Tuesday, June 8, 2021

ORU ARPUDHA GNANI

 


ஒரு அற்புத ஞானி   -  நங்கநல்லூர்  J K  SIVAN  --

சேஷாத்ரி  ஸ்வாமிகள்  


''வள்ளிமலைக்கு போ''


மஹா பெரியவாளின்  வாழ்க்கை விவரங்கள் பற்றி  சொல்லும்போது  திண்டுக்கல்  சிறுமலை அருகே உள்ள வெள்ளிமலை என்ற குன்றின் மேல் ஏறி  அங்கே உள்ள சிவன் கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் செய்தார்  என்று எழுதும்போது என் மனதில் ஒரு எண்ணம் சட்டென்று தோன்றியது.  வெள்ளி மலை பற்றி சொல்கிறோமே , அருமையான வள்ளிமலை பற்றி சொல்ல  வேண்டாமா?  என்று. வள்ளிமலை ஸ்வாமிகள்  சேஷாத்திரி ஸ்வாமிகள் தொடர்பு கொண்ட ஒரு சம்பவம்  நினைவுக்கு வந்தது.  அதைச் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததால் இந்த சிறு கட்டுரை.  

சேஷாத்ரி  ஸ்வாமிகளால்  பகவான் ரமணரை உலகம் அறிந்தது.  
திருப்புகழ் என்றால்  நமது மனக்கண் முன் வருபவர் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள். ஸன்யாஸம் பெறவேண்டும் என விருப்பம் வந்தது.  திருவண்ணாமலையில் பகவான் ரமணர் விரூபாக்ஷி குகையில் தங்கி இருந்தார்.

 குகையை விட்டு வெளியே வந்த  பகவானை தரிசித்த அந்த க்ஷணம்  வள்ளிமலை ஸ்வாமிகள் மனக்கண் முன்பு  கோவணாண்டியாக,தண்டு கொண்டு நின்ற ருத்ராக்ஷதாரி  பழனி தண்டா யுதபாணி  தான் நின்றார்.

மெய் சிலிர்த்துப் போயிற்று வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. ஸாஷ்டாங்கமாக   ரமணரது பாதம் பணிந்து வீழ்ந்தார். பகவானின் விரூபாஷி குகை அருகிலேயே தங்கி பணிவிடை செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீ ரமணரும் அவரை ‘திருப்புகழ் முருகன்’ என்று அன்போடு அழைப்பார். தினமும்  திருப்புகழ் பாடச் சொல்லிக் கேட்பார். ஸ்ரீ ரமணரிடத்தில் எப்படியாவது குரு உபதேசம் பெற வேண்டும் என்பது தான் திருப்புகழ் சுவாமிகளின் நோக்கம்.   ஆவலுடன் சரியான சமய சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார்.

ஒரு  நாள்… தனக்கு சேவை செய்து கொண்டிருந்த   வள்ளிமலை ஸ்வாமிகளிடம்  ரமணர், ‘கீழே போ, கீழே போ, இங்கே நிற்காதே! உடனே கீழே போ’ எனக் கட்டளையிட்டார்

திருப்புகழ் சுவாமிகள்  ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டார். ''தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதுதான் மகரிஷி கோபித்துக் கொண்டு தன்னை கீழே போகுமாறு சொல்லிவிட்டாரோ’ என நினைத்து வருந்தினார் . எப்படிக் கேட்பது?    இருந்தும் குருவின் வார்த்தை தட்டாமல் புறப்பட் டார்.

மலை அடிவாரத்தில் ஒரு  அழுக்கு  நீர் நிறைந்த குட்டை. அதில் ஒரு எருமை மாடு நின்று சேறைக்  கலக்கிக்  கொண்டிருந்தது.    அந்த  மாட்டை அணைத்து  அன்போடு  கட்டிக்கொண்டு ஒரு பிராமணர் சேற்றில் நின்று கொண்டிருந்தார்.

துர்கந்தமான  சேற்றின்  நாற்றத்துக்கு பதிலாக  அந்த இடமே  கமகமவென்று  அரைத்த சந்தன குழம்பின் மணம் வீசியது.  ஆச்சர்யத்தோடு   வள்ளிமலை ஸ்வாமிகள் அந்த பிராமணரை கரம் சிரம் மேல் வைத்து வணங்கினார். எதிரே நின்றார்.

திடீரென்று சேற்றிலிருந்து அந்த பிராமணர்  அவரைப் பார்த்துவிட்டு  வெளியே ஓடிவந்து வள்ளிமலை ஸ்வாமிகளை அணைத்துக் கொண்டார்.  வள்ளிமலை ஸ்வாமிகளை  தனது மடிமேல் உட்கார்த்திக் கொண்டார்.  அவர் மேல் இருந்த சேறெல்லாம்  இப்போது  வள்ளிமலை ஸ்வாமிகள் மீதும் பூசிக்கொண்டது. சந்தன அபிஷேகம் செய்தது  போல்  மணம்  வீசியது.  அந்த பிராமணர்  ஒரு ப்ரம்மஞானி. உலகம் அவரை ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று அறியும். த்ரிகாலமும் அறிந்த ஞானி என்பதால் வள்ளி மலை ஸ்வாமிகள் மூலம்  ஸுப்ரமணியனின்  திருப்புகழ் உலகம் பூரா பரவப்போகிறது என்று உணர்ந்தவர்.
 
வள்ளிமலை ஸ்வாமிகளை தனது சிஷ்யனாக  சேஷாத்ரி  ஸ்வாமிகள்  அப்போதே ஏற்றுக் கொண்டுவிட்டார்.   அப்போது  சேஷாத்ரி ஸ்வாமிகள் உதடுகள் ஆதிசங்கரரின் சிவமானஸ பூஜா ஸ்லோகம் ஒன்றை  உச்சரித்தது.  அந்த ஸ்லோகம் தான்  வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு மகானின் குரு உபதேசம்:

आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥४॥

ஆத்மா த்வம் கிரிஜா மதிஃ ஸஹசராஃ ப்ராணாஃ ஶரீரம் க்றுஹம்
பூஜா தே விஷயோபபோக-ரசனா னித்ரா ஸமாதிஸ்திதிஃ |
ஸஞ்சாரஃ பதயோஃ ப்ரதக்ஷிணவிதிஃ ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஶம்போ தவாராதனம் |  

''சர்வேஸ்வர சம்போ, நீ தான் என் ஆத்மா,  பார்வதி தேவி கிரிஜா  தான் என் புத்தி,  உங்களது சிவ கணங்கள் அத்தனை  பேரும் என் பிராண மூச்சு, இதோ என் தேகம் இருக்கிறதே அது தான் நீ குடியிருக்கும் ஆலயம்.   நான் உலகத்தோடு ஒட்டி உறவாடுகிறேனே அது தான் எனது வழிபாடு.  ஆங்காங்கே  படுத்து தூங்கிவிடுகிறேன் பார்  அது தான்  என் சமாதிநிலை.  நான் எடுத்து வைக்கும் ஒரு காலடியும்  தான் உன்னை சுற்றி சுற்றி வரும் பிரதக்ஷணம்.  என் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும்  உன்னைப் போற்றி பாடும் ஸ்லோகங்கள்.  இதெல்லாம் விட நான் செய்யும் ஒவ்வொரு காரியமும் என்ன தெரியுமா, அது தான் நான்    தெய்வ ஆராதனை.

''எழுந்திரு,  சுயநலம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும்,  சொல் செயல் எண்ணம் எதுவாலும் நம்மை ஸ்ருஷ்டித்த  அந்த பரமேஸ்வரனை நினைத்து போற்று.,  நான்  நீ  உனது எனது என்ற மாயை இல்லாமல் இருந்தால்    உனக்கு அந்த ப்ரம்மத்வம் கிட்டும்''

''உனக்கு முன்னோர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?''  சேஷாத்ரி ஸ்வாமிகள் கேட்டார்.

வள்ளிமலை ஸ்வாமிகள்  கைகட்டி பேசாமல்  தெரியாது என்பது போல் தலையசைத்தார்.
''அவர்கள் சந்யாசிகள். நீயும் அதுபோல் இரு. திருப்புகழ் தான் உனக்கு மந்திரம். விடாதே. பிடித்துக் கொள் ''

வள்ளிமலை ஸ்வாமிகள் ஆனந்தத்தால்  புளகாங்கிதம் அடைந்து  பேச்சு வராமல் விக்கித்துப் போனார்.உடல் நடுங்கியது.  வாய் குழறியது. உணர்ச்சி மேலோங்க, இரு கைகளையும் சிரத்துக்கு மேல் கூப்பி  சேஷாத்ரி  ஸ்வாமிகளை வணங்கினார்.

சேஷாத்ரி ஸ்வாமிகள்  மேலே சொன்ன ஆதிசங்கரரின்  சிவமானஸ பூஜா ஸ்லோகத்தை விளக்கினார். (ஒரு தனி பதிவு  சிவமானஸ பூஜா ஸ்லோகத்தை பற்றி இடுகிறேன்)

''இது மாதிரி  அர்த்தம் இருக்கிற  பாடல்கள் திருப்புகழில் இருக்கா?''

வள்ளிமலை ஸ்வாமிகள்  உடனே ஒரு  திருப்புகழ்  பாடல் பாடினார்

''அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
     அமுத பான மேமூல                   அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
     அரிச தான சோபான                  மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
     மௌiது சால மேலாக          வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
     இதய பாவ னாதீத             மருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
     விபுத மேக மேபோல                வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
     வெகுதி தாமு காகாய                பதமோடிக்
கமல யோகி வீடான ககன கோள மீதோடு
     கலப நீல மாயூர                  இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
     கருணை மேரு வேதேவர்      பெருமாளே.

''மூச்சுக்கு காற்றான, பிராண வாயுவை  அசைவில்லாமல்  அடக்கி,  மூலாதார கமலத்தின் மீது ஒடுங்க வைத்து, மூலாக்கினி சுடர் விட்டு எழ, மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒரு நிலையில் நிலைத்து நின்று, படிப்படியாக மேலேறும் சிவ யோக முறையால், அகங்காரத்துடன் பேசுகின்ற நான், எனது என்னும் இருமைகள் நீங்க, எவரையும், யாவற்றையும் நானே  என்று பாவிக்கும்
 உயர் நிலையை எனக்குத் தந்து அருள்வாயாக.   விமலையாகிய பார்வதி தேவியின் கை வளையினி ன்றும் ஓடி வந்த யமுனை நதி போலவும், மேகங்களைப் போலவும், திருமால் விசுவ ரூபம் எடுத்தது போலவும், பிரமனின் வீடான விண்ணில் உள்ள மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற நீல மயில் வாகனனே. கருணை மலையே. எனது யானும் வேறாகி, எவரும் யாதும் யானாகும் மனோபாவத்தை எனக்குத்தந்து அருள வேண்டும்.''

''சபாஷ்,  திருப்புகழில்  அது  அப்படியே  இருக்கோ. நீ  திருப்புகழ் பாட  அதை எங்கும்  பரப்புவதற்கு என்பதற்காக  பிறந்தவன்.  உனக்கு  நான்  சொன்ன  மஹாமந்த்ர ஸ்லோகமே போதும். வேற  எந்த உபதேசமும் வேண்டாம். வேதம் சாஸ்திரம் எதுவும் படிக்கவேண்டாம். திருப்புகழை விடாதே.  சொல்லிண்டே இரு.  வள்ளிமலைக்கு போ.  நானும் அப்புறம் வரேன். 

விடுவிடு வென்று அங்கிருந்து சட்டென்று  சேஷாத்ரி  வேகமாக ஓடிவிட்டார்.  திருப்புகழ் அருளிச்செய்த  அருணகிரி நாதர் பிறந்த ஊர்.  ரமணர் முருகன் அவதாரம். அன்னை பராசக்தியின் வம்சம் சேஷாத்ரி ஸ்வாமிகள், திருப்புகழின்  வடிவம்  வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.   இதெல்லாமே  மேலே சொன்ன ஸ்லோகம், திருப்புகழில்  புரிகிறது.

இன்னும் நிறைய  சொல்லிக்கொண்டே போகலாம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...