Thursday, June 3, 2021

RAMAKRISHNA PARMAHAMSA

 



தாயே  எல்லாம்  நீயே..   -   நங்கநல்லூர்  J K  SIVAN 



மஹாபாரதத்தில் ஒரு குட்டிக்கதை வரும். அதில் ஒருவன் பசியோடு  ஒரு வீட்டுக்கதவை தட்டுகிறான்.  அக்காலத்தில்   பசியோடு வரும்  அதிதிக்கு   போஜனம் அளித்துவிட்டு மீதி இருந்தால் அதை வீட்டில் உள்ளவர்கள்  மனம் கோணாமல் சாப்பிடுவது தான்  வழக்கம்.

அன்று அந்த வீட்டில் அதிகம் உணவில்லை. ஒருவர் கூட  திருப்தியாக சாப்பிட   போதுமானது அல்ல.  ரொம்ப கொஞ்சமாக தான்  சாதம் இருந்தது.   அதில்  இருந்து வீட்டுக்காரன் தனகுண்டான சிறிய   பாகம்  சாதத்தை எடுத்து அதிதிக்கு கொடுக்கிறான்.   பசியோடு வந்தவனுக்கு அது போதுமா?  யானைப்பசிக்கு  சோளப்பொரி. பசியோடு எல்லோரையும்  பார்க்கிறான். வீட்டுக்காரன் மனைவி,  பெண்,  பிள்ளை,  எல்லோருமே   மீதி சாதத்தை எல்லாம்  தங்களுக்கு வேண்டாம் என்று  அளித்து விட்டு பட்டினி இருக்கிறார்கள்.  வந்தவன்  திருப்தியாக சாப்பிட்டு  ஏப்பம் விட்டுவிட்டு  போகிறான். அவர்கள் அன்று  முழுதும் பட்டினி.   

நமது  தேசத்தில் இது தினமும் நடக்கிறது. எத்தனையோ வீடுகளில் தங்கள் சுகத்தையும், வசதியையும் பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு  வாடும் பெற்றோர்கள்  இன்னும் இருக்கிறார்கள்.  பிள்ளைகள் அதிதிகளாக போய்விட்டார்கள். கணவனுக்காக எல்லாவற்றையும் துறக்கும் மனைவிகள் உண்டு. மற்றவர்களுக்காக
விட்டுக்   கொடுக்கும்  மாண்பு ஒரு சில தியாக மனங்களுக்கு இன்னும் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஏழ்மையான அற்புத குடும்பம் ஒன்றில் ஒரு குழந்தை பிறந்தது. அவனுக்கு தனது முற்பிறவி ஞானம் இருந்தது. எதற்காக பிறந்திருக்கிறோம் என்றும் புரியும், தெரியும்.  சிறுவயதிலேயே அவன் தந்தை காலமானார்.  பள்ளிக்கூடம் சென்றான். பிராமணன் கல்வி கற்கவேண்டும்.  கல்வி கற்றுக்கொடுக்க காசு கேட்க கூடாது.  இப்போது  நடக்கும் கல்விச்சாலை அக்கிரமங்கள், வேலியே  பயிரை மேயும் கோரம்,  கலாசாலை ஊழல்களை மனதில்  நினைத்தால்   அக்கால  கல்வி  போதனையின் புனிதம் அழிந்துவிடும்.

அப்போதைய பள்ளிக்கூடம் வாத்யார் வீடு தான். குருகுல வாசம் என்று பெயர்.   பிள்ளைகளை சிறு வயதிலேயே குழந்தைகளாக கொண்டு சேர்ப்பார்கள்.  அங்கேயே சாப்பிட்டு, தூங்கி, வாத்யார், வாத்யார் மனைவி எல்லோரும் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை  செய்து கொண்டு, அவ்வப்போது முடிந்த நேரத்தில் வாத்யார் திண்ணையில் உட்காரவைத்தோ,  கால் பிடிக்கும்போதோ,  முதுகு சொரியும் போதோ 
சொல்லித்
தருவதை கவனமாக  கேட்டுக் கொள்வது தான் பாடம். முதுகில் தனது எடையை விட அதிகமான பை  தொங்காத காலம்.  வாத்யார் வீட்டில் முக்கிய  பண்டிகைகள் போது வேஷ்டி துண்டு கிடைக்கும்.  ஊரில் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள்  பண்டிகைகள் விசேஷங்களில் வீட்டு காரியங்கள் போது வாத்யார் களுக்கு சன்மானம் பணமாகவோ, பொருள்களாகவோ தருவார்கள். அது தான் அவர் வருமானம்.

 மேலே சொன்ன பையனுக்கு  அண்ணா ஒருவன். அண்ணா இப்படி கல்வி கற்றவன். அவனிடம் சீடர்கள் சேர்ந்தனர் .தம்பி  எந்த குருகுலமும் போகவில்லை, எந்த குருவும் அவனுக்கு இல்லை.  ஆகவே  அண்ணா  அவனுக்கு தனக்கு தெரிந்ததை போதித்தான்.  பையனுக்கு இந்த படிப்பெல்லாம் பிரயோஜனம் இல்லை என்று தான் தெரியுமே.  ஆனால்   உலகில் பிழைக்க  எங்கோ  இவருக்கோ உழைக்க  வேண்டுமே. ஏதாவது வேலையில் சேரவேண்டாமா. வருமானம் எப்படி கிடைக்கும்?.  அவன் வாழ்ந்த கிராமத்தில் வழியோ வசதியோ  இல்லை.  அடுத்த பெரிய ஊர்  கல்கத்தா. அங்கே ஒரு கோவில் பூசாரியானான். அவனுக்கு தெரியாத மந்திரமா?  கோவில்களைக்  கட்டியதே அந்த காலத்தில் ராஜாக்களும் பிரபுக்களும் தான்.  

நமது தேசத்தில் தான் அவனவன் தனக்கு பிடித்த கடவுளை கொண்டாட வழி, வசதி உண்டு.மற்ற தேசங்களில் மதங்களில் இப்படி முடியுமா? முடிந்தால் உயிர் தப்புமா?  

வறுமை சிறுவயதிலேயே வேலைக்கு போக வைக்கும். படிக்காத அந்த பிராமண பையன்  கதாதரனுக்கு அண்ணாவின் தயவால்,   கோவில் பூசாரி உதவியாளனாகத்  தானே வேலை கிடைக்கும்.

நமது  பழைய வேத நூல்கள், புராண நூல்கள் கற்பனையாக எழுதப்படவில்லை. அதை உருவாக்கியது  ரிஷிகள். வேதம் கற்று  த்யானத்தில்  இறைவனைக் கண்டவர்கள்.  அவர்கள் துறவு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளை ,  பல  வருஷங்கள் உடலை வருத்தி தவமிருந்து கண்டறிந்த பேருண்மைகளை வேதமாக உபநிஷதங்களாக நமக்கு தந்த வள்ளல்கள்.   அப்படி வளர்ந்தது ஹிந்து சனாதன தர்மம் என்ற கோட்பாடு.  ஆகவே தான்  ஹிந்து தர்மம் ஒருவரால் உருவானதில்லை,  பலரின் ஒட்டுமொத்த  உழைப்பின்  நீதி சாரம். 

தனது வாழ்நாளில் அதிகம் கல்வி கற்காமல், சுயமாக சிந்தித்து, த்யானம் செய்து இறைவியை நேரில் கண்டு ஞானம் பெற்று  அந்த ஞானத்தை  அதிகம் பேசாமல் தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகளவும் பரவச்செய்த  ஒரு அதிசய ஞானி தான்  கததரனாக பிறந்து வளர்ந்து பின்னர்  உலகமறிந்த  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.  தான்  பூஜை செய்து வழிபட்ட    காளி  விக்ரஹமே  அவருக்கு  வழிகாட்டும் தாயாக அமையும் வகையில் அவரது  பக்தி இளம் வயதிலிருந்தே வளர்ந்தது.   அவருக்கு எந்த குருவும்  இல்லை. பவதாரிணியே  ப்ரத்யக்ஷ குரு, தெய்வம் எல்லாமே. ஆகவே  அவனை மற்றவர்கள் பாவம் பைத்தியம் என்று தான் பார்த்து பரிதாபப் பட்டார்கள். 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையை படித்தால்   எண்ணற்ற  அதிசயங்கள் வரிசையாக காத்திருக்கிறது. அபூர்வ  மனிதர்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...