Wednesday, March 31, 2021

PILLAIYARAPPAN 2

 


                                                    பிள்ளையாரப்பன்....2..   
                                                    நங்கநல்லூர்  J K  SIVAN 

பிள்ளையாருக்கு  எத்தனையோ பேர்கள். அதில் முக்கியமானது விக்னேஸ்வரன்.  விக்னம் என்றால் குறைபாடு, தடங்கல், இடையூறு.    எந்த காரியமும், எந்த எண்ணமும் குறையின்றி நிறைவேற வேண்டும் என்று அவனை முதலில் வேண்டிக்கொண்டு தான் எதையும்  ஆரம்பிக்கும் வழக்கம் நமக்கு தொன்று தொட்டு உண்டு.  எந்த தெய்வத்தை தொழுதாலும் முதலில் விக்னேஸ்வர பூஜை குட்டியாக ஒன்று பண்ணும் வழக்கம் இன்றும் உள்ளது.

எதை எழுதினாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதும் பழக்கம்  அக்காலத்தில்  பள்ளியில் உபாத்யாயர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அதெல்லாம் இப்போது  தொலைந்து போய்விட்டது. போஸ்ட் கார்ட் எழுதினாலும் முதலில் பிள்ளையார் சுழி, கடையில் சாமான் வாங்க லிஸ்ட் போட்டாலும் முதலில் சின்னதாக ஒரு பிள்ளையார் சுழி  அப்போதிருந்தது.

கச்சேரிகளில் முதலில்  ஹம்சத்வனி ராகத்தில்  ''வாதாபி கணபதிம் பஜே''  கீர்த்தனையைப்   பாடிவிட்டு தான்  கச்சேரி தொடங்கி களை கட்டும்.    சில நிகழ்ச்சிகளில்  மஹா கணபதி என்று  நாட்டையிலும் ஆரம்பிப்பார்கள்.

முத்துசாமி தீட்சிதர் என்னும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்  பெரிய அம்பாள் உபாசகர்.  அவர்  தான்  ''வாதாபி கணபதிம்  பஜே எனும் கீர்த்தனையை எழுதியவர். திருவாரூரில் வாழ்ந்தவர்.    இருநூறு- இருநூற்றைம்பது வருஷமாக நமக்கு கிடைத்த அற்புத கீர்த்தனை இது.  ஆயிரக்கணக்கான முறை கேட்டும் அலுக்காத  கம்பீர பாடல்.   தீக்ஷிதர்   இதை திருவாரூரில்  மூலாதார கணபதியின் மேல்  பாடினார்.

 இந்த   கணபதியை 'வாதாபி கணபதி' என்று  வணங்குகிறோம்  இந்த கீர்த்தனையில் தீக்ஷிதர் மஹா கணபதியை   பதினாறு விதமான  பெருமைகளைக் கொண்ட  கணபதி என்று  போற்றி பாடியிருக்கிறார் . ஸம்ஸ்க்ரிதத்தில்  'ஷோடச கணபதி கீர்த்தனை' என்றும்  அந்த  கீர்த்தனைக்கு பெயர். 

பல்லவி
வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ
அனுபல்லவி
பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்
சரணம்
பூராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்
கராம்புஜபாச'பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்
ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

''மஹா கணபதே , நமஸ்காரம், நீங்கள்  அழகான யானை முகம் கொண்டவராக அருள்பாலிக்கிறீர்கள்.  பக்தர்கள் வேண்டும்  வரங்களைக் கொடுக்கின்ற  வாதாபி கணபதி.  உங்களை பஜிக்கிறேன். 
நீங்கள்  கணபதி,  கணேசன்,  கணேஸ்வரன், கண நாயகன், கணநாதன், என்ற பெயர் கொண்ட  காரணம் நீங்கள்  சிவ கணங்களின் ,  பூத கணங்களின் தலைவர்.  அவர்கள்  உங்கள்  திருவடிகளை சதா பூஜிக்கிறவர்கள்.  பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும்    ஆளுமையில் கொண்டவர்.   எதிலும்  ஆசை  அற்ற யோகிகளால்  போற்றப்படுபவர்.  அகில  உலகத்துக்கே  காரணபூதர்.  எல்லா தடங்கல், குறைகள், இடையூறுகளையும் விலக்குபவர் .

முன்காலத்தில் கும்ப சம்பவர் எனப்  பெயர் பெற்ற அகஸ்திய ரிஷியால்  பூஜிக்கப்பட்டவர். மூன்று கோணங்க ளுடன் கூடிய யந்திரத்தின் நடு நாயகமாக  இருப்பவர்.  விஷ்ணு முதலிய   தேவர்களால், தெய்வங்களால், முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர். மூலாதார  க்ஷேத்ரமான  திருவாரூரில் இருப்பவர். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர். 
நீங்கள் தான்  பிரணவ ஸ்வரூபமான  ஓங்கார கணபதி. 

பிள்ளையாரை படமாக சித்திரிக்கும்போது  ஓம்  எழுதி அதையே அவர் உருவமாக நாம்  காட்டுகிறோம்.
எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.   இடது கையில் கரும்புத்துண்டு. தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்  கொண்டவர்.  பாபம்  நெருங்காதவர். பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர். பரமசிவன்,  சிவகுருவாகிய முருகன் ஆகியோர் தரிசித்து  மகிழும்  ஸ்வரூபி. 
ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானை  முகத்தோன்''

தீக்ஷிதர்  அற்புதமாக  கீர்த்தனை பதத்தில்  அக்ஷர பிரயோகத்தில்  அழகாக  ஆனைமுகனை படம்பிடித்து காட்டியிருக்கிறார். 

அது சரி,  திருவாரூர்  விநாயகர்  ஏன்  வாதாபி கணபதி எனப்பட்டார்?

தொடரும்  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...