திருப்புகழ்
சந்தம் காதுக்கு இனிமையாக, வார்த்தைகள் முத்துக் கோர்த்ததுபோல் அமைய, தாளக் கட்டு ஜிகு ஜிகு என்று ரயில் தண்டவாளத்தில் ஓடுவது போல் சீராக சத்தமிட, அர்த்தம் அற்புதமாக அமைய யாரால் பாட முடியும். அதற்கு முருகனே வந்து நாக்கில் வேலால் எழுதினால் தான் பாசிபிள். POSSIBLE . அது அருணகிரி நாதருக்கு கிடைத்த அதிர்ஷ்டம். பூர்வ ஜென்ம புண்ய பலன்.
''சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
நான் மறத்தமிழன் அல்லன் . மடத்தமிழன். எத்தனைகாலம் அருணகிரியை ரசிக்காமல் ருசிக்காமல் விட்டுவிட்டேன். அதெப்படி அவருக்கு ஸ்வாமிமலையைப் பார்த்தது சரண கமலாலயம் என்று பாட தோன்றியது. கமலாலயம் எவ்வளவு கண்ணுக்கினிய திருவாரூர் குளம். அதை நினைத்துப் பார்த்தாலே உன் திருவடிகள் தாமரைக்குள ஆலயமாக எனக்கு புகலிடமாகிறதே. கைலாசவாசன் குமரா தேவசேனாபதியாகி தோள்களில், மார்பில் புஜங்களில் வஜ்ர கடகங்களை அணிந்தவனே.. கண்ணைப்பறிக்கும் ரத்னங்கள் ,மணிகள் இழைத்த ஆபரணங்களை, தங்க மாலைகளையும், வெட்சிப் பூவோடு சேர்த்து தரித்தவன், கூரான வேலவனே, உன் திருவடியே துணையென ஒவ்வொருநாளும் துதிக்க அருமையான செந்தமிழ்ப் புலமையை திருவண்ணாமலையில் தந்தவனே, மயில்வாகனா , பழனியாண்டியாக நின்றாலும் கட்டழகனே, சுவாமிமலை அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா.
நான் உன்னை 30 வினாடி, அரை நிமிஷம் கூட நினைக்காத மா பாவி. அறிவில்லாதவன். குற்றவாளி. மட்டி, மூடன், பிறவிப்பிணியில் வாடுபவன் உன் அருள் செல்வம் இல்லாத ஏழை. என்னை இப்படி விட்டு விடுவது நியாயமா? முறையோ, தருமம் தானோ? அதுவும் உன்னைக் கருணைக் கடல் என்று நம்பும்போது அடியேன் மீது கருணை செய்யாமலிருப்பதற்கு என்னய்யா முருகையா காரணம்? என் குற்றம் எது? நீ திருவருள் புரிய இது சுப முகூர்த்தம். நல்ல தருணம்; உன்னால் தான் பெருமை மிக்க, எல்லையில்லா பேரின்பமும் சகல செல்வமும் கூடிய பெருவாழ்வையும், தகுதியையும், பிறவாப் பெற்றியாகிய மோக்ஷமும் தர முடியுமே!
No comments:
Post a Comment