Friday, June 18, 2021

SRIMADH BAGAVATHAM


 

ஸ்ரீமத்  பாகவதம்  --   நங்கநல்லூர்  J K  SIVAN  ---
11வது காண்டம்   6வது அத்யாயம்  
50   ஸ்லோகங்கள் 


6.  ப்ரபாஸ க்ஷேத்திரம்  செல்லுங்கள்...

''சுகப்பிரம்ம மகரிஷி,  எனக்கு  நீங்கள் சொல்வதைக்  கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. மேலே சொல்லுங்கள்  ஸ்ரீ கிருஷ்ணன் என்ன செய்தார்?

''மஹாராஜா பரீக்ஷித்,  ஸ்ரீ நாராயணனின்  பூலோக அவதாரம் இனிது முடிந்துவிட்டது என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.  ப்ரம்மா தனது குமாரர்களுடனும்,  ஸ்ரீ பரமேஸ்வரன் தனது பூத கணங்களுடனும்  தேவாதி தேவர்கள் புடைசூழ த்வாரகை சென்றார்கள்.  தேவேந்திரன், மருத்துகள் , ஆதித்யர்கள், அஸ்வினிகள் , வசுக்கள், ரிப்புக்கள்,  ஆங்கிரஸ் , நாகர்கள், கந்தர்வர்கள்,அப்சரஸ்கள், சித்தர்கள், சாரணர்கள், கின்னரர்கள், வித்யாதரர்கள்,   ரிஷிகள் அனைவருடனும் சென்றான்.  அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்தார்கள். யதுகுல திலகனை  மலர்மாலைகள் சூட்டி அர்ச்சித்து போற்றினர். வணங்கினார்கள்.

''ப்ரபோ,தங்கள் மாயையால் பிரபஞ்சத்தில்  ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எனும் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய  முத்தொழில்களில்  ஈடுபடுகிறீர்கள்.  அந்த மாயை உங்களை அணுகுவதில்லை.
முறுமுணர்ந்த ஞானிகள், மகரிஷிகளும் தங்கள்  தாமரைத் திருவடிகளை  மூன்று வேளையிலும் வணங்கி மாயையின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு உங்களை அடைய தவமிருக்கிறார்கள்.   நாங்கள் கொண்டு வந்து சூட்டும் மலர்கள் கொஞ்சம் வாடியிருந்தாலும் கருணையோடு ஏற்கிறீர்கள். உங்கள் மார்பில் உறையும் ஸ்ரீ லக்ஷ்மி தேவி இதனால் மனம் வருந்தினாலும் பொருட்படுத்தாது எங்கள் மேல் தயை கூர்ந்து அருள்கிறீர்கள்.

''ஸ்ரீ நாரயண ப்ரபோ, மூன்றடி  ,மண்கேட்டு , திருவிக்ரமனாக  மூவுலகும் ஈரடியால் அளந்து  பக்தர்களை உய்வித்து  மஹாபலியிடமிருந்து பூமியை மீட்ட  தீன  தயாளா, உன்னை போற்றுகிறோம். பிரம்மாதி தேவர்களை  குறித்த காலத்தில் அவர்கள் கடடமையைச் செய்ய கண்காணிக்கும் காரணாதிபா , உன்னை வணங்குகிறோம்.  பூர்ணாவதாரா , அந்த பகிரண்டங்களை தோற்றுவித்தவனே, ஹிரண்யகர்பனே, மஹத்  தத்வ புருஷா, உன்னை வணங்குகிறோம். சகல புண்ய நதிகளும் உன் திருவடியிலிருந்து பிறப்பவை, பாபம்  தீர்ப்பவை , அவற்றில் ஸ்னானம் செய்து உன் திருவடிகளை வணங்கினாலே போதுமே.

இவ்வாறு  முதலில் வணங்கிய பிரம்மாதி தேவர்கள்  ஸ்ரீ கிருஷ்ணனை  பிரமன் மூலம் என்ன வேண்டினார்கள்?    

''ப்ரபோ  எங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து  பூமியில் அவதாரம் செய்து  தீய சக்திகளை அழித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டீர்கள். நல்ல எண்ணங்கள் மனதில் தோன்ற  உபதேசித்து விட்டீர்கள்.   யதுகுலத்தில்  தோன்றி  அவதார நோக்கத்தை அற்புதமாக செயலாற்றிவிட்டீர்கள். பூமியில் இவ்வாறு  125 வருஷங்கள்  வாழ்ந்துவிட்டீர்கள்.   யதுகுலத்தில் மேலும் தீய சக்திகள் பரவாமல் அவர்களை பிராமணர்கள் சாபத்தை காரணம் காட்டி அழித்துவிட்டீர்கள்.   உங்களை  மீண்டும்  வரவேற்று வணங்க நாங்கள் காத்திருக்கிறோம் எங்களை ரக்ஷிக்க  நீங்கள்  வைகுந்தம் திரும்ப வேண்டுகிறோம். 

''ஆமாம்  ப்ரம்ம தேவா என் மனத்திலும் அந்த எண்ணம் தான் குடிகொண்டிருக்கிறது.  யாதவர்கள் எல்லை மீறி கட்டுக்கடங்காமல்  தீய  செயல்களில் ஈடுபட்டதால் அவர்களை அடக்கி அழித்துவிட்டேன்.  பிராமண சாபத்தால் என் குடும்பமும்  முடிவுக்கு வர சில  காரியங்கள் செய்துவிட்டு திரும்புவேன். 

''பரீக்ஷித், இவ்வாறு  பிரம்மனிடம் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணன் கூறியதும் அனைத்து தேவர்களும், உபதேவதைகளும்  ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி விடைபெற்றனர். 

துவாரகையில் பூசல், கலவரம்  நிலவுவதைக் கவனித்த  ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் உள்ள பெரியோர்களை எல்லாம் அழைத்து அவர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா?

''பெரியோர்களே, நமது யாதவகுலம்   பிராமணர்களின்  சாபத்தால் விரைவில் அழியப்போகிறது. இதை மாற்றவோ தவிர்க்கவோ வழியில்லை.  இனியும்  துவாரகையில் வாசிப்பதில் பயனில்லை. எல்லோரும் இன்றே  இப்பொழுதே  நேரம்  வீணாக்காமல் உடனே  இங்கிருந்து ப்ரபாஸ க்ஷேத்ரம் புறப்படுவோம். எல்லோரும் தயாராகுங்கள்.    ப்ரபாஸ க்ஷேத்ரத்தில் தான் சந்திரன்  ராகுவின் கிரஹண பீடை நீங்கி  அங்கே புனித நீரில் ஸ்னானம் செய்து மீண்டும் வளர ஆரம்பித்தான்.   அங்கே  ஸ்னானம்  செய்து நமது முன்னோர்களை வணங்கி அவர்கள் ஆசிபெற  பிராமணர்களுக்கு தக்ஷிணை,  தானங்கள்  கொடுத்து  பரிகாரம் தேடுவோம்.

பரீக்ஷித்  இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணன் உரைத்தது அந்த ஊர் பெரியோர்கள் தங்கள் குடும்பத்தோடு அனைவருமாக வண்டிகளில்  தங்கள் உடைமைகளை சேகரித்துக்கொண்டு ப்ரபாஸ க்ஷேத்ரம் புறப்பட்டனர்.

உத்தவர்  எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணனின் பக்தர்.  தவராகையிலிருந்து எல்லோரும்  ப்ரபாஸ க்ஷேத்ரம் புறப்படுவதை அறிந்து கிருஷ்ணனிடம் வருகிறார்.  ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளில் சிரம் வைத்து வணங்கி பேசுகிறார்:

''என் தெய்வமே, ஸ்ரீ கிருஷ்ணா , பிராமணர்களின் சாபத்தால் யதுகுலம்  அழிவதைஉன்னால்  தடுக்க முடிந்தபோதும் நீ  அதை தடுக்கவில்லை, நீயும்  துவாரகையை விட்டு  செல்கிறாய்.  நீ இன்றி ஒரு கணமும் என்னால் உன்னை பிரிந்து இருக்க முடியாது. தயை கூர்ந்து என்னையும் உன்னோடு அழைத்து செல்லவேண்டும் ப்ரபோ கேசவா.   உனது லீலா விநோதங்கள் அனைத்து பக்தர்களையும்  ஆனந்திக்க  வைப்பது . கவலையை துன்பத்தை விரட்டுவது.  இனி எப்படி எங்களால் நீ இன்றி வாழ முடியும்?  நின்றாலும், அமர்ந்தாலும், நடந்தாலும், உண்டாலும், உறங்கினாலும், உன் நாமமே ஜபித்து, உன்னையே நினைத்து உன்னை தரிசித்து வாழும் எங்களால் உன்னைப் பிரிவது எப்படி சாத்தியம்? புலனடக்கிய  ரிஷிகள்  பிரம்மத்தை அடைகிறார்கள்.   மனிதரோடு மனிதர்களாக  வாழ்ந்து அன்பினால் எல்லோரையும் அரவணைத்து  ஞானம் ஊட்டிய தெய்வமே, பக்தர்களின் துயர் களைபவனே , உன் லீலாவிநோதங்கள் நினைவிலேயே எங்கள் காலம்   செல்லவேண்டுமா?''

உத்தவரின் ஆதங்கத்தை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் பதிலளித்தார் என்று இந்த ஸ்ரீமத் பாகவத 11ம் ஸ்காந்த   6வது  அத்தியாயத்தை   50 ஸ்லோகங்களில்  வேத வியாசர் முடிக்கிறார்.  அதன் சாராம்சம் தான் மேலே தந்திருப்பது.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...