''சிவா, இது உன் ராத்திரி '' நங்கநல்லூர் J K SIVAN
இன்று பிரதோஷம், தொடர்ந்து நாளை மஹா சிவராத்திரி. இதுவரை எத்தனை யுகங்களாக ஸர்வேஸ்வரன் வழிபாடு நடந்து வந்து கொண்டிருக்கிறது. என்னாலான ஒரு சிறு கைங்கர்யம். சிறுமணவூர் முனுஸ்வாமி முதலியார் அருளிச்செய்த அற்புதமான பத்து பாடல்கள் நடராஜ பத்து என்பதை புத்தகமாக்கி இந்த சிவராத்திரி அன்று பல பக்தர்கள் கையில் இருக்கும்போது அது எவ்வளவு ஆத்ம திருப்தி அளிக்கிறது. இதற்கு முந்தைய சிவராத்ரிகளின் போது எங்கெல்லாம் சென்றிருக்கிறேன், எத்தனை கோவில்கள், எத்தனை சிவலிங்க தரிசனங்கள், எத்தனை நண்பர்களை எத்தனை ஊர்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். இரவெல்லாம் தேவாரம், திருவாசகம், பஞ்சாக்ஷர ஸ்லோகங்கள்,ருத்ரம் சமகம் எல்லாம் சொல்லியிருக் கிறேன். ஆறுகால பூஜைகளிலும் பங்கேற்று இரவைப் பகலாக்கி மகிழ்ந்திருக்கிறோம்.
தன்னிலே சிவனைக் கண்டவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாக்குகள் அவர் மனத்தூய்மையின்
வெளிப்பாடு.
அவன் வயமாக தன்னை அர்பணித்துக் கொண்ட வன் ஞான ஒளியை எங்கும் காண்பான், அவனிடம் அது ஒளிவீசும். கடிகாரம் பார்த்து நேரத்திற்கேற்ப கோவிலுக்கு செல்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்பவன். உலகியலின் ஈர்ப்புக்கு அடிமை. . ஞானப்பாதையில் அடியெடுத்து வைக்காமல் உச்சிக்கோயிலுக்கு செல்வது எப்படி? அப்படி நம்மை அடிமையாக்குவது அஞ்ஞானம், தாமஸ குணம். தக்ஷிணாமூர்த்தியை சரணடைந்து தான் மீள வேண்டும். அது வரை வழிபாடு எல்லாம் வெறும் விளையாட்டு தான் . ''ஓம் நமசிவாய'' என்ற பஞ்சாக்ஷரத்தை மனதால் உணர்ந்து ஆனந்தமாக விடாமல் சொல்லி அதில் லயித்து கரைவது எப்படி? வெறும் மெஷின் மாதிரி வாய் மட்டும் ''ஓம் நமசிவாய'' என்று வேக வேகமாகச் சொல்லி ''ஸார் இன்று சிவராத்திரி. 1008 ஓம் நமசிவாய சொல்லி முடித்தேன். 47 நிமிஷம் தான் ஆயிற்று'' என்று ஏதோ கணக்கு சொல்வது எப்படி? பித்தன் மீது பித்துக்கொண்டு தப்பித்த எத்தனையோ சிவனடியார்கள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள்.
விடாமல் எப்போதும் எதற்கும் ''சிவ சிவா'' என்று சொல்லிக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லிக் கொடுத்த காஞ்சி மஹா பெரியவா, நாம் கடைசியாக பார்த்த கண்கண்ட தெய்வம்.
ஓ வென்று ஆர்ப்பரிக்கும் பெருங்கடல். ராமேஸ்வரம் கரையில் ராமேஸ்வரன் ஆலயம். மஹா சிவராத்திரி அன்று சுவாமி விவேகானந்தர் கடலில் ஸ்னானம் செய்துவிட்டு அவன் முன்னே நிற்கிறார். அருகே எண்ணற்ற பக்தர்கள்.
''அன்பர்களே, பகவான் நமது சனாதன தர்மம், மதம் எல்லாம் மனதில் ஊற்றாக கசியும் அன்பின் உருவம். வெறும் பூஜை நமஸ்காரங்கள், சமாராதனைகளில் இல்லை. இதயம் பொங்கி வழியுமளவு சிவன் மேல் பாசம், நேசம், அன்பு வையுங்கள். அப்புறம் அனுபவித்து உணர்வீர்கள். 63 நாயன்மார்கள் சரித்திரம் ஒரு சின்ன உதாரணம். ஒவ்வொருவரும் எவ்வாறு சிவனை அனுபவித்தவர்கள் என்று உணர்த்த. சோதனைகளில் ஜெயித்தவர்கள். உடலும் உள்ளமும் பரிசுத்தமில்லாமல் ஆலயத்தில் நுழைபவன் இங்கே ராமேஸ்வரனை காணமுடியாது. காணாததைக் கண்டதாக கயிறு திரிப்பவன் சாயம் சீக்கிரமே வெளுத்துவிடும். உள்ளன்பு, பரிசுத்தம் இல்லாமல் வெளியே பட்டைகள்,கொட்டைகள், பஞ்சகச்சம் ப்ரயோஜனமில்லாத பரிதாபம். கலியுகத்தில் மனிதன் தன்னை மட்டுமே அதிகம் நம்புகிறான். தன்னை உருவாக்கியவனை மறக்கிறான். கோவிலுக்குச் சென்றால், குளத்தில் முழுகினால் பாபம் தொலையும் என்று கனவு காண்கிறான். ஏற்கனவே பாபங்கள் சுமக்கும் இந்த அழுக்கு மூட்டை அண்ணாசாமிக்கு இன்னும் மூட்டை பெரிதாகும். அவ்வளவு தான்.
கோவிலே இல்லாவிட்டாலும், தீர்த்தமே இல்லாவிட்டாலும், மஹான்கள், பக்திமான்கள் வாழும் இடம் தான் க்ஷேத்ரம். அது தான் புண்ய தீர்த்தம். (தீர்த்தம் என்றால் நீர் இல்லை, ஸ்தலம்) . புராதன க்ஷேத்ர ஸ்தலத்தை, அதை சுற்றிழும் பக்தியற்ற, காரியவாதிகள், அயோக்கியர்கள், அற்பர்கள், இருந்தால் அங்கே சாந்நித்யம் எப்படி இருக்கும். சாதாரணமாக வேறெங்கும் நாம் புரிந்த பாபம் விலகினாலும் புண்ய ஸ்தலங்களில், தீர்த்தங்களில் புரிந்த பாபம் அழியாது. ஒரே வழி, உள்ளும் புறமும் பரிசுத்தமாக இரு. சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார், அவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? ஒரு அருமையான பாடல்.
சிவனை எங்கே காண்பாய்? ஏழைகள் , வியாதியஸ்தர்கள், அபலைகள், நிர்கதியானவர்கள் , போன்றோ ருக்கு உதவுபவன் சிவன் அருள் பெறுகிறான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஜனசேவை தான் ஜனார்த்தன சேவை. மக்கள் சேவை தான் மகேசன் சேவை.
விவேகானந்தரின் ஒருவரிக் கதை. ஒரு எஜமான் தோட்டத்தில் ரெண்டு வேலைக்காரர்கள். ஒருவன் சோம்பேறி, எஜமானனைக் கண்டதும் ஓடிவந்து வணங்கி பல்லிளித்து அங்கும் இங்கும் நடமாடி கையெடுத்து கும்பிட்டு ''எஜமானனை மாதிரி அழகான முகம் எங்கேயும் பார்த்ததில்லை'' என்பவன். அடுத்தவன் தானுண்டு தனது வேலையுண்டு என்று இரவும் பகலும் விடாமல் தோட்டவேலை செய்து, விளைந்த காய் கனிகளை தலையில் கூடையில் சுமந்து எங்கோ உள்ள எஜமானன் வீட்டுக்கு போய் சமர்ப்பிக்கிறவன். எந்த வேலைக்காரனை எஜமானனுக்கு பிடிக்கும்?
பரமேஸ்வரன், சிவன், தான் எஜமான். இந்த உலகம் தான் அவன் தோட்டம். எந்த உதவியும் யாருக்கும் செய்யாமல் கையசைக்காமல் சிவா சிவா என்று பக்தர்கள் எதிரில் மட்டும் ஆடி பாடுபவர்கள் ஒரு வித வேலைக்காரன் டைப். எளியோரை, நிர்கதியானவர்களை, ஏழைகளைக் கண்டு, வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து , சிவனின் குழந்தைகளாக அவர்களை பாவித்து, எல்லோருக்கும் தர்மம் செய் து , உதவி, அவர்கள் அன்பை, வாழ்த்தை, பெறுபவர்கள் ரெண்டாம் வகை வேலைக்காரன் டைப்.
தாய்க்கு தன் குழந்தைகளை நேசிக்கிறவர்களைதான் பிடிக்கும். சுயநலம் இல்லாதவன் பரிசுத்தன். அப்பா அம்மாவுக்கு தன்னைவிட தனது குழந்தைகளிடம் பாசம் கொண்டவர்களை ரொம்ப பிடிக்கும். ஆகவே எளியோருக்கு, தீனர்களுக்கு தயாளத்தோடு சேவை புரியுங்கள் என்கிறார் விவேகானந்தர். இது தான் நல்ல கர்மா, ஸத்கர்மா. இதயம் இதனால் சித்த சுத்தி பெறுகிறது. அப்போது தான் உள்ளே இருக்கும் சிவன் தெரிவான். கண்ணாடியில் புழுதி, அழுக்கு படர்ந்திருந்தால் முகம் எப்படி தெரியும்? அறியாமை, சுயநலம் , அன்பின்மை, போன்ற தீய குணங்கள் விலகவேண்டாமா?
''ஏண்டா, நான் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ரஹஸ்யமாக அனுஷ்டானம் செய்யாமல், ரஹஸ்யமாக ஜெபிக்காமல் கண்டவர்களுக் கெல்லாம் உபதேசித்தாய். நீ நரகமடைவாய் என்று சொன்னேனே? என்ற குருவுக்கு, ''நீங்கள் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை மனதார பக்தியோடு உச்சரித்தால் மோக்ஷம் கிடைக்கும் என்றதால் இத்தனைபேர் அதை உச்சரித்து மோக்ஷம் அடைவதற்காக நான் ஒருவன் உங்கள் கட்டளையை மீறியதால் நரகத்திற்கு செல்லவேண்டும் என்றால் அதை ஏற்கிறேன் '' என்றவர் ஸ்ரீ ராமானுஜர் எனும் மஹான்.
No comments:
Post a Comment