Monday, March 22, 2021

LIFE AFTER DEATH


 ஹிந்துக்களின் பழக்கம்......  நங்கநல்லூர்  J K SIVAN 


மரணம்  மனிதனின்  வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி அத்யாயம்.  மரணமடைந்தவன் உடலை ஒவ்வொரு மதம் ஒவ்வொரு  விதமாக  அடக்கம் செய்கிறது, முடிக்கிறது. துக்கம்,  வருத்தம், சோகம்  எல்லோருக்கும் பொது. சம்பிரதாயங்கள் வேறுபடுவதால் உடல் அவ்வாறு வித்யாசமாக அணுகப்படுகிறது.

ஹிந்துக்கள் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலோர் உடலை எரிக்கிறோம்.   இஸ்லாமியர்கள்,  கிறிஸ்துவர்கள் பௌத்தர்கள், இந்துக்களில்  சிலர்   புதைப்பவர்கள். ஹிந்துக்கள்  தகனம் செய்வதை ஒரு  சடங்காக செய்பவர்கள்.
ஹிந்துக்களுக்கு  இந்த உலகை  விட  இனி இறந்தபின்  போகும் உலகம் முக்கியமானது.  போதாயன பித்ருமேத  சூத்ரம்  என்ன சொல்கிறது:  ''பிறந்த உடன் செய்யும் ஸம்ஸ்காரங்கள்  இந்த  மண்ணுலகை வெல்ல வழி வகுக்கிறது. இறந்தபின் செய்யும் ஸம்ஸ்காரங்களோ   விண்ணுலகில்  தேவையான  சௌகர்யம் ஏற்படுத்துகிறது.  ஆகவே தான் இறந்த பின்  செய்யவேண்டிய  அபர  காரியங்களுக்கு அத்தனை மதிப்பு. ஸ்ரத்தை  இன்றும் நாம் அளிக்கிறோம். எல்லாம் நம்பிக்கை தான். .
''யுதிஷ்டிரா,   எங்கே இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லு என்று நாரையாக வந்த  எமதர்மன் கேட்கிறான்.   மஹாபாரதத்தில் நச்சுப் பொய்கை எனும் பகுதியில்,  யக்ஷ ப்ரஸ்னம்  என்று பெயர். 
''உலகில் எது பெரிய  ஆச்சர்யம், அதிசயம்? ''   
''ஒவ்வொருநாளும்  எண்ணற்ற மனிதர்கள் இறக்கிறார்கள். அதெல்லாம் கண்கூடாக பார்த்தும் முட்டாள் மனிதன் சாஸ்வதமாக  என்றும் தான்   வாழ  ஆசைப்படுவது தான் ''  என்கிறான் யுதிஷ்ட்ரன் .  

மரணம் என்றாலே   ஒரு வித   பயம் இல்லாதவன் கிடையாது. இறந்தபின்  எங்கோ  போகப்போகி றோம்,  மறுபடியும்  பிறப்போம் என்கிற  நம்பிக் கை  ஹிந்துக்களுக்கு  உண்டு.

உடலில் இருந்து பிரிந்த ஆத்மா மரணமற்றது. உடலின் அழிவு தான் மரணம். அதிலிருந்து தான் ஆத்மா அடுத்த  பிரயாணம் தொடங்குகிறது.  எங்கோ வேறு ஒரு  உடல் பெற்று  மறுபடியும்  பழைய குருடி கதவைத் திறடி வாழ்க்கை. இறந்த உடலை தீயில் இட்டு அழிப்பதால்  ஆத்மா மீண்டும் பழைய உடலை அடைய முடியாது. அது  இனி இல்லை. தேவையல்ல, அதன் தொடர்பை விடவேண்டும்  என்பதற்காகத்தான்.   அக்னி பரிசுத்தமானது.  எரிந்தபின் எல்லாம் சாம்பலாக்கு கிறது. 

உடலை எரித்தபின்  11 நாள்  உடலைப் பிரிந்த ஆவி இதன் முன் இறந்த பித்ருக்களின் லோகத்துக்கு  பிரயாணிக்கிறது.  இறந்தவன் ஆத்மா  பரிசுத்தமாகட்டும், ஒளி பெறட்டும். சூக்ஷ்ம சரீரத்தில்  தொடரட்டும்.இறந்தவன் உடல்  புழுத்து,  நாய், நரி, கழுகுகள் சிதைத்து அவமதிக்க அனுமதிக்காமல் மரியாதையோடு மந்திரத்தோடு  வணங்கி எரித்து மிச்சமில்லாமல் செய்கிறோம். எரிக்கும்போது அக்னியிலிருந்து  ஜீவன்  லேசாக சூக்ஷ்ம சரீரத்தோடு  புறப்பட ஏதுவாகிறது. கொழுந்து விட்டெரியும்  தீ தான்  ப்ரம்மா.    

ஏன்  மஹான்களை , சன்யாசிகளை எரிப்ப தில்லை  என்றால், அவர்கள் எப்போதோ  இந்த உடலைவிட்டு  நீங்கியவர்கள்.  உடலை ஒரு கருவியாக மட்டும்  உபயோகித்தவர்கள்.   அதோடு தொடர்பு, நெருக்கம், விருப்பம்  இல்லாதவர்கள். மற்றவர்கள்  உடலைப் போல் படுக்க வைக்காமல், பத்மாசனத்தில் அமரவைத்து  சமாதி எழுப்புகிறோம்.  சிறு குழந்தைகளை எரிப்பதில்லை, அவர்கள் உடலைப் பற்றி  ஒன்றுமே தெரியாதவர்கள்,, அறியாதவர்கள். சம்பந்தமில்லாதவர்கள்.  எனவே  புதைக்கிறோம். வயிற்றில் குழந்தை இறந்தோ, பிறந்தோ மரித்த கர்ப்பிணிகளை  ஆற்றில் விடுவது, அல்லது புதைப்பது பண்டைய வழக்கம். காரணம் மேலே சொன்னது தான். 

எகிப்தில் இறந்தவன் உடலை  ஜாக்கிரதையாக  பதம் செய்து பாதுகாப்பது வழக்கம்.  சீனாவில்  இறந்தவனுடன் அவன் மனைவி, வேலைக்காரன், நாய்க்குட்டி, தோட்டக்காரன், காதலி, நிறைய  உணவு, பதார்த்தங்கள், கட்டில் மெத்தையோடு புதைப்பார்கள்.  இறந்தவனுக்கு  சௌகர்யங்கள் இறந்தபின் குறையக்கூடாதாம். 
கிரேக்கர்கள், ரோமானியர்கள்  எரிப்பதும் புதைப்பதும்  அவரவர் சௌகர்யம் போல் வழக்கத்தில் கொண்டவர்கள்.  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்  எரிப்பதை எதிர்ப்பவர்கள்.  தற்போது  சிலர் எரிப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்.     யூதர்கள்  எரிப்பதை ஆதரிக்கிறார்கள்.   நீதி தரும் நாளில் அல்லா இறந்தவனை  உயிர்ப்பித்து  விண்ணுல குக்கு அனுப்ப உடல்  தேவை என்பதால்  இஸ்லா மியர்கள் உடலை  மரியாதையோடு புதைப்பது வழக்கம். உடல் கடவுளுக்கு சொந்தம். அதை எரிப்பது அவமதிப்பதாகும் என்ற ஒரு கொள்கை.   இன்னொரு காரணம். இஸ்லாம்  பாலைவனப்  பகுதிகளில் உருவானது. அங்கே மரம் கிடைக் காது எரிப்பதற்கு. 
உடல்   வயோதிகத்தால் மட்டும் மரண மடைவ தில்லை. நடுவயதில் வியாதி கிருமிகளால் மறைகிறது. எனவே கிருமிகளை நாசம் செய்ய எரிப்பது நல்லது என்கிறது விஞ்ஞானம். இறந்தவனை எரிப்பது கொலையாகாது. வியாதி பரவாமல் உதவுகிறது.   பஞ்ச பூதங்களான, மண், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் எனும் ஐந்திலிருந்து பிறந்த உடல் அதை மீண்டும்  சேர எரிப்பது  சில நிமிஷங்களில் துரிதப்படுத்துகிறது.  எரிந்த  உடல் சாம்பலை நீர்  நிலைகளில் மரியாதை யோடு சேர்க்கிறோம்.    இறந்தவருக்காக என்றும் வருந்துவது  அந்த ஜீவன்   மேற்கொண்டு   புது உடல் பெறும்  பயணத்துக்கு தடங்கல் ஆக இருக்கும்   என்பதால் சில  குறிப்பிட்ட தினங்கள் தான் துக்கம் அனுஷ்டிப்பது வழக்கம்.  அப்புறம் நினைவில் தான். 

இப்போது  வசதி இல்லை.  ஆனால்  முற்காலத் தில்  மயானம்  ஆற்றங்கரையில் இருந்தது.  தஹனம்  இன்றும்   காசி, கங்கை  புனித நதிக் கரைகளில் நாள் தோறும்  நடக்கிறது. முக்கால் வாசி சிவன் கோவில்கள் அங்கே நிறைய உண்டு.  ஸம்ஹார மூர்த்தி அல்லவா?  வாழ்க்கை,  மரணம்,  அதன் பின், ..  எல்லாமே  கடவுளோடு சம்பந்தப்பட்டவை நமக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...