பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் -- J K SIVAN
27 மக்கள் சேவையே மகேசன் சேவை
மிகப்பெரிய நீண்ட விஜய யாத்திரை அது. மஹா பெரியவா ஒரு கிராமம் விடாமல் தென்னகத்தில் எல்லா பக்தர்களையும் நேரில் கண்டு ஆசி வழங்கிய அற்புத காலம் அது. 1922ம் வருஷ விஜய யாத்திரை..
திருக்கோஷ்டியூர் யாத்திரை முடிந்து அடுத்து வெகுகாலமாக செல்ல எண்ணிய இளையாத்தங்குடி நோக்கி யாத்திரை சென்றது. நகரத்தார்களைப் பற்றி ஏற்கனவே நிறைய சொல்லி இருக்கிறேன். சிறந்த சிவபக்தர்கள் அதிகம். ஸ்ரத்தையாக கோவில்கள் செல்வது, விரதம் காப்பது, தான தர்மம் செய்வது போன்ற நற் செய்கைகளில் தாராளமாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒற்றுமையான ஒரு குலம் .
தனது குருநாதர் அதிஷ்டானத்தை தரிசிக்க வேண்டும் என்ற அவா மஹா பெரியவாளுக்கு இருந்தது. 65வது பீடாதிபதி மஹாதேவேந்த்ர சரஸ்வதி அதிஷ்டானம் உருவானதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். மீண்டும் ஒரு சிறு குறிப்பு:
செட்டிநாட்டில் இளையாத்தங்குடி கிராம சிவாலயத்தில் சிவன் பெயர் கைலாசநாதர். அம்பாள் நித்யகல்யாணி. இந்த கோவில் மிகப் பழமை வாய்ந்தது. நகரத்தார் அனைவரும் கொண்டாடும் ஆலயம். பின்னர் செட்டிநாடு 8 பிரிவுக ளாக பிரிந்தது. மாத்தூர், வைரவன் கோயில், இரணியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி என்று கிராமங்களாக செட்டிநாடு பிரிந்தது.
65வது பீடாதிபதி ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி செட்டிநாடு பிரயாணத்தின் போது இளையாத் தங்குடி கிராமத்தில் சில மாதங்கள் தங்கினார். நகரத்தார் அவரை வரவேற்று சிறப்பித்து மகிழ்ந்தனர்.
ஒருநாள் கிராமத்தில் ஆலயத்தை சுற்றி நடந்து செல்லும்போது ஒரு முட்புதர் கண்ணில் பட்டது. அங்கேயே சிறிது நேரம் நின்றார். மறுநாள் அந்த ஊர் தேவஸ்தான நிர்வாகிகளைக்கூட்டி இந்த முட்புதர் நிறைந்த இடத்தை மடத்துக்கு அளிக்க முடியுமா என்று கேட்டார்.
''இந்த முட்புதர் நிலம் எதற்கு வேறு நல்ல இடம் தருகிறோம்'' என்று நிர்வாகத்தார் பதிலளித் தார்கள்.
''இல்லை, இந்த இடம் தந்தால் போதுமானது'' என்று பதிலளித்தார் பீடாதிபதிகள். இளை யாத்தங்குடி ஆலய நிர்வாகத்தார் அவர் சுட்டிக்காட்டிய முட்புதர் நிலத்தை மடத்துக்கு அளிக்க ஒப்புதல் தந்தனர்.
அடுத்து ஒருவாரத்தில் வினோத சம்பவங்கள் நடந்தன. 65வது பீடாதிபதிகள் உடல்நிலை பலஹீனம் அடைந்து க்ஷீணித்தது.
விரோதி வருஷம் பங்குனி மாதம் எட்டாம்நாள் அமாவாஸ்யை அன்று பீடாதிபதி சித்தி அடைந்தார். நகரத்தார் பக்தர்கள் ஸ்வாமிகள் சுட்டிக்காட்டிய இடத்தில் புதர்களை நீக்கி அவரது அதிஷ்டானத்தை அமைத்து அங்கே ஒரு சிவலிங்கம் மற்றும் ஆதிசங்கர சிலா ஸ்தாப னம் செய்தார்கள். இன்றும் அந்த அதிஷ்டானம் இளையாத்தங்குடி தேவஸ்தான நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிஷ்டானத்தை தான் மஹா பெரியவா தரிசித்தார்.
6.11.1922 அன்று பிரான் மலை ஏறி அங்கே உள்ள சுனையில், நீரூற்றில் ஸ்னானம் செய்தார். . அங்கிருந்து கருங்கலக்குடி மேலூர் வழியாக திருமாலிருஞ் சோலை செல்வதாக திட்டம். இந்த ஸ்தலத்திற்கு இன்னொரு பெயர் அழகர் கோவில்.
11.11.1922 அன்று அழகர்மலை வந்தடைந்தார்கள். அங்கேயும் மலையில் ஏறி நூபுர கங்கை எனும் தீர்த்தத்தில் ஸ்னானம் செய்தார் மஹா பெரியவா. சுந்தரராஜ பெருமாள் சுந்தரவல்லி தாயார் தரிசனமும் பெற்றார். மிகச் சிறந்த திவ்ய தேசம், வைணவ ஆழ்வார்களில் முக்யமாக நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆண்டாள் ஆகியோர் தரிசித்து வழிபட்ட பெருமாள் ஸ்தலம்.
இன்னொரு முக்யத்வம் இந்த ஸ்தலத்துக்கு என்னவென்றால் அது முருகன், சுப்பிரமணியனின் அறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை எனப்படும்.
விஜயாத்ரை காசி சென்று திரும்பும் வரை நீண்ட பயணம் என்பதால் சிறிய சிறிய கிராமங்களில் அதிக நாள் தங்க வாய்ப்பில்லை.
12.11.1922 மஹா பெரியவா மதுரை வந்து சேர்ந்தார். சரித்திர ஆன்மீக புகழ் பெற்ற ஸ்தலம் மதுரை. தமிழ் வளர்ந்த சங்கங்கள் தோன்றிய க்ஷேத்ரம். பாண்டியர்களின் தலைநகரம். தென்னாட்டில் ஒரு மிகப்பெரிய நகரம். எண்ணற்றவர்கள் மஹா பெரியவா வருகை பற்றி அறிந்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர். மஹா பெரியவா நகர் ஊர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். மதுரை பிரதான வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் இரு மருங்கும் நின்று மஹாபெரியவாளை தரிசித்தார்கள். மஹா பெரியவா வாசம் செய்யும் இடம் அவருடன் வந்த மடத்தின் பணியாளர்கள், சேவார்த்திகள், பக்தர்கள் அனைவரும் தங்க வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
மதுரையில் தங்கிய ஒவ்வொருநாளும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் தேவி மீனாட்சி தரிசனம் விடாமல் செய்து களித்தார் மஹா பெரியவா. ஒரு மாத காலம் மதுரையில் முகாம். பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதுரைக்கு பிரயாணம் செய்ய பல இடங்களிலிருந்து பஸ், ரயில் வசதி இருந்ததால் பல ஊர்களிலி ருந்தெல்லாம் பக்தர்கள் மதுரைக்கு வந்தார்கள்.
ஒருமாத காலம் ஒருநாள் போல் வேகமாக ஓடி விட்டதால் மஹா பெரியவா அடுத்ததாக தெற்கு நோக்கி பிரயாணம் தொடங்கினார். ஒன்று நிச்சயம். எங்கு மஹா பெரியவாளை தரிசித்தாலும் , அவர் சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யும் நேர்த்தியைக் காணவும் அவர் ஆன்மீக பிரசங்கத்தையும் கேட்கவும் பக்தர்களின் ஆவல் பெருகிக்கொண்டே வந்தது. நிறைய பேர் கேட்க வசதியாக கல்யாண மண்டபங்களில் தான் பிரசங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
சூறாவளிப் பிரயாணமாக அடுத்து மஹா பெரியவா பரிவாரத்தோடு தாமிரபரணி ஆற்றங்கரை ஸ்தலங்களுக்கு செள்வதற்காக மதுரையை விட்டு 1922 டிசம்பர் மாதம் 12ம் தேடி புறப்பட்டார்கள்.
இனி நாம் திருநெல்வேலி நோக்கி அவரோடு பிரயாணம் செய்வோம்.
No comments:
Post a Comment