பிள்ளையாரப்பன்..... நங்கநல்லூர் J K SIVAN
எல்லோர் மனத்திலும் எளிதில் இடம் பிடித்த தெய்வம் பிள்ளையார். எவனுக்கோ ஒருவனுக்கு அது களிமண் என்று தோன்றியது அவன் மண்டையில் அது இருப்பதின் நினைவால். களிமண் என்பது ஒருவகையில் சரிதான். மண்ணுலகே களிக்கும் தெய்வம் பிள்ளையார். யானையை, குரங்கை, கடலைப் பிடிக்காத குழந்தை இதுவரை பிறக்கவில்லை. நாமெல்லாம் இது மூன்றையும் எத்தனை மணி நேரங்கள் நமது வாழ்வில் இது வரை பார்த்திருக்கிறோம் என்று கணக்கெடுத்தால், தூங்கிய, படித்த, உண்ட, நேரம் தவிர அதிக நேரம் இதுவாகத்தான் இருக்கும்.
எங்கள் வீட்டில் ஒரு இருநூறு வருஷ பிள்ளையார் இருக்கிறார். அவரைப் பற்றி முதலில் சொல்லிவிட்டு ஒரு நீளமான கட்டுரை பிள்ளையாரைப் பற்றி தொடரும்.
எங்கள் வீட்டு இருநூறு வருஷ பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாத அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர். நான் எப்போதிலிருந்து அவரை அறிந்தேன்?
எனக்கு நினைவு தெரிந்தது முதல் எங்கள் வீட்டில் தான் இருந்தார். 1942-44 களில் நாங்கள் திருவல்லிக் கேணி யில்- குடியிருந்தபோது எனக்கு 3 -4 வயதில் ஒன்றும் தெரிந்து கொள்ள்ள இயலவில்லை. முதல் உலக மகா யுத்த காதில் எம்டன் எனும் நீர் மூழ்கி ஜெர்மனி கப்பல் சென்னையை தாக்க முற்பட்டது. அதன் குறி தப்பி ஹை கோர்ட் அருகே சுவற்றில் குண்டு வெடித்து விழுந்தது. அந்த இடத்தை இன்னும் மெரினா கடற்கரை சாலையில் உயர்நீதி மன்ற வளாக பாதுகாப்பு சுவற்றில் ஞாபகார்த்த சின்னமாக ஒரு கல்வெட்டுடன் பார்க்கலாம்.
இரண்டாம் உலக மஹா யுத்த காலத்தில் ஜப்பானிய விமானங்கள் தாக்கும் என்ற பயம் சென்னையில் இருந்தது. சிங்கப்பூர் விழுந்து விட்டது. அந்தமான் தாக்கப்பட்டது.. எந்த நேரமும் ஜப்பானியன் நம்மை எல்லாம் அழிக்க வருகிறான். திருவல்லிக்கேணி அடையார் மைலாப்பூர் எல்லாம் ஜப்பான்காரன் குண்டினால் அழியும் என்று ஒரு புரளி, பீதி, மக்கள் மனதில் விழுந்து பல குடும்பங்கள் இந்த பகுதியை விட்டு வெளியேறின. வெள்ளைக்காரன் ஆட்சியில் மிக கடுமையான சோதனை காலம். ARP (AIR RAID PRECAUTION) என்று முன்னெச் சரிக்கை விளம்பரங்கள் ஒலிபெருக்கி வழியாக தெருத்தெருவாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டே போகும். கும்பலுக்கு ஆள் சேர்க்க எம். கே. தியாகராஜரின் சினிமா பாடல்கள் பாடிக்கொண்டே போகும்.
அவசரமாக சென்னை கடலோர பகுதி மக்கள் குடி பெயர்ந்தனர். எங்கள் குடும்பமும் அதில் ஒன்று. என் தாய் படிக்காதவள் ''நாங்கள் ஏவாகேஷன்'' (evacuation தான் அவளால் சொல்லப்பட்ட ஆங்கில வார்த்தை) போது கட்டின துணியோடு வடபழனி முருகனிடம் வந்து விட்டோம்'' என்பாள்.
வடபழனி கோவில் அருகே ஒரு அக்ரஹாரம் போல ஒரு பிள்ளைமார் தெரு. தெரு கோவில் குளத்தை ஒட்டி இருந்தது. மண் தெரு. எல்லா வீட்டிலேயும் ஓடு வேய்ந்து இருக்கும். திண்ணைகள் உண்டு. அதில் சாயந்திரங்களில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். தெருவில் நாங்கள் விளையாடுவோம். பெரிய பெரிய நில சுவான்தார்கள், கர்ணம் , முன்சீப், போன்ற உத்யோகங்கள் வகித்த பணக்கார சைவ பிள்ளைமார்கள் சொந்தக் காரர்களோடு வாழ்ந்த இடம். ரெங்கநாதம் பிள்ளை வீட்டில் எங்களுக்கு இடம் கிடைத்தது. வாசலில் பெரிய மகிழ மரம் விளையாட வரப்பிரசாதமாக இருத்தது. அதன் நிழலில் பகலில் நிறைய விளையாடியிருக்கிறேன். எதிர்த்த வீட்டில் பத்மநாப பிள்ளை, முன்சீப். அவர்களுக்கு புத்ர பாக்யம் இல்லை என்பதால் எனக்கு கொஞ்சம் அவர்கள் வீட்டில் சலுகை. நிறைய தின்பண்டங்கள் கொடுப்பார்கள் . எனக்கு சற்றே மூத்தவன் அண்ணா ஜம்புநாதன். என் தாத்தா பெயர் கொண்டவன். பள்ளிக்கூடத்தில் ஜம்புலிங்கமானவன். அவனுடன் தான் எனக்கு எப்போதும் சண்டை விளையாட்டு ரெண்டுமே. அவன் 69 வயதில் உலகை விட்டு மறையும் வரை ஏதேனும் ஒரு சண்டை பிடித்த்துக்கொண்டே இருந்தவன். ஜெயிப்பது எப்போதும் அவன் தான். நாங்கள் விளையாடும் இடம் வடபழனி ஆண்டவரின் கூரை வேய்ந்த கோவில். கோவணாண்டி வடபழனி முருகனும் நாங்களும் தான். கோவிலில் வேறு யாரும் இல்லாத காலம். சுந்தர குருக்கள் வீடு அருகிலேயே. அவரும் அவர் அப்பாவும் தான் பூஜை செய்யும் அர்ச்சர்கர்கள். சுந்தர குருக்கள் குரல் அற்புதமாக கணீரென்று இருக்கும். கோவில் நந்தவனம் மரங்கள் சூழ்ந்து இருக்கும். கோவிலுக்கு கதவு கிடையாது. அது நாங்கள் ஓடியாடி விளையாடும் ஒரு அழகான இடம்.
என் தாத்தா ஜம்புநாத சாஸ்திரி, பாட்டி சீதாலட்சுமி இருவரையும் நான் பார்த்ததில்லை. படத்தில் எப்போதோ சிறுவயதில் பார்த்தது. மீசை தாடியோடு பாரதியாரை பார்க்கும்போது தாத்தா ஜம்புநாத சாஸ்திரி ஞாபகம் வரும். பாரதி நெற்றியில் குங்குமத்தில் பெரிய நாமம் தரித்திருப்பார். தாத்தா விபூதி பட்டை. இன்னும் பெரிய தாடி, முறுக்கி விட்ட மீசை, கன்னங்களில் முனைகளில் புஸ் என்று பந்தாக சுருண்டு கம்பீரமாக இருப்பார். தலையில் முண்டாசு. முகத்தில் தெரிவது பரந்த நெற்றி மட்டுமே. அதில் கீர் சந்தனம் விபூதி கீற்று, குங்குமம். தீர்க்கமான மூக்கு மீசைக்கு மேலே தனித்து நிற்கும். அடர்ந்த கம்பளி பூச்சி புருவங்களின் நிழலில் ஆழமான பார்வை .. கூர்மையான கண்கள். காதை மறைந்த முண்டாசு. கழுத்தை மறைத்த கருப்புகோட்டு அதில் வரிசையாக நிறைய பெரிய பெரிய இரும்பு பொத்தான்கள். இப்படி ஒரு பழுப்பேறிய கருப்பு வெள்ளைப்படம் ஒன்று தான் என் தாத்தாவை எனக்கு காட்டியது. அதுவும் எப்போதோ எப்படியோ காணாமல் போனது. வீட்டில் ஒரு பாணா தடி ஆறு அடி நீளத்தில் கனமாக சுவற்றில் சாற்றி வைத்திருந்தது நினைவிருக்கிறது. ஒருபாத ரோட்டு கட்டை. மரத்தில் குமிழ் வைத்து அதை கால் கட்டைவிரல் ரெண்டாவது விரல் இடையில் செருகி மரச்செருப்பின் இடையே ஒரு தோல் நடுவில் குறுக்காக பட்டையாக செல்லும். அது தான் பாதம் அந்த மரக்கட்டை காலணி நழுவாமல் பிடித்துக் கொள்ளும்.
எங்கள் வீட்டு பிள்ளையார் தாத்தாவின் அப்பா, என் கொள்ளுத்தாத்தா மிருத்யுஞ்சய அய்யர் காலத்தில் இருந்து இருக்கிறார். எங்கள் தாத்தாவிற்கு பிறகு என் தந்தையிடம் வந்தது, தற்போது என் தமையனிடம் உள்ளகரத்தில் இருக்கிறார். அவரை வணங்கி எத்தனையோ பரிக்ஷைகள் எழுதி இருக்கிறேன். எனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டிருக்கிறேன். தந்திருக்கிறார். அவருக்கு என் தந்தையார் தாம்பாளத்தில் வைத்து அபிஷேகம் செய்து வஸ்திரம் உடுத்தி (ஒரு சின்ன பிள்ளையார் துண்டு, சிவப்புபார்டர் கரை யுடன்) பூணல், சந்தனம், குங்குமம், விபூதி அணிவித்து பூஜை செய்வது நினைவில் இருக்கிறது.
அற்புத விநாயகர். எங்கள் குடும்ப கஷ்டம் நஷ்டம், நல்லது கெட்டது அனைத்தும் தெரிந்தவர். எங்களை இன்னும் வாழ்விக்கும் வள்ளல். சொல்ல சொல்ல ஊற்றுபோல் பழைய விஷயங்கள் நிறைய தோன்று கின்றதே.
No comments:
Post a Comment