது மாகமுடியும்
  உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
    ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
    பரிபூர ணானந்தமே.

''அப்பா பரமேஸ்வரா,  சிவா,   எனக்குள்ளே  ஒரு  தீ  மூண்டுகொண்டே  வருகிறது. அதன் பெயர்  ஆசை.  அதை ஏனடா மனிதர்கள்  மனதிற்குள் வைத்தாய்?  அதை  எதாலும் அணைக்க முடியவில்லையே? . வளர்ந்து கொண்டே போகிறதே?                  எவ்வளவு பெரிய  ராஜாவானாலும் பூமி பூரா  ஜெயித்து சக்ரவர்த்தி ஆனாலும்  கடலைப் பார்த்தவுடன் அதையும் தன்  ஆளுமைக்குள் கொண்டுவர  ஆசை ஏன் வருகிறது?  ஏதோ  கத்திரிக்காய்  புடலங்காய் என்று கூவிக்கொண்டு சுப்பன்   நாளெல்லாம் தெருவில் காய்கறி விற்றான். நீ கண் திறந்தாய்.. செல்வம் சேர்ந்தது.  அவனை குபேரனாக்கி விட்டு வேடிக்கை பார்த்தாய்.  நீ சாவி கொடுத்து முடுக்கி விட்ட  அந்த பொம்மை  என்ன செய்தது?.  எல்லா செல்வமும் தன்னுடையது ஆன போதிலும்  எங்கோ ஒரு  சாமியார்  தகரத்தை தங்கமாக்கும்  ரஸ வாத  வித்தை தெரிந்தவன் என்று அவனைத் தேடி ஓடி  அடிவருடி, அவனிடம் அந்த வித்தையை கற்றுக்கொண்டு தகரம், பித்தளை, அலுமினியம் எல்லாம் தங்கமாக்க  ஆசை கொண்டலைகிறது.


குப்புசாமி  நாற்பதில் தலைசுத்தி கீழே விழுந்தான். அன்றே அவன் காலம் முடியவேண்டும்.  போனால் போகிறது என்று அவனைப்  பிழைக்க வைத்து  80 ஆகியும்  அவன் இன்னும்  கொள்ளுப்பேத்தி கல்யாணம் ஆகி அதன் குழந்தையை கொஞ்ச வேண்டும் என்று  ஆசைப்படுகிறான்?  எல்லையே இல்லையா ஆசைக்கு? எங்கோ ஒரு  பத்திரிகையில் ஒரு சின்ன  ஓட்டலில் ஒரு நாயுடு  டாக்டர்  சிட்டுக்குருவி லேகியம் தருகிறார்  அதைச்  சாப்பிட்டால்  120 வயது கியாரண்டி என்று விளம்பரத்தை பார்த்துவிட்டு குப்புசாமி ஓடுகிறான்..  என்ன ஆசையடா கிழவா?   நீண்ட ஆயுசு  லேகியம் விற்ற அந்த டாக்டர் 52வயதை தாண்டவில்லை.  ''நூறு  வயது வாழ்கிறாயா, படி.'' என்று  ஒரு புத்தகம் எழுதி அது ஓஹோ என்று விற்பனையாயிற்று.   வித்தை சொல்லிக் கொடுத்த  செட்டியார்  அறுபதைத்  தாண்டவில்லை,

இதெல்லாம் யோசித்துக்கொண்டே  ஒரு மரத்தடியில் கண்மூடி அமர்ந்து உன்னை நினைத்துப் பார்க்கிறேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால்  என்ன நடக்கிறது?  

மூன்று வேளை  இந்த நாக்கு தேடும் ருசிக்கு வயிறு புடைக்க தின்கிறேன். உண்ட களைப்பில் காலை நீட்டி மரத்தடியிலேயே படுக்கிறேன். குறட்டை விட்டு கனவு காண்கிறேன்.  கனவில்  ஆசைகள்,தேடல்கள், வேட்கைகள்... சே.  ''நான்  நான்  நான் எனது  எனது''    இதைத் தவிர  வேறு எதையுமே  என் மனது நினைக்காதா? இருப்பதே போதும்  இதற்கு மேல் எதுவும் வேண்டாம் என்று ஒரு கணமும் தலை  அசைத்து மறுக்காதா ?  பரமேஸ்வரா,   நீ ஒன்று செய்யேன்?  இந்த மனதால் தான் அத்தனை ப்ராப்ளம்களும் என்பதால்  என் மனதை முதலில் எடுத்து விடு. அதால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லையே. 

அருமையாக  முடிவெடுத்தார் தாயுமானவர்.  மனம் ஒரு குரங்கு அது வேண்டாம்.  பட்டினத்தார் இதை இன்னும் அழகாக சொன்னது நினைவிருக்கிறதா? ''செத்தாரைப் போல  திரி''  .    செத்தவனுக்கு மனது உண்டா?.  அவனுக்கு யார், எது, என்ன,  எங்கே, எப்படி,   ஏதாவது தெரியுமா?   

நீ  எங்கும் நிறைந்தவன் எதிலும் காண்பவன். எங்கும் நிறைந்தவன்  நீயே  என் மனது இருந்த இடத்தில் இடம் பிடித்துக் கொள்ளேன் பரமேஸ்வரா,  அது தான் நான் வேண்டும் பரிபூரணானந்தம். எது வேண்டும் என்று கூட தெரியாமல் எத்தனை காலம் ஒட்டிவிட்டேன்.!


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...