Friday, March 5, 2021

CHANAKYA


 சாணக்கியன்    ---  நங்கநல்லூர்  J K  SIVAN 


சாணக்கியன்  சொன்ன அர்த்த சாஸ்திரத்தை  எழுதும்போது கொஞ்சம் விவரமாக  ஸ்லோகங்களோடு  தருகிறேன். இது கொசுறு. சாம்பிள் ரீடிங்.    

 கௌடில்யனுடைய  அற்புதமான கருத்துகள்  சிலவற்றை  ரசிப்போம்.

*  உங்கள் குழந்தையை 5 வயது வரை  தாராளமாக கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை வளர்ந்த  பயல்களை  தப்பு பண்ணினால்  கொம்பால் பின்னிவிடுங்கள்.  5 வயதுக்கு மேல்  உயரமாக அண்ணாந்து பார்க்கும் படி வளர்ந்தவனை '  தம்பி,  'நண்பா''  என்று  கூப்பிட்டு நாசுக்காக  வேலை வாங்குங்கள்.  அதிகாரம் அப்போது செல்லாது. 

*  நாம்  கற்றுக்கொள்ளும்  கல்வி  பசுவைப்   போல  இருக்கவேண்டும்.  பசு  எல்லா காலங்களிலும் பால் சுரக்கும்,    கல்வி   பசு, அம்மா  மாதிரி.  எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும்  காலத்தை வீணாக்க வேண்டாம்.  அப்புறம்  எவராவது  சொல்லிக் கொடுத்து  எழுதிக் கொடுத்து  காசுகொடுத்து கொஞ்சம் தெரிந்து கொண்டு  பேசவேண்டும் நிலை , எழுதிக் கொடுத்து படிக்க வேண்டும்.   

*மாரிக்காலத்தில்  பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

*காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை. ஜாக்கிரதை.

*எவன் ஒருவனிடம் பணம்  இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் , நண்பர்கள்  ஜாஸ்தி.   பணம் இருப்பவனைத் தான் உலகம்  பெரிய  மனிதனாக    தலைவனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று   கூட  உலகம் போற்றுகிறது.

*  பிறவிக்  குருடனுக்கு கண் தெரி யாது.   காமம் உள்ளவனுக்கும்  கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் சேர்க்க வேண்டும்  என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

*பேராசை கொண்டவனை ப்பிடித்து  வாழ்த்தி பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை  அணுகி    முகஸ்துதி பண்ணி,   சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை  புகழ்ந்து,  சில  கடி ஜோக்,  நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை, சிந்தனைகள்  மூலமும் அணுகலாம்.


*சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும். அது என்னது என்று தெரியவேண்டாமா?
 
* சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

* கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

*களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்  பட்டிருக்கும்.   எந்த  அரசியல் வாதி பேச்சு  அச்சாகி இருந்தாலும் படிக்காமல் கவலைப்படாமல் காகிதத்தை தின்றுவிடும்.  இது   கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயம். 

*விடியற்காலை எழுந்திருப்பது,   தைரியமாக சண்டை  போடுவது,  அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்து  சாப்பிடுவது   ஆகிய நான்கு வித்தைகளும்  சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை. 

* இரவில் குடும்பத்தோடு  சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கை  சொல்லித்தரும்  பாடங்கள்.  

* கிடைத்ததில்   பூரண  திருப்தி அடைவது,   ஆகாரம்  கிடைக்காத நேரத்தில் பட்டினி இருப்பது,  பசி இருந்தாலும்  கட்டளை வரும் வரை காத்திருப்பது, நல்ல தூக்கத்தில் இருந்தாலும்   டக்கென்று   எழுந்து   வேலை செய்வது,   எஜமானன்,  முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு இது போதும்  இதை  எல்லாம்  கடைபிடித்தாலே,  மேற்கொண்டு  அறிவுரை தேவை இல்லாமல்  போகலாம் . இதுவே  அவனுக்கு  வெற்றி தரும்.   வாழ்வில்  எடுத்த காரியம்  கைகூடும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...