Sunday, June 13, 2021

SURI NAGAMAM


 




ஸூரி நாகம்மா -   நங்கநல்லூர்  J K  சிவன்

ஞான பொக்கிஷம் 


உஷ்.  ஸூரி  நாகம்மா பேசுகிறாள். கேட்போம்.

''அழகம்மா  பாக்கியசாலி. இப்படி ஒரு பிள்ளையை எந்த தாய் பெறமுடியும்?   திருவண்ணாமலையில் அவள் சுதந்திரமாக  ஆனந்தமாக  தெய்வீக வாழ்க்கை  வாழ்ந்தாள்.  காலம் முடிந்தது.  அவள் சமாதியில் இன்று  ஸ்ரீ மாத்ருதேஸ்வர லிங்கமாக  தரிசனம் தருகிறாள். 

 ''அம்மா'' என்று  பகவான் ரமணர் எப்போதாவது அவளைக் கூப்பிடுவார்... அவர்   அழைக்கும்போது எவ்வளவு காதுக்கு இனிமை.  நினைத்தாலே  கண்களில் ஆனந்தக்  கண்ணீர் பெருகியது. இப்படி ஒரு தெய்வமே   மகனாக  பிறந்து  தன்னை அழைக்க  என்ன தவம் செய்தனை அழகம்மா?  அது ஒரு   பிள்ளை அம்மாவை கூப்பிடுவது போல் தோன்றவில்லை.  ஒரு பாசத்தாய்  மகளைக் கூப்பிடுவது போல் அல்லவோ இருந்தது.

மஹான்கள்  மகாத்மாக்கள்  பெண்களை உயர்வாக  மதிப்பவர்கள்.   பெண்களெல்லாம்  தனது தாய்கள் என்ற மரியாதை. அன்பின் உருவம்  என்று கருதுபவர்கள். அழகம்மா வருவதற்கு முன்பு  ஆஸ்ரமத்தில் சமையல் கிடையாது.  அழகம்மா அன்னபூரணியாக வந்தாள். எண்ணற்றோர்  வயிறு நிறைந்தது.   அவள் ஆரம்பித்து வைத்த  அக்னிஹோத்ரம் இன்றும்  தொடர்கிறது.

இன்றும்  வழக்கம்போல் சுவையான   உணவு, பூரி கூட்டு.அவரவர்  வேலையைப் பார்க்க சென்றோம்.  அருணாச்சலத்திலிருந்து  பகவான் ஒரு சிலர் உடன் இருக்க மெதுவாக நடந்து   கீழே   ஆஸ்ரமம் வந்தபோது  சூரியன் அஸ்தமனமாகிற சமயம். வேத பாராயணம் ஆரம்பமாகியது.

ஸ்கந்தாஸ்ரமம் சென்று வருவது ஒரு ஆனந்த அனுபவம்.  நீளமான யாத்திரை என்று சொல்லலாம்.    என் மனதில்  விண்ணக்கோடா  வேங்கடரத்னம்   பாடிய ஒரு பாடல் நினைக்க தோன்றுகிறது.

''அவன் பசி தீர்த்து அவர்களை அனுப்புகிறான். ஆத்மானுபவத்துக்கு  வழி  காட்டவில்லையே.  எதிலும் பற்று கொண்டவனாகவோ  பற்றில்லாதவனாகவோ கூட காட்டிக்   கொள்ளவில்லையே.  ஒரு வேளை  வழி காட்டியவன்  மேற்கொண்டு  அதைப் பற்றி அக்கறை ஏன் கொள்ளவில்லை?''

ஆமாம்.  ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்தவரையில்,   சாப்பாடு முடிந்ததும்   எதெல்லாமோ பற்றி பேச்சு.  போய்ட்டு வாங்கோ''.... அவ்வளவு தான்.   இது சந்தோஷமாகவும் இருந்தது, ஏமாற்றமாகவும் இருந்தது.  தேகப்பற்று இல்லாத  அந்த தெய்வம்  தனது  ஞானச்செல்வத்தை  அருணாச்சலத்தில் எங்கோ ஒளித்து  வைத்திருக்கிறதா?
 நாங்கள் தேடி அதை அடைய முடியாதபடி  மறக்க அடிக்கிறதா?  திசை மாற்றவா  இந்த  சுவையான  புளியோதரை, தயிர்சாதம் எல்லாமே ?    யாருமே  அந்த ஞானச்செல்வம் பற்றி பேசவில்லையே.   தவறு அவர்  மீதல்ல எங்கள் மீது தான்.   நாங்கள் தேடிவந்தது  இந்த   அறுசுவை உண்டியை அல்ல.  ஏக ரஸம் .  ஒரே ஒரு  ருசிக்காக.  இணையற்ற அந்த ஞான ரஸம் .  அம்மா  கூட  அழுத பிள்ளைக்குத்  தான் பால் கொடுப்பாள். ஏதோ வெளியில் கேட்காமல் முணுமுணுத்தால்  யாருக்கு தெரியும்?    நமது ஞானப்பசியை  அறிவித்தால், நமக்கு அருளமாட்டாரா?  அவர்  அன்புக்கடல் இல்லையா?  நம் குறைதீர்க்கும் கருணை வள்ளல் இல்லையா? அவரிடம் ஞான போதம் எப்படி பெறுவது என்பது நமக்கு தெரியவில்லை.   அதற்கு அவர் என்ன செய்வார்?
அதனால் தான் கேட்கும்போது தருவதற்கு எங்கோ அந்த ஞானச் செல்வத்தை  ஜாக்கிரதையாக கண்ணில் படாமல் வைத்திருக்கிறார். 

அருணாசல மலையை ஜன்னல் வழியாக  எத்தனை  நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டே இருக்கிறார்.  ஒரு க்ஷணம் கூட  அதில்  ஒளிந்திருக்கும்,   மறைந்திருக்கும்  ஞானப் பொக்கிஷத்தை அவர்  அறியாமல் இல்லை.    என் போன்றவர்களால் அதை தேடிப்   பெறமுடியுமா?   அதைப் பெற தகுதி அடையும் வரை   தருவதற்கு  அவர் காத்திருக்கிறார் அவ்வளவு தான்.   பாலைவன மண்ணிலா விதையை விதைப்பது?  எவ்வளவு அற்புதமான  ஒரு குரு எதிரே இருக்கிறார்.  அவர் மூலம் அந்த ஞானப் பொக்கிஷத்தை அடைய வேண்டாமா?   வெறுமே சாப்பிட்டு விட்டு தூங்கவா இங்கே இருக்கிறேன்?  எங்கள் இயலாமை வருத்தம் தருகிறது.   கடை விரித்தார் கொள்வார் இல்லையே என்பது சரிதான். 

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...