Thursday, June 24, 2021

RAMAKRISHNA PARAMAHAMSA

 அருட்புனல்   -  நங்கநல்லூர்  J K  SIVAN  --


சிறுவனின்  சகஜ சமாதி நிலை 

நான் சொல்லும் விஷயங்கள் எப்போதும்  தாராளமாக  ஐம்பது நூறு வருஷங்களுக்கு முந்தியதாக இருக்கிறதே. அதற்கு என்ன காரணம்?  அதெல்லாம் மறந்து போய்விட்டது. ஆகவே  ஞாபகப்படுத்தவே தான். யாரவது ஒருவர் இந்த வேலையை போட்டியே இன்றி செய்யலாமே.  அது நானாகவே இருக்கட்டுமே என்று தான். நானும் ஒரு  83+ பெரிசு தானே. 

இது   கிட்டத்தட்ட  இரு நூறு  வருஷங்களுக்கு  முந்தி  வங்காளத்தில் நடந்த ஒரு சமாச்சாரம் தான். 

அன்று  அம்பாளின்  ஆயுத பூஜா. சரஸ்வதி பூஜை எல்லாமே.   கல்கத்தா  காளி  கோயிலில்  துர்கா பூஜா  பிரமாதமாக பக்தர்களால் கொண்டாடப்படும்.   ஆமாம் இன்றும் அது ஒரு விசேஷ கொண்டாட்டம் கோலாகலம் தான்.    வங்காளிகளுக்கு  இது பிரத்யேகமான பண்டிகை. பக்தி ரசம் பொங்கி வழியும் முக்கால்வாசி முரட்டு  பக்தி  மக்கள்.

இன்று நேற்றல்ல  ஒரு இருநூறு வருஷங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது வர்ணிக்கட்டுமா.  எனக்கு பழசு ரொம்ப பிடிக்கும். நான் பெரிசு இல்லையா?

அங்கே  ஒரு  சிறு  பையனுக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம்.  நரங்கலாக இருப்பான். அவன் வசித்தது வங்காளத்தில் கமார்புகூர் என்ற ஒரு சிறு கிராமத்தில்.   கையில் ஒரு சின்ன ஓலைப்பின்னல்  கூடையில்  கிரிஸ்பாக  CRISP  முட்டைப்பொறி  வைத்துக்கொண்டு    வழியெல்லாம்  தின்று கொண்டு நடந்தான்.  எங்குமே  நடந்து தான்  செல்லும் காலம் அது.  குழந்தைகள் கூட பல மைல்  தூரம் நடந்தார்கள்.  அந்த வயதிலே நாங்கள் நிறைய  நடந்தவர்கள். 

வானத்தில் கருமையோடு ஒரு பெரிய  மேகக் கூட்டம் பெருத்துக்கொண்டே வந்தது. எந்தநேரமும் பெரிய மழை பொழியலாம். எதையும் கண்டு பிரமிப்பது  அந்தப் பையனுக்கு வழக்கம்.  எதையாவது உற்றுப்பார்ப்பான், திடீரென்று அப்படியே  சுய நினைவு இன்றி மரக்கட்டை யாகி விடுவான்.  பிறகு தானே  சுதாரித்துக்கொண்டு  எழுந்து விடுவான்.  இது வியாதியல்ல. அருகில் இருப்பவர்கள் அவன் மயக்கமடைந்து விட்டான் என்று அஞ்சுவார்கள். அவனோ இந்நேரங்களில்  தன்னுள் வேறொருவரைக்  கண்டு  ஆனந்த பரவசம் அடைபவன் என்று எப்படி மற்றவர்களுக்கு புரியும், தெரியும்.?

கமார்புகூருக்கு   சில மைல்  தூரத்தில் ஆனூர் என்ற இன்னொரு சிற்றூரில்  ஒரு வெட்டவெளியில் ஒரு மண் திட்டு. அதற்கு  ஒருபுறம் சிகப்பு வர்ணம். அதை விசாலாக்ஷி  அம்மன் ஆலயம் என்று அந்த ஊர் மக்கள் வணங்குவார்கள். அதை சுற்றி வருவார்கள். வேண்டுவார்கள்.  சில  மாடு மேய்க்கும் பையன்கள்  அந்த திட்டைச்  சுற்றியே அலைவார்கள்.  ஏன் என்றால்  விசாலாக்ஷி தரிசனம் செய்யவரும் பக்தர்கள்   சில்லறைகள், காசு எல்லாம் அந்த மண் மேட்டில் போடுவார்கள். அதை அந்த பையன்கள் எடுத்துக்கொண்டு போய்   இனிப்பு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கோவிலுக்கு  கோபுரமோ, சிலையோ, சுற்று சுவரோ கிடையாது.  

ஒருநாள் இந்த  ஊருக்கு  மேலே  சொன்ன அந்த பையன் மற்ற பெண்களோடு  வந்தான். வழியெல்லாம் அவன்  பாடிக்கொண்டே வந்தான்.  அவன் குரல் சன்னமாக  இருக்கும்.  நன்றாக  சாமி பாட்டெல்லாம் பாடுவானே.  அவன் குரல் கேட்க இனிமையாக  இருக்கும்.  கூட வந்த பெண்கள்  அதை கேட்டு ரசித்துக்கொண்டே நடந்தார்கள்.   விசாலாக்ஷி கோவிலாகிய அந்த மண்  மேடு வந்த உடனே  அவன் குரல் நின்றது.  நின்றான். 

அப்புறம் என்ன, வழக்கம்போல கை கால் மரக்கட்டையாயிற்று. கண்களில் தாரை தாரையாக  நீர். ஒருவேளை வெயில் சுட்டெரித்ததால் மயக்கமோ?  பெண்கள் என்ன செய்வது என்று  கலவரம் அடைந்தனர். முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.  

அவர்களில் ஒரு பெண், பிரச

ன்னா, என்பவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. ''விசாலாக்ஷி அம்மா  விசாலாக்ஷி''  என்று  அவன் காதில் கூவினாள். பையன் கண் திறந்தான்.  முகம் பிரகாசித்தது. 

 ''கதாதர்,  என்னடா  ஆயிற்று உனக்கு?'  என்று அவனை சூழ்ந்து கொண்டு கேட்டார்கள்.    

அடாடா சொல்ல மறந்து விட்டேனா. ஆமாம் அந்த பையன் பெயர் கதாதர்.

 ''ஆஹா   என்ன  தேஜஸ். அந்த திவ்ய  தரிசனத்தில்   என்னையே,  ஏன்  இந்த  உலகமே எனக்கு  மறந்து போனது''     -- இது தான் கதாதர் கண் விழித்ததும் சொன்ன வார்த்தை.

 ஸ்ரீ  ராமகிருஷ்ண  பரமஹம்சர் இதற்கு மேல்  அவரது  திவ்ய அனுபவம் பற்றி  வேறெதுவும் சொல்வதில்லை. சொன்னதில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...