பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
36. அதிசய அனுபவங்கள் .
காசியில் பாவம் செய்தாலும் அது கும்பகோணம் வந்தால் தீரும் என்பார்கள். அவ்வளவு விசேஷமானது கும்பகோணம். இடறி விழுந்தால் ஏதாவது ஒரு சிவன் கோவில், அல்லது பெருமா ளின் மேல் தான் விழவேண்டும் என்று சொல்வதுண்டு. எண்ணற்ற கோவில்களை இங்கே நிர்மாணித்து பராமரித்து போற்றியவர் கள் சோழ மன்னர்கள், தஞ்சாவூரை ஆண்ட நாயக்க, மராத்தி ராஜாக்கள்.கும்பகோணம் ஒரு இணையற்ற காவிரி பாயும் அற்புத க்ஷேத்திரம். ஆன்மீகமும் சரித்ரமும் ஒன்றாக கலந்த ஒரு அற்புத கலவை.
மஹா பெரியவா கும்பகோணத்தில் இருந்த கால கட்டத்தில் மடத்திற்கு அருகே காவிரி ஆற்றின் தென்கரையில் ஒரு சிவன் கோவில் உண்டு. அதற்கு மடத்துத் தெரு காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்று பெயர். தஞ்சாவூர் ராஜா சரபோஜி காலத்தில் ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. அம்பாள் ஞானபிரகலாம்பிகை. இவளை வழிபட்டால் வாயுலிங்க க்ஷேத்ரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் உண்டு. கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரமூர்த்தியும் இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். கும்பகோணத்தில் மஹா பெரியவா இருந்த காலத்தில் தினமும் இந்த ஆலயத்திற்கு சென்று காளஹஸ்தீஸ் வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
வடக்கே எப்படி திருப்பதி வெங்கடேச பெருமாளும் காளஹஸ்தி சிவனும் முக்கிய க்ஷேத்ரங்களோ அப்படி தெற்கே கும்பகோணத் தில் ஒப்பிலியப்பன் கோயில் பெருமாளும் இந்த மடத்து தெரு காளஹஸ்தீஸ்வரரும் முக்கியமான வர்கள்.எண்ணற்ற பக்தர்கள் என்றும் வழிபடும் சக்தி தெய்வங்கள்.
கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் ஒரு வாயிலில் சித்தி விநாயகர் கோயிலைக் கடந்து காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் உள்பகுதிக்கு வலப்புறம் வழியாக வருவதற்கு பாதை உள்ளது.
கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்களில் இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயமும் ஒன்று. மஹாமஹ உத்சவம் சம்பந்தப்பட்ட கோவில். இந்த ஆலயத்தின் ஆராய்ச்சி மணியின் சப்தம் ''ஓம்'' என்று கேட்பது விசேஷம். இங்குள்ள துர்க்கைக்கு 18 கரங்கள். அஷ்டதச புஜ மஹாலக்ஷ்மி துர்கை.
ஞாயிற்றுக்கிழமைகள் ராகுகாலத்தில் அர்ச்சனை செய்பவர்கள் ஏராளம். ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல பீடைகளும் நீங்கும் என்று ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில் நெய்யில் எலுமிச்சம்பழ விளக்கேற்றினால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் .. இன்னொரு விஷயம் இங்கே ஜூரஹரேஸ்வரர் இருக்கிறார். யாருக்காவது விடாமல் ஜூரம் இருந்தால் ஜுரஹரேஸ்வரருக்கு வென்னீர் அபிஷேகம் செய்து புழுங்கலரிசி கஞ்சி மிளகு ரசம் பருப்பு துவையல் நைவேத்தியம். மெனு பற்றி கேட்கும்போதே ஜுரம் இல்லாமலேயே நாக்கில் ஜலம் ஊறுகிறதா? வில்வதளத்தால் அர்ச்சனை செய்தால் ஜூரம் நீங்கும் . நவகிரகங்கள் பைரவர்களோடு தனியாக ஒரு ராகு பகவான் உள்ளார். ராகுகாலத்தில் இந்த ராகு பகவானை வணங்கி தொழுவதால் ராகு தோஷங்கள் நிவர்த்தியாகும். பின் புறம் ஆஞ்சனேயருக்கு தனிச் சன்னதி.
இந்த கோயில் பற்றி இன்னொரு அற்புத விஷயம். கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் சங்கீதம் நாட்யம் நாடகம் பிரவசனம் போன்ற எண்ணற்ற கலைஞர்கள் தோன்றியவர்கள். அப்போதைய அரசு, ராஜாக்கள் ஆதரவு அவர்களுக்கு அமோகமாக இருந்ததால் சகல கலைகளும் வளர்ந்தது.
பெரியவா கும்பகோணத்தில் இருந்தபோது சிறந்த நாதஸ்வர வித்வான்களில் ஒருவர் இங்கே இருந்தார். அவர் பெயர் கும்பகோணம் சிவக்கொழுந்து. அவருக்கு ஒரு இளைய சகோதரர். அந்த சகோதரர் தார்மீக எண்ணம் கொண்டவர். தம்மாலான தர்ம காரியங்களில் ஈடுபடுபவர்.
மேலே சொன்ன காளஹஸ்தீஸ்வரர் கோவில் கும்பகோணம் சங்கரமடத்திற்கு தெற்கே இருந்தது. அப்போது ஆலயத்துக்கு கோபுரம் இல்லை. சிதிலமாகியிருந்தது. இந்த சகோதரருக்கு எப்படியாவது அந்த ஆலயத்துக்கு ஒரு கோபுரம் அமைத்து விட வேண்டும் என்ற ஆசை. அவரது பூஸ்திதி அதற்கு இடம் கொடுக்கவில்லையே. ஆகவே தினமும் விடிகாலை ஐந்து மணிக்கே எழுந்து அருகே காவிரியில் ஸ்னானம் செய்து விட்டு விபூதி பட்டை பட்டையாக தரித்து, ருத்ராக்ஷ மாலைகள் கழுத்தில் அணிந்து ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தை ரோடில் நாலு பேர் கண்ணில் படும்படியாக ஒரு மரஸ்டூல் மேல் வைத்து விட்டு அருகே நின்றுகொண்டு காத்திருப்பார். ''சிவ தர்மம்,சிவ தர்மம்'' என்று மணிக்கணக்காக உரக்க குரல் கொடுப்பார். காவேரி ஸ்னானம் செய்ய வருபவர்கள் எல்லோரும் அவரது அலுமினிய பாத்திரத்தில் காசு தர்மம் போடுவார்கள். இப்படி நின்று பணம் சேர்த்து, தினமும் காஞ்சி மடத்து வாசலில் தூரத்தில் நின்று நமது மஹா பெரியவாளையும் தரிசித்துவிட்டு தான் செல்வார். இப்படி விடாமல் பணம் தானம் வாங்கி ஐந்து ஆறு வருஷங்களில் தேவையான பணம் சேர்ந்து காளஹஸ்தீஸ்வரர் கோவில் கோபுரம் கட்டி முடித்தார்..
மஹா பெரியவாளுக்கு இந்த சிவபக்தரையும் அவரது தார்மீக சேவையும் ரொம்ப பிடிக்கும். எல்லோரிடமும் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவார்.
1922 ம் வருஷம் கயாவில் காங்கிரஸ் மாநாடு ஒன்று நடந்தது. வங்காள தேச பக்தர் சித்தரஞ்சன் தாஸ் தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏதோ உண்டாகி C R தாஸ் காங்கிரசை விட்டு விலகி ஸ்வராஜ்யா கட்சி என்று ஒன்றை ஆரம்பித்தார். தமிழ் நாட்டில் அப்போது அதை ஆதரித்தவர்கள் A. ரங்கஸ்வாமி அய்யங்கார், S. ஸ்ரீனிவாச அய்யங்கார், மற்றும் S . சத்யமூர்த்தி ஆகியோர். தேர்தலில் தனித்து நின்று பிரிட்டிஷ் ஏகாபதியத்துக்கு எதிர்கட்சியாக செயல்பட எண்ணம். காந்தி எதிர்மறையாக சிந்தித்தார். தேர்தலையே புறக்கணிக்கவேண்டும் என்று. புதுக்கட்சிக்கு ஆதரவு சேர்க்க, நிதி திரட்ட, நாடு முழுதும் பிரயாணம் மேற்கொண்ட CR தாஸ் தமிழகத்தில் 1923 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுப்பயணம் செய்தார்
மஹா பெரியவா அப்போது திருச்சியில் பேட்டைவாய்த்தலையில் ,முகாம் இட்டிருந்தார். மஹா பெரியவா அந்நிய ராட்சியிலிருந்து தேசம் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஆதரித்தவர் என்று அறிந்து அவரது ஞானம், பெருமைகளை அறிந்த தாஸ் மஹா பெரியவாளை சந்திக்க விருப்பம் கொண்டு, சத்யமூர்த்தியிடம் தனது விருப்பத்தை வெளியிட்டார். சத்யமூர்த்தி மஹா பெரியவாளிடம் பக்தி உண்டு. ஆகவே தொடர்பு கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
மிகுந்த பக்தி மரியாதையோடு தாஸ் பெரியவாள் எதிரே அமர்ந்தார். அவரது க்ஷேம லாபங்களை விசாரித்த பெரியவா அவர் புது கட்சி தொடங்கும் காரணத்தை வினவினார். தனது மனதில் தோன்றிய சில எண்ணங்களையும் தெளிவாக அறிவித்தார். மஹாபெரியவாளின் உன்னத சிந்தனா சக்தி, நாட்டுப்பற்று, அரசியல் ஞானம் எல்லாம் அவரை திகைக்க வைத்தது. அவருக்கு கடைசியில் தனது ஆசிகளை வழங்கிய மஹா பெரியவா
''நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தபோதிலும், அரசியல் வாதிகள் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் தெய்வ நம்பிக்கைக்கு கெடுதல் உண்டாகாமல், குறுக்கிடாமல் அரசியல் பண்ணவேண்டும் ''
என்ற கருத்தை தெரிவித்தார். அது இன்றைக்கும் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு பொருந்தும் . எத்தனை பேர் அதை பின்பற்றுவார்கள்?.
இது தவிர மஹா பெரியவா தாஸ் அவர்களிடம் அப்போதே, ''நான் ஒரு மத ஸ்தாபன மடாதிபதி மட்டுமல்ல ஒரு சன்யாசியும் கூட, ஆகவே நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்து கூற மாட்டேன். என்றோ ஒருநாள் இந்த நாடு சுதந்திரம் அடைந்தால் அது மகிழ்ச்சி தரும்'' என்றார் .
தாஸ் பத்துநாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த பின் மீண்டும் மஹா பெரியவாவை திருவானைக்காவில் கண்டு தரிசித்து ஆசி பெற்றார்
தொடரும்
No comments:
Post a Comment