Tuesday, June 1, 2021

PESUM DEIVAM



 பேசும் தெய்வம் --    நங்கநல்லூர்  J  K  SIVAN  


24  ராமநாத தரிசனம்.  காசிக்கு ராமேஸ்வர மண்.
''ஜெயஜெய சங்கர, ஹரஹர சங்கர''   சப்தம் கேட்டாலே  ஊர்வலம் வருகிறது,  நிச்சயம் மஹா பெரியவா அதில் இருப்பார். தரிசனம் செய்ய ஓடுவோம்.   மக்கள் இவ்வாறு வழியெல்லாம் அவருக்காக காத்திருந்து உபசரித்து வழிபட்ட காலம் அது. 

ஸ்வாமிகள் தனது பரிவாரத்தோடு  உப்பூர், தேவி பட்டணம்  போன்ற பல  கிராமங்கள்  வழியாக  ராமேஸ்வரம் சென்று அடைந்தார். 

 வெள்ளைக்கார  அரசு  ரயில்வே  அதிகாரிகள்  மஹா பெரியவா வருவதை அறிந்து  அவர்  ரயில்வே மார்க்கம் வழியாக  பாம்பன்  கடந்து  ராமேஸ்வரம் சென்றடைய  ஏற்பாடு செய்தனர்.  
இதோடு  கூட  இன்னுமொரு உதவியும்  கிடைத்தது .    சிறந்த பெரியவா பக்தர்  பாம்பன் மரைக்காயர்  என்பவர்  படகுகள்  வைத்திருந்த வர்.   மடத்து பணியாளர்கள்,  அவர்கள்  சாமான்கள் அனைத்தையும்  படகு வழியாக  ராமேஸ்வர செல்ல உதவி புரிந்தார்.  பெரியவாளை தரிசித்து  ஆசி பெற்ற  புண்யவான்.

ராமேஸ்வர ஆலய  அர்ச்சகர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும்  மஹா பெரியவா  ராமேஸ்வ ரத்துக்கு வருகை தந்ததில் பெரு மகிழ்ச்சி. விமரிசையாக  வரவேற்பு அளித்து கொண்டா டினர்.   சமுத்திர ஸ்னானம் செய்து முடித்து  ராமேஸ்வர ஆலயத்தில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும்  (கிணறுகளின் ஜலம் ) ஸ்னானம் செய்து  ஸ்ரீ ராமநாத சுவாமி,  தேவி பர்வத வர்த்தனி  தரிசனம் செய்தார். 

இதற்குள் இன்னொரு நவராத்ரி வந்துவிட்டதே.  நவராத்ரி பூஜையை மஹா பெரியவா தனுஷ் கோடியில் வைத்துக் கொண்டார். 

பூஜைகள் முடிந்தது.  சமுத்திர ஸ்னானம் அங்கே விசேஷம்.  ரெண்டு சமுத்திரங்கள் ஐக்கியமாகும் இடம்.  மஹோததி, ரத்னாகரம்  என்று அவற்றுக்கு பெயர். மூன்று நாள் விடாமல் தினமும்  சங்கம ஸ்னானம்.  வேத பிராமணர்கள் கூடிவிட்டிருந் தனர். அவர்களுக்கு  தேவையானவற்றை பரிசளித்தார் மஹா பெரியவா.

பௌர்ணமி நிலவு பளீரென்று வானில் ஒளி வீசியது.  துந்துபி வருஷம் கன்யா மாசம், (1922) மஹா பெரியவா  ராமேஸ்வரத்திலிருந்து  மண் எடுத்துக்கொண்டு  அதை கங்கையில் திரிவேணி சங்கமத்தில் கரைக்க தயார் செய்துகொண்டார்.   
ராமேஸ்வரத்தில்  அநேக பக்தர்கள்  பெரிய வாளுக்கு  பாதபூஜை, பிக்ஷாவந்தனம் நிகழ்த்தி மகிழ்ந்தார்கள்.

1918 லிருந்தே   மஹா பெரியவாளின் ஆடை
எப்போதும்  கைத்தறியில் நெய்த , கதர்  காவி வஸ்திரம் தான். தனுஷ்கோடி சமுத்திர ஸ்னானம் எண்ணம் வந்தபோது  கையிருப்பாக  ரெண்டு மூன்று ஜோடி கதர் காஷாய வஸ்திரம் இருந்தது.   மடத்தில் இருந்த  ஒவ்வொரு  சேவார்த்திக்கும்  கதர் ஆடைகள் தருவித்து தருவார்.  அவர்கள் கையிலிருந்த  மில் துணிகளை சமுத்திரத்தில் தாரை வார்த்துவிட்டார்கள்.    அநேக பக்தர்கள், தொண்டர்கள்  அன்றுமுதல்   கதர் ஆடையே வாழ்நாள் பூரா அணிவதாக சங்கல்பம் செய்து  கொண்டார்கள்.

தனுஷ்கோடியிலிருந்து புறப்பட்டு   மஹா பெரியவளோடு நாம் இப்போது கோடிக்கரையில் இருக்கிறோம். அவரைத் தொடர்ந்து பல  தொண்டர்கள், பக்தர்கள்,  மிராசு, ஜமீன்தார்கள். நிலச்சுவான்தார்கள்.   இதில் என்ன ஆச்சர்யம் என்றால்,  பெரியவா  அறிவுரைப்படி  தாங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால்  வழியெல்லாம் காணும்  யாசகர்கள்,  ஏழைகளுக்கு  பணம், உணவு, ஆடை அளிக்குமாறு கேட்டுக்கொண் டதால்  அவர்கள்  அவ்வாறே  செயது எண்ணற் றோரை சந்தோஷமுறச் செய்தார்கள். 

இலவசங்கள் இவ்வாறு பெற்ற  யாசகர்களில் ஒருவன்  ஆர்வக் கோளாறினால்  மஹா பெரியவா நடந்துவரும் பாதையில் அவருக்கு எதிராக நின்று வழி மறித்துவிட்டான்.  கூட்டத்தில் யாரோ ஒரு  தொண்டன்  இதைக் கண்டு கோபமுற்று  கம்பால்  அவனை அடிக்க,  வலி தாங்காமல் அவன் சுருண்டு விழுந்து   காய முற்றான்.  இதை  எதிர்பார்க்காத  மஹா பெரியவா துடித்து விட்டார்.  அடித்த  அந்த தொண்டரைக்  கூப்பிட்டு 

  ''உனக்கு பகவான் நிறைய  செல்வம்  புத்தி  கொடுத்து என்ன பயன், இரக்க குணம், ஈகையோடு  சேர்ந்து அல்லவோ இருக்கவேண்டும். சாஸ்திரங்கள் படித்து என்ன பயன்?  எப்போதும்  அமைதியான பொறுமையா ன சாந்த குணம் அல்லவா எந்த சந்தர்ப்பத்திலும்  இருக்கவேண்டும்.  ரொம்ப பெரிய தவறு செய்துவிட்டாய். கோபத்தை இனியாவது அடக்கு''  

மடத்து  மருத்துவர்கள்  அடிபட்ட  மனிதனுக்கு தேவையான  சிகிச்சை,  மருந்துகளை தந்து உணவு, கைச் செலவுக்கு பண உதவி,  அளித்து அவன் போகவேண்டிய இடத்துக்கு ஜாக்கிரதை யாக அவனை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.  இந்த  நிகழ்ச்சி, மகா பெரியவா அறிவுரை அந்த தொண்டரை சாய்த்து உலுக்கி விட்டது.  பிராயச்  சித்தமாக அவர் சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு   ஆத்ம ஞான விசாரத் தில் ஈடுபட்டு விட்டார்.  இது அவர் வாழ்க் கையில்  அவர் தேடிய திருப்பு முனையாக இருந்திருக்கும்!

''ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர '' கோஷம்  ராமநாத புரத்தை எட்டி விட்டது.  ராமநாத புரம்  ராஜா  விமரிசையாக வரவேற்று உபசரித்தார்.  மஹா பெரியவா  சிவகங்கையில்  மூன்று நாள்  வாசம் செய்தார்.சிவகங்கை ராஜா   முத்து விஜய  ரகுநாத கௌரி வல்லப  துரைசிங்க தேவர் மனமுவந்து பெருமையோடு  ராஜ மரியாதைகள் அளித்து  மடத்துக்கு உதவிகள்  செய்தார். பாத பூஜை, பிக்ஷா வந்தனம் செய்ய அநேகர்   காத்தி ருந் தார்கள். சிவகங்கை ராஜாவின் அரண் மனையில் எண்ணற்ற பக்தர்கள் குழுமினர் .அவர்களில் சிவகங்கை மற்றும்  சுற்று முற்றில் இருந்த  ஊர்களில் இருந்து திரண்டு வந்து பக்தர்கள்.


தொடரும

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...