Wednesday, March 31, 2021

ORU ARPUDHA GNANI

 

ஒரு அற்புத ஞானி       ---    நங்கநல்லூர்   J K SIVAN ---
சேஷாத்ரி ஸ்வாமிகள் 


               ''மாம்பழம் கொண்டு வா''


பகவான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லலாம்.  ஒரு ப்ரம்ம ஞானி எப்படி இருப்பர் என்று அவரைப் பார்த்தாலே  புரிந்துகொள்ளலாம்.

இப்போது கோடை துவங்கிவிட்டது. சூரியனின்  உஷ்ணம் கொரோனா பீதியோடு  எங்கும் நம்மை  வாட்டுகிறது.  இது மாமரங்கள் பூத்து காய்த்து கனியும்  காலம்.   ஒவ்வொரு சீசனிலும் ஒரு புஷ்பம், கனி நமக்கு  மகிழ்வூட்டுகிறதே.
 
மா, பலா, வாழை என்பன முக்கனிகள். மிக மிக ருசியான பழங்கள். இதில் மாம்பழம் முதல் பரிசு பெறும். எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால் மாம்பழ சீசனுக்காக  கோடை காலத்திற்காக  காத்திருக்க வேண்டும்.

எத்தனையோ வகையான மாம்பழங்கள் இருக்கிறதே. ஒரு முறை சீன யாத்திரிகர் ஒருவர் இந்தியா வந்து வடக்கே ஏதோ ஒருஊரில் மாம்பழத்தை ருசித்து அதன் ருசியை சீனா திரும்பியவுடன் சீன ராஜாவுக்குச் சொன்னபோது அவனுக்கு அதை ருசிக்க வேண்டும் என்று தோன்றியது. எங்கே போவது மாம்பழத்துக்கு?

அந்த யாத்ரீகன் சாப்பிட்டதோ சாதாரண நார் மாம்பழம். அதன் ருசியே அவனை கதி கலங்க அடித்து அதைப் புகழ்ந்தான். அல்போன்ஸோ , பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமானி எல்லாம் சாப்பிட்டால் என்ன சொல்வானோ?

ராஜாவுக்கு மிகவும் ஆர்வம் வந்து விட்டது.

''இதோ பார் உன்னை இங்கிருந்து விடபோவதில்லை. எப்படியாவது அதன் ருசியை எனக்கு நீ காட்டிக் கொடுக்கவேண்டும். இப்போதே நான் அதை அனுபவிக்க நீ  வழி செய்ய வில்லையெ ன்றால் உன் உயிர் தப்பாது'' என்று கட்டளையிட்டான். யாத்ரீகன் என்ன செய்வான்? . அவன் சாப்பிட்ட நார் மாம்பழ ருசியை எப்படி விளக்கலாம் என்று யோசித்தபோது ராஜாவின் மந்திரி எதிரே வந்தான்.

''யாத்ரிகா, என்ன முடிவெடுத்தாயா? இன்னும் அரைமணி நேரம் தான் உன் உயிருக்கு . அப்புறம் நீ விண்ணுலகம் தான் !'' என்று பயமுறுத்தினான்.

திடீரென்று ஒரு யோசனை யாத்ரீகனுக்கு. உயிரே மயிரிழையில் ஊசலாடும்போது எதையாவது பற்றிக் கொண்டு உயிர் தப்ப வேண்டாமா? . மந்திரியின் முகமே சமயசஞ்சீவியாக வந்தது.

''ராஜா, இதோ உங்களுக்கு அதன் ருசியை உதாரணமாக காட்டுகிறேன். என்று மந்திரியை அழைத்து அவன் தாடியை தேனால் நிரப்பி ராஜா இதை ருசித்துப் பாருங்கள்'' என்றான் , ராஜா நார் மாம்பழம் ருசி அறிந்து கொண்டான்! . யாத்ரீகன் அதற்கப்புறம் மாம்பழம் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டாலும் யாரிடமும் சொல்வதில்லை !!! ஆனால் மந்திரிக்கு பாவம் ராஜாவிட ம் தினமும் முகவாயை  தேன்  தடவிக்கொண்டு  அரைமணி நேரமாவது தவிர்க்கமுடியாத வேலை இருந்ததே!!!

திருவண்ணாமலையில்  ஒரு நாள்  சேஷாத்ரி  ஸ்வாமிகளைப் பார்க்க ஜெயராம முதலியார் வந்த அன்று ஸ்வாமிகள் மிக உற்சாகமாக காலை ஆட்டிக் கொண்டு  சடைச்சி  சத்திரத்து  திண்ணையில் அமர்ந்திருந்தார்.

தன்னை வணங்கிய முதலியாரிடம் ''போ எனக்கு ஒரு மாம்பழம் கொண்டுவா ''

''ஸ்வாமி , இது மாம்பழ காலம் இல்லையே. கிடைக்காதே. பால் கொண்டு வருகிறேன்.  அதை சாப்பிடுங்கள்''

''இல்லே இல்லே, மாம்பழம் சாப்பிட்டுட்டு பால் குடிச்சா திருப்தியா இருக்கும். எனக்குன்னு ஒரு மாம்பழம் எங்கேயாவது இருக்கும் பார். போய் தேடிக் கொண்டுவா '' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஸ்வாமிகள்.

முதலியார் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தபோது  கடைத்தெருவில்   எங்கோ   ஒரே  ஒரு கடையில்  ஒரு மாம்பழம் கிடைத்தது. அந்த கடைகாரர்   சேஷாத்ரி ஸ்வாமிகள்  பக்தர்.   ஸ்வாமிகளின்  படம் வைத்து பூஜை செய்பவர். 

 கடைக்காரரிடம் விஷயம் சொன்னபோது  அவர்     ' ஐயா,  யாரோ இதைக்  கொண்டு வந்து இன்று தான் என் கடையில்  கொடுத்தார்கள். ஒரே ஒரு பழம் அதை எப்படி விற்பது?

எனவே ஸ்வாமிகள்   படத்துக்கு   நைவேத்தியம் செய் து இதோ தனியாக வைத்திருக்கிறேன்.  நீங்கள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு மயிர்க்கூச்செறிகிறது.   ஆஹா  ஸ்வாமிகளே  மாம்பழம் வேண்டும் என்று கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  எனக்கு  மனதுக்கு  ரொம்ப திருப்தி. காசு வேண்டாம். எடுத்துச் செல்லுங்கள் ஸ்வாமிகளிடம் சேர்ப்பியுங்கள் '' என்கிறார் கடைக்காரர்.

ஒருநாள் ஸ்வாமிகள் நடுத்தெருவில் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்.  இதைக்  தெருவில் சென்றவர்கள் எதற்கு?   யாருக்கு நமஸ்கரிக்கிறார் என்று புரியாமல் தூர நின்று   வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஒரு  பக்தர்  துணிந்து   கிட்டே சென்று  '' ஸ்வாமி,  எதற்கு இந்த நமஸ்காரம்? '' என்று பவ்யமாக கேட்டார்.

''தெரியலேயா உனக்கு. இதோ பார். ஏகாம்பரநாதர் காஞ்சிபுரத்தில் ரதத்தில் ஏறுகிறார். கண்கொள்ளாக் காட்சி.    நீயும் பார்.  வா.   நமஸ்காரம் பண்ணு'',

நாற்பது ஐம்பது நமஸ்காரங்கள் பண்ணினார் ஸ்வாமிகள்.  எங்கேயோ இருக்கும்  காஞ்சிபுரத்தில்  கோலாகல உத்சவம்.  காஞ்சியில் ஜே ஜே என்று கூட்டம். ரதோத்ஸவம். ஏகாம்பரேஸ்வரர் பவனி வந்துகொண்டிருந்தார்.
எப்படி  ஸ்வாமிகள் கண்ணுக்கு  ஏகாம்பரநாதர்  காட்சி அளித்தார்?

திருவண்ணாமலை எங்கே காஞ்சிபுரம் எங்கே? உங்களுக்கும் எனக்கும்   ஏகாம்பரர் தரிசனம் கிட்டுமா?  

ஸ்வப்ன திருஷ்டி என்றால் கனவில் தோன்றுதல். ஒருவர் கனவில்   ஒரு மனிதரோ,  கடவுளோ  காட்சி தந்து  தோன்றுவதோடு மட்டுமல்ல. எந்த விஷயம் அறிவிக்க வேண்டுமோ அதற்கான விஷயத்தையும்  அறிவித்து, தெரிவித்து விடுவதும்  சொல்வதும்  உண்டு.   நிறைய  இது பற்றி கேட்டிருக்கிறேன். 

இந்த மாதிரி  கனவுகள்  எல்லோருக்கும் வருவதில்லை,   குறிப்பிட்ட மனிதர்களுக்கு தக்க சமயத்தில் உண்டாகும்.  ஸ்வாமிகள்  எத்தனையோ பக்தர்கள்  எங்கோ இருப்பவர்கள்  கனவில் தரிசனம் தந்து ஏதேனும் சொல்வது உண்டு.  

 இந்த சக்தி ஸ்வாமிகளுக்கு அதீதமாக உண்டு. கனவில் வரும் காட்சிகள் நிச்சயமாக நேரில் நடப்பது போல் தோன்றுவது உங்களுக்கு தெரியுமே. கனவு நிஜமாவது உண்டு. நிறைய பேர் அனுபங்கள் இருக்கிறது.

சில பக்தர்களுக்கு கனவில் நடந்த ஸ்வாமிகள் சம்பந்தப் பட்ட சம்பவங்கள் சிலவற்றை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...