Saturday, June 26, 2021

YATHRA ANUBAVAM

 


அழகிய நந்திமுகம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமகிரி வாலீஸ்வரர்- ஈசான ஸ்வரூபம்


அரைத்தூக்கத்தில்  ஏன் அந்த அழகிய நந்தியின் முகம் தோன்றியது?  எப்படி அதன் வாயிலிருந்து விடாமல் நீர் எங்கிருந்தோ வந்து விழுகிறது?  இதெல்லாம் முன்னோர்களில் கடின உழைப்பா?  

கொரோனா தெரியாத காலத்தில்  சில வருஷங்களுக்கு முன்பு நண்பர்  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனுடன் பல கோவில்கள் சென்றதில் இதுவும் ஒன்று. 

திருக்கள்ளில் என்ற பழம்பெயரும் திருக்கண்டலம் எனும் புதுப் பெயரும் கொண்ட அந்த சிறிய குக்கிராமத் தில் இங்கே ஏதாவது சைவ சாப்பாடு ஹோட்டல் இருக்கிறதா என்று திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒருவரை கேட்டபோது '' நாஷ்டாவுக்கா?'' என்று கேட்டார். அதன் அர்த்தம் என்ன என்று யோசிக்கும் முன்பே வலது கரத்தை நீட்டி இங்கே பீச்சக்கை (இடது)  பக்கம் ரெண்டு கடை இருக்குது என்கிறார். நான் அவரைக் கேட்டது ஒன்றுமே ஆகாரம் கைவசம் இல்லாதவர்கள் பயன் பெற  ஏதாவது வசதி இருக்குமா என்பதற்காக.   ஏனெனில் நாங்கள் அதி புத்திசாலிகளாக கையிலே கொண்டு சென்ற எங்கள் வீட்டு இட்லிகளை காரில் அமர்ந்தவாறே எங்கள்  ''நாஷ்டா''  வாக   சாப்பிட்டோம்.

நமது முன்னோர்கள் எவ்வளவு சமயோசிதமாக இட்டிலியை பூப்போல மெத்து மெத்து என்று சூடு பறக்க ஆவி யிலிருந்து எடுத்து அதன் மீது கரகர  வென்று  பொடித்த மிளகாய்த்   தூளை சுத்தமான   கமகம என மணக்கும் நல்லெண்ணையில் குளிப்பாட்டி   இட்லிக்கு இரு பக்கங்களிலும்  சிகப்பு  கவசம் செய்வித்து அதை  லபக்கென்று சூடு பறக்க ரெண்டு மூன்று நான்கு   துண்டாக விண்டு முழுங்கும் அனுபவத்தை தந்திருக்கிறார்கள்.  அந்த  இட்லி  மழையில்  நனைந்த மண்  தெரு மாதிரி மெல்லிதாக நல்லெண்ணெய் பூச்சுடன் முழுதும் வெண்மை நிறத்தை இழந்து   பார்க்கும்போதே  நாக்கில் நீரூற  வைக்கும்.  அதை  உண்ட கையோடு  கள்ளிச்   சொட்டு பில்டர் காப்பி சுடசுட  அரை சர்க்கரையோடு அதை உள்ளே அன்போடு கை கோர்த்து அழைத்துச் செல்லும் இன்பத்தையும் எழுத எனக்கு வார்த்தை தெரியாதே.   இந்த கள்ளிச்சொட்டு காப்பி  சூடான  காரமான இட்லி   நான்கு  உள்ளே போனவுடன்  அனுபவிக்கவேண்டியது சென்று அடிக்கடி  உபதேசிப்பவர் என் அருமை  புரசைவாக்கம் மணி மாமா. 101 வயது வாழ்ந்து சமீபத்தில் இயற்கையாக மரணம் அடைந்தவர். என்மேல் அன்பு கொண்ட மற்றொரு இதயம் என்னை விட்டு பிரிந்து விட்டது.
வீட்டு இட்லி களை இப்போதெல்லாம் சாப்பிட முடியவில்லை.  இயற்கையான ருசி  காணாமல் போய்விட்டது. 

காலை உணவு இவ்வாறாக வயிற்றை நிறைத்து அளித்த திருப்தியில் அங்கிருந்து கிளம்பி சுருட்ட பள்ளி போகும்போது தான் அந்த ஊரில் கோவிலுக்கு அருகேயே , ரெட்டியார் ஒருவர் இட்லி பூரி கடை வைத்து சூடாக தயாரித்து கொடுப்பதையும் அவருடைய சிற்றுண்டி கடைக்கு எதிரே சிறிய வீடு ஒன்றில் ஒரு அம்மையார் தானும் தோசை சில இட்லிகளை சுட்டு விற்கிறதையும் பார்த்தேன். வீட்டில் வசதியில்லாத ஒரு சிறிய கும்பல் அங்கேயும் இங்கேயுமாக நின்று கொண்டிருந்தது. இது தான் அங்கே யாத்ரிகளுக்கு ஓட்டல்.

சுருட்ட பள்ளி தமிழக எல்லை தாண்டி ஆந்திராவில் காலை வைத்ததும் ஒரு சில கி.மீ. தூரத்தில் ''சிவ சிவ'' என்ற பெரிய தமிழ் எழுத்து கோபுரத்தில் ஜொலிக்க அழைக்கிறது.

பள்ளி கொண்ட ஈஸ்வரர் உலகிலேயே பிரம்மாண்ட சயன கோலத்தில் பார்வதி மடியில் தலைவைத்து ப்ரம்மா  விஷ்ணு ரிஷிகள் முனிவர்கள் கவலையோடு நோக்க ஆலகால விஷத்தை நெஞ்சில் தேக்கி மயங்கி கண் மூடியவாறு காட்சி அளிக்கிறார்.சுதையில் வடித்த சிற்பி உயிரோட்டம் கொடுத்து அமைத்த சிலை.பிரதோஷ காலத்தில் நெருங்க முடியாது. அவ்வளவு கூட்டம் சேரும், ஆந்திரா கும்பல் அம்மும்  ஆலயம்.

ஆந்திர கோவில்களில் தட்டில் காசு போடு என்று ஜாடை காட்டி கேட்கும் அர்ச்சகர்களை அங்கு தான் கண்டேன். ஏற்கனவே இந்த ஆலயத்தை பற்றி விலாவாரியாக எழுதியிருக்கின்றேன் . போகும் வழியில் தரிசனம் கிடைத்ததால் அந்த ஆலய அழகிய நந்தியை பார்க்காமல் போக மனசு இடம்  கேட்கிறதா?

அங்கிருந்து இருபது கி.மீ. தூரத்தில் ஒரு அற்புத பழைய சிவன்  கோவில் ஒன்று இருக்கிறது என்று அறிந்து அதற்கு  செல்ல  மூன்று தடவை  முயற்சித்தும் ஏதோ  தடங்கல்.  இந்த தடவை   கண்டிப்பாக  சிவனை சென்று தரிசிக்கவேண்டும் என்று என்னைக்   காரில்  அழைத்துச்  சென்ற  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனிடம் சொன்னேன். காரைப் பறக்க விட்டார். 

எட்டாம் நூற்றாண்டு பல்லவ கால  ராமகிரி என்ற  சிறிய மலை மேல் ஒரு சிவன் கோவில்.    நுழைந்ததும் நந்திக்கு எதிரே ஹனுமான். மலைமேல் வழக்கம்போல்   குன்று தோராடும் குமரன் குடி கொண்டிருக்கிறான். இதன் அருகே தான் கைலாஸ கோனே நீர் வீழ்ச்சி.  எப்போதோ அதில் நீர்  வீழ்ந்து  பல  யுகங்களுக்கு முன் ஒரு தடவை குளித்திருக்கிறேன்.

ராமகிரி ஆலயத்தை பெரியபாளையத்திலிருந்து புத்தூர் சாலைவழியே நாகலாபுரம் அருகில் சென்று அடையலாம்.  ராமகிரி அடிவாரக் கோயிலில் கால பைரவர் சக்தி வாய்ந்தவராக அருள் பாலிக்கிறார். சென்னையிலிருந்து 90 கி.மீ.   ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க சிவாலயங்கள் சென்று பூஜித்து வழிபட்டான்..

'ஆஞ்சநேயா, கைலாசம் காசி எல்லாம் சென்று ஒரு சிவ லிங்கம் கொண்டுவா'' என்றான். லிங்கத்தோடு வந்த ஹனுமான் வழியில் இங்கே காலபைரவரை பார்த்தான். தாகத்திற்கு ஒரு ஏரியை காட்டினார்.லிங்கத்தை இங்கே வைத்த ஹனுமான் அதை இங்கேயே பிரதிஷ்டை செய்தது போல் அசையாமல் நின்றுவிட்டது. ஸ்ரீரங்கத்தில் விபீஷணன் ரங்கநாதரை பிள்ளையாரின் தந்திரத்தால் தரையிலிருந்து மீண்டும் எடுத்துச் செல்லமு டியாதது   மாதிரி  தான் ராமகிரி வந்த ஹநுமானுக்கு தரையில் வைத்த லிங்கத்தை தனது பலமான வாலினால் சுற்றி இழுத்துச் செல்லமுடியவில்லை. ராமகிரியில் சிவனுக்கு அதனால் ''வாலீஸ்வரர் என்று பெயர்.

அருகே ஒரு அற்புதமான  குளம். அதில் ஒரு கல் நந்தி முகம். அதன் வாயிலிருந்து இரவு பகலாக பல வருஷங்களாக ராமகிரி மலையிலிருந்து அருமையான சுனைநீர் ஊற்றிலிருந்து பெருகி வருகிறது. அந்த ஊர் காரர்கள்  அத்தனைபேரும் கல்கண்டாக இனிக்கும் இந்த  நந்தி வாய் மூலிகை நீரை பருகி சந்தோஷமடைகிறார்கள்.   குளத்தில் இறங்கி ரெண்டு கை நிறைய நந்தியின் வாயில் இருந்து நீர் வாங்கி குடித்தேன். என்ன ருசி அப்பப்பா!

பஞ்ச முக சிவன் இந்த பகுதியில் இருக்கிறார். ஒரு சிவன் தான்  ராமகிரி வாலீஸ்வரர். ராமகிரிக்கு இன்னொரு பெயர் திரு ஏரிக்கரை -   ஈசானன் முகம்.  
ரெண்டாவது சிவன் பள்ளிகொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளியில். தத்புருஷ முகம்
மூன்றாவது முகம் சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ புரம் எனும் ஆரணி (பெரிய பாளயத்துக்கருகே உள்ளது.) வாமதேவ முகம். அற்புதமான கோவில்.   நான் தரிசித்திருக்கிறேன்.
நான்காவது முகம் வரமூர்த்தி. அறியத்துறை . ஸத்யோஜாத முகம். தென் கோகர்ணம் என்று  இந்த ஊருக்கு பெயர்.
ஐந்தாவது முக சிவன் சிந்தாமணீஸ்வரம் எனும் ஊரில் இருப்பவர். மீஞ்சூர் அருகே காட்டூர் என்கிற இடத்தில் இருப்பவர். அங்கே ப்ரம்மாரண்ய நதி கடலோடு சங்கமமாகிறது. இங்கே சிவனின் முகம் அகோரமூர்த்தி. அதற்கும் சென்றிருக்கிறேன்.

ராமகிரியில் அம்பாள் பெயர் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே தனி. .

காலபைரவர் சந்நிதி   ரொம்ப முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச் செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். ஹனுமானால்  கிளப்ப முடியாத சிவலிங்கம்.
இதெல்லாம்   பார்க்காமல் விடக்கூடாது. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...