அருட்புனல் - நங்கநல்லூர் J K SIVAN பார் போற்றும் பரம ஹம்சர்
2. இளம் வயதின் நினைவினிலே....
ஒரு மகா புருஷரின் வாழ்க்கை பற்றிய சில செய்திக் குறிப்பாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.
அதிசய மனிதர் அவர். எந்த பெண்ணும் எத்தனை பேர் கண்ணுக்கு தாயாக தெரிவாள்? எவர் தெய்வத்துடன் நேரில் தொட்டு பேசியவர்?
எவர் மண் பெண் பொன் எனும் மூவாசையை இதுவரை துறந்தவர்? எவர் பிறவி ஞானத்துடன் அவதரித்தவர்? எவர் நினைத்த மாத்திரத்தில் மிக உயர்ந்த நம்மால் நினைக்கக் கூட முடியாத சமாதி நிலையை சகஜமாக அடைய முடிந்தவர்? அவரைப் பற்றிய விஷயங்கள் இவை.
க்ஷுதிராம் சட்டோபாத்யாயாவின் மனைவி சந்திராதேவி.வங்காளத்தில் தெரெபூர் என்ற கிராமத்தில் பிறந்த க்ஷு திராம் 1799ல் கல்யாணம் செய்து கொண்டு 1805ல் முதல் மகன் ராம் குமார் பிறந்தான். ஒரு பெண் காத்யாயனி ஐந்து வருஷம் கழித்து பிறந்தாள். கமார்புகூரில் ஒரு வீடும் ஒரு ஏக்கர் விளை நிலமும் பிதுரார்ஜித சொத்து. வாய்க்கும் வயிறுக்கு ஏதோ போதுமான ஜீவனம். பத்து வருஷம் ஓடியது. அந்தக் கால வழக்கப்படி வங்காளத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு க்ஷேத்ராடனம் நடந்தார். ரெண்டு வருஷம் முடிந்து ரெண்டாவது பிள்ளை ராமேஸ்வர் பிறந்தான். அறுபது வயது ஆன க்ஷுதிராம் கயாவுக்கு க்ஷேத்திர தரிசனத்துக்கு நடந்தார். கயாவில் பித்ரு ஸ்ராத்தம் செய்தார். ஒரு நாள் இரவில் விஷ்ணுவே கனவில் வந்து ''நான் உனக்கு பிள்ளையாக பிறப்பேன்'' என்று சொன்னார். கமார்புகூரில் அதேபோல் சந்திரா தேவிக்கும் ஒரு தெய்வீக குழந்தை பிறப்பதுபோல் கனவு.
பிப்ரவரி 18, 1836ல் கதாதர் பிறந்தான். வளர்ந்தான். மற்ற குழந்தைகள் போல் விஷமம் செய்தான். அதீதமான ஞாபக சக்தி. கிராம பள்ளியில் எழுத படிக்க கற்றுக் கொண்டான். புராண இதிகாச கதைகள் பிடித்தது. களிமண் சட்டி பானை, பொம்மை செய்பவர்கள் அருகே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பொம்மைகள் செய்ய பழகினான்.
வயது ஆறு. நெல்வயல் வரப்பு மேல் நடந்து கொண்டிருந்தான். கையில் ஒரு பொட்டுக்கூடையில் பொறி கடலை. வயலில் வெள்ளை கொக்குகள். மேலே கருமேகம். எங்கும் பச்சை பசேல்.இது என்ன விந்தை நிறங்கள். ஆகாசத்தை பார்த்து வியந்தான். கூடை கையில் இருந்து கீழே விழுந்தது. தடால் என சாய்ந்தான். மரக் கட்டையானான். அருகில் இருந்த விவசாயிகள் அவனை வீட்டுக்கு தூக்கி சென்று ஆஸ்வாஸப் படுத்தி னார்கள்.
கண் விழித்தவன் ''சொல்லமுடியாத ஆனந்தமாக இருந்தது'' என்றான்.
வயது ஏழு. அப்பா காலமானார். வருந்தினான்.''சே, இது என்ன வாழ்க்கை'' என தோன்றியது. வீட்டிலிருந்து சற்று தூரத்தில் பெரிய மாந்தோப்பு. அதைக் கடந்தால் ஆற்றங்கரையில் சுடுகாடு. யாரும் அறியாமல் மணிக் கணக்காக தோப்பிலும் சுடுகாட்டிலும் உட்கார அவனுக்குப் பிடித்தது. யோசித்தான். வெளியூர்களிலிருந்து யாத்ரிகர்களாக சில சாமியார்கள் பூரி ஜெகந்நாதனை தர்சனம் செல்ல கமர்புக்கூர் வழியாக வருவார்கள். அவர்களோடு பேச ரொம்ப பிடித்தது. நிறைய புது விஷயங்கள் சொல்வார்களே. அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உபசரித்தான். அவர்கள் தியானம் செய்வதை உன்னிப்பாக கவனித்தான்.
ஒன்பது வயதில் உபநயனம் நடந்தது. அன்று அதிர்ச்சியாக ஒரு வேலை செய்தான். அப்போதெல்லாம் ஜாதி வேற்றுமை அதிகம். தனது வீட்டில் வேலை செய்த ஒரு தாழ்ந்த குல பெண் அவனோடு விளையாடுவாள். அவள் தனக்கு சமைத்து வைத்த உணவை சாப்பிட்டான். எல்லோரும் கோபித்தார்கள். ஒரு சில அடியும் வாங்கினான்.
அவன் உள்ளே மெதுவாக பூஜை செய்யும் விருப்பம் வளர்ந்தது. ரகுவீரன் பூஜை வழிபாடு பிடித்தது. தியானம் மேற் கொண்டான். தன்னை இழக்கும் நிலை எளிதில் கை வந்தது.
கிராமத்தில் சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடும் வழக்கம். தெருக்கூத்து நாடகம் போட்டார்கள் . சிவன் வேஷதாரிக்கு திடீரென்று உடம்பு சரியில்லை. வரவில்லை. சிவன் இல்லாமல் எப்படி நாடகம்? ஆள் தேடும் போது கதாதரன் கிடைத்தான். நண்பர்கள் அவனுக்கு ஜடாமுடி கட்டி, உடல் நிறைய விபூதி பூசி கழுத்து கை மார்பு தலை நிறைய ருத்ராக்ஷ மாலை கட்டி, கையில் சூலம் பிடித்து சிவனாக நிற்க வைத்தார்கள். டயலாக் கிடையாது. ஸாக்ஷாத் சிவனே நின்றார். கை தட்டல், ஆஹா ஓஹோ என்று ஆனந்த சப்தம். சிவன் தன்னை மறந்த நிலைக்கு சென்றுவிட்டாரே.பொன்னார் மேனி ஒளிவீச, கண்களில் நீர் பிரவாகம். நாடகம் நின்றுவிட்டது. சிவனை வீட்டுக்கு தூக்கி சென்றார்கள். அடுத்த நாள் காலை வரை சிவன் எங்கோ வேறு உலகத்தில்!
கதாதருக்கு தெருக்கூத்து நாடகம் பிடித்துவிட்டது. நண்பர்களோடு சேர்ந்து ராமாயண மஹாபாரத காட்சிகள் நாடகங்களாக நடித்து மாந்தோப்பில் கூத்து நடத்தினார்கள். வேஷ தாரிகள் பேசும் வசனம் பாட்டு எல்லாவற்றையும் கதாதர் நெட்டுறு (மனப்பாடம்) பண்ணிவிட்டான். பிருந்தாவன கிருஷ்ணன், கோபி ராதா கிருஷ்ணன் பாத்திரங்கள் ரொம்ப பிடித்தது. பாதி நாடகத்தில் நினைவிழந்து விடுவான். அது வழக்கமாகி விட்டது. ராதா கோபியர் வேஷம் அவனுக்கு பொருந்தியது. பள்ளிக்கூடம் செல்வது நின்றது.
குடும்பத்தில் வறுமை. அண்ணா ராம்குமார் 1849ல் பிழைக்க கல்கத்தா சென்றார். கதாதர் எல்லோர் அன்பையும் சம்பாதித்துக்கொண்டு ஊரில் இருந்தான். தானும் ஒரு ராதாவாக பிறந்திருக்கக்கூடாதா என்று ஏங்கினான்.
வயது பதினாறு ஆகியது. அண்ணா ராம்குமார் 'கதாதர், நீயும் இங்கே கல்கத்தா வா. எனக்கு பூஜை வழிபாட்டில் உதவிக்கு ஆள் வேண்டும் '' என்று கூட்டிச் சென்றார்.
தொடரும்
No comments:
Post a Comment