மனிதன் பெற்ற வயது... நங்கநல்லூர் J K SIVAN
எங்கோ ஒரு சில மிருகங்களைத் தவிர்த்து, அநேகமாக அதிக காலம் உயிர் வாழ்வது மனித இனம் தான். அப்போதெல்லாம் எல்லோரும் நூறு வயது வாழ்ந்தார்கள். விஞ்ஞானம் வளர, மருந்துகள் பெருகி வர, வியாதிகளும் புதிதாக முளைத்துவிட்டன. கோரோனா என்றால் எங்களுக்கு தெரிந்தது ஒரு செருப்புக்கடை தான். பாட்டாவுக்கு போட்டியாக ஒரு நல்ல கடை. அதில் விலை குறைவாக நிறைய செருப்புகள் பிராட்வே சைனா பஜாரில் வாங்கியிருக்கிறேன்.
எனவே மனித இனம் மட்டும், அதிக காலம் வாழ என்ன காரணம்?. விஞ்ஞானத்தை விட்டு ஒரு கதைக்குள் செல்வோம். ஒரு காட்சியை பார்ப்போம்.
பிரம்மா உலகத்தில் உயிர்கள் உண்டாக்கும் ஆரம்பகாலத்தில் படுவேகமாக படைத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறான். வித விதமான ஜீவராசிகளை படைக்கிறான். அப்படித்தான் ஒருநாள் ஒரு கழுதையைப் படைத்தான். அதனிடம் என்ன சொன்னான்?
'' உன் பெயர் கழுதை. உனக்கு வேலை மக்கள் வேண்டும் சாமான்களைச் சுமந்து செல்வது. அதுவும் எவ்வளவு சுமை உன் மீது போட்டாலும் பொறுமையாக சுமப்பது. காலையிலிருந்து இரவு வரை. புல்லை தின்பாய். மூளையில்லை என்று யாரோ யாரையோ திட்டும்போது உன் பேர் தான் அடிபடும். உனக்கு நான் கொடுக்கும் வயது ஐம்பது வருஷம்..
''ப்ரம்ம தேவா இது கொடுமை. ஏதோ நான் செய்த கர்மபலன் இப்போது நீ கழுதையாக பிறக்கச் செயகிறாய். சரி. ஆனால் ஐம்பது வருஷம் இப்படி பொதி சுமப்பது ஜாஸ்தி. கொஞ்சம் குறைத்து இருபது வருஷமாகச் செய்யேன்.''
''சரி போ உனக்கு வயது 20 தான்'' - பிரம்மா.
அடுத்தது ஒரு நாய். அதற்கான கட்டளை '' உன் பெயர் நாய். உனக்கு மனிதனின் வீட்டைக் காக்கும் வேலை. ரொம்ப நல்ல நண்பனாக இருப்பாய். கிடைத்தை உண்பாய். நாயே, உனக்கு கொடுத்த வயசு 30 வருஷம்.''
நாய் கழுதை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந் தது அல்லவா. எனவே. பேரம் பேசியது.
'' ப்ரம்மா சுவாமி முப்பது வருஷம் என்னால் குலைத்துக்கொண்டே இருக்க தாங்கமுடியாது. இவ்வளவு கஷ்டம் ஏன் கொடுக்கிறாய். பாதி யாக குறைத்து பதினைந்தாக்கிவிடு ""
நாய் 15 வயசைப் பெற்றது.
குரங்கு சும்மா இருக்குமா. '' ப்ரம்மா, எனக்கு நீ இடும் கட்டளை எல்லாரையும் விட ரொம்ப ரொம்ப கொடியது பிரம்மா. ஏன் உனக்கு இந்த பாரபக்ஷம்? நான் விடாமல் ஆட்டம் ஆடி தாவி குதித்து வேடிக்கை காட்டவேண்டும் என்கிறாய். சரி என்கிறேன்.. எப்படி இதையே இருபது வருஷம் பண்ண முடியும் என்று யோசிக்க வேண்டாமா? மற்றவர்களுக்கு கொடுத்தது போல் எனக்கும் பாதி வயசாக குறைத்தால் ஆட்டம் எல்லாம் ஒரு பத்து வருஷம் ஆடுகிறேன். அதுக்கு மேல் ப்ளீஸ் வேண்டாம். ப்ரம்மாவிடம் குரங்கு 10 வருஷம் வயஸாக பெற்று மகிழ்ந்தது..
பிரமன் மனிதனைப் படைத்தான். மனிதன் மெதுவாக பிரம்மா அருகில் வந்தான்.
''என் படைப்பில் நீ டேஞ்சரானவன். எதற்கு அருகே வந்தாய் என்ன வேண்டும் உனக்கு?''
''ப்ரம்ம தேவா........ எனக்கும் நீ நல்லது செய்ய வேண்டும்?''
'மனிதா, உன்னை அறிவுள்ளவனாக, பேசத்தெ ரிந்தவனாக புத்தியுள்ளவனாக படைத்து மற்ற படைப்புகள் உனக்கு உதவ வழி செய்துள் ளேனே. 40 வயதும் கொடுத்தேனே. எல்லா மிருகங் களையும் நீ ஆட்டிப் படைக்கலாமே. இது அதிகம் இல்லையா? இன்னும் ஏன் இங்கேயே என்னைச் சுற்றி வட்டமிடுகிறாய். சட்டு புட்டென்று சொல்லிவிட்டு போ.''
'' நான்முகா , நீ எனக்கு கொடுத்த 40 வயது மிகவும் குறைச்சலாக உள்ளதே. கொஞ்சம் கூட்ட வேண்டும் என் வயசை.?
''எல்லோரும் குறைக்க சொன்னார்கள், நீ கூட்டு என்கிறாயே, எப்படி கூட்டுவது சொல்?'
அந்த கழுதையில் வயதில் 30 வருஷம் குறைத் தாய். நாய்க்கு தள்ளுபடி செய்தது 15 வருஷம், குரங்கு வேண்டாமென்று சொன்ன 10 வருஷம். நீ அளித்தது இத்தனை வருஷங்கள் வீணாகத் தானே போகிறது. அதை எனக்கு கொடுப்பதால் நீ ஒன்றும் தனியாக எனக்கு அதிக வயதை கொடுக்கப்போவதில்லையே. நீ கொடுத்த 40 வருஷங்களோடு இந்த வீணாகப்போன 55 வருஷங்களோடு தானே சேர்கிறது. அவற்றை எனக்கு சேர்த்து கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாதே''
''சரி, கொடுக்கா விட்டால் நீ நகரமாட்டாய். எனவே நீ கேட்டபடியே கொடுத்துவிட்டேன். ''
மனிதன் வாழ்க்கை 95 வருஷம் என்று நிர்ண யமானது.
என்ன நடந்தது அதற்கப்புறம்?
முதல் பதினைந்து வருஷம் விளையாட்டு பருவம். அப்புறம் பத்து வருஷம் மைனர் ஜாலி. (கல்யாணம் ஆகும் வரை).!!
கல்யாணம் ஆகி முப்பது வருஷம் கழுதையாக குடும்ப சுமை யாவும் அவன் முதுகிலும் தலையிலும்!
குழந்தை குட்டி பிறந்து வளர்ந்து வரும்போது நாயாய் 20 வருஷம் பள்ளிக்கூடம், காலேஜ், ஹாஸ்டல்,வேலை , ஆஸ்பத்திரி என்று எங்கெங்கோ அலைகிறான். கிடைத்ததை முணுமுணுக்காமல் வாலைச் சுருட்டிக் கொண்டு தின்கிறான்.
மீதி வயதில் முதியவனாகி குரங்காக ஓரிடம் நில்லாமல் ஓயாமல் ஒழியாமல் பெண் வீடு பிள்ளை வீடு, என்று ஓடிக்கொண்டு அவர்கள் சொல்படி ஆடிக்கொண்டு பேரன் பேத்திக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு காலம் ஓட்டு கிறான்.
இப்படிதான் நடக்கிறதோ பல மனிதர்களுக்கு, அவர்கள் கேட்ட நீண்ட ஆயுசு பிரகாரம் என்று எனக்கு புரியவில்லை!!!!. பலபேர் ''ஏன் என்னை இன்னும் இப்படிப் போட்டு அலைக்கழிக் கிறான் அந் த ப்ரம்ம தேவன் என்று அங்கலாய்ப்
பது காதில் விழுகிறது.
No comments:
Post a Comment