ஸ்ரீமத் பாகவதம் - நங்கநல்லூர் J K SIVAN 11வது காண்டம் 2ம் அத்தியாயம்
2. ராஜா நிமி நவயோகேந்திரர்களின் சந்திப்பு
நாரதர் துவாரகையில் கிருஷ்ணனை வணங் குவ தற்காக காத்திருந்தார். கிருஷ்ணனை வணங்க சந்தர்ப்பம் கிடைத்தால் விடுபவரல்ல மகரிஷி நாரதர்.
தேவ ரிஷி நாரதர் வந்திருப்பதை அறிந்த கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் தானே முன்வந்து அவரை வரவேற்று உபசரித்து ஆசனம் அளித்து வணங்கினான்.
''உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. தேவரிஷி ,நீங்கள் தந்தை மாதிரி அனைவருக்கும். தெய்வங்களை பக்தியோடு வணங்கினாலும் அவர்கள் பெறுவது சுகம் துக்கம் இரண்டும் கலந்து தான். ஆனால் உங்களைப் போன்ற மகரிஷிகள் அருள்வது சுகம் , நன்மை ஒன்றே . மிகக் கெடுதல் செய்தவன், கெட்டவன் நல்லவன் எவனாயிருந்தாலும் உங்களை போன்ற மஹரிஷிகள் வித்தியாசம் காண்பதில்லை. காரணம் உங்கள் தவ வலிமை, எப்போதும் பகவானையே சிந்திப்பது. எல்லோரையும் ஒன்றாகவே காண்பது.
வசுதேவர் தொடர்ந்து நாரதரிடம் சொல்கிறார்: ''மகரிஷி, மனிதன் வணங்கும் உப தேவதை கள், ஒருவனின் நிழல் மாதிரி. ஒருவனது கர்மாவைப் பொறுத்தும் அவனது வழிபாட்டை பொருத்தும் பலன் கிடைக்கிறது. மஹரிஷிகள் மஹான்கள், பக்தனின் கர்மாவைப் பார்ப்பது இல்லை. தன்னை சார்ந்தவர்க்கு அருள் ஆசி ஒன்றே தருபவர்கள்.
''ப்ராம்மணோத்தமரே, உங்கள் வருகை எனக்கு மெத்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் தான் எனக்கு எந்த கடமை செய்வதன் மூலம் பரமாத்மா திருப்தி அடைகிறார், அப்படிப்பட்ட கடமைகளை அறிந்து கொள்பவனே கூட சகல வித பயங்களும் அகன்றவனாகிவிடுகிறான் என்று அறிகிறேனே , அப்படியா?''
''நாரதரே, எனது முன்னொரு ஜென்மத்தில் மாயை யினால் நான் முக்தி தரும் அனந்தனை வழிபட்டது எனக்கு ஒரு நல்ல ஆண்மகன் வாரிசு வேண்டுமென. எனக்கு முக்தி கிடைக்கவேண்டும் என்று கேட்கவில்லை. தவசிரேஷ்டரே, மாயை யில் அப்படி சிக்கி இருந்தேன் . எனக்கு இந்த பவ சாகரத்திலிருந்து விடுதலைபெற, அதனால் விளையும் பயங்களை போக்கி அருள்வீராக''.
''பரீக்ஷித் மன்னா, வசுதேவர் இப்படிக் கேட்ட போது நாரதருக்கு கிருஷ்ணன் நினைவில் நின்றான். என்ன பதிலளித்தார் தெரியுமா?'' என்று கூறினார் சுகப்பிரம்ம ரிஷி.
''வசுதேவரே , நீர் கேட்டது பாகவத தர்மத்தை
பற்றி, அதற்கு ஈடு இணை இல்லை. பிரபஞ் சத்தையே புனிதப் படுத்துவது. அதை அறிவதோ, கேட்பதோ, சொல்வதோ, கடவுள் பக்தி , நம்பிக்கையில்லாதவனையும் புனிதப்படுத்தும் சக்தி கொண்டது. என் தெய்வம் ஸ்ரீமன் நாராயணனை நீ ஞாபகப் படுத்தி விட்டாய். அவனை நினைத்தாலே, நாமத்தைச் சொன்னாலே, ஒருவனை உயர்த்திவிடும் . இது ஒருகாலத்தில் ரிஷப தேவரின் புத்திரர்கள் விதேக நாட்டு ராஜாவுடன் சம்பாஷித்ததை ரிஷிகள் கூறுவார்கள். .
'நாரதரே அதை சொல்லுங்கள் என்றார் வசுதேவர்.
ஸ்வயம்பு மனு எனும் ப்ரியவ்ரதனின் பிள்ளை அக்னிதரன். அவன் மகன் நாபி, அவன் மகன்
ரிஷபதேவன் அவனை தெய்வாம்சம் பொருந் தியவன். அவன் அவதரித்தது தர்மத்தை போதிக்க, முக்தி மார்கத்தை பரப்ப. அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்கள் சத்தியத்தை பின்பற்றுபவர்கள். நூறு பேரில் முதல்வன் பரதன், நாராயண பக்தன். அவன் பெயரால் தான் நமது தேசம் பாரத வர்ஷம் என்று அழைக்கப் படுகிறது.
பரதன் ஹரி நாம ஸ்மரணையில் ஈடுபட்டு, குடும்பம், உலகை வெறுத்து அடுத்த மூன்று பிறவியில் முக்தி அடைந்தவன்.
ரிஷப தேவனின் ஒன்பது புதல்வர்கள் நாட்டை பல்வேறு ராஜ்யங்களாக பிரித்து ஆண்டனர் . எண்பத்தி யொன்று பிள்ளைகள் வேதம் பயின்ற பிராமணர்கள்.
மீதி ஒன்பது பிள்ளைகள், கவி, ஹவிர், அந்தரி க்ஷன், பிரபுத்தன், பிப்பலயாணன், ஆவிர் ஹோத்ரன் , த்ருமிலன், சாமஸன், கரபாஜனன் ,ஆகியோர் ரிஷிகள்.அவதூதர்கள். பிரபஞ்சம் முழுதும் சுற்றியவர்கள். நவயோகேந்திரர்கள் என்று அழைக்கப்பட்ட வர்கள். நினைத்த நேரத்தில் எந்த லோகமும் சென்றவர்கள்.
ஒரு தரம் அஜநாபாவுக்கு (நமது இந்தியாவுக்கு பாரத வர்ஷம் என்ற பெயர் வருவதற்கு முன் இந்தபெயர்) . அங்கே விதேக ராஜா நிமி ஒரு சோமயாகம் நடத்தி தேவர்களை மகரிஷிக ளை திருப்திபடுத்தினான். இந்த யாகத்துக்கு நவயோகேந்திரர்கள் வந்ததால் ராஜா நிமி மகிழ்ந்து வணங்கி வரவேற்றான்.
''நாராயணனின் ப்ரியமானவர்களே, எனக்கு பக்தி, முக்தி பற்றி உபதேசிக்கவேண்டும் '' என்று கேட்டான்.நவயோகேந்திரர்களில் முதல்வர் ஸ்ரீ கவி பதிலளித்தார்:
''பரமாத்மாவை வழிபட்டு வணங்குபனுக்கு ப்ராண பயம் நீங்கும். பாகவத தர்மம் அறியா மையைப் போக்கி பரமனை அடைய வழி காட்டுகிறது. இதை அறிந்தவன் மாயையில் சிக்க மாட்டான். கண்ணை மூடிக்கொண்டு ஓடினாலும் சரியான வழியிலிருந்து பிறழ மாட்டான். , மனம் வாக்கு காயம் மூன்றி னாலும் தன்னை பரமனுக்கு சர்வம் நாராயணார்ப் பணம் என்று தன்னை அர்ப்பணிப்பவன். மனம் கட்டுப்பாட் டில் இருப்பவன். தேகத்தை ஆத்மாவாக தவறாக அறிந்தவன் பயங்களில் அவஸ்தைப் படுகிறான். மாயையில் உழல்கிறான். சத்ய அஸத்யங்கள் , சாஸ்வதம் அநித்யம் புரிந்தவன். பகவன் நாம ஜபம் செய்பவன். பஞ்சபூதங்களில் பகவானை பார்ப்பவன். தன்னலமற்று, பரோபகாரம் செய்து, உலகவாழ்க்கையின் பிடிப்புகளில் சிக்காதவன் ,ஹே , நிமி ராஜனே, பரமானந்தத்தை அடைவான். அறியாமையில் உழல்பவர்களும் இவ்வாறு பாகவத தர்மத்தை அறிந்து அனுஷ்டித்து புண்யம் பெறலாம்''
''யோகேஸ்வரா, பக்தனின் கடமைகளை சொல் லுங் கள், எப்படி உலகத்தில் வாழவேண்டும்? அரை நிமிஷ காலம் கூட பரிபூர்ண பக்தர்களை தரிசித்து அவர்களை வணங்கினால் புண்யம் என்று அறிகிறேன், பகவான் பூரண பக்தியோடு சரணடைந் தவனை ஏற்று, தன்னை அவனோடு இணைத்துக் கொள்வானென்று அறிகிறேன். எப்படி பகவானை திருப்தி அடையச் செய்ய வேண்டும்? என்று ராஜா நிமி கேட்டான்.
''மஹாராஜா, சுருக்கமாக சொன்னால், உலக வாழ்க்கையை நிஜம் என கருதாமல், கனவு வாழ்க்கை வாழாமல் சாஸ்வதத்தை புரிந்து பரமனடியே நிரந்தரம் என்று சரணடைந்தவன் பயமற்று வாழ்பவன்''. மனத்தை கட்டுப்படுத் தி, கிருஷ்ணனை சரணடைந்தவன், மாயை யிலிருந்து விலகுபவன்''.கிருஷ்ணனின் நாம சங்கீர்த்தனத்தில் தன்னை மறந்தவன் உலகத் தை மறந்தவன். காணும் யாவும் கண்ண னே, அவன் உருவமே. பக்தி, க்ரிஷ்ணனோடு இரண்டறக்கலத்தல் , பற்றின்மை அவனை வைகுந்தத்தில் சேர்க்கிறது.
''ஆஹா அற்புதம், யோகேந்திரர்களே, எனக்கு வைஷ்ணவன் யார், பரம பாகவதர்கள் யார், பரமாத்மாவோடு ஒன்று சேர்ந்த அவர்க ளைபற்றி அறிய ஆவலாக இருக்கிறது, உபதேசியுங்கள்'' என்கிறான் நிமி.
ஹாவீர் எனும் மற்றொரு யோகி ராஜா நிமிக்கு உபதேசிக்கிறார்: எங்கும் எதிலும் கிருஷ்ண னைஉணர்பவன், சகல ஜீவன்களி டம் அன்பை பரிமாறிக் கொள்பவன், க்ரிஷ்ணனையே அடைகிறான். உலக ஈர்ப்புகளில் இணையாத வனுக்கு பசி, தூக்கம், தாகம் ஆசை பாசம் எதுவுமில்லை. நான் எனது, உனது என்ற பாகுபாடு, பேதம் இல்லாதவன் இறைவனைச் சேர்ந்தவன். அவன் தான் உத்தம அதிகாரி. பிற உயிர்களிடம் அன்புடையவன் தான் வேறு அவரை வேறு என்ற உணர்வோடு இருப்பவன் மத்யம அதிகாரி. கோவிலுக்கு செல்வேன், கடவுளை வணங்குவேன், மற்றவர்கள், பிற
உயிரகள் எல்லாம் எனக்கு லக்ஷியம் இல்லை என்றிருப்பவன் ப்ராக்ரித பக்தன். கடை நிலை பக்தன். ஐம்புலன்களின் பிடியில் இருந்தாலும் இந்த உலகமே கிருஷ்ணனின் மூச்சு , எல்லாமே அவன் சக்தி, செயல், என்று உணர்பவன் சிறந்த பக்தன். உலக வாதனையில் சிக்கிக் கொண்டா லும், அவற்றில் தன்னை இழக்காமல் கிருஷ்ண ன் மேல் பக்தியோடு அவன் திருவடிகளையே நினைப்பவன் பிரதான பாகவதன், பாகவதோத் தமன் எனப் படுவான்.
தான் தனது, எனது என்ற பற்று இல்லாது உலக வாழ்க்கையை வாழ்பவன் உயர்ந்த பக்தன். எல்லாம் உன் உடைமையே, நான் உன் அடிமை, எல்லாம் உன் செயல் என்று விஷ்ணுவின் பாதமே சாஸ்வதம் என்று சரணடைபவன் தான் வைஷ்ணவன். பகவானின் கால் விரல் நகத்தின் ஒளியே சந்திரனின் ஒளி. ஒப்பற்ற ஆபரணம். பக்தனின் சகல துன்பம் தீர்க்கும் சஞ்சீவினி.
இந்த ராஜா நிமி - யோகேந்திர சம்பாஷணை நமக்கு சில விஷயங்களை விளக்குகிறது. எது நன்மை தரும்? எது தார்மீக பண்பு,? பக்தனின் கடமை எனும் பாகவத தர்மம், ப்ரம்மம், மூன்று வித கர்மாக்கள், கர்மபலன், பற்றின்மை, ஹரிநாராயணனின் அவதாரங்கள் பற்றி எல்லாம் அறியமுடிகிறது. இந்த நவயோகேந்திரர்கள் எனும் பரமஹம்சர்களின் விளக்கங்கள் ஞானக்கண்ணை திறக்கிறது.
இது தான் ஸ்ரீ பாகவதம் 11வது காண்டம் ரெண்டாவது அத்தியாயத்தில் 55 ஸ்லோகங் களின் சாராம்ஸம்.
தொடரும்
No comments:
Post a Comment