பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் -- J K SIVAN
31. கோலாகலமான தாடங்க பிரதிஷ்டை.
மஹா பெரியவாவின் விஜய யாத்திரை பற்றிய செய்திகள் எப்படியோ எங்கும் பரவி விடும். எப்போது எந்த ஊர் பக்கம் வருவார் என்று கவனித்து, கணித்து. அதற்கேற்ப அவரை வரவேற்று பாதபூஜை, பிக்ஷா வந்தனம் செய்ய ஏராளமாக பக்தர்கள் காத்துக் கொண்டிருப் பார்கள். இது வரை இல்லாத அளவு 28 வயது மஹா பெரியவாளின் புகழ் எங்கும் பரவி இருந்தது.
திருச்சி முனிசிபாலிடி தலைவர் ஸ்ரீ F.G. நடேசய் யர் எப்போது மகா பெரியவா திருச்சி வரப் போகிறார் என்று கவனித்து ராஜாவுக்கு, வெள்ளைக்கார நாடாளும் அதிகாரி வைஸ்ராய் வருகைக்கு ஏற்பாடு செய்வது போல் மஹா பெரியவா வருகைக்கு தகுந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் தயார் செய்திருந்தார். இதற்கு உதவியவர்கள் ஸ்ரீ M . கந்தசாமி சேர்வை, வக்கீல் ஸ்ரீ R ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் பல பிரமுகர்கள் தவிர ஏராளமான பக்தர்கள்.
திருச்சி யிலிருந்து 7மைல் நீள ஊர்வலம், அதற்கு முன்னே 7 குரூப் நாதஸ்வர தவில் வித்வான் கள், அவர்களைத் தொடர்ந்து மூன்று குரூப் பெரிய இங்கிலிஷ் BAND வாத்யக்காரர்கள், நான்கு யானைகள், நிறைய குதிரைகள், ஒட்டகங்கள், பலவித சங்கீத வாத்ய கோஷ்டிகள், வெவ்வேறு பஜனை குழுக்கள், சேவா சமிதி அங்கத்தினர்கள் அடேயப்பா, கண்கொள்ளாக் காட்சி. எல்லாம் ஒரு இளம் கதர் காவி உடுத்த சந்நியாசிக்கு.
நடேசய்யர் தானே ஜகத்குரு மகா பெரியவா அமர்ந்திருந்த தந்த பல்லக்கை சுமந்தவர்களில் ஒருவர். சாலையின் இருமருங்கிலும் இருந்த ஜன சமுத்திரத்தை பார்த்து கையசைத்து ஆசி கூறியவாறு அருட்பார்வை தரிசனம் அளித்தார் மஹா பெரியவா.
எல்லா வீட்டு மாடிகளிலும் மரங்கள் மேலும் எண்ணற்ற தலைகள். எவ்வளவு ஆர்த்திகள், பூர்ண கும்பங்கள், வேத கோஷங்கள், மலர் மாலைகள் ''ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர'' என்று விண்ணப் பிளக்கும் முழக்கங்கள் இடைவிடாமல் ஒலித்தன. தெருவில் விழுந்து பக்தர்கள் நமஸ்கரித்தார்கள்.
ஆறுமணிக்கு மாலை ஆரம்பித்த ஊர்வலம் இரவு 10 மணிக்கு திருவானைக்காவல் சங்கர மடம் வாசல் வரை தொடர்ந்தது. பெரியவாளுக்கு சேவை செய்வது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரனுக்கு சேவை செய்த மாதிரி இருந்தது என்றார் நடேசய்யர்.
இன்னும் ரெண்டு நாள் இருக்கிறது அகிலாண் டேஸ் வரி தாடங்க ப்ரதிஷ்டைக்கு. அதற்கு முன்பு சாஸ்த்ரோக்தமாக செய்யவேண்டிய ஆரம்ப வைதிக ஆகம காரியங்கள் யாகசாலை யில் ஆரம்பித்தாயிற்று. ஹோமப்புகை கம் மென்று நெய் மணக்க காற்றில் வேத மந்த்ர கோஷங்களோடு கலந்து மனதில் ஒரு இனம் புரியாத தெய்வீகத்தை நிரப்பியது. தேவாரம் திருவாசகம், பஜனை, வேத சப்தம் எங்கும் ஒலித்ததில் செவிக்கு இன்பம் குறைவே இல்லை. மஹா பெரியவா மேற்பார்வையில் ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டது.
மஹா பெரியவா சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையை முடித்து களைப்பின்றி ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு தானே அபிஷேக தீர்த்தம், விபூதி, மந்த்ர அக்ஷதை வழங்கினார்.
1923 ஏப்ரல் 29 ஞாயிறு காலை முற்பகலில் முகூர்த்த நேரத்தில் (தமிழில் ருத்ரோத்காரி வருஷம் மேஷ (சித்திரை) மாசம் 17ம் தேதி) புதிதாக பழுது செய்யப்பட தாடங்கங்களை மஹாபெரியவா அம்பாள் அகிலாண்டேஸ் வரிக்கு தனது கரங்களால் செவியில் பொருத்தினார். இதை நேரில் பார்த்த பக்தர்கள் இன்னும் எவரேனும் இருப்பார்களேயானால் அவர்கள் அனைவருக்கும் நாம் எல்லோரும் நமஸ்காரங்களை செலுத்துவோம். உண்மையி லேயே பாக்கியசாலிகள். இப்போது எவரும் இல்லை என்றாலும் அவர்களை மனதார வணங்குவோம்.
மேலே குறிப்பிட்ட கந்தசாமி சேர்வை, நடேசய் யர், ஸ்ரீனிவாச அய்யங்கார், V .ஜெயராம ஐயர், ஆண்டிபட்டி மிராசு, பெத்தாச்சி செட்டியார் ஆகியோர் முன்னின்று ஏழுநாட்களுக்கு அனைவருக்கும் இலவச உணவு அளிக்க ஏற்பாடு செய்தார்கள். உணவு தயாரிக்கும் பொறுப்பு யாருடையது தெரியுமா. கலியுக நளன் நமது தேப்பெருமாள்நல்லூர் அன்னதான சிவன். இவ்வளவு சிறந்த அன்னதானத்தை இதுவரை திருச்சி திருவானைக்காவில் எங்கும் எவரும் கண்டது கிடையாது, துய்த்தது கிடையாது. அன்னதான சிவன் பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் வரும்.
தாடங்க ப்ரதிஷ்டையை ஒட்டி, மஹா பெரியவா தலைமையில் ஒரு பெரிய ஆன்மீக மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் தலைவர்கள், தொழில் துறை முக்கியஸ்தர்கள், வக்கீல்கள், சைவ வைணவ பண்டிதர்கள், வித்வான்கள், சாஸ்த்ர வேத நிபுணர்கள், விற்பன் னர்கள், பல கலைகளில் சிறந்த வல்லு நர்கள், ப்ரம்ம ஞானசபை அங்கத்தினர்கள், எல்லோரும் கலந்து கொண்டனர். மகாநாட்டில் விவாத, பிரசங்க தர்க்க, தலைப்பு '' தற்கால நிலையில் நமது தெய்வீக ஆன்மீக தர்மத்தை பாரம்பரியம் குறையாமல் எப்படி பாதுகாப்பது'' என்பதாக மஹா பெரியவா தீர்மானித்தார். அவர் எண்ணம் எப்போதும் இதிலேயே தானே. மூன்று நாள் மாநாடு.
விவாதங்களில் கலந்து கொண்ட ஒரு முக்கியஸ் தர் காங்கிரஸ் தலைவர் செட்லுர். ஒவ்வொரு நாளும் மஹா பெரியவாளும் மாநாட்டில் பங்கேற்று தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். காரசாரமான விவாதங்களின் முடிவில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற் றப் பட்டு மகா பெரியவா அங்கீகாரத் துடன் ஏற்கப்பட்டு பதிவு பெற்றன.
ஒரு முக்கிய தீர்மானம் திருவானைக்காவில் குருகுலம் மாதிரியான அடிப்படையில் ஒரு பெரிய கலாசாலை நிறுவுவது. தாடங்க பிரதிஷ்டை நினைவாக ஒரு வேத பாடசாலை நிறுவினார். அத்வைத தத்வம் கற்பிக்க ஒரு நிறுவனம் திருவானைக்கா சங்கரமட இணைப்பாக உருவானது.
மேலே சொன்ன மாநாடு சிறப்பாக நடத்த பங்கேற்பவர்களை அழைக்க சரியான பொறுப் பாளராக ஸ்ரீரங்கம் வாணி பப்ளிகேஷன்ஸ் ஆசிரியர் ஸ்ரீ T K பாலசுப்பிரமணிய ஐயர் நியமிக்கப்பட்டிருந்தார். மாநாடு எதிர்பார்த் ததை விட மிகவும் சிறப்பாக நிகழ்த்தியதற்காக பாலசுப்ரமணிய ஐயரை மகா பெரியவா கௌரவித்து பரிசுகள் வழங்கினார்.
தொடரும்
No comments:
Post a Comment