பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் -- J K SIVAN
25 கானப்பேர் எயில் எனும் காளையார் கோவில்.
சென்ற பதிவில் ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை பற்றி விவரமாக அறிந்தோம். அட, இன்னு மொரு கோவில் பெயர் கொண்ட ஊரைப் பற்றி எழுதப்போகிறோம் என்று அப்போது எனக்கு தெரியவே தெரியாது. மஹா பெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது.
சிவ கங்கையிலிருந்து 18 கி.மீ. கிழக்கில் ஒரு அற்புத ஊர் காளையார் கோவில் என்ற பெயரில் இருக்கிறது. சிவன் பெயர் ஸ்வர்ண காளீஸ்வரர். மருது பாண்டியர்கள் ஆண்ட ஊர். சிவகங்கை ராஜாவுக்கு சொந்த மான பெரிய சிவன் கோவில் , தேவ கோட்டை ஜமீன்தார்களால் பராமரிக்கப்பட்டது. நந்தி விசேஷம். சுந்தரர் வந்தபோது '' இப்படி என்னோடு வாங்கோ'' என்று வழிகாட்டி இந்த சிவன் கோவிலுக்கு அழைத்து வந்ததால் காளையார் கோவில் என்று பெயர் .சங்ககாலப் பெயர் கானப்பேர் எயில். சுந்தரமூர்த்தி நாயனார் சிவனை நந்தியாக , காளையாக வர்ணித்து பாடியதால் இப்பெயர் என்பதும் உண்டு.
150 அடி உயர இராஜகோபுரம். ஆனைமடு என ஒரு நீராழி மண்டபம் கொண்ட தெப்பக்குளம் ரொம்ப அழகானது. முத்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல் மூன்றும் , மூன்று லிங்கங்களாக காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என காட்சி தருகிறார்கள்.
அம்பாள் பார்வதி, சொர்ணாம்பிகை, சௌந்திர நாயகி, மீனாட்சி என மூன்று தேவிகளாக அருள் பாலி க்கிறாள்.
ராஜா முத்து வடுக நாதர், மருது சகோதரர்கள் இந்த ஊர் அரசர்களாக பக்தியோடு ஆண்ட ஊர். மஹா வீரர்களாக இருந்தும் வெள்ளைக்காரன் பீரங்கி அவர்களுக்கு புதிது. அவர்களது மண் கோட்டைகள் பீரங்கி குண்டுகளைத் தாக்குப் பிடித்து வெல்ல முடியவில்லை.
கி.பி.1772 ஜூன் 25-ல் முத்துவடுக நாத தேவரும், மருதுசகோதரர்களும் ஆங்கிலேயர்களான ஜோசப் ஸ்மித் மற்றம் போன்ஜார் இவர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
வெள்ளைக்காரர்களால் சிவகங்கை தேவஸ்தானத்து செல்வங்கள் , தங்க நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டன. கோயில்கள் அடை பட்டு வழிபாடு நின்றது.
நமது தெய்வங்களும், கோவில்களும், அவற்றின் சொத்துக்களும் இன்றளவில் கவனிப்பாரற்று சிதிலமாகி,கொள்ளை போய்க் கொண்டே இருப்பது இன்னும் கூட நிற்கவில்லை என்கிற எண்ணம் நெஞ்சைப் பிழிகிறது.
தேவகோட்டை ஜமீன்தார் எல்.ஏஆர்.ஆர்.எம்.அருணாச்சலச் செட்டியார் சன்யாஸியாகி, வேதாந்தமடம் சென்றார். தேவகோட்டை சங்கர செட்டியார்,ஏ. எல்.ஆர்.ஆர். இராமசாமி செட்டியார். ஏஎல்.ஆர்.ஆர்.
அருணாச்சல செட்டியார் ஆகியோர் சேர்ந்து தேவகோட்டை ஜமீன்தார் அறக்கட்டளையை நிறுவினார்கள் . இதன் மூலம் சொர்ணகாளீஸ்வர்ர் சொர்ணவள்ளி அம்மனின் கோவிலில் அன்றாட வழிபாடு தொடர்கிறது. அறக்கட்டளை வாரிசாக ஏஎல்.ஏஆர்.ஆ. கே.வி.ஆர்.சின்ன வீரப்பன் செயல்பட்டு வருகிறார்.
மஹா பெரியவா 1922 அக்டோபர் 28 அன்று சிவகங்கையை விட்டு புறப்பட்டு காளையார்கோயில் வந்தார். சிவ தர்சனம் அற்புதமாக நடந்தது.
இங்கிருந்து 10 மைல் தூரத்தில் தான் மணிவாசகர் பிறந்த திருவாதவூர்.
சிவகங்கை கோவில் அதிகாரிகள் மஹாபெரியவாளை சிறப்பாக வரவேற்று மகிழ்ந்தார்கள். மடத்தின் சிப்பந்திகளுக்கு, தொண்டர்களுக்கு, அடியார்களுக்கு, எல்லாம் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.
இங்கிருந்து தான் மஹா பெரியவா அடுத்ததாக நாட்டரசன்கோட்டை, சோழபுரம், மடகுப்பட்டி வழியாக பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கியபடியே சிறந்த வைஷ்ணவ ஸ்தலமாகிய திருக்கோஷ்டியூர் சென்றார்.
திருக்கோஷ்டியூர் பற்றி சொல்லவே வேண்டாம். மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம். சௌமியநாராயண பெருமாள் திருமகள் நாச்சியார் திவ்ய தம்பதிகளை நான் தரிசிக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். இங்கு தான் ஸ்ரீ ராமானுஜர் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்.
ரொம்ப பெரிய பதிவாக போய்விடும் என்பதால் அதை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.
No comments:
Post a Comment