Wednesday, June 16, 2021

PESUM DEIVAM




 பேசும் தெய்வம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN   -


38    பெரியவாளின் பேரன்பு..


மஹா  பெரியவா சரித்திரம் எழுதும்போது  அவரோடு பழகியவர்கள், சம காலத்தவர்கள்  சிலர் பற்றியும் அறிகிறோம். மறந்துபோன  சிலரில் ஒருவர்   ஸர் பழமானேரி சுந்தரம் சிவஸ்வாமி ஐயர்.  (7.2.1864-5.11.1946 )
பெரிய வக்கீல், நிர்வாகி,  சென்னையின்  அட்வொகேட் ஜெனரல்.  ஆங்கிலேய அரசாங்கத்தில் சென்னை மாநில கவர்னர் ஆலோசனை குழுவில் ஒருவர். சோழன் ராஜராஜன் காலத்தில்  பிரதம மந்திரி யாக இருந்த அநிருத்த பிரம்மராயர் குடும்பம். ப்ரஹசரணம் வகுப்பு. 
அவர் ஸ்தம்பித்தது தான்  சென்னை மைலாப்பூரில்   லேடி சிவசாமி ஐயர் பெண்கள் ஹை ஸ்கூல்.  பெண்கள் கல்வியை ஆதரித்து  உதவியவர் .  திருக்காட்டுப்பள்ளியில்   அவர் முயற்சியால்  ஒரு ஹை ஸ்கூல்  உருவானது.  மாணவர்களுக்கு மட்டும்  என்று ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது.   பிறகு  அதை  நிர்வாகிகள்  ஆண் பெண் இருபாலரும் பயிலும் பள்ளியாக  மாற்றினார்கள்.   

அமால்கமேஷன்ஸ்  சிம்ப்ஸன் குரூப்  தலைவர்  அனந்த ராமக்ரிஷ்ணன்    சிவசாமி அய்யர் வீடு  ''சுதர்மா'' வுக்காக  கொடுத்த   நான்கு லக்ஷம் ரூபாயை    மைலாப்பூர்  மைலாப்பூர் நேஷனல்  பெண்கள் ஹை ஸ்கூல் பள்ளிக்கூடத்தை   பொறுப்பேற்று வாங்கி  அதை  லேடி சிவசாமி ஐயர் ஸ்கூலாக  நாமகரணமிட்டு  விஸ்தரித்தார்.  
மஹா  பெரியவா  1924ல்   திருக்காட்டுப் பள்ளிக்கு கோவிலடி  கிராமம் வழியாக  வருகை தந்தார். அருகே இருந்த கிராமங்கள்,   நேமம், பழமானேரி, ஒன்பதுவேலி , ரங்கநாதபுரம்,  வரகூர், மரூர் , சாத்தனுர், கூத்தூர்  முல்லைக்குடி, பூதலூர்,  போன்றவற்றிற்கு  மஹா பெரியவா  விஜயம் செய்தது  அங்கெல்லாம் வசித்த பக்தர்களுக்கும் வரப்பிரசாதமாக  மிகவும்  சந்தோஷத்தை அளித்தது.

22. 3. 1924  அன்று  திருக்காட்டுப்பள்ளில்   P S  சிவசாமி ஐயர் உருவாக்கிய  ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு  விஜயம் செய்தார்.  ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும்  பரம சந்தோஷம்.  தோரணங்கள், வாழை மரம் கட்டி, பூரண கும்ப வரவேற்பு அளித்தார்கள். பள்ளி  சார்பாக, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் சார்பாக ,  பள்ளியின் பிரின்சிபால்  குருசாமி சாஸ்திரிகள்  பாதபூஜை செய்தார்.   சிவசாமி ஐயர்  ஏற்பாட்டுக்கு   மெச்சி  மகா பெரியவா வகையான  இந்த பாக்யம் அளித்ததற்கு  சாஸ்திரிகள்  நன்றி தெரிவித்தார்.

மஹா பெரியவா பேசும்போது,  குழந்தைகள் ஆசிரியர்களிடம் காட்டிய மரியாதையையும் , ஆசிரியர்கள் குழதைகளிடம காட்டிய  அன்பையும்  பாராட்டினார். பழைய குருகுல முறையில் இப்படித்தான்  கற்பித்தவர்களும், கற்றவர்களும் அன்போடு  பழகினார்கள் என்றார் .  சாஸ்திரங்கள் சொல்வது போல்  ஆசிரியர்கள் தெய்வத்துக்கு சமம்,  அவர்கள்  கற்பிப்பது பணத்துக்காக அல்ல, மாணவர்களின்  ஞான அபிவிருத்திக்கு  என்பதை வலியுறுத்தினார். ஒரு குடும்பம் போல் .  தந்தை- பிள்ளைகள்  உறவாக அது  இருந்தது என்றார் .  குழந்தைகள்  வளர்ந்து இந்த நாட்டுக்கு சிறந்த குடிமகன்களாக  பொறுப்பேற்க வேண்டும், அப்படி ஒரு எண்ணத்தோடு  நம்பிக்கையோடு தான் இந்த நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது, 
 ஒவ்வொரு நாளும் மாணவர்கள்  வீட்டில் தங்களது பெற்றோரை வணங்கி அவர்கள் ஆசியுடன் பிறகு பள்ளியில் பார்வதி பரமேஸ்வரனாக காட்சி தரும்    பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள்  நிறுவனர்கள்  ஆகியோரை வணங்கி பிறகு பாடம் படிக்க துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அந்த வருஷம் கடைசியில்  1924ல்  மஹா பெரியவா வல்லம் சென்றார்.  அந்த கிராமம் தஞ்சாவூர் அருகே உள்ளது.  உள்ளூரில்  கிருத்துவர்கள், முஸ்லிம்கள்  ஹிந்துக்களோடு சேர்ந்து மஹா பெரியவாளுக்கு  வரவேற்பு அளித்தது மிக  ஆனந்தமாக இருந்தது.   ஏராளமான  ஹரிஜன மக்கள்  சூழ்ந்திருந்தது  தரிசனம் பெற்றார்கள்.    ஒரு தந்த பல்லக்கில்   மஹா பெரியவா ஊர்வலமாக வந்து  தரிசனம் தர ஏற்பாடு செய்திருந்தார்கள்.   ஏராளமானோர்  சந்தோஷத்தோடு  ''ஜெய ஜெய சங்கர  ஹரஹ சங்கர''   கோஷம் எழுப்பினார்கள் .  மகா பெரியவா  வருகையில்  அந்த ஊர்  சுபிக்ஷம் பெறும்  என்று  வணங்கினார்கள்.  ரெண்டு  மணிக்கும் மேலாக  ஊர்வலம் மெதுவாக சென்று  பெரியவாள்  மடம்  முகாமிட்டு  இருந்த இடம் அடைந்தது.
''எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள்,  அதற்கு நன்றி ரொம்ப சந்தோஷம்.   நீங்கள் எல்லோரும் ஒரே தாய் வயிற்று பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ  ஆசிர்வதிக்கிறேன். இந்த வல்லம் க்ராமத்தைப் போலவே  மற்ற எல்லா கிராம  மக்களும்  பரஸ்பர  அன்போடு  வளர்ந்து வாழவேண்டும்.  உங்களுக் குள்  வேற்றுமை, மாற்று கருத்துக்கள் இருந்தா லும் அனைவரும் கூடி அவற்றை சமரசமாக தீர்த்துக்கொண்டு ஒற்றுமையை கைவிடாமல்  இருக்கவேண்டும்.  நிலைமையை  மோசமாக்கி  நீதி மன்றம் வழக்கு என்ற எண்ணமே  மனதில் தோன்றாமல் இருக்கவேண்டும் . அவரவர் மத நம்பிக்கையில் மற்றவர் குறுக்கிடாமல்  அமைதி யாக வாழவேண்டும். கிறிஸ்தவர்களும் முஸ்லிம் களும் மத நம்பிக்கையில் இந்துக்களை விட அதிக  கவனம் செலுத்துவதை அவர்களிடமிருந்து ஹிந்துக்களும் கற்கவேண்டும்  என்றார் . நூற்றுக் கணக்கான  ஹரிஜன  ஹிந்துக்கள்  ஆண் பெண், குழந்தைகளை  நெற்றியில் திருநீறு  வெளுப்பாக பளிச்சென்று  இருப்பதைக் காணும்போது ரொம்ப  மகிழ்ச்சி தருகிறது என்றார் .  மற்ற ஹிந்துக்கள்  இந்த ஏழை ஹரிஜனங்களின்  தேவைகளை குறைவில்லாமல் பூர்த்தி செயது அவர்கள் சந்தோஷமாக வாழ உதவ வேண்டியது அவர்கள் கடமை . இப்படி இருந்தால் தான்  கிராமங்கள் அபிவிருத்தி அடையும் என்றார் .கிராமங்கள் இப்படி இருந்தால் தான் முழு தேசமும் பக்தியில் திகழும் என்றார் .  எல்லோரும் அவ்வாறே  நாங்கள் வாழ்வோம் என்று மஹ்யா பெரியவாளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள்.  ஹரிஜன மக்கள் ஆண் ,பெண் குழந்தைகள் எல்லோருடனும் அன்பாக  பேசி, பிரசாதங்கள் அளித்து வாழ்த்தினார் .

தஞ்சாவூர்  கலெக்டர் அலுவலகம் வல்லத்தில்  இருந்தது.  கலெக்டர் ஒரு   ஆங்கிலேயன்.  H.M. ஹூட்  என்று பெயர்  இவ்வளவு பேர்  ஆர்வமோடு கோலாகலமாக வரவேற்பு அளித்து  வணங்கி  சந்திக்கும் இந்த சாமியார் யார் என்று ஆவலோ டு   கேட்டு அறிந்து  மஹா பெரியவாளை சந்திக்க விருப்பம் கொண்டான்.  ஒரு ஹிந்து நண்பர் அதிகாரி  மூலம் மஹா பெரியவாளுக்கு  வரவேற்பு கொடுக்க அழைப்பு அனுப்பினான்.  அன்று சாயங்காலம்  மகா பெரியவா அவனை சந்தித்தார். மொழி பெயர்ப்பாளர் ஒருவர்  ஆங்கிலம் தமிழ் உரையாடலை சரியாகச்   செய்தார்.  கலெக்டர்  மஹா பெரியவாளுக்கு  திருவையாற்றில் மிக பிரமாதமாக  அவர்   ஏற்பாடு செய்து  நடத்திய   அன்னதானத்துக்கு  வெள்ளை அரசாங்கம் சார்பில்  மஹா பெரியவாளுக்கும் மடத்துக்கும்  நன்றி தெரிவித்தான்.   மஹா பெரியவாளின் எளிமை, இளம் வயதிலும் இத்தனை சாந்தம், ஆழ்ந்த பொது அறிவு, ஞானம்  எல்லோரிடமும் பேரன்பு எல்லாவற்றிலும் மயங்கினான்.  வணங்கினான்.    பொது விஷயங்கள் நிறைய  பேசி  அவர்  கருத்துக்களை  தெரிந்து  கொண்டு  சந்தேகம் நிவர்த்தி ஆகி  அறிவுரைகள் பெற்றான்.  

 ''உங்கள் இந்த சந்திப்பை என் வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டேன்'' என்று மீண்டும் வணங்கி விடையளித்தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...