Friday, June 11, 2021

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம்    -   நங்கநல்லூர்  J  K  SIVAN  --


35    கும்பாபிஷேகம் நடக்குமா ?


பாடகச்சேரி  ஸ்வாமிகளைப்  பற்றி  முந்தைய பதிவில் அறிந்தோம்.   பல  கோவில்களுக்கு  புனருத்தாரணம் அவரால்  நிறைவேறியது.  அப்படி ஒரு ஆலயம் தான் கும்பகோணம் திருநாகேஸ்வரம் ஆலயம்.  ராகு ஸ்தலம் .சித்திரை மாதம்   மூன்று நாட்கள்  சூரியனின் கதிர்கள்  நேராக  நாகேஸ்வர லிங்கத்தின் மீது படியும்.    காலையில் இந்த  சூரிய  வழிபாட்டை காண  எண்ணற்ற பக்தர்கள் காத்திருப்பார்கள்.    விசேஷ பூஜைகள் நடைபெறும்.


பாடகச்சேரி ஸ்வாமிகளின் முயற்சியால்  திருநாகேஸ்வர  ஆலய கோபுரங்கள் புத்துரு பெற்றன.   ரெண்டு வருஷம் மும்முமரமாக  புனருத்தாரண பணிகள் தொடர்ந்து நடந்து  கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தார்கள்.   இதில் ஒரு சிக்கல் உருவாகியது.   கோவிலை சேர்ந்த விஸ்வகர்மா வகுப்பினர்  தாங்களே  சிவலிங் கத்திற்கு அபிஷேகம் செய்ய கடமை  முன்னுரி மை பெற்றவர்கள்,  அவர்களது அபிஷேகத்துக்கு பிறகு தான்  சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம்  தொடரவேண்டும் என்ற வழக்கு நீதி மன்றத்துக்கு சென்றது.

வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் தாழி உடைந்து விடுமோ என்று பாடகச்சேரி ஸ்வாமிகள்  கவலைப் பட்டார். 

1920ல்  இது விஷயமாக  மஹா பெரியவாளைச்  சந்தித்தார்.   கும்பாபிஷேகம் தாமதமாகி விடுமோ என்ற கவலையை எடுத்துச் சொன்னார்.   

''நீங்க  தான் இதற்கு ஒரு  தீர்வு காணவேண்டும்''  -    என்று மஹா பெரியவாளைக்  கேட்டுக் கொண்டார். 

''உங்களது விடா முயற்சியால் இந்த ஆலயம்  புதுப்பிக்கப்பட்டு  கும்பாபிஷேகம் ஆகும் நிலைக்கு வந்திருக்கிறது. கவலைப்படாதீர்கள்,  இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கலாம்'' என்று   மஹா பெரியவா  பதிலளித்தார்.  

மஹா பெரியவா   இது விஷயமாக   சம்பந்தப் பட்ட  விஸ்வகர்மாக்களை, அர்ச்சகர்களை, சிவாச்சார்யர்களை எல்லாம்  தனித்தனியாக  கூப்பிட்டு  விசாரித்தார்.   ஒவ்வொருவர்  கோணத்திலும் உள்ள  உண்மைகளை அலசினார்.

'இது விஷயமா  ஒரு சுமுகமான  எல்லோருக்கும் திருப்தியான ஒரு ஆலோசனை சொல்கிறேன். எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்''என்று கேட்டுக்கொண்டார். 

வழக்கு தொடுத்தவர்களை விட்டு  நீதிமன்றத் துக்கு   முதலில்  ஒரு  வழக்கு வாபஸ்  அறிக்கை  உடனே  சமர்ப்பிக்க சொன்னார். அதில்  ''இந்த  வழக்கில் கண்ட விஷயத்தை   ஸ்ரீ  காஞ்சி காமகோடி 68 வது பீடாதிபதி ஜகத்குரு அவர்களை  நடுநிலையாளராக  நியமித்து  வழக்கில் கண்ட வாதி பிரதிவாதிகள்  அவரது முடிவை  ஏற்றுக்கொள்வதாக   இருபாலாரும்  தீர்மானித்துள்ளோம். ஆகவே  இந்த வழக்கை  நீதி மன்றம் தொடரவேண்டாம்,  வழக்கை  வாபஸ் பெறுகிறோம்'' என்று  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆங்கிலேய  நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை எப்படி  அணுகுவது என்று கவலைப்பட் டுக்கொண்டிருந்த நேரம் இப்படி ஒரு அறிக்கை வந்ததில் திருப்தி  அடைந்து,   வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேபோல்  விரைவில்  மஹா பெரியவா  இருவரையும் அழைத்து,    ஆகம சாஸ்திரங்களில், வேத நூல்களில்  கண்ட  விவரங்களை  மேற்கோளோடு காட்டி,   விஸ்வகர்மாக்கள்   ஆலய  கும்பாபிஷேகம்  நடக்கும்  முன்பு  அபிஷேகம் செய்ய தடை ஒன்று மில்லை என்று நிரூபித்தார்.   கும்பாபிஷேகம் குறித்த  முகூர்த்த நேரத்தில் நடக்க வழி செய்தார்.   முனிசிபல் நீதி மன்றம் இவ்விதமே  ஒரு  ஆணை  பிறப்பித்தது.    
1923ம் வருஷம் ஜூன் மாதம்  (ருத்ரோத்காரி  வருஷம்,   ஆனிமாதம்,   எல்லோரும் சந்தோஷ மாக பங்கேற்று  கும்பாபிஷேகம்   வெகு விமரிசையாக  நடைபெற்றது.  ஆயிரக் கணக்கா னோர்  தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.   உள்ளூர்  மக்கள், வியாபாரிகள்,  வக்கீல்கள், உத்யோகஸ்தர்கள்,  நிலச்சுவான்தார்கள்,  அனைவரின்  பங்கேற்போடு கோலாகலமாக குறித்த நாளில் குறித்த   நேரத்தில் கும்பாபிஷேகம் நிறைவேறியதில்  பாடகச்சேரி ஸ்வாமிகளின் சந்தோஷத்தை   எழுத வார்ததையே   இல்லை.

மஹா  பெரியவாளின்  பொதுநல நோக்கு, அனைவரையும் அரவணைத்துப் போகும் தன்மை,  நேர்மை, சமயோசிதம்  அவர்மீது  எல்லோரும்  கொண்டிருந்த மதிப்பு மரியாதை எல்லாம்  வியந்து பாடகச்சேரி ஸ்வாமிகள் போற்றினார் 

தேப்பெருமாநல்லூர்   அன்னதான சிவன்  தலைமையில் அனைவருக்கும்   வயிறார உணவு இலவசமாக    அளிக்கப்பட்டது.     நாகேஸ்வரன் ஆலய  கும்பாபிஷேகம்  நடந்த  சில  வருஷங் களில்  பாடகச்சேரி ஸ்வாமிகள்   சென்னையில் திருவொற்றியூரில்  தேகவியோகம்  அடைந்தார்.   அவருக்கு அங்கே  சமாதி உள்ளது.  


தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...