Saturday, June 26, 2021

pesum deivam

 

பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN

43.  ராஜா  ஸர்  செட்டியாரின்  விருப்பம்.



நன்றாகக்  கற்ற  பெரிய மனிதர், தமிழ்பண்டிதர், தனவந்தர், தான சீலர்,  ஸ்ரீ ராமநாதன் செட்டியார்  மஹா பெரியவாளின்  கடியாப்பட்டி  வருகைக்கு   ஏற்பாடுகள் செய்தவர்  அவரே  மஹா பெரியவாளை பல்லக்கில் சுமந்தார் என்றால் என்ன பக்தி அவருக்கு!  இத்தகைய பாக்யம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?   செட்டியார்  தனது ஐந்து செய்யுள்களில் தமிழக பண்டைய பண்பாட்டின்,  பக்தி,  கலாச்சாரத்தின்  பெருமையை விவரித்திருந்தார்.  மகான்களை  பக்தர்கள்  பல்லக்கில் சுமந்தனர்.  பல  நாயன்மார்கள்  சைவசமய குரவர்கள்  பல சிவாலயங்களுக்கு  பக்தர்கள் புடை சூழ சென்றது அவருக்கு இன்று நினைவுக்கு வந்தது. மஹா பெரியவாவின் சிவாலய விஜயம் அப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி .  ''நான் செய்த பூர்வ ஜென்ம சத் கர்ம பலன் இன்று எனக்கு மஹா பெரியவாவின் பல்லக்கை சுமக்க பாக்யம்  அருளியது''  என்கிறார் செட்டியார்.

1926ம் வருஷம் ஜனவரி மாதம்  மஹா பெரியவா  சூர்ய  க்ரஹணத்தன்று  ராஜாமடம் சமுத்திர ஸ்னானம் செய்ய  வந்தார் அல்லவா.    வழியில் கரம்பக்குடியில்  ஒரு நாள்  தங்கினார். கரம்பக்குடியிலிருந்து  பட்டுக்கோட்டை புறப்படும்போது  உள்ளூர் பக்தர்கள்  கூட்டமாக  வந்து  தரிசனம் செய்து வழியனுப்பி னார்கள்.  அந்த  பக்தர்கள் கூட்டத்தில் சில  முஸ்லிம்களும் இருந்தனர்.  ஒரு முஸ்லீம்  மஹா பெரியவா பல்லக்கை சுமந்தவாறு  மூன்று  மைல்கள் தூரம்  நடந்தார்.  இது தெரிந்த  மஹா பெரியவா  பல்லக்கை நிறுத்தச்  சொல்லி அந்த முஸ்லீம் பக்தரை அழைத்தார்.   அந்த முஸ்லீம் பக்தருக்கு பரம சந்தோஷம்.   தன்னைப்  பற்றிய,  தனது குடும்ப  விவரங்களை  பெரியவாளுக்கு சொன்னார்.. பெரியவா மேல் தான் எழுதிய  பாடல்களை அளித்தார்.   ஒரு மலர்  மாலையோடு தட்டில் பழங்கள், கல்கண்டு, சந்தனம் , தங்கக்காசு, எல்லாம் வைத்து  பெரியவா காலடியில் சமர்ப்பித்தார்.

''ரொம்ப சந்தோஷம் பாய்,  நீங்கள் என்   மேல்  எழுதியதாக சொன்ன பாடல்களை நீங்களே படியுங்கள்  நான் கேட்கிறேன்''

முஸ்லீம் பக்தரும் புளகாங்கிதம் அடைந்து தான் இயற்றிய பாடல்களை உரக்கப்  படித்தார்.  படித்ததோடல் லாமல்  மஹா பெரியவாளுக்கு அதன் அர்த்தத்தையும் சொன்னார்.  மஹா பெரியவா மௌனமாக  வழக்கமான புன்னகையோடு கேட்டுக்   கொண்டிருந்தார்.   சிறிது மௌனம்.   முஸ்லீம் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு  ''சாமி,   என் கண்களுக்கு நீங்கள்   எங்கள் அல்லாவே உருவமெடுத்து வந்தது மாதிரி தான் தெரிகிறீர்கள்.  உலகத்தில்  ஆசா பாசம் எல்லாம் அகல வேண்டுமானால் உங்களை போன்ற ஸ்வாமிகளை,  ரிஷிகளை,   தரிசிக்க வேண்டும்.   சாமி நீங்கள்  நீண்ட ஆயுளோடு இருந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும்.  பல்லக்கோடு  நீண்ட தூரம் ஓடிவந்ததே  ஏகாந்தமாக உங்களை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் தான் சாமி.''  



அந்த முஸ்லீம் பக்தரின் பரிபூரண மனமார வேண்டிய விருப்பம் நிறைவேறியது. மஹா பெரியவா நூறு வருஷங்கள் இருந்து கடைசி நிமிஷம் வரை எண்ணற்ற பக்தர்களுக்கு தரிசனம் தந்து கணக்கில்லாதவர்கள்  துன்பங்களை அகற்றி  பேசும் தெய்வமாக வாழ்ந்தார். இன்றும் சூக்ஷ்ம சரீரத்தில் கருணையுடன் அருள்பாலிக்கிறார்.

உண்மையான பக்தி எது வென்று தெரிய வேண்டுமானால் அப்போது அந்த முஸ்லீம் பக்தரின் கண்களை,  முகத்தைப்  பார்த்த புண்யவான்களைக்  கேட்க வேண்டும். மஹா பெரியவா அவருக்கு  ஆசிகளையும்,  கருணையும் அருளி விடைகொடுத்தார்.

1926ம் வருஷம்   பெப்ருவரி   2ம் தேதி  மஹா பெரியவா கானாடுகாத்தான் கிராமத்துக்கு  விஜயம் செய்தார்.
ஏற்கனவே  நகரத்தார் பிரமுகர்கள் சிலர் மஹா பெரியவா விஜயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ராஜா ஸர்  அண்ணாமலை செட்டியாருக்கு விஷயம் சென்றது. அப்போது அவர்  டில்லிக்கு  அலுவலக காரியமாக சென்றிருந்தவர் உடனே  கானாடு காத்தானுக்கு திரும்பிவிட்டார்.    மஹா பெரியவா விஜயத்தின் போது  தனது சொந்தவூரில் அவரை வரவேற்று உபசரித்து தரிசனம் செய்யவேண்டும் என்ற  விருப்பம். மஹா பெரியவாளை தரிசித்து   மஹா பெரியவா   நீண்ட விஜய யாத்திரை செய்து  எண்ணற்ற பக்தர்களுக்கு தரிசனம் தந்ததில் தனது  மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.    கடவுள் நம்பிக்கையை பரப்ப இப்படி ஒரு நீண்ட  யாத்திரை எல்லா கிராமங்களுக்கும் எந்த மடாதிபதியும் செய்ததில்லை என்ற ஆச்சர்யம் அவருக்கு. கடவுளை நம்பாதவனும் கூட  மஹா பெரியவா விஜய யாத்திரைகளில்  அவரை தரிசித்து மாறி விடுவான் என்றார். பிராமண குடும்பங்கள்  நலிவுற்று போவதற்கு ஒரு முக்கிய காரணம்  வரதட்சிணை கொடுமை என்று செட்டியார் தெரிவித்தார்.

வரதட்சிணை கொடுமையை அகற்ற மஹா பெரியவா எடுக்கும் முயற்சிக்கு தானும்  கூட இருந்து தக்க பொருளாதார உதவிகள் செயகிறேன் என்றார்  செட்டியார் . இன்னொரு விஷயமும் சொன்னார்

மேலை நாட்டவரைப் பார்த்து மேலை நாட்டு  நாகரிக  கலாச்சார  பழக்க வழக்கங்களில்  அதிக ஆர்வம் காட்டி அவற்றை  அதிகம் பின் பற்றுபவர்கள் பிராமண சமூகத்தார்கள் தான்.  அவர்களைப் பார்த்து மற்ற   சமூகத்தவரும் தங்களது சம்பிரதாய  பழக்கங்க ளை வழக்கங்களை மாற்றிக் கொள்வது வருந்தத்தக்கது என்றார்.  மஹா பெரியவா செட்டியார் பேசுவதை அமைதியாக  கேட்ட பின் தனக்கு இந்த விஷயம் ரொம்ப வருத்தம் அளிக்கிறது.  இது வேகமாக பரவி வருகிறது.  எப்படி உடலில் விஷம்  வேகமாக பரவுமோ அது போல  என்றார்.  இது விஷயமாக  தீர்க்கமாக ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசியம் உங்கள் உதவியை நாடுவேன் என்று மஹா பெரியவா கூறினார்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...