Friday, March 19, 2021

AVUDAIYAR KOVIL

 

மணிவாசகர்  --  நங்கநல்லூர்   J K SIVAN --- 

ஆவுடையார் கோவில்   

நமது இந்து சனாதன தர்ம வளர்ச்சிக்கு  வித்திட்டவர்கள் எத்தனையோ பேர்.  அறுபத்து மூன்று நாயன்மார்களும் அதில் ஐக்கியம்.   சைவ சமயக்  குரவர்கள்  என்று போற்றப்படும் அப்பர்  சுந்தரர் சம்பந்தர்  மணிவாசகரில்  திருவாசகம் இயற்றியவர்  மாணிக்க வாசகர். இவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு  திருவாசகம் பற்றி தெரியாது என்று ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி  கையெழுத்து போட்டுக்  கொடுக்கலாம்.

மணிவாசகர்  பிறந்தது  திருவாதவூர். வாதவூரான் என்று  இயற் பெயர். பாண்டிய நாட்டில் ஒரு பிராமண குடும்பத்தில் உதித்தவர்.  இளமையிலேயே  சிவ பக்தி, ஞானம்  கொண்ட இவரை  அறிந்த  பாண்டிய ராஜா  அரிமர்த்தன பாண்டியன் தனது   ராஜ்யத்தின் தலைமை மந்திரியாக  பதவியளித்தான்.  ஆயினும் கௌரவம் ஆடம்பரம், அந்தஸ்து, பதவி  இதெல்லாம் வாதவூரர் சித்தத்தில்  இடம் பெறவில்லை.  எல்லாமே ஒரு வேஷம், கஷ்டமாகவே இருந்ததே தவிர மன நிம்மதி தரவில்லை.  சிவ ஸ்மரணம்  ஒன்றே  மனதை ஈர்த்தது.
 நிறைய  கல்விமான்கள் பக்திமான்களை வரவழைத்தார். வேதங்கள் தர்க்க சாஸ்திரங்கள் அலசப்பட்டன.  ஒரு தக்க குரு அமையாவிடில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது என உணர்ந்தார்.  எங்கே என் குரு என்று உள்ளமும்  கண்களும் ஊர் முழுதும் தேடின. கால்களும் எங்கெங்கோ அலைந்தன.  

 ஒரு நாள் உத்யோக நிமித்தமாக முதன் மந்திரி வாதவூரர் மற்ற அரசவை  பரிவாரங்களோடு அரசவையில் பாண்டிய மன்னனோடு  வீற்றிருக்க,    பாண்டிய  ராஜ்ய குதிரைப்படை தலைவன்   ராஜாவிடம் ஒரு முக்கிய  விஷயம் சொல்ல  வந்து  பேச அனுமதி  கேட்டான்.
 'அஸ்வப்படை நாயகா,  என்ன சொல்ல விரும்புகிறாய் சொல்''  என்றான் அரி மர்த்தன பாண்டியன்.
 'அரசே,  நமது சேனையில் குதிரைப்படை பிரிவில், இப்போதுள்ள  குதிரைகள் வயது முதிர்ச்சி அடைந்து விட்டன, சில இறந்தும்  சில  நோயில் வாடியும் அவதிப்படுகின்றன. நமது படை பலமிக்க தாக இருக்கவேண்டுமானால்  வலிவு மிக்க  இளம் குதிரைகள் நிறைய தேவை.''
''நல்லது நாம்  குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்வோம்.   பாண்டியன்  வாதவூரரிடம்  ' நீரே இதற்கு தக்கவர். உமக்கு எங்கே நல்ல குதிரைகளின்  தரம்,   அவற்றின் மதிப்பு,  எவ்வளவு குதிரைகள்  பெற வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்யும் தன்மை உண்டு.  எனவே  இந்த பொறுப்பைத்   தங்களிடம் விடுகிறேன்''  
வாதவூராருக்கு உள்ளூர புரிபடாமல்  ஏதோ  ஒரு சந்தோஷம்.  போகுமிடத்தில் தான்  இதுவரை தேடிக்  கொண்டிருந்த குருவை கண்டு பிடித்து சரணடையப் போகிறோம் என்ற எண்ணம் தானாகவே மனதில் தோன்றியது.  
''அப்படியே  செயகிறேன் மன்னா'' என்று  பதிலளித்தார் வாதவூரார். 
''வாதவூரரே  நீர்  எந்த காரியத்தையும் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஆராய்ந்து செய்பவர் . எனவே நமக்கு நல்ல குதிரைகள் சீக்கிரமே கிடைக்கும்'' என்றான் ராஜா.
கையில் பொற்காசு மூட்டைகளுடன், ஆள் படையுடன் புறப்பட்டார் வாதவூரர். குதிரையும் கிடைக்கவேண்டும், நல்ல குருவும் கண்ணில் படவேண்டுமே.   
''சோமசுந்தரா, எல்லாம் உன் சித்தம். நாட்டைக்  காக்க குதிரை. என் மனக் குதிரையை  அடக்க ஒரு  குரு. ரெண்டையும் தேட இது நல்ல சந்தர்ப்பமாக  அமையட்டும்''. மதுரை சொக்கனின் விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பினார் .  திருப்பெருந்துறை அடைந்தார்.  ''இந்த ஊர்  அமைதியாக  இருக்கிறது. இங்கேயே தங்குவோம்'' .  வாதவூரரை  ஏதோ காந்தமாக திருப்பெருந்துறையில் கவர்ந்தது. திருப் பெருந்துறை  ஆத்மநாதருக்கு தெரியாதா. ''இதோ வந்து விட்டான் வாதவூரன்.
வெகுநாளாக அவனை வரவழைக்க அவன் மனதில் வளர்த்த ஆத்ம தாகம் இங்கே இனி தீரப்போகிறது. எனக்கும் என் மனம்கவர்ந்த பக்தன் கிடைத்துவிட்டான்''
''இங்கே சிவன் கோவில் ஏதாவது உள்ளதா?  ஞானிகள் யாரேனும் உள்ளனரா?'' என்று  வாதவூரர்  அந்த ஊர்க்காரர்களைக்  கேட்க  
''ஐயா,  சற்று தூரத்தில் ஒரு குருந்த மரத் தடியில் ஒரு முதியவர் இருக்கிறார். யாருடனும் பேசுவதில்லை''  என்று பதில் வந்தது.
ஒரு வயோதிக பிராமணர் கையில் சிவ ஞான போதம் என்ற ஓலைச்  சுவடியை வைத்துக்கொண்டு ஒரு குருந்த மரத்தடியில் உற்கார்ந்திருந்தார். அருகே பழைய ஒரு சிறிய சிவன் கோவில். அந்த சாதுவைச் சுற்றிலும் பல சிஷ்யர்கள்.
அந்த   பழைய  சிதிலமான சிவன் கோவிலில் நுழைந்தார் வாதவூரர். சிலையானார். ஆத்மநாதர் வாதவூரர் ஆத்மாவில் கலந்தார். கண்களில் பிரவாகம். அந்த கோவிலை கால்கள் சுற்றின. ஹர ஹரா என்ற சப்தம் காதில் ரீங்காரமிட்டது. மனம் பாகாய் உருகியது. சற்று தள்ளி இருந்த ஒரு குருந்த மரத்தடியில் சிவந்த மெலிந்த வெண் தாடி சடை முடியோடு ஒளி வீசும் கண்கள் அழைத்தன. கன்றுக்குட்டி தாயிடம் சென்றது. நீண்ட நாள் தேடிய தாய் சேய்க்கு கிடைத்துவிட்டாளே. தடாலென்று அந்த பிராமண சாது  காலடியில் வீழ்ந்தார் வாதவூரர். இவரே என் குரு என அறிந்து மகிழ்ந்தார். வார்த்தைகள் வெளி வரவில்லை.
'சிக்கென''ப்  பிடிக்க அவருக்கு தெரியுமே.   குருவின்  கால்களை பிடித்துக்கொண்டு ''ப்ரபோ, என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு அருள்வீராக'' என்று கெஞ்சினார்.
''நான் இதற்காகத்  தானே வந்து காத்திருக் கிறேன்'' என்று ஆத்மநாதர் பிராமண வடிவில் மனதில் மகிழ்ந்தார் .வாதவூரர் பாதாதி கேசம் வரை ஏதோ   ஒரு புரிபடாத சக்தி தன்னுள் புகுந்ததை  உணர்ந்தார். சிவஞானம் அவரை ஆட்கொண்டது.   வானில் மேகக்கூட்டத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம்   கரிய சிவலிங்க கூட்டங்கள். அத்தனைக்கும்  மழை அபிஷேக ங்கள்.  இடி எனும்  பேரிகை, உடுக்கு, மத்தள முழக்கம். சிவகணங்கள் கண்ணுக் கெட்டிய வரை பேரானந்தத்தில் ஆழ்த்து கிறார்கள்.  முனிவர்கள், ரிஷிகள், மானுட பக்தர்கள் வெண்ணிற பூச்சோடு.......
செருகியிருந்த கண்கள் திறந்தன.   மீண்டும்  மூடியது...நினைவு அழிந்தது. மீண்டும் நினைவு பெற்றபோது தான் குருநாதர் திருவடிகளில் மயங்கி இருந்ததை  வாதவூரர் உணர்கிறார்.

''குருநாதா, பரம்பொருளே, என்னை ஆட்கொண்ட தெய்வமே, என் நெஞ்சம் உருக்கி என்னை சிவமாக்கிய செல்வமே, எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே என்று தனது ஆபரணங்கள் செல்வங்கள் அனைத்தையும் அந்த பிராமண குருவின்  பாதத்தில் சமர்ப் பித்தார்.  சகலமும் துறந்தவர் துறவியானார். த்யானத்தில்  மனம் லேசானது. கண்களில் பரவசம். மணிப்ரவாளமாக சிவ ஸ்துதி நாவில்  பெருக்கெடுத்துப்  பாடினார். அருமை தீந்தமிழில் சிவனை துதித்து  வாசகங்கள்  மணி மணியாக வெளிவந்து அவற்றை மாலையாக சிவனுக்கு சூட்டினார்.

''அப்பனே, வாதவூரா, நீ  ''மணி வாசகனடா''. இங்கேயே இரு '' என்று ஆத்மநாதர் அன்போடு அழைத்தார். நமக்கு மணிவாசகர் கிடைத்தார். கண் மூடி குருவை கீழே விழுந்து வணங்கிய மணிவாசகர் கண் திறந்து எழுந்தபோது ப்ராமணரைக் காணவில்லை. கதறினார். பக்தி பரவசமாக தன்னை மறந்த நிலையில் தேடல் தொடர்ந்தது.

ராஜாவின் ஆட்கள் மெதுவாக அவர் குதிரை தேடி வந்ததை நினைவூட்ட ''நீங்கள் திரும்பி செல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்'' என்று ஏதோ ஒரு இயந்திரம் கூறுவதைப் போல் பதிலளித்தார் மணிவாசகர். அந்த சிறு பழைய  சிறிய  கோவிலில் ஆத்ம நாதரை வணங்கிய மணி வாசகர் தான் கொண்டுவந்த பொற்காசு களை செல்வங்களை செலவழித்து ஒரு  பெரிய   கோவில் நிர்மாணித்தார். திருப் பெருந்து றையில் சிவன் கோவில் உருவானது.
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 1100 வருஷம் பழைய கோவில். நமக்குத்  திரு




வாசகம் தந்த க்ஷேத்ரம். 
''கடல் கிழக்கு, தெற்கு  கரை பெரு வெள்ளாறு, குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லை யெனச் சொல்''   
''வெள்ளாறது வடக்காம், மேற்குப் பெரு வெளியாய், தெள்ளார் புனற்கன்னி தெற்கா கும் - உள்ளார ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்பாண்டிநாட் டெல்லைப் பதி''  -  கம்பர்..
திருப்பெருந்துறை சிவனான ஆத்ம நாதர்   கோவிலில் கொடி மரம்,  பலி பீடம், நந்தி இல்லை கர்பகிரஹத்தில் லிங்கம் இல்லை. லிங்கமற்ற ஆவுடையார் மட்டும் தான். ஏதோ பூதங்கள் வந்து பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள், சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியதாக ஒரு தகவல். சிறந்த சிற்ப பொக்கிஷம்.  வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க வேண்டிய புனித  ஆலயம். 
இந்த ஆலய மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கல் சங்கிலி அற்புதமாக செதுக்கப் பட்டு உயரத்தில் தூங்குவதால் நமது விஷமக்  கைகள் படாமல் காப்பாற்றப்  பட்டிருக்கிறது.
வாதவூரர் திருப்பெருந்துறை அடைந்தது முதல்   முற்றிலும் மாறிவி ட்டதை அறிந்த பாண்டியன் சினம் கொண்டான். எதற்கும் ஒருமாத காலம் பொறுப்போம் என காத்திருந்தான். ஒரு மாதமும் முடிந்தது. குதிரைகள் வந்துசேரவில்லை.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...