பழைய நினைவு.
மீண்டும் ஒரு சந்திப்பு.. நங்கநல்லூர் J K SIVAN
ஐந்தாம் வகுப்பு வரை சூளைமேடு கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் சம்பளம் இல்லாமல் படித்த ஞாபகம். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நுங்கம்பாக்கம் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில். பெரிய கல் கட்டிடம். இதற்கு முன் கூரைக் கொட்டகை பள்ளிக்கூடம் என்பதால் நுங்கம்பாக்கம் பள்ளிக்கூடம் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது. மரங்கள் சூழ்ந்த மஞ்சள் கட்டிடம். நாகேஸ்வரராவ் நினைவு என்று பெரிசாக ஆங்கிலத்தில் கட்டிட முகப்பில் எழுதி இருந்தது நினைவிருக்கிறது. இப்போது லேக் ஏரியா என்பது தான் அப்போது. லேக் எப்போதும் இல்லை. பக்கத்தில் எங்கும் குயவர்கள் அதிகம் குடியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் பளபளவென்று புதிதாக செயது நெருப்பில் வாட்டி அங்கங்கு கருப்பாகி காட்சி அளித்த சட்டி பானைகள், தொட்டிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும். சினிமாக்காரர்கள் ஆற்காடு ரோட்டில் வேகமாக கோடம்பாக்கம் வடபழனி ஸ்டுடியோக்களுக்கு கார்களில் பறந்து கொண்டிருப்பார்கள். ரயில்வே கேட்டு தாண்டவேண்டுமே.
பள்ளிக் கட்டிடம் பெரிது. விளையாட பெரிய மைதானம் இருந்தது. பன்னிரண்டு மணிக்கு உச்சி வெயிலில் மணியடித்ததும் வகுப்புகளிலிருந்து எல்லோரும் வேகமாக அடித்து பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவருவோம். பெண்கள் கிடையாது. எல்லோரும் பையன்கள் தான்.
எப்போது மணியடிக்கும் என்று காத்திருந்ததற்கு பரிசு. முகத்தில் சந்தோஷம். வெயில் லக்ஷியமில்லை. அவசர அவசரமாக அவரவர் அலுமினியம், பித்தளை டப்பாக்கள், சம்படங்கள் பையிலிருந்து எடுத்து கொண்டு வந்ததை சாப்பிடுவோம். எவர் சில்வர் பாத்திரம் எவரிடமும் இல்லை. மரத்தடியில் தூரத்தில் ஒரு பெரிய அண்டாவில் தண்ணீர் இருக்கும் அலுமினியம் தட்டு போட்டு மூடி அதன் மேல் அலுமினியம் டம்பளர். அது தான் குடிநீர். அருகில் இன்னொரு தவலையில் கைகழுவ நீர். யாரும் அதிகம் தண்ணீர் மொண்டு வீணடிக்க கூடாது. ட்ரில் வாத்யார் கையில் கொம்போடு நின்று கொண்டே இருப்பார். வரிசையாக போய் கை கழுவ, நீர் மொண்டு குடிக்க பொறுமையில்லாத சிறுவர்கள். கும்பலாக நெருக்கி அடித்துக்கொண்டு தான் ஓடுவோம். அதில் எவன் கையில் டம்பளர் அகப்படுகிறதோ அவன் அதிர்ஷ்டக்காரன். இந்த கும்பலை அடித்து, அடக்கத்தான் கையில் கொம்பு. டிபன் பாத்திரங் களை கழுவி பையில் வைத்துவிட்டு வெயிலில் மைதானத்துக்கு ஓடுவோம். பழைய டென்னிஸ் பந்து தான் FOOTBAAL. கவர் பால் என்று ஏனோ அதற்கு பெயர்.
கால்பந்து விளையாட்டில் ஒரு பக்கத்திற்கு எத்தனை பேர் என்று கட்டாயம் இல்லை. யார் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சேர்ந்து கொண்டு பந்தை எந்த பக்கம் வேண்டுமானாலும் துரத்தி அடிப்போம். கோல் கீப்பர்கள் கிடையாது. வெயில் சுள்ளென்று காய்ந்து உடலெல்லாம் வியர்க்கும். சாப்பாடு டைம் முடிந்து மீண்டும் வகுப்புகளில் பாடம் தொடர மணி அடித்தவுடன் ஆட்டம் நிற்கும். எல்லோரும் அவசரமாக மரத்தடியில் பானைத் தண்ணீர் குடிக்க ஓடுவோம். குடித்து விட்டு வகுப்பில் அமர்வோம் . தூக்கம் வரும். வகுப்பில் மின் விசிறி எல்லாம் எதுவும் கிடையாது. நாலாபக்கமும் திறந்து இருக்கும். காற்று ஜம்மென்று வரும்.
யம காதகன் நாராயணய்யர் கணக்கு வாத்தியார். நடு முதுகில் பளார் என்று அறைவதில்
மன்னன். வகுப்பில் எவ்வளவு மெதுவாக பேசினாலும் அவருடைய பாம்புச் செவியில்
கேட்டுவிடும். எல்லோருக்கும் பிடிக்காதது கணக்கு மட்டும் அல்ல. கணக்கு வாத்தியார் நாரயணய்யரும் தான்.
பின்னர் பல வருஷங்கள் கழித்து ஒருநாள் ஒரு வயோதிகர் வழுக்கை மண்டை, குள்ள உருவம், மூக்கில் பெரிய தழும்பு, கன்னத்தில் கருப்பு மச்சம். ஒரு இளம் வயது குடும்பத்தோடு மைலாப்பூர் ஸாயிபாபா கோவிலில் எனக்கு முன்னால் நின்றிருந்தார்கள். பேச்சு பாலக்காடு தமிழ். அவரை உற்றுப்பார்த்தேன்.
''எஸ்க்யூஸ் மீ ஸார் . உங்க பேர் நாராயணய்யரா?
''ஓ அதுவாக்கும் என் பேர். நீ யார்?
''நுங்கம்பாக்கம் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாரா இருந்தீர்களா?''
''ஓ ஆமாம். உனக்கெப்படி தெரியும்? ஒன்றிரண்டு பற்கள் தான் இருந்தது. அதில் கொள்ளைச் சிரிப்பு.
''உங்க கிட்டே இருந்து இதோ இந்த முதுகில் தான் நிறைய அறை வாங்கி இருக்கேன்'' திரும்பி முதுகை காட்டினேன்.
''ஓ. தப்பு தப்பு. நான் பண்ணினது தப்பு. சாய் பாபா மன்னிச்சுடுப்பா''அப்போ எல்லாம் கோபம் ரொம்ப வரும்.. அது கூடாது''. அவர் கண்களில் ஜலம். என் தோள்களை அந்த சுருங்கிய கரங்கள் தொட்டு தட்டிக்கொடுத்தன.
''ஸார் ஸார் நீங்க சொல்லிக்கொடுத்த பாடம் தான் என்னை இப்போது சந்தோஷமாக வாழ வைக்கிறது. நீங்க தப்பே பண்ணலை . தப்பெல்லாம் நாங்க பண்ணினது தான். நீங்க அப்படி அடிச்சு பயத்தோடு படிக்க வச்சதாலே எத்தனையோ குடும்பங்கள் இப்போ நன்றாக வாழறது. நூறு வயசு இருக்கணும் நீங்க.'' காலைத் தொட்டு கும்பிட்டேன்.
உன் பேர் என்னடா?
''சிவன் ''
ஓ உங்கப்பா கூட என்னோடு ஸ்கூல்லே ஒர்க் பண்ணினாரா. பேர் மறந்துடுத்தே. கண்களை நெற்றியை சுருக்கிக்கொண்டு யோசித்தார்.
' ஜே. கிருஷ்ணய்யர்''
''ஓ , அவரா, அடாடா இங்கிலிஷ் ஸமஸ்க்ரித ப்ரொபஸராக்கும் அவர்.''
''நன்னா இரு. எனக்கு நூறுக்கு இன்னும் 11 பாக்கி இருக்குடா. -- வயசு சொல்வதிலும் ஒரு கணக்கு....
No comments:
Post a Comment