ஸ்ரீமத் பாகவதம் - நங்கநல்லூர் J K SIVAN
11வது காண்டம் - 8 வது அத்யாயம்
8. பிங்களாவின் கதை
ஒரு சின்ன முன்னோட்டம். பரிக்ஷித் பாண்டவ வம்ச வாரிசு. ஏழு நாட்களில் மரணம் நிச்சயம். அந்த ஏழு நாட்களும் அவனை அமரனாக்கி விட்டது. காரணம் அவன் அந்த கடைசி 7 நாட்களை ஒரு நொடியும் வீணாக்காமல் வேதவியாச மகரிஷி குமாரர் சுகப்பிரம்ம ரிஷியை அழைத்து பாகவதம் பூரா தனக்கு சொல்ல வைக்கிறான். இதை தான் சப்தாஹம் என்று பௌராணிகர்கள் நமக்கு சொல்கிறார்கள்.
இதில் ஒரு காட்சி ஸ்ரீ கிருஷ்ணனின் கடைசி நாட்கள். அவதாரம் முடிந்து நாராயணனாக வைகுண்டம் போகும் முன்பு கிருஷ்ணனை அவனது நண்பன், உறவினன், பக்தன், உத்தவன் சந்திக்கிறான். அவனுக்கு கிருஷ்ணன் செய்த உபதேசம் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதை போல் உத்தவ கீதை என்று பெயர் பெற்றது .உபதேசிக்கும் போது கிருஷ்ணன் தத்தாத்ரேயர் என்ற அவதூதர் யது என்கிற மகாராஜாவுக்கு சொன்ன தனது 24 குருமார்களை பற்றி எடுத்துச் சொல்லும் அத்யாயத்தில் கடைசி பகுதி இன்று தொடர்கிறது.
''யது மஹாராஜா, ஒவ்வொரு ஜீவனும் தனது சுக துக்க, நல்ல கெட்ட செயலுக்கேற்ப ஸ்வர்க்கமோ நரகமோ அனுபவிக்கிறது. சுகமும் துக்கமும் கேட்டுக்கொண்டு ஒருவனுக்கு வருவதல்ல. புத்திசாலி, அவற்றை சமமாகவே ஏற்கிறான். எது வந்தாலும் அதைச் சமமாக ஏற்க எனக்கு கற்றுக்கொடுத்தது ஒரு மலைப்பாம்பு. அது எதை சாப்பிடவேண்டும் என்று தீர்மானிக்க வில்லை. அதனிடம் எது அகப்படுகிறதோ அதுவே அதன் உணவு. ருசி அளவு, போதுமா, போதாதா, என்று பார்ப் பதில்லை. அப்படி உணவு கிடைக் காவிட்டால் உபவாசம் இருக்கவும் தயங்கமாட்டேன். மலைப்பாம்பு அப்படித் தானே அமைதியாக காத்திருக்கிறது.
ஒரு ஞானி வெளியே சந்தோஷமாக இருப்பதாக தோற்றமளித்தாலும், அவன் உள்ளே எப்போதும் ஆத்ம சிந்தனையில் ஈடுபடுபவன். ஆழமான கடல் அசைவின்றி , அலையின்றி அமைதியாக இருப்பது போல் காண்பான்.
வாழ்க்கையில் எதிர்பாராத சௌக்யங்கள், வசதிகள் ஏற்படுவதும், தாரித்ரியம் சம்பவிப் பதும் நம் முயற்சிக்கு அப்பாற்பட்டது. யோகி, ஞானி இதைச் சமமாக ஏற்று சுக துக்கம் எதுவுமின்றி ஒரே சீராக வாழ்வான். இதை சமுத்ரத்தினிடம் அறிந்துகொண்டேன் என்கிறார் அவதூதர் தத்தாத்ரேயர். ஆறுகள் வெள்ளமாக பொங்கி கடலில் வீழ்ந்தாலும், கோடையில் வரண்டு கடலுக்குள் எந்த ஆற்று நீரும் புகாமல் இருந்தாலும், கடல் தனது எல்லையை, கரையை, மீறுவதில்லை. எந்த வித மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறதல்லவா?
யது, இதையும் கேள். ஒரு யோகி , ஞானி, காம மோக, வலைக்குள் விழமாட்டான். திட சித்தம் உள்ளவன். பெண்ணின் அழகின் வசியத்துக்கு உட்பட்டால் , ஆசையினால், கண்மூடித்தனமான மோகத்தால் வரும் துன்பம் மரணத்திலும் கொண்டுவிடும் என்பதை எனக்கு உணர்த்தியது ஒரு வீட்டில் பூச்சி. தீபத்தின் ஒளி, அதன் அழகு , அந்த விட்டில் பூச்சியை கவர்ந்து, அது வேகமாக தீபத்தை பழமென்று எண்ணி மயங்கி அதை அணைத்து கவர்வதற்கு தீயை நெருங்கி எரிந்து பொசுங்கி மாண்டு போகிறது.
தேன் வண்டு பார்த்திருக்கிறாயா யது? பல மலர்களில் சுறுசுறுப்பாக உள்ளே நுழைந்து துளி தேனைப் பருகி அடுத்த மலருக்கு தாவும். பல மலர்களின் தேனை துளித் துளி ருசிபார்த்து வயிறு நிரம்பும். எனக்கு இது ஒரு குரு. பல நல்ல நூல்களை, உபதேசங்களை பலர் மூலம் பெற்று ஒவ்வொன்றிலும் முக்கியமான சாரத்தை உணர்ந்து பயன் பெற கற்றுக்கொண்டேன். இன்னொரு விஷயம், அது நிறைய சேகரித்து மறுநாள், அடுத்த வேளைகளுக்கு என்று சேமித்து வைப்பதில்லை. அப்போது கிடைத்ததே போதும் என்ற திருப்தி கொண்டவை. இது ஒரு பாடம். உஞ்ச விருத்தியில் என்ன கிடைக்கிறதோ அது போதும் . வயிறு தான் சேமிக்கும் இடம். அதுவே கேட்கும், தேவைப்படும் போது.
பெண்ணுக்கு அடிமையாகி அவள் அழகில் மயங்கி புலன் இழுக்கும் வழி போகாதே . அது ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்று பாடம் சொல்லி உணர்த்தியது ஒரு சுதந்திரமான காட்டு யானையின் செயல். மிக சக்தி வாய்ந்த பலம் கொண்ட அந்த யானை ஒரு நாள் காட்டில் ஒரு பெண் யானையைப் பார்த்துவிட்டது. அதை அடைய நெருங்கியது. அந்த பெண் யானையைக் காட்டி அருகே பெரிய குழி நோண்டி மறைத்து வைத்த வேடன், ஆண்யானை கண்மண் தெரியாமல் பெண் யானை அருகே வந்து குழியில் விழுந்தவுடன் அதைப் பிடித்தான். இவ்வாறு பிடிபட்டு வாழ்நாள் பூரா சுதந்திரம் இழந்து அடிமை வாழ்வு வாழ்ந்தது அந்த யானை. இது நல்ல பாடம் இல்லையா?
தேனீ எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் அற்புதமானது. பேராசை வேண்டாம், லோபி கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை தானும் அனுபவிக்காமல், தான தர்மம் செய்யாமல் எங்கோ சேர்த்து வைத்து கடைசியில் வேறு ஒரு திருடன் கையில் அது அகப்படும் அவன் அனுபவிப்பான். பாவம் தேனீ சுறுசுறுப்பாக எங்கெல்லாமோ சென்று மலர்களில் தேன் குடித்து சேகரித்து ஆடையில் சேமித்து வைக்கும். கடைசியில் ஆடை நிரம்பியிருந்தபோது எவனோ வந்து தேனீக்களை கொன்று கொளுத்தி, அடையில் உள்ள தேனை எடுத்துச் செல்வான்.
ஞானிக்கு உலக வாழ்க்கையில் சுகம் தரும் இசை,நாடகம் நாட்டியம், கேளிக்கை வேண்டாம். அதால் கவனம் திசை திரும்பி உயிருக்கே கூட ஆபத்து நேரிடலாம் என்று சொல்லிக்கொடுத்தது ஒரு மான். வேகமாக ஓடி தப்பித்துக்கொள்ள முடிந்த அது, ஒரு நாள் வேடனின் இசை கேட்டு அதை ரசித்துக் கொண்டு நின்ற சமயம் அவனைக் கவனிக்கவில்லை. அவனது அம்பு அதைக் கொன்றது.
நாவடக்கு என்பார்களே அது ரொம்ப சரி., நாவினால் தேவையற்றதை பேசவும் கூடாது. அதனால் ருசியைத் தேடி அலையவும் கூடாது. ருசியான உணவு என்று ஆசைப்பட்டு உயிரை இழந்த மீன் எனக்கு இதை சொல்லிக் கொடுத்தது. நீரிலேயே அது உயிர்வாழ உணவு இருந்தும், தூண்டிலில் செருகியிருந்த புழுவுக்கு ஆசைப்பட்டு தானாகவே ஓடிப்போய் அதை விழுங்கி, தொண்டையில் தூண்டில் கொக்கி மாட்டிக்கொண்டு பிடிபட்டு மாண்டது. உணவு உயிர் வாழ மட்டுமே தேவை. உபவாசம் நல்லது என்று உணர்ந்தேன்.''யது உனக்கு பிங்களா பற்றி தெரியுமா?''
''தெரியாதே சுவாமி, யாரது?''பிங்களா ஒரு பரத்தை. விதேக தேசத்தில் வசித்தவள். அவள் எனக்கு ஒரு முக்கியமான குரு என்கிறார் அவதூதர். அவள் தொழில் உடலை விற்கும் ஈனப்பிழைப்பு. அவள் திருந்தி பக்தையானதை எல்லா புராணங்களும் மகான்களும் என்றும் பேசுகிறார்கள். தினமும் இரவில் யாராவது வாடிக்கையாளன் பணத்தோடு கிடைப்பானா என்று அழகாக சிங்கரித்துக் கொண்டு காத்திருப்பாள். இப்படிப் பிழைத் தவள் ஒருநாள் தெருவில் வருவோர் போவோரை எல்லாம் பார்த்து கவனைத்தை ஈர்த்துக் கொண்டிருந்தாள். எத்தனையோ பேர் கடந்து சென்றார்கள். நள்ளிரவு ஆகியும் எவரும் அவளை நாடாததால் களைத்து வீட்டுக்குள் சென்று விட்டாள் . திடீரென்று அவளுக்கு யோசனை தோன்றியது. என்ன வாழ்க்கை இது? பணம் முக்கியமா, அது தரும் சுகம் தான் வாழ்க்கையா? உடலை விற்று உடலை பாதுக்காக்கும் செயல் கேவலமானது என்று ஏன் அறியவில்லை? காறி உமிழும்படி ஈனமானவளாக வாழ்ந்து கடைசியில் என்ன சந்தோஷம் கண்டேன்? துன்பம், துயரம், துக்கம், ஏமாற்றம் இதைத் தவிர வேறு என்ன ? இதற்கா பிறவி எடுத்தேன்? ஆசை, அல்ப சந்தோஷம், எதைச் சாதித்தது? எண்ணங்கள் கோர்வையாக எழுந்து அவளை மாற்றியது
''ராஜா, புரிந்துகொள். தெய்வம், பக்தி, ஆத்மா, ஆன்மிகம் அறியாதவன் உலகத்தில் உழன்று கடைசி வரை துயரத்திலேயே மூழ்குவான். மனதை அடக்கத் தெரியாத மானுட வாழ்க்கை மிருகத்துக்கல்லவோ சமம்.என்னுள்ளே இருப்பவனை அறியாமல் வெளியே எவன் எவனையோ நம்பியா வாழ்க்கை இருக்கிறது? பேரின்பம் உள்ளேயே இருக்க சிற்றின்பம் தேடி அலைந்த அறிவிலி நான். இவ்வளவு நாள் அவனை அறியாமல் போய் விட்டேனே. இந்த உடல் புலனின்பம் பெறவா தரப்பட்டது.? இது அவன் இருக்கும் கோயில். எலும்பு, தசை, கை கால்கள், தோல், எல்லாமே அந்த வீட்டின் கூரை, சுவர், தூண்கள் கொண்ட ஒன்பது வாசல் இல்லம்.இந்த விதேக தேசத்திலேயே அடி முட்டாள் நான் ஒருவளே . என் மீது இரக்கம் வைத்தல்லவோ, அந்த லட்சுமி நாராயணன் எனக்கு இப்போது அவனை நினைக்க தூண்டிவிட்டான். காக்கும் கடவுள் அவன் ரக்ஷிக்காமல் நான் இவ்வாறு ஒரு மோசமான தொழிலில் பணம் சம்பாதித்து காப்பாற்றிக்கொள்ள முடியுமா? அழியக்கூடிய உலகில் அழியாமல் இருப்பது சாஸ்வதமானது அவன் ஒருவனல்லவா? ஏதோ என்னையறி யாமல் என்றோ எங்கோ எப்போதோ அவனை நான் நினைத்திருக்கிறேன் போல் இருக்கிறது. இல்லாவிட்டால் என்னை தடுத்தாட்கொண்டு எனக்கு அருள் புரிவானா?
பற்றுகள் விட்டால் பரமனைப்பற்றிக் கொள்ளலாம் என்று புரிந்துகொண்டாள் பிங்களை. அவனே கதி என்று சரணடைந்தாள் . அவள் முகத்தில் ஒளி கூடியது. மனம் பூரா மகிழ்ச்சி கூடியது. காலம் நம்மை விழுங்குகிறது. முழுகுவதற்குள் முகுந்தனைப் பிடி என்று கற்றுக்கொடுத்தவள் அந்த பிங்களை என்கிறார் தத்தாத்ரேயர் இந்த அத்யாயம் 44 ஸ்லோகங்களைக் கொண் டுள்ளது. அதன் சாராம்சம் மேலே தரப்பட் டுள்ளது. இனி ஒன்பதாவது அத்யாயத் திற்குள் செல்வோம்.
No comments:
Post a Comment