Tuesday, June 8, 2021

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம் --    நங்கநல்லூர் --    J  K  SIVAN  

32.  முன் பின் காணா  ஒரு வைபவம்.

1923  மே  மாதம்  10ம் தேதி  ஸ்ரீ ரங்கத்தில்  இருந்து வெளி வந்த  ஒரு பத்திரிகை  'HINDU MESSAGE '' அதன்   தலையங்க   செய்தியாக   திருவானை க்காவில்  மஹா பெரியவா நிகழ்த்திய  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன்  தாடங்க பிரதிஷ்டை பற்றி  விவரமான ஒரு கட்டுரை வெளியிட்டது. அதை எழுதியவர் அதன் ஆசிரியர்  ஸ்ரீ  T  K  பாலசுப்பிரமணிய ஐயர். அந்த கட்டுரையை இணைத்திருக்கிறேன்.  அதன் தமிழாக்கம் தருகிறேன்.

''23.4.1923 அன்று திருச்சி வந்த  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அளிக்கப்பட்ட  வரவேற்பு  வைபவம் இதுவரை கேள்விப்படாதது, காணாத அதிசயம்.  மைல்கள்  நீளமாக  சென்ற  இந்த  ஊர்வலத்தில் முதலில்  அலங்கரிக்கப்பட்ட யானைகள் வரிசையாக  வர எண்ணற்ற  மக்கள் கோலாகலமாக  இந்த ஊர்வலத்தை கண்டு களித்தனர்.  நடுவே  பீடாதிபதி ஒரு தந்தப் பல்லக்கில் அமர்ந்து தரிசனம் அளித்தார். எண்ணற்ற சாஸ்த்ர பண்டிதர்கள் வேதம் ஓதிவர, அதைத் தொடர்ந்து பஜனை கோஷ்டிகள் ஒலித்தன.  எட்டு மைல்  தூரத்துக்கு எங்கு பார்த்தாலும் வண்ணவண்ண  தோரணங்கள், மலர் அலங்காரங்கள்.தெருவெல்லாம் கோலங்கள்.   தேவார திருவாசக பாராயணங்கள். மக்கள்  மஹா பெரியவா  தரிசனம் பெற்று  ஆனந்த வெள்ளத்தில்  ஆழ்ந்தனர். தேவாதி தேவர்களே கண்டு களித்த அற்புத நிகழ்வு . அதை எப்படி  விவரிக்க இயலும்? 

இந்த பாரத தேச மக்களின்  உறுதியான   தெய்வ பக்தி, இறை நம்பிக்கையைத் தான் இந்த ஊர்வலம் வெளிப்படுத்தியது. ஆங்கிலேய  வைஸ்ராயோ, இங்கிலாந்து அரசரோ  வந்தால் கூட இந்த அளவு  வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். 

ஊர்வலம்  திருவானைக்காவல் சென்று அடைய  ஐந்து மணி நேரத்துக்கு மேலாக  ஆயிற்று. இதில் என்ன ஆச்சர்யம் என்றால்  மஹா பெரியவர்  கண்ணில் பட்ட அனைவரையும் கவனித்து உற்சாகமாக அன்பாக  கையசைத்து  வாழ்த்தி, அருளாசி வழங்கியது தான். துளியும் களைப்பை வெளிப் படுத்தவே இல்லை. புன்சிரிப்பு,  ஒன்றி ரண்டு வார்த்தைகள் அவ்வப்போது அதில் சேர்ந்திருந்தது.  ஊர்வலம்  திருவானைக்காவல்  காஞ்சி காமகோடி மடத்தருகே முடிந்து மகா பெரியவா  உள்ளே சென்றபோது அங்கும்  மக்கள் வெள்ளம் காத்திருந்தது.  அவர் களைப்பு  காணா மல் போனது. 

திருவானைக்காவில்  அடுத்த நாள் ஸ்ரீ  அகிலாண் டேஸ்வரி தாயாருக்கு,  தாடங்க ப்ரதிஷ்டைக்கு  முன்னால் நடக்கவேண்டிய  வைதிக காரியங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஆதி சங்கரர்  இந்த பாரத பூமியில் அவதரித்து   இந்த பாரத தேசம் முழுவதும்  பல முறைகள் விஜய யாத்திரை சென்றிருக்கிறார்.  அதில் இந்த  ஜம்புகேஸ்வர க்ஷேத்ரமும்  உண்டு.   ஒரு சமயம் அம்பாளுக்கு  உக்ரம் அதிகமாகி  அவள் பார்வை பட்ட எதுவும்  தீக்கிரையானது.   அதிகாலை  அம்பாளின் கர்பக்ரஹத்தை திறந்து உள்ளே நுழைந்த  அர்ச்சகரும் ஒரு முறை எரிந்து சாம்பலானார்.  செய்வதறியாது பக்தர்கள் விழிக்க, தெய்வ சங்கல்பமாக இங்கே  விஜயம் செய்த ஆதிசங்கரரை அணுகி   நிலைமையை எடுத்துக் கூறி   அம்பாளின் உக்ர கலையைக்  குறைத்து  சாந்தமாக அருள்பாலிக்க  வழி செய்யும்படி  வேண்டினார்கள்.  

ஆதி சங்கரர்  அம்பாளின் சந்நிதிக்கு எதிரே  கதவை  திறந்ததும்  அம்பாளின்  பார்வை முதலில்  படும்படியாக அவளுக்கு இஷ்டமான  ஜேஷ்ட  குமரன் மஹா கணபதிக்கு ஒரு சிறு  சந்நிதி ஸ்தாபனம் செய்தார்.  இது ஒரு விதத்தில்  அம்பாளின் உக்ரத்தை  சமனம்  செய்ததே தவிர முழு நிவாரணம் ஆகாது என்று ஆதி சங்கரர் உணர்ந்து,  ரெண்டு  ஸ்ரீ சக்ரங்களை மந்திரார் ச்சனை உச்சாடனத்தோடு  யந்திரங்களில்  ஆவாஹனம் செயது,  அம்பாளின்  இரு செவிகளுக்கு அழகிய தாடங்கங்களாக அதை உருவம் அமைத்து  தயார்செய்து,  அணிவித்து   அம்பாளின் உக்ர  கலை  குறைந்து, சாமிய  மூர்த்தியாக காட்சி  அளித்தாள் .  இரவு நேரங்கள் தவிர மற்ற வேளைகளில் இந்த தாடங்கங்கள்  அம்பாளுக்கு அணிவிக்கும் வழக்கம் உண்டாயிற்று. 

 காலப்போக்கில் இந்த  தாடங்கங்கள் பழுது பட்டபோது,  காஞ்சி காமகோடி அவ்வப்போது இருந்த   மட  பீடாதி பதிகள்  அவற்றை  ரிப்பேர்  செய்து  முறைப்படி  சாஸ்திர விதிப் படி  பிரதிஷ் டை செய்தார்கள் .  

68 வது பீடாதிபதி யாகிய  நமது மஹா பெரிய வாள் காலத்திலும்  அம்பாளின் தாடங்கங்களை  தக்க படி புதுப்பித்து  பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு நடந்தது.  நான்கு வருஷங்கள் முன்பு  தீர்மானிக் கப்பட்டு,   மஹா பெரியவா  நாட்டின்   பல  இடங்களுக்கு  விஜய யாத்திரை சென்று ரெண்டு வாரத்துக்கு முன்பு திருச்சிக்கு  வருகை தந்தா ர்கள்.  19.4.2023  அன்று  வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான  வேத பிராமணர்கள் கலந்து கொண்டு  மிகப்பெரிய அளவில் இந்த  தாடங்க பிரதிஷ்டை வைபவம் நடந்தது. 

 விடிகாலையிலிருந்தே மக்கள் அலைமோதி திரண்டனர். காலை 8 மணியளவில்  எங்கும்   ஜனவெள்ளமாக காட்சி தந்தார்கள். மஹா பெரியவா  மடத்திலிருந்து புறப்பட்டு  ஆலயத் துக்கு வரும்போது திருவானைக்கா க்ஷேத்ரத்தில் இம்மி அளவும் நிற்கவும் இடமில்லை.   அம்பாள் தரிசனம்,  28 வயது நிரம்பிய  இளம் ஜகத் குரு சன்யாசி புது  பீடாதிபதியின்  தரிசனம் இரண்டுமே  அந்த  ஜனத்திரளுக்கு காரணம்.  மஹா பெரியவாள்  ஆலயத்துக்குள் நுழைவதே முடியாத காரியமாகி விட்டது.   

மஹா பெரியவா அம்பாள் சந்நிதிக்குள் சென்று விட்டார். யாகசாலையிலிருந்து கும்பம் வந்தது.  அம்பாளுக்கு  கலச அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளம் கரைபுரண்டது.  சாஸ்த்ரோக்தமாக  தாடங்கங்கள்  பூஜை செய்யப்பட்டு, மஹா பெரியவாளின் திருக்கரங்களினால்  அம்பாளின் செவிகளில்  பூட்டப்பட்டது.  தெய்வீக ஒளி எங்கும்  வீசியது.  அதை  அங்கு நின்று  கண்ணால் தரிசித் த பூஜ்ய பக்தர்களுக்கு மட்டுமே  புரியும், தெரியும், நம்மால் நூறு  வருஷங்களுக்கு பிறகு வர்ணிக்க முடியாது.

தாடங்க பிரதிஷ்டை தரிசனம் செய்தபிறகு  பல்லாயிரக்கணக்காக  பல  பாகங்களிலிருந்தும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும்  அறுசுவை  அன்னதானம்  செய்யப்பட்டது. 
மிகப் படித்த பண்டிதர்கள், வித்வான்கள் , சாஸ்திரிகள், வந்து இருந்தனர்.  அநேகரின் பல் வேறு ஆன்மீக , வைதிக, புராண தெய்வீக   தலைப்புகளில்  பிரசங்கங்கள் மஹா பெரியவா  மேற்பார்வையில்  நடைபெற்றது. அனைவரும் கௌரவிக்கப்பட்டு  தக்க முறையில் மரியாதை செய்யப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டது. இவ்வாறு இதுவரை ரெண்டு தலைமுறைகளில் எவரும் காணாத ஒரு மறக்க முடியாத வைபவம் நிகழ்ந்து  நிறைவு பெற்றது. ''  ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த  செய்தியை இணைத்தி ருக்கிறேன். படித்து மகிழுங்கள்.

திருவானைக்காவில் இருந்தபோது மஹா பெரியவா  பக்தர்களுக்கு  தரிசனம் தருவதைத் தவிர, மடத்தின் பின்னே இருந்த ஒரு  மருத்துவ சாலையில் சேர்க்கப்பட்டிருந்த  வியாதியஸ்த  பக்தர்களுக்கும்  தரிசனம் தருவது வழக்கம்.  நோயாளிகளுக்கு   வியாதிகள் பற்றி, அவற்றுக்கு  மருத்துவ  விஞ்ஞான வளர்ச்சியில் கிடைக்கின்ற  நிவாரணம் , தடுப்பு முறைகள் பற்றி எல்லாம் அம்மா குழந்தை க்கு சொல்வதை போல  சொல்லிக்  கொடுத்து  உற்சாகமளித்ததில்  அவர்கள்  விரைவில் குணம் பெற்றனர். 

பெரியவாளின் விரிவான மருத்துவ  உலக ஞானத்தை புகழ்ந்து பேராசிரியர்கள்   P T  ஸ்ரீனிவாச ஐயங்கார் , P G சுந்தரேச சாஸ்திரிகள் போன்றவர்கள்,  மஹா பெரியவா  பழமைக்கும் புதுமைக்கும் இடையே உருவான ஒரு பாலம்  என்று போற்றினார்கள்.

அருகே இருந்த ஸ்ரீ ரங்கத்திற்கு சென்று  ரங்க நாதரை  தரிசனம் செய்து மகிழ்ந்த  மஹா பெரியவா   திருச்சி  மலைக்கோட்டை  மாத்ருபூதேஸ்வரர் எனப்படும் ஸ்ரீ தாயுமானவர்  ஆலயத்திற்கும் சென்று மனம் குளிர தரிசனம் செயது மகிழ்ந்தார்.  ஸ்ரீரங்கத்தில்  மலைக் கோட்டையில் எங்குமே  ஆலய நிர்வாகிகள், அதிகாரிகள்  வரவேற்று எல்லா சந்நிதிகளில் தரிசனம் சிறப்பாகப்  பெற  ஏற்பாடு செய்தார்கள்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...