பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் -- J K SIVAN
27 சங்கர விஜயம்
டிசம்பர் மாசம் குளிரும் பனியும் அவ்வப்போது சிறிதும் பெரிதுமாக மழையாகவும் இருந்ததை எவரும் லக்ஷியம் செய்யவில்லை.
மஹா பெரியவா 1922 டிசம்பர் 12 அன்று மதுரையை விட்டு புறப்பட்டது தான் தெரியும். மதுரை மக்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்கள். காதுக்கு கேட்கும் வரை ''ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர''ஒலியை கை கூப்பி செவிமடுத்தார்கள். கண்ணுக்கு மறையும் வரை மஹா பெரியவா பக்தர்களோடு பண்டிதர் களோடு, வேத கோஷ்டியோடு செல்வதை கண்ணுற்றார்கள். மறுபடியும் எப்போ வருவாரோ?
திருநெல்வேலி செல்லும் மார்கத்தில் எத்தனை யோ ஊர்களை கடக்க வேண்டி இருந்தது ஆங்காங்கே நின்று பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டே சென்றார், ஒரு சிலரோடு பேசினார். சிலர் கேட்டதற்கு பதில் உரைத்தார். சிலருக்கு மடத்து சந்திரமௌலீஸ்வரர் விபூதி பிரசாதம் பரிசுகள் கிடைத்தது. முக்கியமான சில ஊர்களில் சற்று மெதுவாகவோ நின்றோ தரிசனம் கொடுத்தார்.
திருமங்கலம், வத்திராயிருப்பு, ஸ்ரீ வில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், சிவகிரி, சிந்தாமணி, கடையநல்லூர், தென்காசி, கடயம், பாபநாசம், அரியநாயகிபுரம் போன்ற பெரிய சிறிய ஊர்களில் எல்லாம் எப்படியோ முன்பே மஹா பெரியவா வரும் சேதி சென்றிருந்ததால் எண்ணற்றோர் பாதையில் ஊர் எல்லையில் காத்திருந்து வணங்கினார்கள். ஆகவே சில இடங்களில் பிக்ஷா வந்தனம், பாத பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முக்யமாக வீரராகவபுரம், சந்நியாசி கிராமம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை, திரு நெல்வேலி டவுன் போன்ற இடங்களில் வெகுவாக பக்தர்கள் கூட்டம் சேர்ந்து விட்டது. வெகுநேரம் வரிசையில் காத்திருந்து பிக்ஷா வந்தனம், பாதபூஜையில் கலந்துகொண்டனர்.
வீரராகவபுரத்தில் விவேகாசம்வர்த்தினி சபாவின் ஆண்டு விழா நடந்த சமயம் என்பதால் மஹா பெரியவாளை தலைமை வகிக்க வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் விருப்பத்தைத் தட்டாமல், அவர்களுக்கு அருளாசி வழங்கி ஆன்மீக பிரசங்கம் செய்ததில் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
அந்த சபாவுக்கு காஞ்சி காம கோடி மடத்தின் சார்பாக ஆயிரம் ரூபாய் கட்டிட நிதிக்காக நன்கொடை வழங்கினார்.
1923ம் வருஷம் துவக்கத்தில் மஹா பெரிய வாவின் விஜய யாத்திரை ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வைகுண்டம் போன்ற நவத்திருப்பதிகள் தவிர நாங்குநேரி என்ற ஊர்களிலும் நடை பெற்றது.
1923ம் வருஷம் பிப்ரவரி மாதம் 11ம் தேதி மஹா ஸ்வாமிகள் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தை அடைந்தார்.. திருச்செந்தூரில் தான் ஆதிசங்கரர் தனது சர்ம ரோகம் நீங்க சுப்ரமணிய புஜங்கம் இயற்றினார் என்பதை அறிவீீர்கள்.
அடுத்த பதிவில் சுப்ரமணிய புஜங்கம் தொடரும். தனியாக ஐந்து பதிவுகளாக இது வரும் ஆனால் இந்த விஜய யாத்திரை கட்டுரையின் ஒரு பாகமாக சேராது
திருநெல்வேலி விஜயத்தைத் தொடர்ந்து மஹா பெரியவா அம்பாசமுத்திரம், பாபநாசம், திருக்குற்றாலம், சங்கரநாயனார் கோவில் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று எண்ணற்ற பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார். சங்கர நாயனார் கோவில் ஸ்தலத்தில் ஒரு வார காலம் முகாமிட்டதில் அந்த ஊர்க் காரர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment