Thursday, June 10, 2021

NARAYANEEYAM

 நாராயணீயம்   ---    நங்கநல்லூர்  J K  SIVAN 



1. நானே  உன்னைப் பார்க்கிறேன்.
                                                                                           
இந்த  பாரத தேசத்தில்   கொரோனா  வந்தபின்னும்,  வருவதற்கு முன்னும்,  பல்லாயிரம் ஆண்டுகள் மக்கள்  நீண்ட  ஆயுளோடு  வாழ்ந்தது   நாட்டு மருந்துகள், பச்சிலை வைத்தியம், பத்தியம், விரதம், உபவாசம்  இவற்றால் தான்.   வெள்ளைக்கார  விஷ மருந்துகள் இல்லாத காலம்.  மந்திரத்திலும்  வியாதி குணமானதுண்டு.   மணி  மந்திர  ஔஷதம்  கேள்விப்பட்டதுண்டா?  கோவில்களில்  மண்டல  விரதமிருந்து ஈஸ்வர பிரசாதமும்  மருந்தாக வியாதி நிவாரணம்  செய்திருக்கிறதே.   மலையாள தேசத்தில் மந்திரம் தந்திரம், தாந்த்ரீகம் எல்லாமே  கொஞ்சம் ஜாஸ்தி.

மலையாள தேசத்தில்  ஒரு  ஆசாரமான  நம்பூதிரிக்கு உடலில் பெரும் வாத நோய்  கண்டது.  அந்த நம்பூத்ரி கல்விமான்.  மதிப்பான குடும்பம்.   பிராரப்த கர்மா   அவருக்கு இப்படி யொரு  வியாதி.   எங்கெங்கோ மருத்துவர்களிடம்  அலைந்தும் ஒன்றும்  பயனில்லை.  கொஞ்சம் பூஸ்திதி  உண்டு.  ஒரு  நாள்  அவர் வசித்த ஊருக்கு  பிரபல  ஜோசியர்   வந்ததைக் கேள்விப்பட்டார்.  அவரால் நடக்கவோ போகவோ  முடியாதே.     கோபாலன் எனும்  ஒரு  வேலைக்காரனை அனுப்பி  ஜோசியர்- மருத்துவரிடம்   தனது வியாதிக்கு மருந்து வாங்கி வரச்சொன்னார்.  

கோபாலன் ஜோஸ்யரிடம் சென்று  விவரம் சொல்லி மருந்து கேட்டான்.    நாரயண பட்டத்ரி  என்கிற  வாத நோய்க்காரர்  ஆவலுடன் மருந்துக்கு காத்திருந்தார். 

சற்றைக்கெல்லாம்   வேலைக்கார கோபாலன்  அலறி  அடித்துக் கொண்டு அவரை நோக்கி  ஓடி வந்தான்.

'கோபாலா   என்ன  ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று  ஜோசியர் சொன்னாரா? ''

'' எஜமான், உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாக   ஒரு பரிகாரம் இருக்கிறது. அதைச்  செய்தால்  போதும்  சரியாகிவிடும் என்கிறார்.   ஆனால்  அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு  பிடிக்கவில்லை.  அதிச்சியாக இருந்தது. '''

'' அதிர்ச்சி அடையும்படியாக அப்படி என்ன ஜோசியர்  சொல்லி விட்டார்?''

''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம். குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாஹ  வாசன சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.  அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார் அந்த ஜோசியர்.  அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்பத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?  என் தலையெழுத்து''


பட்டத்திரி  ஸமஸ்க்ரித  வித்வான்.  குருவாயூர் கிருஷ்ணன் மேல் பக்தி.  யோசித்தார். அவருக்கு  சிரிப்புவந்தது.  ஜோசியர் கூறியதன் உட்பொருள்  புரிந்தது.

மனம்  சந்தோஷம் அடைந்தது.  ''கோபாலா,  வாடா,  நாம் இன்றே குருவாயூர் போகணும்.  பெட்டி  படுக்கை   எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய்,    இதென்ன அக்கிரமம்.  நான்  வரமாட்டேனாக்கும்''  என்றான்  கோபாலன்.   உங்களையும்  போக  விட மாட்டேன்.   அதெப்படி நீங்கள்  குருவாயூர் க்ஷேத்ரத்தில்  கோவிலுக்குள்ளே  போய்  அனாசாரம் பண்றது. நான்  அதற்கு  ஒப்புத்துக்க மாட்டேன்.   உங்களுக்கு வேணா  எப்படியாவது  வியாதி  குணமாகாதா  என்று இப்படி   செய்ய பிடிக்கலாம்.  அந்த  பாபத்துக்கு  நான்   துணை போக விரும்பலே.''   ரொம்ப  கோபத்துடன் கோபாலன்  கத்தினான்.

பட்டத்திரி என்ன  சமாதானம்  பண்ணியும் கோபாலன்  கோபம்  அடங்கவில்லை. ஜோசியன்    சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா என்று   திருப்பித் திருப்பி  சொல்லி  கடைசியில்  அமைதியானான்.  

''ஜோசியன்  சொன்னது  நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே.  அதற்கு அர்த்தம் வேறே.  மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே  முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து  தொடங்கி தசாவதாரம்  பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போகிறேன். ''

நீ  அதனால்  என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைச்சிண்டு  போ. அப்பாடா, கடைசியில்   சுலபமாக வாத நோய் குணமாக  ஒரு  பரிகாரம் கிடைத்ததே  என்ற   சந்தோஷம் அவருக்கு.

''ஒ,   நான்  ஒரு  முட்டாளாக்கும். இப்படி  ஒரு  அர்த்தம்  இருக்கோ  அதுக்கு.   ஒரு பிராமணன்  அதுவும்  குருவாயூ ரப்பன் கோவிலுக்குள்ளே  மீனை  வாயில்   வச்சுண்டு....ன்னாக்கும் எனக்கு மனசிலாச்சு.  நம்பிட்டேன் . ஜோசியர் மேலே கோபம்  வந்துடுத்து.''

 பட்டத்திரிக்கு  இன்னுமொரு  சந்தோஷம் என்ன  வென்றால் அவருடைய  குரு கற்றுக் கொடுத்த ஸம்ஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர்.  அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

பட்டத்திரிக்கு   எந்த மருந்திலும்  குணமாகாத  வாத நோய்  வெறுமே பாட்டுப்பாடுவதால்  மட்டும்   குண மாகப் போகிறதா என்ன?  ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர்  குடும்பம் ,உறவினர்கள் வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் போக  ஏற்பாடு நடந்தது.  நாராயண  பட்டத்ரிக்கு  நடக்க  முடியாதே.   ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி  வைத்து  குருவாயூர் போனார்கள்.   எப்போ  குருவாயூர்  வரும்   எப்போ நாராயணனை   பார்ப்போம்  ---   பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது.  குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக  மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக்   காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணி  மஹா  சந்தோஷம்.. .

அடுத்த நாள் விடியற்காலையில்  குருவாயூர்  வந்து சேர்ந்தார்கள். நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.

''ஆஹா  என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்''  என்று அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை நமஸ்கரித்து செல்லும்   முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர், பிரகலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும்   குருவாயூரப்பன் சந்நிதியில்  இருந்தனர்.   அவர்களில் ஒருவராக   நாராயண பட்டத்ரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால்  உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும்  உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்கே  ஒரு  திண்ணையை பார்த்தனர்.  

பகவானுக்கு வலப் பக்கமும் ,  தனக்கு   இடப்பக்கமுமாக இருந்த  அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை.  கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்?   இவ்வளவு   திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே?உன்னிகிருஷ்ணன்  எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்  பாட்டை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகள் . அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, குருவயுரப்பனுடைய  தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து, '' என்  கண்ணா''  என பக்தியுடன் கதறினார்.  நாபியிலிருந்து  அந்த  சப்தம்  பக்தியோடு வெளிவந்தது.  அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொறிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்த தால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய  முடியவில்லை.  என்ன செய்வார்?   பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு,

''ஏ கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!  இதோ பார்  குட்டி கிருஷ்ணா  உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால்  எப்படி நாராயணீயம் எழுத முடியும்னு    நீ நினைக்கிறாய்?   அதனால் நீ முதல்லே  எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத்  தா''   என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.

குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தினார் .

' சரி கிருஷ்ணா,  நீ  எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய்.   கழுத்தையாவது திருப்பி   உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான்  முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே உன் புகழைக் கேட்டிருக்கிறேன்.    உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா  உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணீ யத்தை  நான் எதை  நினைச்சு எழுத முடியும்? நீயே  சொல்லு. அதனால் நீ  உன்  தரிசனத்தை முதலில்  எனக்குக் கண்ணால் காணக்  கொடு''  என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .
குருவாயூரப்பன் சும்மா இருப்பானா ? முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறார்.

''நாராயண  பட்டத்ரி, நீ  நினைக்கிற  மாதிரி எல்லாம்  என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடி யாது.  என்றைக்கு  நீ   இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ,  அன்று  தான் உன் வியாதி நீங்கும்   சரியா ?''

'' அடே,  குட்டி கிருஷ்ணா,  எனக்கு உன் தரிசனம் எனக்கு  எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ  மண்டபத்தில்  திண்ணையில்  உட்கார்ந்து கொண்டு  உன் கழுத்தை சாய்த்துதான்  என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன்  நினைக்கிறாய்?  என் கழுத்தின்  ரெண்டு பக்கமும் நன்றாகத் தானே   இருக் கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியுமே .  பட்டத்திரி.  நானே  என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன்''  என்றான்  குருவாயூர் உன்னிகிருஷ்ணன்.

தொடரும் 





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...