Sunday, March 14, 2021

ORU ARPUDHA GNANI

 


ஒரு அற்புத ஞானி   --      நங்கநல்லூர்   J.K. SIVAN

சேஷாத்திரி ஸ்வாமிகள்

                                          ஒரு அற்புத பெண்மணி 

இன்று  மிகவும் போற்றத்தகுந்த ஒரு பெண்மணி  ஸ்ரீமதி  மஹாலக்ஷ்மி சுப்ரமணியம் அவர்களை பற்றி ஒரு ஆங்கில அறிமுக கட்டுரை  வழக்கம்போல் எழுதி இருக்கிறேன்.   இது  மாதிரியும் ஒரு பெண்மணி இந்த கலிகாலத்தில் இருக்கிறாரா என்று வியப்பாக  இருக்கிறதா.?  ஹிந்து சனாதன தர்மம் தழைக்க பெரிதும் உதவும் ஒரு  சாதனையாளர் அவர்.  எத்தனையோ கோவில்கள்  புனருத்தாரணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம்  நடந்தது  அவரது விடா முயற்சியால் என்று சொன்னால் அது மிகையல்ல.  தற்போது சேஷாத்திரி ஸ்வாமிகள் மணிமண்டபம் அவர் பிறந்த ஊரான வழூரில்  வளர்ந்து வருகிறது.  ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி என்னுடன் பேசியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.  என்னுடைய  புத்தகமான  ''ஒரு அற்புத ஞானி'' புத்தகத்தை  அனைத்து பக்தர்களுக்கும் மஹா மண்டப துவக்கவிழாவில் கொடுக்க வேண்டும் என்ற 
என்னுடைய  ஆவலை ஆதரித்தார்.  அது தான் என்னால் செய்ய  முடிந்த சேவை. எனக்கு பணம் வேண்டாம். புத்தக வெளியீட்டு செலவை ஏற்றுக் கொண்டாலே  அது பெரிய விஷயமல்லவா? எங்கள் டிரஸ்ட் நிறுவனம் கிடைக்கும் நன்கொடையை  மீண்டும் பிரதிகள் வெளியிட செலவு செய்யும்.  https://youtu.be/rHmd7TAEIQc

ஒருவிஷயம்  முக்கியம்.  
தங்கக்கை சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி நிறைய எழுத வேண்டுமானால் அவசியம் ஆயிரம் கை  தேவை. . அது கிடைக்காவிட்டால் தும்பிக்கை இருந்தால் போதும். ஆமாம் அந்த  மஹானைப் பற்றிச்  சொல்ல சொல்ல மஹாபாரதம் போல் எழுத அந்த ஒற்றைக்  கொம்பனால் மட்டுமே முடியும்.

ஒரு ஆச்சர்ய சம்பவம். ஆர். வி. அர்த்தநாரி என்பவர் ஸ்வாமிகளின் பக்தர். ஒருநாள் அவர் வீட்டுத் திண்ணை
யில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே வந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து  அர்த்தநாரி  ஆனந்தம் அடைந்தார். ''இப்படி சுவாமி உட்கார்ந்திருப்பதை ஒரு புகைப் படம் எடுத்தால் பூஜைக்கு வைத்துக் கொள்ள லாமே'' என்று மனம் எண்ணியது.

அடுத்த கணமே சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே அர்த்தநாரியிடம் என்ன சொன்னார் தெரியுமா?

''டேய் வேங்கடசுப்பையர் கிட்டே போ. என் படம் வச்சிருக்கார். ஒண்ணு வாங்கிக்கோ'' என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அர்த்தநாரி விடுவாரா?. நேராக வேங்கடசுப்பையர்  என்பவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு அறிந்து தேடி அவரிடமிருந்து சேஷாத்ரி ஸ்வாமிகள் படம் ஒன்றை வாங்கி பூஜையில் வைத்துக் கொண்டார். அந்த படம் ஒன்று தான் இத்துடன் இணைத்துள்ள பிரபலமான ஸ்வாமிகளின் படம்.
++
சிருங்கேரி சாரதாம்பாளை  தரிசிக்க   குடும்பத்தோடு டி .கே. ராமபத்ர சர்மா புறப்பட்டார். வழியில் திருவண்ணாமலையில் இரவு கிருஷ்ணய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கே தங்கினார். இரவு. நேரமாகி விட்டதே.

அப்போது தான் அவருக்கு தனது சகோதரிக்கு ஆரணிப் பட்டியில் பிரசவ காலமாயிற்றே. பிரசவம் ஆகி விட்டதா இல்லையா என்ற  சேதி தெரியவில்லையே?. எப்படியிருக்  கிறாளோ?, நேரே போய் பார்த்து விட்டு சிருங்கேரி செல்லலாமா. எப்படி செல்வது? என்று கவலை வந்தது. அந்த நேரம் பார்த்து இருட்டில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அறையின் கதவைத் திறந்து வெளியே வந்த சர்மா எதிரே சேஷாத்ரி ஸ்வாமிகள் நிற்பதை கண்டு வெலவெலத்து விட்டார். பக்தி ஆச்சர்யம் இரண்டு கலந்து அவரை ஆட்டுவித்தது. கை கூப்பி வணங்கினார். பேச்சு வரவில்லை. 'ஸ்வாமி'' என்று மட்டும் தான் வார்த்தை கஷ்டப்பட்டு வெளியே வந்தது.

'பிரசவம் ஆயிடுத்து. புள்ள, புள்ள தாண்டா. கவலை உனக்கு  எதுக்கு?''.

சொல்லிக்கொண்டே சென்ற ஸ்வாமிகள் இருளில் கலந்தார்.  சர்மாவின் நிலை என்ன என்பதை நான் எழுதுவதை விட நீங்களே யோசித்தால் பொருத்தமாக இருக்கும்.
++
இன்னொரு  வேடிக்கை சம்பவம். திருவண்ணாமலை மலை மேல் அப்போது ரமணர் தங்கி இருந்தார். ஒருநாள் கீழே கோபுர வாயிலில் சேஷாத்திரி ஸ்வாமிகள் உட்கார்ந்து இருந்தார். அவரைக் கடந்து சென்றாள் ஒரு பெண், அவள் பெயர் திருமங்கலம் தேனம்மாள். ரமணாஸ்ரமத்தில் வேலை செய்பவள். ரமணருக்கு கொடுப்பதற்கு என்று வாழைக்காய் சீவி  வறுவல் பண்ணி எடுத்துக்கொண்டு மலைக்கு போய் கொண்டி ருந்தாள்.
கோயில் வாசலில் கீழே, ஸ்வாமியை அவள் கடக்கும்போது ''ஹா ஹா'' என்று சிரித்த  சேஷாத்திரி ஸ்வாமிகளை வணங்கினாள்.

'வாழக்கா வறுவலா.. . ம்ம்... கொண்டுபோய் கொடு. யார் சாப்பிட்டா என்ன? ''என்று சொன்னார். அவள் கொஞ்சம் எடுத்து  அவருக்குக் கொடுக்க முயற்சிக்கும் முன்பே அங்கிருந்து நழுவி விட்டார் மஹான். சிட்டுப்போல்  பறப்பதில் அவருக்கு நிகர்  அவர் தான்.
++
சூணாம்பட்டு திருவேங்கட முதலியார் ஒருநாள் சாயந்திரம் பஞ்சாக்ஷர மந்திரத்தை மனதுக்குள் ஜபித்துக் கொண்டு அன்ன சத்திர திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஸ்வாமிகள் உள்ளே நுழைந்தவர் அவர் அருகில் சென்று முதுகில் தட்டி ''இப்போ ராம ராம என்று ஜபம் பண்ணு'' என்று தானாகவே உபதேசம் செய்தார்.  முதலியார்  தனது மனதுக்குள்  பஞ்சாக்ஷர மந்திரம்   சொல்லிக்கொண்டிருந்தது  சேஷாத்திரி ஸ்வாமிகள்  காதுக்கு  எப்படி  எட்டியது? ஸ்வாமிகள் திரிகால  ஞானி. அஷ்டமா சித்தர்.  எதையும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். 
 
அடுத்து இன்னும் சில ருசிகர தகவல்கள் முடிந்தபோதெல்லாம்  சொல்கிறேன்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...