Monday, March 29, 2021


 

ரங்க்  வாலி ஹோலி   --    நங்கநல்லூர்   J K  SIVAN   ----

நேற்றே ஞாயிற்றுக்கிழமை  28.3.21,   ஹோலி  கொண்டாட   இன்றும்  ஹோலி பண்டிகை தொடர்கிறது,.

ஒவ்வொருநாளும் பொழுது விடிந்தால்  நம் அனைவருக்கும் ஏதோ ஒன்று மாற்றி ஒன்று கஷ்டங்கள், அதிர்ச்சிகள், எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏமாற்றங்கள் விடாமல் துரத்துகிறது.  இருந்தும் நாம் சந்தோஷமாக வாழ ஒரு முக்கிய காரணம் பண்டிகைகள். கேளிக்கைகள், கோலாகல விழாக்கள்.

நமது  முன்னோர்கள் எண்ணற்ற  பண்டிகைகளை  நமக்கு தந்திருக்கிறார்கள்.  ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக கொண்டாடும்  முறைகளும்  சந்தோஷத்தை அளிக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம்.

 அப்படி ஒன்று  பாரத தேசமெங்கும்  மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்தாலும் பெரும்பாலும் வட இந்தியர்களுக்கு  உற்சாகத்தை தரும்  விழா ஹோலி பண்டிகை. இதை வசந்த உத்சவம் என்பதுண்டு.

பிருந்தாவனத்தில்  கோகுலத்தில்  கிருஷ்ணன் ஹோலி பண்டிகையை  சந்தோஷமாக  கோபியருடன் களித்திருக்கிறான்.  எண்ணற்ற சித்திரங்கள் இதற்கு சாக்ஷி.

ஹோலி வண்ணப்  பண்டிகை.  நரசிம்மனாக அவதரித்த  மஹா விஷ்ணு  ஹிரண்ய கசிபுவை கொன்று தீமையை அழித்த நாளைக் கொண் டாடு வதாக ஒரு ஐதீகம்.   வசந்தத்தை  வரவேற் கும்  பண்டிகை. பங்குனி பௌர்ணமியை தொடர்ந்து இது  கொண்டாடப்படுகிறது.  ஹோலிகா என்ற  ராக்ஷஸனை தகனம் செய்தநாள் என்றும் ஒரு நம்பிக்கை.  அது முதல் நாள், அதாவது நேற்று. இன்று  ரங்க்வாலி ஹோலி.  டோல் பூர்ணிமா,  உகுளி, மஞ்சள் குழி, பக்வா என்ற  பெயரில் எல்லாம் ஆங்காங்கே  நாடு முழுதும்  சந்தோஷமாக  களிக்கிறார்கள்.

பாரத தேசம், நேபாளம் தவிர  ஹிந்துக்கள் வாழும்   இதர உலகின்  பல பகுதிகளில்,   தென் கிழக்கு ஆசிய  நாடுகளில், தென் அமெரிக்காவில்   கயானா, டிரினிடாட்,  டொபாகோ,  சூரினாம் , போன்ற  இடங்களில் எல்லாம் கூட ஹோலி  பிரதானமாக ஒரு கேளிக்கை விழா. நாம் போகிப் பண்டிகை  அன்று  சொக்கப்பனை என்று  பழைய  ஓலைகள், மரங்கள் காய்ந்த  சுள்ளிகள்  எல்லாம் எரிப்போமே அது போல் ஒரு சொக்கப் பனை ஹோலிக்கும் உண்டு.  அதில் ஹிரண்ய னை எரிப்பார்கள் .  மறுநாள்  அதாவது  இன்று  எல்லோரும் கலர் களாக இருப்பார்கள்,  எல்லோர் மீதிலும்  வண்ணப்பொடிகள்,  நீரில் கலந்த  கலர்பொடிகள்  பீச்சாங்குழாய்  வழியாக  பீச்சி
 நாம்  வண்ணாத்தி பூச்சியாகிவிடுவோம்.

 குஜராத்தில்  ஜாம்நகரில், பவநகரில் இதுமாதிரி , விஷயம் தெரியாமல் வெள்ளை சட்டை  பேண்டு டன்  சென்றது லட்டு  மாதிரி ஆகிவிட்டது  அங்கே உள்ள சில  இளசுகளுக்கு.  என் வண்டியை நிறுத்தி எனக்கு  கலர்  வண்ண அபிஷேகம்.  நானும் சிரித்துக் கொண்டே  அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர  கோபம் காட்டவில்லை.  அது அவர்களுடைய  உற்சாகம்.  அதில் நானும் பங்கேற்பதாக அவர்  எண்ணிக்கொண்டு  என்னை வண்ணப்படுத்தினார்கள். என் கையில்  லட்டு மிட்டாய் பக்ஷணங்கள் ஒரு பொட்டலம் வாங்கிக்கொண்டு  ஹோட்டல் ரூமில்  பேண்ட் ஷர்ட் தோய்த்து வண்ணம் போக்க  மூன்று மணி நேரம் ஆகியது.

அன்று டாண்டியா  டான்ஸிலும் என்னை இழுத்து விட்டு தையா தக்கா என்று முதல் முறையாக  ஏதேதோ அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டு ஆடினேன்.   இரவெல்லாம் அவர்கள் ஆடினாலும் நான் சற்று நேரத்திற்கெல்லாம் தப்பி ஓடி வந்து விட்டேன்.

அன்று எவரும் தெருவில் தப்ப முடியாது. டான்ஸ்  ஆடாமல் விடமாட்டார்கள்.  இதில்   ஆண்  பெண், பெரிசு சிறிசு என்று வித்யாசமே கிடையாது.  ஹிந்தி, குஜராத்தியில் என்னென்னவோ  பாட்டுக்கள் காதைப் பிளக்கும்படி பெரிதாக  ஒலித்தது.

வ்ரஜ பூமியில் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் ரங்க்  பஞ்சமி என்று ராதா கிருஷ்ணா  ஆடல் பாடல்  கேளிக்கை கொண்டாடுவார்கள்.  கிருஷ்ணன்  கருப்பு என்பதால் அந்த பெயர்  பெற்றவன். (கிருஷ்ண என்றால் கருப்பு). ஒருநாள் சிறுவயதில் அம்மா யசோதையிடம்  அழுதான்.....

மனித காதலோடு தெய்வீக பிரேமையை ஒப்பிட்டு எடை போடவே கூடாது. தவறான சிந்தனைக்கு அது அடி கோலும். புத்தியை பேதலிக்க வைத்துவிடும். அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது. ராதாவின் தூய காதல் கண்ணனைக் கட்டிப்போட்டிருந்தது. எல்லா கோப கோபியரும் கண்ணனை விரும்பி னாலும் அவனது அன்பில் பங்கேற்ற வர்களாக இருந்தும் ராதை எப்போதுமே தனி இடம் பெற்றிருந்தாள் . கண்ணனின் எண்ண பிரதிபலிப்பு அவள். இளம் வயதில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் ராதையோடு சேர்ந்து விளையாடினான். அவள் அவனைவிட பத்து வயது பெரியவள் ஆனாலும் அவனோடு ஜோடியாக விளையாடினாள்.

ஒருநாள் கிருஷ்ணன் தேம்பி தேம்பி அழுதான். வெகுநேரம் யாரும் சமாதானம் செய்தும் அழுகை நிற்கவில்லை.

''எண்டா கிருஷ்ணா அழறே, உனக்கு என்ன ஆச்சு? என்று பதறினாள் யசோதை. சாப்பிட மறுத்தான். எவ்வளவோ சொல்லியும் முடியாது என்று தலை அசைத்தான். கெஞ்சிக் கூத்தாடி ஏன் அவன் அழுகிறான் என்று மெதுவாக கண்டுபிடித் தாள் யசோதை.

''ராதா மட்டும் அழகாக சிவப்பா இருக்கிறாளே ?''
 விம்மலுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையாக காரணத்தை வெளியிட்டான் அந்த மாய கிருஷ்ணன்.

''அப்படி ஒண்ணும் இல்லைடா என் செல்லமே. நீ தான் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு'' என்றாள் யசோதை அவனைக் கட்டிக்கொண்டு.

''நான் அழகு என்று யார் உன் கிட்டே சொன்னது? ராதாவை விடவா?. அவள் தான் சிகப்பாக இருக்கிறாள். நான் கருப்பாக தானே இருக்கேன்?''

''சிவப்பா இருந்தா தான் அழகு என்பதே தப்பு. கருப்பா மினுமினுன்னு இருக்கிற கண்ணைப் பறிக்கிற கிருஷ்ணா உன்னைவிட யாருமே அழகு உலகத்திலேயே யாரும் கிடையாதுடா.

கருப்பு இல்லாம வெளுப்பு இல்லை. இரவு இல்லாம பகல் இல்லை. இருண்ட பிரபஞ்சம் இல்லாமல் சூரியனோ நக்ஷத்திரங்களோ இல்லை.''   ஒரு பிரசங்கமே செய்துவிட்டாள் யசோதை.

ஒ அப்படியா. அப்போ கருப்பு தான் அழகு என்கிறாயா அம்மா ?''

''ஆமாம் ஆமாம் ''

''சரி உன்னையும் அந்த ராதாவையும் கருப்பா பண்ணிவிடுகிறேன்;; என்று கண்ணன் யசோதை, ராதையின் முகம் கை எல்லாம் கருப்பு நீல வண்ணம் பூசினான். மற்ற கோபியர்க்கும் கூட பூசினான்.  இதை வடக்கே கிராமிய ஓவியமாக பல இடங்களில் இதை வீட்டுச் சுவற்றில் படமாக வரைந்திருக்கிறார்கள். '

கண்ணன் இவ்வாறு ராதைக்கும் மற்றோருக்கும் வண்ணங்கள் பூசியதை இன்றும் கொண்டாடு வது தான்  . ஹோலி பண்டிகை. / அன்று தெரிந்த வர் தெரியாதவர் எல்லோர் மீதும் வண்ணங்கள் கலந்த பொடிகள், கலவைகளை பூசுவார்கள், நீரில் கலந்து பீச்சுவார்கள். இன்றும் கண்ணன் ராதா சம்பந்தப்பட்ட பர்சானா, பிருந்தாவன், கோகுலம், மதுரா என்று அநேக இடங்களில் இந்த வண்ணக்கலவை பூசும் வைபவம் கோலாகல மாக நடைபெறுகிறது. அனைவருமே மகிழ்வர். கண்ணன் சம்பந்தப்பட்ட எல்லாமே மகிழ்ச்சி தானே

போன வருஷம் , என் எதிர் வீட்டில் ஒரு பீஹார் குடும்பத்திடம் மாட்டிக்கொண்டேன்.  அன்று ஹோலி என்பது நினைவில்லை . நிறைய ஆணும் பெண்ணுமாக சிரிப்பும் கும்மாளமும். எல்லோர்  கையிலும் வண்ணப் பொடிகள். பேங்க்கு போகலாம் என்ற எண்ணம். என்றுமில்லாமல்  அன்று ஏன் எனக்கு புத்தி இப்படிப் போயிற்று. வெள்ளைச் சட்டை . வெள்ளை வேஷ்டி.. வாசலில் என்னைப் பார்த்ததும் சில இளசுகள் ஏதோ அவர்கள் மொழியில் பேசி சிரிக்கும்போது எனக்கு பட்சி சொல்லியது. உடனே எனக்கு எதிர்புறமாக இருந்த சந்தில் தீயணைக்கும் இன்ஜின் மாதிரி என் ஸ்கூட்டரை   படு வேகமாக விட்டுக்கொண்டு  வண்ணப்பூச்சில் ஹோலி யிலிருந்து தப்பினேன்.   திரும்பி வரும்போதும் பால் திருட வரும் பூனை மாதிரி நாலு பக்கமும் பார்த்துக்கொண்டு சப்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...