பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
41. ரெண்டு ஜகத் குருக்களின் விஜயம் .
இன்று அனுஷம் நமஸ்காரம், அர்ச்சனை, அபிஷேகம், பூஜை, எல்லாம் மனநிறைவோடு பக்தர்களால் மஹா பெரியவாளுக்கு அவரவர் வீட்டில் சிறப்பாக நடைபெறும் நாள். அவரைப் பற்றி இன்று எழுத எனக்கும் ஒரு பாக்யம் கிடைத்துள்ளது.
1925ம் வருஷம் ஏப்ரல் மாதம் 15ம் நாள், மஹா பெரியவா நகரத்தார் அழைப்பை ஏற்று கண்டனூர் கிராமத்துக்கு விஜயம் செய்தார். சிவகங்கை ஜில்லா, கண்டனூர் அருகே சாக்கோட்டை எனும் ஊரில் வீரசேகரர் எனும் சிவனுக்கு புராதன கோவில் உள்ளது. ஏற்கனவே பல முறை சொல்லியது மீண்டும் சொல்கிறேன். நகரத்தார்களின் சிவ பக்தி ஆலய பராமரிப்பு தான தர்மங்கள் தனி சிறப்பை கொண்டவை.
ஒரு காலத்தில் சாக்கோட்டைக்கு வீரைவனம் என்று பெயர். அம்பாள் உமையாம்பிகை. ஒன்பது நிலை ராஜ கோபுரம். சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதி. இங்கே பிள்ளையார் பெயர் விக்கிரம விஜய விநாயகர். பைரவருக்கு ரெண்டு நாய் வாகனம்.
வேடன் ஒருவன், ஒரு மரத்தின் அருகே வள்ளிக்கிழங்குக் கொடியைத் தோண்ட அப்போது கண்டு பிடிக்கப் பட்ட புதைந்த கோவில் ராஜாவால் உயர்ந்தது.
மஹா பெரியவா சாக்கோட்டை ஆலய தரிசனம் செய்தார். தேவகோட்டையில் சிலம்பணி விநாயகர் கோவில் அருகே இருந்த த்வாதசி மண்டபத்தில் ஒரு மாத காலம் முகாம். பக்தர்களுக்கு ரொம்ப திருப்தி. பிறகு காரைக்குடி சென்று அங்கே ஒரு மாதகாலம் காம்ப் . சென்ற இடமெல்லாம் எப்படியோ பக்தர்கள் மஹா பெரியவாளின் வருகை அறிந்து சகல ஏற்பாடுகளும் செய்தார்கள். காரைக்குடியில் கேட்கவே வேண்டாம். ஜில்லா போர்டு அங்கத்தினர் C நாரயணன் செட்டியார், சின்னய்யா ஐயர் , ஹெட்மாஸ்டர் N S வெங்கட்ராமையர் போன்றோர் வரிந்து கட்டிக்கொண்டு மஹா பெரியவா தங்குவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் வசதிகள் செய்திருந்தார்கள்.
இந்த விஜயத்தின் போது மஹா பெரியவா பக்கத்திலிருந்த அரியக்குடி, குன்றக்குடி, கோவிலூர் ,கிராமங் களுக்கு விஜயம் செய்தார்..
கோவிலூரில் ஒரு மடம் . அங்கே மடாதிபதி ஸ்ரீ மஹாதேவ ஸ்வாமிகள் மஹா பெரியவாளை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார் . மஹா பெரியவா விஜயம் செய்த மற்ற நகரத்தார் ஊர்கள் பள்ளத்தூர், கடியாப்பட்டி, ராயவரம் , அரிமளம், கோணப்பட்டு.
ஒருநாள் ஹிந்து பத்திரிகை ஆசிரியர் A ரங்கஸ்வாமி ஐயங்கார் , தஞ்சாவூர் E சூர்யநாராயண ஐயர் ஆகியோர் ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்தார்கள். காந்தியடிகளின் சத்யாகிரஹம் போராட்டம் மும்முரமாக நடந்த காலம். அரசியல் நாட்டு நடப்புகளை மஹாபெரியவாளுடன் கலந்து பேசினார்கள். ரங்கசாமி ஐயங்கார் காந்தியடிகளுடன் நெருக்கமானவர். மஹா பெரியவா சொன்ன சில கருத்துக்கள் மிகவும் தெளிவானவை உபயோகமானவை காந்தியடிகளுக்கு உடனே தெரிவிக்கிறேன் என்றார்.
''ஹிந்து பத்ரிகை தர்மம் மீறாமல் நடக்கவேண்டும் ''என்று ஆசிர்வதித்தார் மஹா பெரியவா. பணம் சம்பாதிப்பது என்ற குறிக்கோளைத் தவிர நடுநிலைமையோடு விஷயங்களை சரியாக எடுத்து மக்களுக்குச் சொல்லும் மிக முக்கியமான பொறுப்பு பத்ரிகைகளுக்கு உண்டு என்று மஹாபெரியவா அறிவுரை கூறினார். ஹிந்து சனாதன தர்ம கடவுள் நம்பிக்கையை என்றும் வளர்த்து வருவது அவர்கள் பொறுப்பு என்றும் கூறினார். இப்போது அப்படி ஹிந்து பத்திரிகை நடக்கிறதா என்று என்னைக் கேட்கவேண்டாம்.
அந்த வருஷம், (1925) வியாச பூஜை இளையாத்தங்குடியில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
சாதுர்மாஸ்ய பூஜைகள் முடிந்தபின்னர், மஹா பெரியவா நச்சாந்துப்பட்டி, பயப்பட்டி, விராய்ச்சிலை, குழிப்பிறை போன்ற ஊர்களுக்கு சென்றார்.
மஹா பெரியவா இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த சமயம் சிருங்கேரி பெரியவா மஹா சன்னிதானம் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் குன்றக்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண் டிருந்தார். இளையாத்தங்குடியிலிருந்து ஐந்து மைல் தூரம் குன்றக்குடி. சிவபக்தர்களுக்கு கொண்டாட்டம். ரெண்டு ஸ்வாமிகளையும் ஒரு சேர ஒரு சந்தர்ப்பத்தில் தரிசிக்க வசதியாக இது அமைந்தது.பக்தர்கள் மூலமாக இரு ஜகத் குருக்களும் பரஸ்பரம் விஷயங்களை பரிமாறிக் கொண்டார்கள்.
இளையாத்தங்குடியில் இருந்தபோது வழக்கம் போல் பல கற்றோர்கள்,பண்டிதர்கள், துறவிகள், சாஸ்த்ர ஞான வல்லுநர்கள் பல துறைகளில் ஈடுபட்டவர்கள் மஹாபெரியவாளை தரிசித்து அவரோடு சம்பா ஷித்தார்கள். மகா பெரியவா ளோடு அளவளாவுவது மிகுந்த பயனுள்ளது. தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும் என்று அவர்களுக்கு தெரியுமே.
ஒரு முறை பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் தரிசனம் செய்ய வந்தார். மூன்று மணி நேரங்களுக்கு மேலாக மஹா பெரியவா அவரிடம் கலந்து பேசினார். ஸமஸ்க்ரிதமும் தமிழும் என்றும் அழியாமல் பாதுகாக்கப் படவேண்டிய சிறந்த பழைய மொழிகள். அவற்றின் வளர்ச்சிக்கு செட்டியார் போன்ற பண்டிதர்களின் சேவை மிக அவசியமானது என்று மஹா பெரியவா கேட்டுக்கொண்டார். அநேகருக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு செட்டியார் போன்ற பண்டிதர்கள் அநேகர் அவசியம் உருவாகவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். செட்டியாரைக் கௌர வித்து ஒரு பீதாம்பரம் சால்வை பரிசளித்தார். உங்களை என்றும் மறவேன் என்று செட்டியார் கண்ணீர் மல்க உரைத்து வணங்கி விடைபெற்றார்.
பண்டிதமணியின் படம் இணைத்திருக்கிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment