Sunday, March 14, 2021

PESUM DEIVAM


 பேசும்  தெய்வம்   --     நங்கநல்லூர்   J K  SIVAN --பெரியவா சொன்ன  விஷயங்கள் -   3    


''கைலாசமா  போகவேண்டும்?''

மஹா பெரியவா  உங்களுக்கு சாஷ்டாங்க  நமஸ்காரம். எனக்கு தெரிந்து  எல்லா குழந்தைகளும் உம்மாச்சி தாத்தா என்பது உங்களைத்தான். அந்த குழந்தைகளுக்கு  நீங்கள் ஒரு உம்மாச்சி பற்றி சொல்லுங்களேன்:

''நான்  எத்தனையோ தடவை சொன்னதையே  மறுபடி சொல்றேன்.  நமது  தமிழ் தேசத்தில்  அதிகம்  காண்பது  பிள்ளையார் தான்.  இருந்தா லும்  அவருக்கு பல  இடங்களில் கோயில் இல்லை.  வெயிலிலும் மழையிலும்  அரச மரத்தடி,  ஆத்தங்கரை, குளக்கரை, தெருக்களில் கூட  சிறிய  பிறையில் அமர்ந்திருப்பவர்.  அவருக்கு எத்தனையோ பெயர்கள்.  சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்க ளின் ஜேஷ்ட புத்திரர், மூத்த பிள்ளை  என்பதால்  மரியாதையோடு  ''யார்'' சேர்த்து  பிள்ளையார் என அழைத்து வணங் குகிறோம்.  குமரன், குமாரன் என்றாலும் பிள்ளை தான். அது அவர் தம்பி சுப்பிரமணியன்.  அவனுக்கு மரியாதை யான ''யார்''  பெயருக்கு அப்புறம்  இல்லை.  பிள்ளையார்  ஆனைமுகத்தான்.  எல்லாவற் றுக்கும் முதல்வன்.  ப்ரணவ ஸ்வரூபன்.   எல்லோரையும் கை  தூக்கிவிடுவதற்காக அவனுக்கு பலம் மிக்க தும்பிக்கை. நாம்  துதிக்கையில்  அவன் துதிக்கை  அருள் புரியும்.  
ஒளவையார் அவன் பக்தை.  ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதும்  அடங்கிய  “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் தரும். 

 ஒரு சின்ன கதை.    
சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரை நன்றாக அறிவார்கள் . அவளைச் சந்திக்கிறார்கள்.  

''ஒளவை பிராட்டியே, நீயும்  எங்களோடு சேர்ந்துகொள் . நாம் மூவரும்  கைலாசம் போவோம்'' என்று அழைத்தார்கள்.

''ஆஹா  என்ன  அன்பு உங்கள்  இருவருக்கும்  என் மீது.  ஆனால்  நான் இப்போது  உங்களோடு வர முடியாதே .  விக்னேஸ்வரருக்கு, பிள்ளையாருக்கு, பூஜை பண்ணிக்   கொண்டிருக்கிறேன். அதை  அவசரமில்லாமல் செய்து முடிக்கவேண்டும்.  அதுவே  எனக்கு கைலாசம்.  பூஜை  முடிந்தபிறகு அவனை வணங்கி அவன் உத்தரவு பெற்றுத்தான்  நான் கிளம்ப முடியும். ஆகவே  நீங்கள்  செல்லுங் கள். நாம் பிற்பாடு சந்திப்போம்'' என்று அவர்களை அனுப்பினாள்  ஒளவை. 

பிள்ளையார் நடந்ததை எல்லாம் கவனிக்கா மலா இருப்பார்?பூஜை முடிந்தது.  

''ஒளவையே, என்ன யோசனை உனக்கு?'' என்று தெரியாதது போல் கேட்டார் பிள்ளையார்.

'பிள்ளையாரப்பனே,  என்னை சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாளும்  கைலாயத் துக்கு தங்களோடு வர அழைத்தார் கள்.  இந் நேரம் போய் சேர்ந்திருப்பார்கள் என்று  அவர்கள் நினைவில்  இருந்தேன்.  என்றாவது ஒரு நாள்  எனக்கும் அந்த பாக்யம் கிடைக்க நீயே  வழி செய்யவேண்டும் என்  அப்பனே''

''பாட்டி, அது என்ன  முடியாத காரியமா?  ப்ரமாதமா?  இதோ  பார்  நீ  கைலாசத்தில் இருப்பாய் இப்போது''  என்று  தனது தும்பிக்கையை நீட்டி அவளைத்  தூக்கி மேலே  ஒரே  வீச்சில் கைலாசத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டார். 

அவளுக்குப் பிறகு வெகு நேரம், காலம் கழித்து தான்  சுந்தரரும், சேரமானும்   கைலாசம் வந்து சேர்ந்தார்கள். ''எப்படிப்பாட்டி  எங்களுக்கு அப்புறம் கிளம்பி எங்களுக்கு முன்னாலேயே வந்து சேர்ந்து விட்டாய்?''''எல்லாம் அந்த பிள்ளை யாரப்பன் கருணை தான் ஐயன்மார்களே'' என்று சந்தோஷமாக கூறினாள்  ஒளவை.

''உனக்கு  அருணகிரிநாதர்  திருப்புகழ் ஒன்று தெரியுமா. அது இந்த சம்பவத்தைப்  பற்றி பேசுகிறதே?'' என்கிறார் பெரியவா.

''தெரியாதே பெரியவா.  எந்த திருப்புகழ் என்று உங்கள் வாயாலேயே கூறுங்கள். ஆனந்தமாக கேட்கிறோம்'' 

''எல்லோருக்கும் தெரிந்த  திருப்புகழ் தான்: 

''நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இதில்   ''ஆதாரம் பயில்... என்று வருகிறதே அந்த வரிகளுக்கு  அர்த்தம்:  

''...... அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று  அருணகிரியார் பழனி யாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமார  ஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளை யாருக்கோ ஏற்கெனவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழி கைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார்.    அவர்கள்  குதிரையில் ஏறிக்  கொண்டு மெதுவாக  வந்து சேர்ந்தார்கள் என்கிறார்  அருணகிரியார்.   பிள்ளையார்  பெரிய பெரிய  அனுக்ரஹத்தை  எல்லாம்   நமக்கு சர்வ சாதாரணமாக  அனாயாசமாக  அளிப்பவர் 'அல்லவா?  -----

பெரியவா வாக்கு  தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...