பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
44. உடையார் பாளைய உறவு.
பஜாஜ் குரூப் என்ற பிரபல நிறுவனம் நமது தேசத்தில் இப்போதும் வணிக வர்த்தக துறையில் பெருமையுடன் இயங்குகிறது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் ஜம்னாலால் பஜாஜ். (1889-1942). இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜிக்கு ஆதரவு தந்தவர். ''ஜம்னாலால் எனது ஐந்தாவது மகன்'' என்பார் காந்தி.
பஜாஜ் காந்தி சேவா சங்க தலைவர். காந்தியை வார்தாவுக்கு அழைத்தவர். தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா ஆரம்பித்தவர். ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் காந்தி பஜாஜ் தலைமை யேற்க காந்திஜியே விரும்பியும் அந்த பதவியை பஜாஜ் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்காக வீட்டுக் கொடுத்தார். பஜாஜ் மஹா பெரியவா பக்தர்.
1926 மார்ச் மாதம் மஹா பெரியவா திருவானைக்காவில் ரங்கூன் சத்திரம் என்ற இடத்தில் முகாம் இட்டிருந்தார். பஜாஜ் தென்னிந்தியாவுக்கு பிரச்சாரத்திற்காக வந்த சமயம் அவருடைய எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு நடுவில் எப்படியாவது மஹா பெரியவாளை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும், ஆசி பெறவேண்டும் என்று பஜாஜ் மனதில் ஒரு எண்ணம். அந்த அளவுக்கு மஹா பெரியவா புகழ் எங்கும் பரவி இருந்தது.
திருச்சியில் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த Dr T V சுவாமிநாத சாஸ்திரிகளிடம் தனது விருப்பத்தை சொன்னார். சாஸ்திரிகளுக்கு பெரியவாளைத் தெரியும் ஆகையால் பெரியவாளிடம் பஜாஜ் விருப்பத்தைச் சொல்லி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
குறித்த நாள் அன்று பஜாஜ், ராஜாஜி, Dr சாஸ்திரி, வக்கீல் V ஜெயராம் ஐயர் ,எல்லோரும் திருவானைக்கா ரங்கூன் சத்திரம் சென்றார்கள். மாடியில் ஒரு தனி இடத்தில் மஹா பெரியவா அமர்ந்திருந்தார். நமஸ்காரம் பண்ணி விட்டு எதிரில் தரையில் அமர்ந்தார்கள்.
''வேறே யாராவது வந்திருக்காளா ?''
''ராஜாஜி வந்திருக்கார், வெளியே நின்னுண்டு இருக்கார்''
''ஜெயராமா , நீ போய் ராஜாஜியை அழைச்சுண்டு வா''
வக்கீல் ஜெராயமய்யர் உடனே வெளியே போனார். ராஜாஜி வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
''ஏன் உள்ளே வராம, வெளியே நின்னுண்டிருந்தேள் ''
''க்ஷமிக்கணும், காலைலேர்ந்து நிறைய வேலை மூச்சு விட நேரமில்லை. அதனாலே ஸ்நானம் பண்ணக்கூட முடியலை. ஸ்னானம் பண்ணிட்டு அப்புறம் வரலாமேன்னு தான்.....
''ராஜாஜி மாதிரி தேசத்துக்கு சேவை பண்றதுலே தன்னை அர்ப்பணிக்கிற வாளுக்கு சரியான நேரத்திலே தன்னை சுத்திகரித்துக் கொள்ளக் கூட நேரம் கிடைக்கிறதில்ல. அப்படிப்பட்ட சேவை தான் உண்மையான பிரார்த்தனை, விரதம். . ராஜாஜிக்கு பரிசுத்த ஹ்ருதயம். ஆகவே அவர் எப்பவேணாலும் வந்து தரிசனம் பண்ணலாம் '' என்கிறார் மஹா பெரியவா.
ராஜாஜி மஹா பெரியவாளிடம் சுதந்திர போராட்டம் நாடு முழுதும் தீவிரமடைந்து வருவது பற்றியும் காந்திஜியின் சேவை, தியாகத்தையும் பற்றி விவரங்கள் கூறினார்.மஹா பெரியவா அங்கிருந்தவர்களிடம் தேச ஒற்றுமைக்கு தனது அபிப்ராயத்தை சொன்னார். காதி வளர்ச்சிக்காக மடத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்.
பஜாஜ் மற்றும் அனைவரும் மீண்டும் பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு ஆசி பெற்று திரும்பினார்கள்.
மஹா பெரியவாளின் செட்டிநாடு நகரத்தார் கிராமங்கள், புதுக்கோட்டை சமஸ்தான கிராமங்கள் ஆகியவற்றின் விஜயத்தில் கிட்டத்தட்ட ஒரு வருஷ காலம் கழிந்தது. திருச்சி வழியாக உடையார் பாளையத்துக்கு 1926ம் வருஷம் ஜூலை மாதம் சென்றார்.
வெகுகாலமாகவே உடையார் பாளையத்து ராஜா சமூகத்துக்கும் காஞ்சிமடத்துக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்கு மடம் இடமாற்றம் செய்த காலத்தில் அப்போதிருந்த பீடாதிபதி உடையார் பாளையத்தில் நீண்டகாலம் வாசம் செய்தார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
அப்போது உடையார் பாளையம் ராஜாங்கம் தஞ்சாவூர் ராஜாவின் ஆட்சியில் இருந்தது. ராஜ வம்சத்தினர் காஞ்சி காமாக்ஷி பக்தர்கள். உடையார் பாளைய வீரர்கள் தஞ்சாவூர் ராஜாவின் படையில் முக்கிய பொறுப்பாளர்கள். உடையார் பாளைய ராஜாக்களின் பெயர்களில் காஞ்சிபுரம் நினைவாக ''கச்சி'' என்கிற வார்த்தை பெயரோடு சேர்ந்திருக்கும். உதாரணமாக, கச்சி சின்ன நல்லப்பன், கச்சி யுவரங்கப்பன், மாதிரி.
18ம் நூற்றாண்டு முற்பகுதியில் காஞ்சிபுரத்தில் அமைதி குறைந்திருந்தது. கிழக்கிந்தி ய கம்பெனி வெள்ளைக்காரர்கள் கர்நாடக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். முஸ்லிம்கள் அராஜகம் அக்கிரமங்கள் எங்கும் தொடர்ந்தன.
கலவரத்தில் பாதிக்கப்படாமல் இருக்க அப்போதிருந்த 62வது பீடாதிபதி, ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் பூஜைக்கான முக்ய விக்ரஹங்களோடும் மட நிர்வாகிகளோடும் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்து தெற்கே சென்றுவிட்டார். ஒரு சில நிர்வாகிகளை மட்டும் காஞ்சியில் தொடர்ந்து ஆதிசங்கரர் விக்ரஹ பூஜைமற்றும் நிர்வாக சம்பந்தமான சில பொறுப்புகளை விடாமல் கவனிக்க ஏற்பாடு செய்துவிட்டு தான் சென்றார். 62வது பீடாதிபதி இவ்வாறு ராமேஸ்வரம் சென்று, சில காலம் ராமநாதபுரம் திருவனந் தபுரம் சென்றார். பிறகு உடையார்பாளையம் ராஜாவின் அழைப்பை ஏற்று, நீண்டகாலம உடையார்பாளையத்திலும் வாஸம் செய்தார். அப்போது உடையார்பாளையம் காடுகள் அடர்ந்த ஒரு பிரதேசம்.
உடையார்பாளையம் செல்வதற்கு முன்பே அந்த பீடாதிபதிகள், காஞ்சிபுரத்தின் முக்கிய ஆலயங்களான ஏகாம்பரேஸ்வரர், காமாக்ஷி, வரதராஜபெருமாள் க்ஷேத்ரங்களிலிருந்து உத்சவ விக்ரஹங்களை வெகு ஜாக்கிர தையாக உடையார் பாளையம் கொண்டு வரச்சொல்லி ஏற்பாடு செய்தார் . இன்றும் உடையார் பாளையத்தில் சிவன் கோவிலில் காமாக்ஷி மண்டபம் உள்ளது அதேபோல் அங்குள்ள பெருமாள் கோவிலில்வரதராஜ மண்டபம் உள்ளது.
அப்போது தான் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மன், தனது மந்திரி டபீர்ப்பந்த் துடன் உடையார் பாளையம் வந்து பீடாதிபதிகளை தரிசித்து தஞ்சாவூரில் வந்து தங்குமாறு அழைத்தார். அழைப்பை ஏற்று பீடாதிபதிகள் தஞ்சாவூரில் சில மாதங்கள் இருந்தார். கும்பகோணம் செல்வதில் ஆர்வம் காட்டினார். ஆகவே தான் மந்திரி டபீர் பந்த் காவேரி நதி தென்கரையில் ஒரு மடம் கட்டிக் கொடுத்தார். அதுதான் கும்பகோணம் காஞ்சி மடம் .அதை ஒட்டிய மூன்று தெருக்களில் ஒன்று டபீர் தெரு என்று இன்றும் அவர் பெயர் தாங்கி செயல்படுகிறது.
தொடரும்
No comments:
Post a Comment