Friday, June 25, 2021

srimadh bagavatham


 ஸ்ரீமத் பாகவதம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN

11வது காண்டம்  -  10வது அத்யாயம்
37  ஸ்லோகங்கள்

10.  கர்ம பலன் 

உத்தவா,  என்னைச்  சரணடைந்தால் போதும்.  மனது என் மேலேயே  நிலைத்திருக்கட்டும். இதை எதற்காக சொல்கிறேன் என்றால்  அப்போது தான் மனது வேறெதிலும்  செல்லாமல் தடுக்கும்.  தனியான விருப்பம் ஆசை,   சமூகத்தில், உலக மாயையில்  சிக்காது.   மாயையில் சிக்கி உலகில் வாடுபவர்களுக்கு  எது நிஜம் எது அநித்தியம் என்று தெரியாது.  புரிந்து கொள்ளும் சக்தியும்  இருக்காது.  தனது   விருப்பங்களை பூர்த்தி செய்வதிலேயே   நிழலைப் பிடிப்பதில்  காலம் ஓடும். 
விருப்பம் எல்லாமே மனதில் உருவாவது தானே.    மனதில் அதற்கு இடம் இல்லை யென்றால் எங்கிருந்து விருப்பம் உதிக்கும்,  எதையும் தேட வேண்டிய  வேலை யும் மிச்சம். 
ஆன்மா தான்  நான் என்று உணராதவன்  புலன்களின் வசப்படுகிறான். அது இழுக்கும்  வழியில்  செல்கிறான். அடிமையாகிறான். அவஸ்தைப்படுகிறான்.   இதெல்லாம்  மாயையின் லீலைகள்.   அவை வேண்டும் என்று தவமிருந்து என்ன பயன்?   புத்தியை தவறாக செலுத்துவது தான் கண்ட பலன்.

என் மீது மனதை நிலைத்திருக்க  செய்பவன்  புலன்களின்,  இந்திரியங்களின்,  வசத்தில்  மாட்டாதவன். ஆத்ம சோதனை, ஆத்மா னுபவம் ஒன்றிலேயே  கவனம் செலுத்துபவன்.  பலன் தரும் செயல்களில் நாட்டம் இல்லாதவன்.
அகமும் புறமும் சுத்தமாக இருப்பது முதல் படி. வளரும் செடி   கொடிக்கு    படர   கொழு கொம்பு, ஊன்றுகோல் தேவை.  அது தான் சாதகனுக்கு  சரியான குரு.  என்னை உணர்ந்த, ஆத்மானுபவம் பெற்ற  குரு எளிதில் சாதக னுக்கு  உதவ முடியும்.  அந்த குரு ஏறக்குறைய   என்னைப்  போன்றவர் என்று கொள்ளலாம்.  குரு என்பவர்  அமைதியின் கோலம்.   சுய கௌரவம், வறட்டு கௌரவம்  இதற்கெல்லாம் அங்கே இடமில்லை.  நான் சாதகன் என்ற எண்ணமும் தேவையில்லை.  பந்த பாசங்கள்,  இந்திரிய தளைகளில்  ஈடுபடாதவனாக இருக்கவேண்டும்.  குருவினிடத்தில் பரிபூர்ண பக்தி  கீழ்ப்படிதல் இருக்கவேண்டும். அனாவசிய பேச்சு குறைக்க வேண்டும்.  தன்னை  உயர்த்திக்  கொள்வதற்கு  முயற்சி கள் மேற்கொள்பவனாக  இருக்கவேண்டும்.  கடினமாக உழைக்க வேண்டும். 
ஒரு கட்டை எரிகிறது. அதிலிருந்து வெளிப் படும் தீ  ஒளிவீசுகிறது. அது கட்டை இல்லை. கட்டையை எரிப்பதால் விளையும் ஒளி.  அதுபோல் உடலில் உள்ள ஆத்மா ஒளிறும் போது உடலுக்கு முக்யம்  இல்லை. ஆத்மா முடிவில்லாதது. உடல்  மாறுவது, அழிவது.   தீ யின் ஒளி, பரிமாணம் அது எரிக்கும்  கட்டை, அதன் ஈரப்பதம், அடர்த்தி, எரியும் தன்மை  ஆகியவற்றைப்  பொறுத்தது அல்லவா?அதே போல தான் ஆத்மா எந்த உடலுக்குள் புகுந்த தோ அந்த உடலின் குணங்களை ஆதாரமாக கொண்டது. ஞானம் வளர வளர  உடலின் பாதிப்பு  ஆத்மாவை நெருங்காது.
உடலும் உலகமும் நிரந்தரமானவை அல்ல என்று அறிந்த மனம் விரைவில் ஞானம் பெறும்.  குரு  சிஷ்யன் இருவரும் சேர்ந்து   முயற்சி செய்யும்போது    ஆத்ம  ஞானம்  கொஞ்சம் கொஞ்சமாக  விரிவடைகிறது.  ஒளி பெருகினால் இருட்டு மறைகிறதல்லவா . ஞானம் வளர வளர  அஞ்ஞான, மாயையின் இருள் அகன்று விடுகிறது.
என்னருமை உத்தவா,  நான் சொல்வது உனக்கு ஒருவாறு விளங்குகிறதா?   ஒருவன்  செய்யும் கர்மாவினால் தானே பலன் பெறுகிறான்.  ஆகவே அதன் பலனாக  இன்பமும் துன்பமும் அவன் செயலால் தான் உருவாகிறது என்று சிலர்  வாதாடலாம்.   நூல்களை  தனக்கேற்றபடி  எடுத்துரைக் கலாம்.  ஞானம்  என்பது  ஏதோ ஒன்றல்ல,  அவரவர் அனுபவத்திற்கேற்ப  பெறுவது.  மாறுதலுக்கு உட்பட்டது.  மாறாத ஞானம்  ஆத்ம ஞானம் ஒன்றே . 
என்னருமை உத்தவா, உடல் என்று எடுத்துக் கொண்டால் அது தவிர்க்க முடியாதது, பிறப்பு, இறப்பு, முதுமை  வியாதி, என்பவற்றின்  பிடியிலிருந்து அது தப்ப முடியாது.  இதற்கு  உறுதுணையாக இருப்பது காலம்.  இதற்கும்  ஆத்மாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 
சுகம், இன்பம் ஒன்றே குறிக்கோள் என காரியத்தில் ஈடுபடுபவன், அதன் பயனாக, பலனாக எதிர்பார்ப்பது  அந்த சுகம் இன்பம் என்பது.   கிடைக்கவில்லை, நிறை வேற வில்லை என்றால் ஏமாற்றம் வருத்தத்தை கோபத்தை தருகிறது.  நிலையற்ற  தற்காலிக இன்பம், சுகம் அவனை சந்தோஷமடைய செய்கிறது. அவன் எதிர்பார்த்தது அது தானே. பயனற்ற, பொய்யான சுகம் அது.   இவ்வாறு சுகம் துக்கம் அனுபவிப்பவர்களுக்கு  மரணம், அதன் பாதிப்பு  தவிர்க்க முடியாதது. மரணம் என்கிற வார்த்தையே  ஒருவருக்கும் பிடிக்காதது.
 ஸ்வர்கம்  என்பது கூட  நிரந்தரம் அல்ல. உலக  இன்பம் சுகம் மாதிரி தான் அது.   விண்ணு லகம், ஸ்வர்கம் இவற்றை அடைவதிலும் அனுபவிப்பதிலும்  கூட  பொறாமை,  பேராசை, மரணம் எல்லாம் உண்டு. பாடுபட்டு பயிர் விதைத்தும் பயனின்றி போகிறதற்கு  எப்படி   பஞ்சம், வியாதி,  செடிக்கு உயிர்கொல்லி நோய் வருவது காரணமாகிறதோ அது போல் தான் விண்ணுலக, ஸ்வர்க வாஸத்திற்கும், வாசத்திலும்  எண்ணற்ற தடங்கல், தடைகள் உண்டு.  
ஆகவே  வேத சாஸ்திரத்தின் அடிப்படையில்  யாகம் விரதம் போன்றவை அனுஷ்டித்து  அடுத்த பிறவியில் விண்ணுலகம்  ஸ்வர்க பதவி பெறுபவன் ஒரு சில காலத்துக்கு மட்டுமே  அந்த பயனைப் பெறுபவன்.  அவன் அதை அனுபவித்து  முடிந்தபின்  ஆரம்பத்தி லிருந்து திரும்பவும் துவங்கவேண்டும்.
என்னை விட்டு,  மற்ற உப தேவதைகளை  வழிபட்டு  அவர்கள்  சக்திக்கேற்ப  ஒருவன்  விண்ணுலகம் எய்தினால், அந்த உப தேவதை களைப் போலவே  அவனும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் அவன் செய்த கர்ம   பலனுக்குண்டானவரை, அந்த  சுக வாழ்வை அனுபவிக்க இயலும். நிரந்தரமில்லை.  அதுவரையில்  பளபளா  ஜிலுஜிலு உடையில், கந்தர்வ கானம் கேட்டுக்கொண்டு, ருசியான உணவுண்டு, தேவர்களுடன் காலம் கழிக்க லாம்.  விண்ணுலக விமானத்தில் சுற்றி வரலாம்.  ஒரு ஐந்து நக்ஷத்ர விடுதியில் சில காலம் மட்டும் தங்குவது போல.  கையில் பணம் தீர்ந்துவிட்டால் மீண்டும் வீட்டுக்கு  திரும்புவது போல  அவன் கர்ம பலனின்  சுகம்  அனுபவித்தபின்   பூமியில் மறுபடியும் பிறந்து உழலவேண்டும்.
பாதகங்களை செய்தவன், தீய செயல்களை விரும்பி செய்தவன் நரகம் செல்வான்.  அவன் மீண்டும்  பிறந்து அவன் பாவங்களுக்கு ஏற்ப உடல் பெற்று மேலும்  துன்பத்தில் உழல்வான்.   அவனே  அவனை உய்வித்துத் கொள்ள  வேண்டி யது தான். 
உத்தவா,  நவகிரஹங்களும்,  ஸ்வர்கம் முதல் நரகம் வரை  சகல தேவதைகளும்  ஆயிரமாயிரம்   யுகங்களில் உழல்வன . என்னுடைய  சக்தி, உருவத்தில்  அவற்றுக்கு  பயம் உண்டு.   ப்ரம்மாவையே எடுத்துக் கொள் அவனுடைய  ஜீவிதம் எவ்வளவு வருஷம் தெரியுமா? பூலோக  கணக்குப்படி  311,040,000,000,000  வருஷங்கள்.   அவனுக்கே  என்னிடம்  அச்சம் உண்டு.   பலன் தேடும் உலக வாழ்வில்,  பாபமோ புண்யமோ  அமையும். அதற்கேற்ப     ஒவ்வொரு ஜீவனும்  ஸ்வர்க நரக  சுக துக்கங்களை  அனுபவிக்கிறான்.  அது தான் கர்மபலன்.
உத்தவா,   அதனால் தான்  உலக வாழ்வில்  பலனெதிர் நோக்கி  கர்மம் புரிபவர்கள்  என்னை பலவிதமாக காண்கிறார்கள்.  சர்வ சக்தி காலன் , ஆத்மன்,  வேதத்தின் பொருள், பிரபஞ்சன்,   அவனே நான்,  யாக பலன் என்றெல்லாம்   வர்ணிக்கிறார்கள்''. 
பகவானே,   உங்கள்  விளக்கம் புரிகிறது.  உலகில் தான் பெற்ற  உடலில்  புகுந்த ஜீவன்,  அது இழைக்கும்  காரியங்களின் பலனாக இன்ப துன்பம்  அனுபவிக்கிறான். இதிலிருந்து அவன் விடுபடுவது எப்படி  சாத்தியம்?  உள்ளே உள்ள ஆத்மன்  உடலோடு சம்பந்தப்படாதவன் என்றபோது உலக வாழ்க்கையின் கர்ம பலன் அவனை  எப்படி கட்டுப்படுத்தும்?    அந்த ஜீவன் ஒரு சமயம்  மாயையில் கட்டுண்டது என்கிறோம்.  மறுசமயம்  மாயையில்  சிக்காதது என்கிறோம்.  இது எனக்கு புரிந்து கொள்ள இயலவில்லை.  இந்தமாதிரி வேதாந்த விஷயங்களை  நீங்கள் தான் எனக்கு தெளிவிக்க வேண்டும். எப்படி ஒரு ஜீவன்  மாயையின் பிடியில் உள்ளவன்,  பிடியில் இல்லாதவன் என்று  உணர்வது. 

இந்த 10ம் அத்தியாயத்தில் மொத்தம் 37 ஸ்லோகங்கள்.  உத்தவன் கேள்விகளுக்கு பகவான் சொல்லும்  விளக்கம் அடுத்த அத்யாயத்தில் அறிவோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...