Friday, March 26, 2021

MANICKA VACHAKAR


மணி வாசகர்   -- நங்கநல்லூர்   J K  SIVAN --

            ஆவுடையார் கோவில் அதிசயங்கள் 
     
மணி வாசகர்  என்றால்   ஆவுடையார் கோவில்  தானாகவே  நினைவுக்கு வரும்.  ஆவுடையார் கோவில் கொண்ட  ஊர்  திருப்பெருந்துறை.  

பாண்டிநாட்டின்  கலைச்  செல்வங்கள் நிறைந்த ஒரு திவ்யமான  பொக்கிஷம்.    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ஆலயம். விமான கொடுங்கைகள் அற்புதமானவை.

முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே தத்ரூபமாக  ஒரு  சிலை.  அது  கீழே பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கு,   அதோடு  மேலே பார்க்கும் ஒரு உடும்பு.  ரெண்டுமே  மிக அழகான சிலைகள். சிற்பியின் மனதில்  என்ன சேதி இதன் மூலம் சொல்லலாம்  என்று தோன்றி இருக்கலாம்.   '' அடே பக்தா, அலைபாயும் உன் குரங்கு மனத்தை அடக்கி, உடும்புப்  பிடியாக    ஆத்மநாதரின் திருப்பாதங்களில் அதை செலுத்து '' என்று  சொல்லாமல் சொல்கிறானோ?

பத்து பன்னிரண்டு வளையங்கள் கொண்ட ஒரே கல்லில் செதுக்கிய கல் சங்கிலி,   ்ஒரு மண்டபத்தின் மேற்கூரையில் தட்டையான பத்து கற்களை எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் வைத்திருப்பது  எப்படி  நூற்றுக்கணக்கான  வருஷங்களுக்கு முன்பே  முடிந்தது. எங்கே   பௌதிக சாஸ்திரம்,  சயின்ஸ் படித்தான் சிற்பி?  கற்களின் விளிம்பில் கம்பிகள் போல் செதுக்கி, பின்பு இணைப்புக் கற்களில் துவாரம் போட்டு இணைத்துள்ளார்களாம். பாண்டிய நாட்டுச் சிற்பிகளே  எங்கே  உங்கள் முதுகு, காட்டுங்கள்,  நாங்கள்  தட்டிக்கொடுக்க வேண்டும்.  எப்படி உங்களால் இப்படி அதிசயங்களை உருவாக்க முடிந்ததது  என்ற ஆச்சர்யம் உலகத்தையே வியக்க வைக்கிறது.   யார் ஐயா அங்கே  உலக அதிசயங்களை லிஸ்ட் போடுபவன்  உனக்கு  இதெல்லாம் பார்க்க தெரியாதா?  இது உலக அதிசயம் இல்லையா?  நம்நாட்டில் இதற்கெல்லாம்  பொறுப்பான ஆள் கிடையாதா?  பணம் தான் லக்ஷியமா?

உள்ளே ரகுநாத பூபால மண்டபம்  என்று  ஒரு அற்புதமான வேலைப்  பாடுடைய பெரிய மூர்த்தங்களைக் கொண்ட மண்டபம். காண்கிறது.   பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர் 350 வருஷங்களுக்கு முன் கட்டியது. இடது பக்கம் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது. வண்ண ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய் கொண்டிருக்கிறதே? யார் என்ன செய்யப் போகிறார் களோ? அதில் ஒரு ஓவியம் 'அண்டரண்ட பட்சி' ரெண்டு கழுத்து கொண்ட பெரிய பறவை. ரெண்டு யானையை ஒரே சமயம் தூக்குமாம்.

எழுநிலை ராஜகோபுரம் இப்போது தூரத்தில் இருந்தே பார்க்கலாம். ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் கல்வெட்டாக விவரம் சொல்கிறது. ''லட்சம் வராகனுக்கு மேல் வரும் வட்டிப் பணத்தினால் ஆவுடையார் கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மம்.'' என்கிறது.

உள்ளே பஞ்சாக்ஷர மண்டபத்தில் (கனகசபை என்றும் பெயர் ) முந்நூறு வருஷங்களுக்கு முன் செதுக்கப்பட்ட புவன அக்ஷரங்களை காணலாம்.

 ஒரு தூணில் ரெண்டு தலை ஒரு உடல் பாம்புகள் , நவ கிரஹங்கள்  இங்கே   தனியாக இல்லை. 27 நட்சத்திர வடிவங்கள் , பல வித குதிரைகள், சப்தஸ்வர தூண்கள், செதுக்கியிருக் கிறார்கள். உருவச்சிலைகளின் கால் நரம்பு கூட தெரிகிறது. தலைமுடி கூட சன்னமாக நீட்டி அளவோடு அல்லவா நீவி விட்டிருக்கிறான் சிற்பி..

நிருத்த மண்டபம் தான் நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக் கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும் கண் எங்கோ பார்த்து கை  அதை சிற்பமாக்கிஇருக்கிறது.  சிலையில் கை விரல் ரேகைகள் கூடத் தெரிகிறது. வேடன் வேடுவச்சி சிற்பங்கள் பாண்டிய சிற்பிகளின்  திறமையை, பெருமையை பறை சாற்றுகிறது.

தேவசபைக்குள்  நுழைந்தால்  நாமே   சுந்தர பாண்டிய மண்டபத்தில்  இருப்பது போல  ஒரு  உணர்வு.   இங்கே மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி கொண்டுள்ளார்.

மணிவாசகரை  தரிசித்த பிறகு தான் நாம்  ஆத்மநாதர் தரிசனம் பெறுகிறோம்.   சிவனும் அம்பாளும் தெற்கு பார்த்தபடி அருவமாக இருக்கிறார்கள். திருமேனி இல்லை. பாணம் இல்லாத ஆவுடையார் மட்டும். சத தள பத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டும் தங்கத்தில் செய்த யந்திர வடிவம். உள்ளே செல்ல முடியாது. அம்பாளின் திருப்பாதங்களை கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் பண்ணமுடியும்.   

 எல்லாச் சிவாலயங்களிலும் உள்ள சிவலிங்கம் இங்கே இல்லை என்பது தான் விசேஷம். நடுவில் சக்தி பீடம்.  லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில்  ஒரு  குவளையை கவிழ்த்து சாற்றியிருப் பார்கள். சக்தி பீடத்தில் ஞானஒளியாக ஆன்மநாதர் இருக்கிறார். உருவம் அற்ற அருவம். சக்தி பீடம் மட்டுமே இருப்பதால் உலகமே ப்ரம்ம சக்தியால் இயங்குகிறது என்ற தத்துவம் புலனாகிறது. 

எதிரே உள்ள சதுர கல்மேடையில் புழுங்கலரிசி அன்னத்தை ஆவி ததும்ப பரப்பி அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை என்று பல பக்ஷணங்கள்  நிரப்பி வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது.  கமகமவென்று   ஆவியிலுள்ள நறுமணமே ஆத்மநாதருக்கு நிவேதனம். கொடி மரமோ, பலி பீடமோ, நந்தியோ இல்லாத விசேஷ விசித்திர சிவன் கோவில் இந்த பிரம்மாண்ட ஆலயம். 

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மறக்காமல் பக்தர்கள்  இங்கே  செய்ய வேண்டிய  ஒரு காரியம்.   கல்லில் வடித்துள்ள குருந்தமரம் அடியில் ஆத்மநாதர் கிழ பிராமண குருவாக இருக்கும் சிற்பம்.  அதை ஒட்டி  பவ்யமாக மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் சிலைகளை   சற்று நேரம்  கடிகாரம் பார்க்காமல் நின்று ரசித்து   மனதால்  மணிவாசகரை தியானம் செய்த்துவிட்டு  அவர் அருளாசியும், தரிசனமும் பெறுவது  உசிதம். . 

சத்சபை  என்பது  ஒரு விசாலமான கல்மேடை. இன்றும் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம் தான் நைவேத்தியம். சுட சுட வடித்து கொட்டி ஆவியாக நைவேத்யம் .அர்த்த சாமத்தில் தினமும் புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை ஆகியவை  நைவேத்தியம்.  

பழைய கால வாத்தியங்களில்  ஒன்று  கெத்து வாத்தியம்.   பார்ப்பதற்கு  வீணை மாதிரி இருக்கும். தந்திகள் உண்டு.  அனால்  வீணைக்கு உள்ள  குடம்  இதில் இல்லை.  அதை  தினமும் சாயரட்சை முடிந்ததும் வாசிப்பார்கள். மண்டபங்களில் கல்வெட்டுக்கள் நிறைய படிக்கமுடியாமல் இருக்கிறது.  யாரேனும் அவற்றை மொழி பெயர்த்தவர்கள்  இங்கே  சுவர்களில் அந்த வாசகங்களை இக்கால தமிழில் எழுத்தில் வைத்தால்  அக்கால  விஷயங்கள்  நிறைய தெரிந்து கொள்ளலாம். அதற்காக தானே கஷ்டப்பட்டு அக்காலத்திய பாண்டியன் கல்லில் செதுக்கி வைத்தான்.  இதில் என்ன கஷ்டம்?
 

மணி வாசகர் விஷயங்கள் இன்னும்  சொல்கிறேன்.










 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...