Tuesday, June 15, 2021

SRIMADH BAGAVATHAM


 ஸ்ரீமத்  பாகவதம்    -      நங்கநல்லூர்   J  K  SIVAN  -

11ம் காண்டம்  3வது  அத்யாயம்

  3  மாயையிலிருந்து விடுபட ...

ஸ்ரீமத் பாகவதம் என்பது  ஒரு பெரிய கடல்.   12 காண்டங்கள். 335  அத்தியாயங்கள். 18000  ஸ்லோகங்கள்.  போதுமா?   அதில் வேதாந் தமும் இருக்கிறது, விறுவிறுப்பான கதைகளும் இருக்கிறது.   எல்லாமே  விஷ்ணு சம்பந்தம்.  இதை இயற்றியவர்  அசகாய சூரர்  கிருஷ்ண  த்வைபாயனர், பாதராயணர், எனும் வேத வியாசர். . விஷ்ணு அம்சம். வேதாந்திகளில் முதல்வர்.   இதிகாசங்களில் ஒன்றான  மஹா பாரதம்  18 புராணங்கள் இயற்றவர். குரு  வம்ச முன்னோடி.  சுகப்ரம்மரிஷியின்  தந்தை .  இப்போது   ஸ்ரீமத் பாகவதம் 11வது காண் டத்தில் 3வது அத்தியாயத்தை அறிவோம்  

ஒண்ணுக்குள்   ஒண்ணாக   இருப்பது தான் இந்த  சமாச்சாரம்.  பரீக்ஷித்  ஏழு நாளில்   மரணம் அடையப் போவது  நிச்சயம்.   எவராலும்  தடுக்க முடியாது. அதற்குள் அவன் அந்த ஏழு நாட்களை ராஜா  ஸ்ரீ சுகப்ரம்மத்தை அழைத்து அவர் உபதேசிக்கும்  பாகவதத்தை  கேட்கிறான். இது தான் சப்தாஹம்.  

ஸ்ரீ மத் பாகவதம்  கதையாகவும் இருக்கும், அதே சமயம்  உயர்ந்த வேதாந்த தத்வ உபதேசமாகவும் இருக்கும்,  சில இடங்களில் காட்டாறு போல வேகமாக  படித்து புரிந்து கொள்ளமுடியும், சில இடங்கள் ஆழமான பசிபிக் சமுத்திரம், சலனமில்லாத  எளிதில்  புரிந்துகொள்ளமுடியாதவையாக  இருக்கும். பொறுமையாக படித்து யோசித்தால் புரியும்.   எங்கெங்கு விளக்கமாக தரமுடியுமா அங்கெல்லாம் என்னாலியன்ற தெளிவான  உரைநடையில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறேன்.

பரீக்ஷித்  எதிரே சுகப்ரம்மரிஷியிடம்  ஆ வென்று அவர் சொல்வதை வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.

சுகர் தொடர்கிறார்:   ''அப்புறம்  ராஜா நிமி  நவயோகேந்திரர்களை மேலும் கேள்விகள் கேட்கிறான்.
''மாயை எப்படியெல்லாம் செயல்படுகிறது சொல்லுங்கள்?  எப்படி மஹா புருஷர்கள், வேத விற்பன்னர்களைக்கூட  அடிபணிய வைக்கிறது?

''மேலே சொல்லுங்கள்  பிரபு , கேட்க  ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் என்று வேண்டினான்  ராஜா பரீக்ஷித்.
''சொல்கிறேன் மன்னா : கேள்

இதில் சுகர்  பரிக்ஷித்துக்கு சொல்வது தான்,   நாரதர்  கிருஷ்ணனின் தந்தை வசுதேவருக்கு சொன்னது.  நாரதர் சொன்னது தான்  ராஜா நிமி  நவயோகேந்திரர்கள் எனும்  ரிஷப தேவனின் 9 ரிஷி குமாரர்களிடம்  பேசுவது.  

ராஜா நிமி  மேலும் கேட்கிறான்:   ''விஷ்ணு மாயை தான் சகலத்துக்கும்  காரணம் என்பதால் அதைப் பற்றி சொல்லுங்கள் யோகிகளே . உலக வாழ்க்கையில் சிக்கி  தவிக்கும் எனக்கு பரமாத்மாவைப் பற்றி நீங்கள்  சொல்வதைக் கேட்கும் தாகம்  தணியவில்லை''

அந்தரிக்ஷர் எனும் யோகி பதிலளிக்கிறார்:  ''மஹாராஜா,  பகவான்  பல வித  ஜீவன்களை படைத்து  பூமியில் அவர்கள் இஷ்டம்போல் வாழ விடுகிறான்.  சில  நல்வழியில் பல தீயவழியில் சென்று பலனை அனுபவிக்கிறது. ஒவ்வொரு  ஜீவனுக்குள்ளும் தான் இருந்து அவை  புலன்கள் வழியே சென்று  அனுபவிப்பதை  சாக்ஷியாக பார்க்கிறான்.  இந்த தேகம் ஆத்ம வழியை உணர்ந்து மேல் நோக்கி பயணம் செய்வதற்கு வழி  கொடுத் தும் புலன்கள் வழி சென்று  மாயையில் சிக்கி  அவஸ்தைப்படுவதை  காண்கிறான்.   சுகமும் துக்கமும்  இந்த ஜீவன் அடைவது அது  புலன்கள் வழி சென்று துய்க்கும் அனுபவம்.  பொய்யை மெய்யாக கண்டு ஏமாறுவது.   மாறி மாறி  ஜனனம் மரணம் ஏற்பட்டு,  கடைசியில் மஹாப்ரளயத்தில் பரமாத்மாவை அடையும் வரை அறியாமையில் இருப்ப வர்களும் உண் ப்ரளய  காலம் டு.  பிரளயம் ஏற்படவேண்டும் என்று பரமாத்மா  சங்கல் பிக்கும்போது சகலமும் முடிவுக்கு வருகிறது.  ப்ரளயம்  நெருங்கும்போது  சூரியன் மலமடங்கு தகித்து சுட்டு சாம்பலாக்குகிறான்.  நூறு வருஷங்களுக்கு பஞ்சம் பட்டினி.  மூவுலகும் வாடுகிறது அப்போது. பாதாள லோகத்தில்  சங்கர்ஷணன் வாயிலிருந்து  புறப்படும் அக்னி எல்லாவற்றையும் அழித்து மேலே கிளம்புகிறது. காற்றில் எல்லாப் பக்கமும்  எல்லாவற்றையும் அழிக்கிறது.  ஓ வென்ற பேரிரைச்சலோடு  நூறுவருஷம் விடாமல் மழை பெய்து எங்கும்  ஜால பிரளயம்.  ஒவ்வொரு மழைச் சொட்டும் யானை தும்பிக்கை அளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!   ப்ரம்மா தனது உருவத்தை  இழந்து சிறு  துகளாகிறான்.  ஊழிக்காற்று  தீயையும்  நீரையும்  அழிக்கும் வேலையில் இணைக்கிறது.  எங்கும் இருள், அறியாமை  சூழ்கிறது.  இது தான் பிரபஞ்ச மாயை.  ஸ்ரிஷ்டி , ஸ்திதி, ஸம்ஹாரம் மஹா தத்வம்.     மஹாராஜா இன்னும் என்ன கேட்க  விரும்புகிறாய்?

''ப்ரபோ, மகரிஷி,  இந்த மாயைக் கடக்க என்ன வழி?''

''செல்வ ம் என்று உலகில் எதை கருதுகி றோமோ அதுவே அழிவுக்கு காரணம்.  குடும்பம் மனைவி குழந்தை எல்லாம் சாஸ்வதம் என்று சேமிக்கும் செல்வத்தால் வளர்வதாக கொள்வது மாயை.  அவற்றால் மிஞ்சுவது துன்பம் தான். மண்ணில் தான் இப்படி என்று இல்லை. விண்ணில் வாழ்ந்தாலும் அதே போட்டி பொறாமை.  புகழ்பெற்ற ராஜாவாக இருந்தாலும் மக்கள்  நேசித்தாலும்  அடுத்த நாட்டு எதிரி ராஜாவைப் பற்றிய பயம் அவனைக் கொல்லும்.   நிம்மதி சுகம் கிடையாது.  நன்று கற்ற, இறைவனை அறிந்த  குருவைத்தேடி  சரணடைந்து அவர் மூலம்  ஞானம் பெறுவது ஒன்று தான் வழி  சாஸ்வதமான சுகம் பெற.  குருவின் மூலம்  பரமாத்வை அறிந்து பரமாத்மாவோடு இணைவது ஒன்றே  பரம சுகம்.

சிஷ்யன்  இப்படி  குருவின் மூலம்  சத்சங்கம் வளர்த்து தனக்கு உயர்நிலையில் உள்ளவரை தொடர்ந்து, சம நிலையில் உள்ளவர்களோடு இணைந்து,  தாழ் நிலையில் உள்ளவர்களிடம் கருணை அன்போடு பழகவேண்டும்.  இதற்கு இன்றியமையாதது,  சுத்தம்,  பிரம்மச்சர்யம், அஹிம்சை, வேதசாஸ்திர ஞானம், எளிமை,மௌனம், அமைதி  ஆகியவை.

த்யானம் அவனை  பரமாத்மாவோடு இணைக்கும்  சாதனம். உலகப் பற்று விட்டதற்கு ஆதாரமாக தான் மரவுரி, கானக வாசம்,  எல்லாம்  உதவியது.   மனம் வாக்கு காயம் மூன்றையும்  கட்டுப்பாட்டில் வைக்கும் பயிற்சி பெறவேண்டும்.   மந்த்ர உச்சாடனம்,   மனம் ஒன்றுபட்டு தியானம் இதற்கு உதவும்.

நடப்பதெல்லாம், தவிர்க்க முடியாத கர்ம பலன் என்று உணர்ந்து பரோபகார செயல்களில் ஈடுபட்டால் பகவானை நெருங்கலாம்.   மற்ற பக்தர்களோடு இனைந்து சத் சங்கத்தில் பகவானை நினைப்பது துன்பத்தை விலக்கும் , இன்பத்தில் இணைக்கும்.   இதை பக்தி யோகம் எனலாம்.  உலகை மறந்து புலன்களின்  தூண்டுதலை கடந்து, பெறும்  இன்பம்.

மற்றவர்கள்  சொல்வது, பேசுவது, நினைப்பது எதுவும்  லக்ஷியம் இன்றி சிரித்து, பாடி, ஆடி,  ஆனந்தத்தில் இறைவனை உணர்வது பக்தியின் உச்சம்.  இப்படி நாரயணனின் பால்  ப்ரேமையோடு  தன்னை அர்ப்பணிப்பது மாயையை வேர றுக்கும் .

''மகரிஷி, நாரயணன் எங்கும் எதிலும் எப்போதும் இருப்பவன், அவனது  எல்லை கடந்த நிலையை விளக்கவும்?''  -  ராஜா நிமி.

இதற்கு பிப்பலாயன ரிஷி பதிலளிக்கிறார்:   ''பரமாத்மா ஆதி காரணன். ஆக்கல் காத்தல் , அழித்தல்  மூன்றுக்கும் பொறுப்பானவன்.  விழிப்பு, தூக்கம், கனவு மூன்று நிலையம் கடந்தவன்,  பெரிது சிறிது என்று அனைத்திலும் ஜீவன்களில் உள்ளே நின்று ஒளிர்பவன். வேதங்களிலும் அறியமுடியா தவன். மனம் வாக்கு காயத்துக்கு உட் படாதவன்.  நிரந்தரமான ஒன்றானவன்  பலவாகக்காட்சி தருபவன்.    தோற்றம் மறைவு இல்லாத ப்ரம்மம்  அவன். எங்கும் எதிலும் காண்பவன்.   பல்வேறு உயிர்களாக பரிமாணம் கொண்டவன்.

ஸ்ரீமன்  நாராயணனின் திருவடிகளை மனதில் நிரப்பிக்கொண்டவனுக்கு ஆசைகள் பொடிப்பொடியாகும்.   தனது ஜீவனில் ஆன்மாவில்   பகவானைக்  காணமுடியும்.''

''மஹரிஷி,எனக்கு கர்ம யோகத்தைப்பற்றியும்  சொல்லுங்கள்'.  முன்பு ஒருமுறை என் தந்தை இக்ஷ்வாகு முன்னிலையில்  ப்ரம்மா வின் புத்ரர்களிடம் இதே கேள்வியைக் கேட்டேன். பதில் பெறமுடியவில்லை'  'என்கி றான் ராஜா நிமி.

அவனுக்கு  இன்னொரு ரிஷி  ஆவிரஹோத்ரர்  பதிலளிக்கிறார்:  ''வேதங்கள் , செய்யவேண்டி யது, செய்யக்கூடாதது,   செய்வதால் கிட்டும் பயன் பற்றியெல்லாம் சொல்கிறது.  வேதம் என்பதே பரமாத்மா ஸ்வரூபம்.  அப்பா  கசப்பு மாத்திரை சாப்பிட  பிள்ளையிடம், இதை சாப்பிட்டால் உனக்கு  சக்கரை மிட்டாய் வாங்கி தருவேன் என்கிற மாதிரி கர்மம் செய்வதால் கிட்டும் பயன் பற்றி சொல்லி விட்டு, பலனெதிர்ப்பாராத  கர்மத்தை பற்றி வேதம் சொல்கிறது.  அஞ்ஞானி, உலக லாபங்கள் பெற  கர்மம் செயது மீண்டும் மீண்டும் ஜனனமரணத்தில் அவஸ்தைப் படுகிறான்.  பலனெதிர்  பாராமல் அதை பரமாத்மாவுக்கு அர்ப்பணம் செய் பவன் ஞானி.  வேதங்களில் தந்த்ரா முறை  கிருஷ்ணனை நாட வழி சொல்கிறது.  அஹம்பாவ    முடிச்சு அறுத்தெறிய வழி சொல்கிறது.   குருவிடம் உபதேசம் பெற்றபின் சிஷ்யன்   கற்ற  வேதங்களை  பின்பற்றி நடந்து தனது தெய்வமாக  பரமாத்மாவை  வழிபடலாம்.    தேக சுத்தம்,   ப்ராணாயாமம் இதற்கு உதவுகிறது. பகவானை ஆராதித்து  பூஜை அபிஷேகம்  மந்த்ர உச்சாடனம் எல்லாம் பரிசுத்தமாக செய்வது ஒரு முறை.
மனதில் உறையும் பகவானை விக்ரஹமாக   பூஜித்து மலர் சூட்டி அந்த மலர் பிரசாதத்தை தலையில் வைத்துக்கொண்டு வணங்குவது ஒரு வழக்கம். மொத்தத்தில்  பகவானை உள்ளும், புறமும், பஞ்ச பூதங்களிலும் காண முடிகிறது, புரிகிறதா  மஹாராஜா''  

மேலே சொன்ன சம்பாஷணை  ஸ்ரீமத் பாகவதம் 11வது காண்டம்  மூன்றாவது அத்தியாயத்தின்  55 ஸ்லோகங்களின்  சாராம்சம்.  

தொடரும்
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...