திருப்பம் - நங்கநல்லூர் J K SIVAN
நான் ஞானியோ, சிந்தனையாளனோ, எழுத்துச் சிற்பியோ அல்ல. எல்லோருக்கும் தெரிந்ததையே எனக்கு தெரிந்த வகையில், வழியில், எழுதுபவன். என் எழுத்தில் கவர்ச்சி,காந்த சக்தி எதுவும் என்றும் இருக்காது. எவரையும் பின்பற்றி எழுதுபவனல்ல. என் மனதில் தோன்றுவதை கொட்டுபவன் . அது எல்லாமே, ''அட இதுவா ஏற்கனவே தெரிந்தது தான். இவன் ஞாபகப்படுத்துகிறான்'' என்ற அளவு படிப்பவர்களிடமிருந்து வரும் கருத்தாக அமையும். நிறைய பேர் இதெல்லாம் இவன் எழுதுவதெல்லாம் படிக்க மாட்டார்கள், அவசியம் இல்லை, நேரமும் இல்லை என்ன பெரிசாக தெரியாதது எதையாவது சொல்லப்போகிறேன். பொழுது போகாதவன்'' என்று என்னைவிட்டு என் எழுத்தை விட்டு தள்ளிப் போகிறவர்கள். ஆகவே மேலே சொன்னபடி இப்போது நான் சொல்வதும் ஒரு தெரிந்த கதை தான்.
முன்னொருகாலத்தில் 7000 வருஷம் முன்பு என்று வைத்துக் கொள்வோம். ஒரு கொள்ளைக்காரன் வழிப்போக்கர்களை நிறுத்தி பொருள் அபகரிப்பவன். இளைஞன்,பலசாலி. அவனை எதிரத்து ஜெயிக்க முடியாதே. ஆயுதம் வைத்திருப்பான். எதிர்த்தால் மரணம் தான் பரிசு. பேசாமல் இருப்பதையெல்லாம் அவனிடம் தொலைத்துவிடவேண்டியது தான்.. இது தான் அவன் வாழ்க்கை. அவனுக்கு பெரிய குடும்பம், வயதான பெற்றோர் மனைவி சுற்றத்தார் அவனை நம்பி வாழ்பவர்கள்.
ஒரு இரவு அவனிடம் மாட்டிக்கொண்ட வழிப்போக்கனிடம் எதுவுமே இல்லை. கோபமும் ஏமாற்றமும் கொள்ளைக்காரனை முகம் சிவக்க வைத்தது.
''யார் நீ ஒன்றுமே இல்லாமல் இப்படி உலாவுபவன்.?
''நான் ஒரு முனிவன். நாரதன். எப்போது வேண்டுமானாலும் வைகுண்டம் பூமி என்று நினைத்தபோது சுற்றுபவன்.''
கொள்ளைக்காரனுக்கு முனிவனைப் பார்த்ததும் கொஞ்சம் பக்தி மரியாதை வந்தது. பேசாமல் கைகட்டி நின்றான்.
''அப்பனே, நீ செய்வது பாபம் என்று புரியவில்லையா? கொள்ளையடிப்பது,கொல்வது உன்னை நரகத்தில் தள்ளுமே. ஏன் இப்படி செய்கிறாய்?''
''என் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள்?''
''ஓஹோ அவர்களுக்காக இதெல்லாம் செய்கிறாயா? சரி என்னை இங்கே கட்டிப்போட்டுவிட்டு உன் வீட்டுக்குப் போய் யாருக்காக இத்தனை பாபங்களை செயகிறாயோ, அவர்கள் உன் பணத்தை அனுபவிப்பதுபோல் உன் பாபங்களிலும் பங்கேற்பார்களா என்று கேட்டுவிட்டு வா''
யோசித்த கொள்ளைக்காரன், நாரதன் சொன்னதுபோல் ஒரு வேடிக்கை செய்து பார்ப்போமே, என்று நாரதனை ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு வீட்டுக்கு போனான். அப்பனைக் கேள்வி கேட்டான்.
''அப்பா நான் எப்படி சம்பாதிக்கிறேன் உங்களை எல்லாம் காப்பாற்றுகிறேன் தெரியுமல்லவா?''
''தெரியாதே பையா. எங்களை சௌகர்யமாக எப்படியோ சம்பாதித்து காப்பாற்றுகிறாய் என்று தான் தெரியும்''
“நான் வழிப்போக்கர்களை கொள்ளைஅடிப்பவன். எதிர்ப்பவர்களை கொன்றிருக்கிறேன்''
''அடப்பாவி, சீ நீ போ என்னிடமிருந்து''
“அப்படியென்றால் என் கொள்ளை கொலை பாதகங்களில் பாபங்களில் நீ பங்கேற்க மாட்டாயா? சொல் அப்பா?''
''ஐயோ மாட்டவே மாட்டேன்.எதற்கு நான் உன் பாபத்தில் பங்கேற்க வேண்டும்?''
அம்மாவிடமும் இதே கேள்விகளைக் கேட்டு அவளும் நிச்சயம் நான் பங்கேற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
அவன் மனைவியிடமும் கேட்டான். அவள் அதிர்ந்து போனாள். அடப்பாவி, என் வாழ்வில் இதுவரை நான் காலணா கூட திருடியதே இல்லையே . உன் பாபத்தில் நிச்சயம் நான் பங்கேற்க முடியாது ' என்று திட்டவட்டமாக சொல்லி விட்டாள் .
கொள்ளைக்காரன் திகைத்துப் போனான். அவன் எதிர்பார்க்காத தெல்லாம் நடக்கிறதே. நேராக நாரதரிடம் நடந்தான். அவனை மரத்திலிருந்து அவிழ்த்து விட்டான்.. நடந்ததை சொன்னான்.
''சாமி நீங்க சொன்னபடியே செய்தேன். என் வீட்டில் எவரும் என் பாபச்செயலில் பங்கேற்க மாட்டார்களாம். நான் என்ன செய்வது சொல்லுங்க''
''முட்டாளே, உன் திருட்டு,கொள்ளை தொழிலுக்கு முழுக்கு போடு முதலில். உன்னிட முள்ளவர்கள் உன் சுகத்தில் மட்டும் பங்கேற்று அனுபவிப்பவர்கள். ஒரே ஒருவன் தான் உனக்கு என்றும் உதவுபவன். அவனைப் பிடித்துக் கொள் ''
நாரதன் சொன்னபடியே கொள்ளைக்காரன் காட்டுக்கு போனான், தனிமையில் தவமிருந்தான். விடாமல் மூச்சு விடாமல் ''மரா, மரா'' என்றே உச்சரித்தான். இது என்ன மந்திரமோ, அவனுக்கு நாரதன் சொல்லிக் கொடுத்தது இது தான். அதை கெட்டியாக பிடித்துக் கொண்டான். வருஷங்கள் ஓடியது. அவன் தன்னை மறந்து உயிருள்ள சிலையானான். அவன் மேல் எறும்பு, புழு பூச்சிகள் விஷ ஜந்துக்கள், பாம்புகள் ஊர்ந்தன, கூடு, புற்றுகள் வளர்ந்தன. அவன் சப்தம் மட்டும் மெதுவாக புற்றுக்குள்ளிருந்து வெளியே கேட்டுக் கொண்டே இருந்தது. புற்று மலையாக அவன் மேல் வளர்ந்து மறைந்தான். பல வருஷங்கள் கழித்து நாரதன் அங்கே மீண்டும் வந்தான்.புற்றைப்பார்த்த நாரதன், அதனுள் இருந்து ''ராம,ராம'' சப்தம் வருவதைக் கேட்டான். புரிந்துவிட்டது அவனுக்கு
''எழுந்திரப்பா, வெளியே வா''
நாரதன் குரல் கேட்டதும் ''யாரு முனிவரா, நான் தான் கொள்ளைக்காரன்''
''இல்லை, நீ இப்போது புனிதன். பரிசுத்த ஆத்மா. உன் பாபங்கள் எப்போதோ உன்னைவிட்டு போய்விட்டது. உன் பெயர் இப்போது வால்மீகி.
''அப்படியென்றால் ?''
''புற்றிலிருந்து பிறந்தவன்''
அப்புறம் வால்மீகி ராமாயணம் எழுதி அதை நாம் எல்லாம் பாராயணம் பண்ணுகிறோம். வால்மீகி கதை தெரிந்தாலும் இன்னொரு தரம் சொல்வோமே என்று இந்த ஒரு சம்பவம் மட்டும் எழுதினேன்.
No comments:
Post a Comment