சிகாகிரி நாதர் -- நங்கநல்லூர் J K SIVAN
குடுமிக்கு சிகை என்று பெயர். ஹிந்துக்கள் முன்பெல்லாம் சிகையில்லாமல் இருந்ததில்லை. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டுக்கு வந்தவுடன் நம் சிண்டு அவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டது. பழைய பழக்கங்கள் மறைந்த போது சிகையும் கிராப் ஆகி விட்டது. அப்படியும் ஆங்காங்கே சில தலைகளில் முழுக்குடுமி, அரைக் குடுமி, பின் குடுமி, முன் குடுமி, துளியூண்டு கிராப்புக்கு பின்னால் தொங்கும் சிண்டு என்று அதன் அடர்த்தியும் சுருங்கிவிட்டது.
ஒரு சிவ பெருமானும் குடுமியோடு இருக்கிறார். 'குடுமியான்' என்றால் வேறு ஒரு அர்த்தமும் உண்டு. ''நல்ல குணம் உடையவன்''. குடிமி என்றால் சிறு மலை. ஒரு மலைக் கோவிலில் உள்ளதால் இந்த கோவிலில் உள்ள சிவனுக்கு குடிமியான் என்ற பெயர். ஒரு கதை சொல்கிறேன்.
அந்த கோவில் அர்ச்சகருக்கு ஒரு நண்பி.அவள் தினமும் கோவிலுக்கு வந்து சிவனை சந்திக்காவிட்டாலும் சிவாச்சாரியாரை தரிசித்து ஒருநாள் இருவரும் சந்தோஷமாக கோவிலில் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த ஊர் ராஜா வந்து விட்டான். அந்த பெண் சூடிய மலர் மாலையை சட்டென்று லிங்கத்திற்கு சாற்றிவிட்டு அதை பிரசாதமாக அரசனுக்கு கொடுத்தார் அர்ச்சகர். அந்த மலரில் சில மனித கேசங்கள் இருந்ததை கவனித்த அரசன் ''என்னய்யா இது மாலையில்? எப்படி வந்தது கேசம் இதில்? '' என்று கேட்க உயிருக்கு பயந்து அந்த அர்ச்சகர் , ''மகாதேவா நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு'' உளறினார்:
'மஹாராஜா, இது சுவாமியின் குடுமியில் இருந்து வந்திருக்கலாம்'' என்று உளறினார்
''என்ன சொல்கிறீர் அர்ச்சகரே, சிவலிங்கத்திற்கு குடுமியா? ஆஹா ஆச்சர்யமாக இருக்கிறது. நாளைக் காலை வருகிறேன் அதை பார்க்க '' என்றான் ராஜா.
''பரமேஸ்வரா என் உயிரைக் காப்பாற்று'' என்று கதறினார் அர்ச்சகர். மறுநாள் காலையில் அரசன் ராணி யோடு வந்து தரிசனம் செய்தபோது அவன் கண்களுக்கு லிங்கத்தின் மேல் இருந்த குடுமி தெரிந்தது .
அர்ச்சகர் சிவனைப் போற்றிக் கதறிய வார்த்தைகள் பற்றி எழுத நேரமில்லாததால், அவருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணமாகி வெகு காலம் சந்ததியோடு சிவனுக்கு தொண்டு செய்தார்கள் என சுபமாக முடிப்போம்.
இந்த 10ம் நூற்றாண்டு குடிமியான் மலை குகைக் கோவில் புதுக்கோட்டையில் மேற்கே 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. . பழம் பெயர் திருநல குன்றம். 2000 வருஷத்திய கோவில். சிவனுக்கு இங்கே குடிமியான் என்றர்த்தம் கொண்ட சிகாகிரி நாதர், நிகேதாச்சலேஸ்வரர், ஜெயந்தவனேஸ்வரர் என்று பெயர்கள் உண்டு. ராமரால் பூஜிக்கப்பட்ட க்ஷேத்ரம். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. ஸ்வேதகேது, நளன் , மீனத்வஜன், காங்கேயன், சுந்தர பாண்டியன், மற்றும் பல்லவ அரசர்களால் அவ்வவப்போது நிர்மாணிக்கப்பட்ட கோவில்.
மகா சிவராத்திரி வருஷம் வருஷமாக கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த மலைக் கோவில் தரிசனம் செய்வோருக்கு சனி பகவான் தொல்லை இருக்காது என்று ஐதீகம். 63 நாயன்மார்கள் இந்த கோவிலில் விசித்ரமாக மலை உச்சியில் உள்ளார்கள். வழக்கமாக கோவில் பிராகரத்தில் வரிசையாக நின்று கடைசியில் ஒரு பிள்ளையாரும் இருப்பார். ரிஷபாரூடரக சிவன் இருக்க இரு புறமும் நாயன்மார்கள் இந்த கோவிலில் புது மாதிரியாக காட்சி தரும் ஒரே கோவில் தமிழ்நாட்டில் இது தான். எண்ணற்ற சிற்பங்கள் நிறைந்த குகைக் கோவில். புதை பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் இருக்கும் இந்த சிவன் கோவில் பார்க்க வேண்டிய ஒன்று. சில சிலைகளைக் கண்டு பயப்படும்படியாக இருக்கிறது. சில இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கிறது. உதாரணம்: உலகளந்த பெருமாள் சிலை, ரதி -மன்மதன், அகோர வீரபத்ரன், பத்து தலை ராவணன், விஷ்ணு மோகினியாக, மற்றும் வினை தீர்க்கும் விநாயகர் சிலைகள் அபூர்வம். சிவன் கோவில் ஆனாலும் தூணில் தசாவதாரம். சிவனின் ஊர்த்வதாண்டவம் தத்ரூபம். மனது நினைத்ததை விரல்கள் கல்லில் கட்ட தமிழக சிற்பிகளால் மட்டும் தான் முடியும் என்ற தோன்றுகிறது.
முதியவன், பையன், குதிரை கதை ஞாபகம் இருக்கிறதா? அதில் வரும் ஒரு முதியவன், பாலகன் குதிரை சிலைகள் அழகே அழகு. இதை கல்கி அவதாரம் என்றும் சொல்கிறார்கள். கண்ணிருக்கும்போது பார்க்க வேண்டிய சிற்ப அற்புதங்கள். சொல்லாமலே தெரிந்து கொள்ளவேண்டியது. பல்லவ கால குகைக் கோவில், சிற்பங்கள். நிறைய நம்மால் படிக்க முடியாத எழுத்தில் (க்ரந்தம்?) சங்கீதம் பற்றி எழுதியிருக்கிறதாம். நமக்கு தான் சங்கீதமும் தெரியாதே.இந்த சங்கீத தேனில் மயங்கி அனேக தேனீக்கள். கிட்டே போய் தொட்டு கொட்டு வாங்க வேண்டாம். கிழக்கே பார்த்து இரு த்வார பாலகர்கள், ஒருவர் கோபமாக விழிக்க, இன்னொருவர் மந்தஹாசமாக சிரிக்கிறார். ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயரில் 644 கால் தான் (தூண்கள்) இந்த 9ம் நூற்றாண்டு கோவிலில் பார்க்க முடியும். இந்த வட்டாரத்தில் மயில்கள் நடமாட்டம் ஜாஸ்தி. மலைக்கோயில்களுக்கும் மந்திகளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டல்லவா. நிறைய குரங்குகள் இங்கே.
No comments:
Post a Comment