Wednesday, June 16, 2021

SRIMADH BAGAVATHAM



 

ஸ்ரீமத் பாகவதம்   -  நங்கநல்லூர் J K   SIVAN --11வது காண்டம்.  4வது அத்யாயம் 23 ஸ்லோகங்கள். 


4.    எண்ணற்ற அவதாரங்கள்.. அதிசயச் செயல்கள்.. 

11வது காண்டம். 4ம்  அத்தியாயம்.  23 ஸ்லோகங் கள் பேசப்படுகிறது.   ஆற்று மண்ணை  எண்ணச் சொன்னால் சுலபாக எண்ணிவிடலாம்.   ஸ்ரீ  ஹரி யின்  பல்வேறு   தெய்வீக  குணாதிசயங்களை எடுத்துச் சொல்ல முடியாது.  அவனது மாயை யால்  பஞ்சபூதங்களை, அவற்றின் கலவையாக  பல ஜீவங்களை படைத்தவன்.  தானே இந்த பூவுலகில் ஸ்ரீ கிருஷ்ணன் என்ற பூர்ண அவதாரமாக பிறந்தவன்.

ராஜா நிமி  ரிஷபதேவனின் 9  மகன்களான  நவ யோகேந்திரர்கள் அவன் நடத்திய  யாகத்தின் போது  வருகை தந்த சமயத்தில் அவர்களிடம் தனது சந்தேகங்களைக்  கேட்டு நிவர்த்தி செய்து கொள்கிறான். 

''யோகேஈஸ்வரர்களே,  பகவான் ஸ்ரீமன் நாராயணன்  இந்த பூவுலகில் அவதாரம் செய்தபோது அவனுடைய விருப்பத்தின் படி தானே  அவதரித்தான்.அவனது அவதார லீலா விநோதங்களைப்  பற்றி சொல்லுங்கள்''
ராஜாவுக்கு  த்ருமிலன்  என்கிற ரிஷி பதிலளிக்கிறார்:  
''அப்பனே ,  யாராவது ஒருவர்  நான்  பரமாத்மா  ஸ்ரீமன் நாராயணனுடைய  கல்யாண குணங் களை முழுதும் சொல்கிறேன் என்று சொல்ல முற்பட்டால் அது  சிறுபிள்ளைத்தனம்,  பூமியின் மேல் உள்ள மண்ணை எல்லாம்  எண்ணிச் சொல் என்றால்  எவனாவது ஒரு புத்திசாலியால் முடியலாம், ஆனால்  ஸ்ரீ மன் நாராயணன் கிருஷ்ணனின் கல்யாண குணங்களை எடுத்த்துச் சொல்ல இயலாது.    ஆயிரம் நாக்கு படைத்த  ஆதிசேஷனாலேயே முடியாதே.

ஐம்பூதங்களை உருவாக்கி அவற்றினால் தானும் ஒரு உருவமெடுத்து  அகண்டாகாரமான  புருஷனாக பரமாத்மா தோன்றினார்.   யாகங்கள்  யஞங்கள் மூலம்  திருப்தியடைந்தார். பூமிக்கு அப்போது  தேவேதாம என்று பெயர்.      நாராயண னின் ஸ்ருஷ்டியான மாயை  நாராயணனை அணுகாது. அவனிடமிருந்து மூவுலகங்களும்  பிறந்தது.  அவனிடமிருந்து சகல ஜீவராசிகளும் உருவானது. அவனது மூச்சுக்கு காற்றே சகலத்துக்கும் ப்ராணன் . அவனால் இவ்வாறு பிரபஞ்சம் உருவானது.  ஸ்ருஷ்டி, ஸ்திதி,  ஸம்ஹாரம் எனும் ஆக்கல் , காத்தல், அழித்தல் மூன்றும்  செயல்பட்டது.  அதற்கென  ப்ரம்மா  விஷ்ணு  சிவன் என மூன்று தோற்றங்கள்.

நிமி  ராஜனே,இதைக் கேள்.    நர நாராயண ரிஷி என்பவர்  தர்மா என்பவருக்கும், தக்ஷன் மகள்  மூர்த்தி என்பவளுக்கும்  பிறந்தவர். உலக ஈர்ப்புகளால் கவரப்படாமல்  பக்தியோடு நாராயணனை வழிபட்டவர்.  பத்திரிகாச்ரமத்தில் இன்றும் அருள்புரிபவர். ரிஷிகளால்  வணங்கப்படுபவர்.    

இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. இந்த நர நாராயணரிஷி தவ வலிமையால் இந்திர பதவியை பெற்று விடுவாரோ என்று அஞ்சி காமனை  அழகிய  பெண்களோடு  அனுப்பி நரநாராயண ரிஷி தவ வலிமையை  அழிக்க  முயல்கிறான். நரநாராயண ரிஷியிடம்  சென்ற  மன்மதனின்  பாணங்கள்  பலனின்றி விழுந்தன.   ரிஷி  மன்மதனை, அவனுடன் வந்த பெண்களை எல்லாம் வரவேற்று  உபசரித்து, எனது ஆஸ்ர மத்துக்கு வருகை தந்து  கௌரவித்த உங்களை  வாழ்த்தி வணங்குகிறேன் என்கிறார். 

மன்மதன்   நரநாராயணரிடம் தான் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறான்.  மாயையால் வெல்லமுடியாத மகரிஷி என்றும்  அன்றுபோல்  அன்பும் கருணையும்  உள்ளவர்  என அறிந்து ஆசிகோறு கிறான் .   பகவானை அடைய வழிபடும் பக்தனுக்கு எண்ணற்ற சோதனைகள் பல ரூபங்களில் வரும். இறைவன் அருளால் அவை தகர்க்கப்பட்டு அவன் பகவானை சரணடைகிறான்.   பசி தாகம், சோர்வு, புலன்களின் உந்துதல்  என்று பல இன்னல்கள் அவனை வாட்டினாலும் பக்தன் சளைப்பதில்லை . இப்படிப்பட்ட சமுத்திரத்தை தாண்டியவன்,  கோபம் என்ற உணர்வுக்கு  அடிமையாகி  ஒரு மாட்டின் குளம்பு அழுத்திய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மறைகிறான்...  இந்த ஸ்லோகத்தின் மூலம் கோபம் எவ்வளவு கொடியது என்று புரிகிறது.

இந்திர லோக தேவர்களுக்கு,   நரநாராயணர்   திடீரென்று பல  அதிரூப தேவதைகளை உண்டாக்கி காட்டுகிறார். அவர்கள் அவருக்கு  சேவை செயகிறார்கள்.  இதைக்கண்ட  தேவர்கள்  அசந்து போகிறார்கள்.   அவரது சக்தியை  கட்டுப்பாட்டைப் புரிந்துகொள்கிறார்கள்.   

இந்திர லோக  தேவதைகளே, உங்களுக்கு இப்பெண்களில்  யார் வேண்டுமோ  ஒருவரை  தேவலோகத்துக்கு அழைத்து சென்று கௌரவிக்கலாம்.  உங்களை  பரிசு இல்லாமல் வெறும் கையோடு அனுப்ப மனம் இடம் கொடுக்க வில்லை  என்கிறார்  நர நாராயண ரிஷி.    தேவர்கள்  ஊர்வசியை அழைத்துச் செல்கிறார்கள். 

நடந்ததை  இந்திரனிடம் சொன்ன தேவதைகள்  நரநாராயண ரிஷியின் தவ வலிமை, அன்பு மனம்,  ஞான வைராக்கியம் பற்றி புகழ்கிறார்கள். அதை மூன்று லோகத்தவரும் கேட்டு மகிழ  இந்திரன் அமைதி இழக்கிறான்.  அவரது தவசக்தி அறிந்து  அதிசயிக்கிறான்.   ஒருபக்கம் அவன்  ரிஷியின்  தவவலிமை அறியாமல் செய்த தவறு அவனை வாட்டுகிறது.  

மஹா விஷ்ணு இந்த  பூலோகத்தில் பல அவதாரங்கள் எடுத்தவர்.  ஹம்சமாக , தத்தாத் ரேயராக,  நான்கு ப்ரம்ம குமாரர்களாக, ரிஷபதேவனாக,  எல்லாமே   ஆத்ம தத்துவத்தை  பிரம்மத்தை மக்களுக்கு புரியவைக்கவே. ஹயக்ரீவராக  அவதரித்து  பாதாளலோகம் சென்று   ராக்ஷஸன் மதுவை வென்று கொன்றுவிட்டு  வேதங்களை காப்பாற்றி கொண்டுவந்தவர்.   மத்ஸ்யமாக அவதரித்து  சத்யவ்ரத மனு, இந்த பூமி அதன் அனைத்து மூலிகை தாவரங்களை ப்ரளயத்திலிருந்து  காத்தவர்.   வராகமாக அவதரித்து  தைத்யன்  ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியை  காப்பாற்றியவர்.  ஆமையாக உருவெடுத்து மந்த்ரமலையை முதுகில் தாங்கி  தேவர்கள் பாற்கடலைக் கடைந்து  அம்ருதம் பெற  உதவியவர்.   கஜராஜன் முதலையின் பிடியில்  சிக்கி உயிரிழக்கும் தருணத்தில் ஆதிமூலமே என்ற அவன்  குரல் கேட்டு  முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றியவர்.  உருவத்தில் சிறிய  வாலகில்ய  ரிஷிகளை அவர்கள்  பசுவின் குளம்பு பதித்த ஆழத்தில் இருந்த நீரில் மூழ்கியபோது காப்பாற்றியவர்.  வ்ரித்ராசுரன் வதத்தின்  பிறகு இந்திரன்   காரிருளில்  சிக்கி தவித்தபோது காப்பாற்றி யவர்.  ஹிரண்யகசிபுவைக்கொன்று  ப்ரஹ்லாதனைக் காக்க  நரசிம்மவதாரம் எடுத்தவர்.  தேவாசுர யுத்தங்களில் தேவர்களைக் காத்தவர்.   வாமனாக அவதரித்து மஹாபலி யிடமிருந்து பூமியை மீட்டு  அதிதி புத்ரர்களிடம் ஒப்படைத்தவர்.  பரசுராமன் அவதாரமாக  21 முறை க்ஷத்ரிய வம்சங்களைக் கொன்றவர். ஹைஹய வம்சத்தை பூண்டோடு அழித்தவர்.  ஸ்ரீராமனாக அவதரித்து சக்தி வாய்ந்த ராவணாதி களை அழித்தவர்.   பூமியின் பாரத்தை குறைக்க யது  வம்சத்தில் அவதரித்து  பலம் வாய்ந்த  ராக்ஷஸ அரசர்களை அழிப்பவர்.  புத்தனாக பிறந்து  வேதங்களை யாகங்களை,  தவறாக உபயோகிப்பவர்களை எதிர்த்து, அஹிம்சா மார்கத்தை ஸ்தாபித்து  கண்டனம்  செய்யப் போகிறவர்.  கலியுகம் முடியும் நேரத்தில்  கல்கி என்ற அவதாரமாக  தவறான விதத்தில்  தமது  அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்யும்  ஆள்பவர்களை  அழிக்கப்போகிறவர்.  
ஹே  ராஜா  நிமி, நான் சொன்னது சிலவற்றைப் பற்றி தான். எண்ணற்ற உருவங்களில் அவதரிப்பவர்  ஸ்ரீமன் நாராயணன்.  அவர் ரக்ஷிக்கும்  கடவுள்  அல்லவா. அவரது செயல்பாடுகளை வரிசைப்படுத்தி கூற  எவராலும் முடியாது  என்கிறார் நவயோகேந்திரர்களில் ஒரு ரிஷி.  

இதோடு ஸ்ரீமத் பாகவத  11ம் காண்டம்,  4ம் அத்தியாயம்  23 ஸ்லோகங்கள்  முடிகிறது . மேலே கொடுத்தது அவற்றின் சாராம்சம். 

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...